|
நுழைவாயில்..! |
|
|
கருணையாளன் துணையோடு
கண்ணிய நபியின் வழியினிலே
இஸ்லாத்தின் நெறிமுறையோடு
இன்பமாய் வாழ்வினிலே
ஐங்கால தொழுகையோடு
ஐக்கியமாய் ஓர் அணியினிலே
ஏகனின் ஆசியோடு
எல்லா வளமும் பெற்றிடவே
நம் அனைவருக்கும் இறைவன்
நல்லருள் புரிவானாக! ஆமீன்!!
-எஸ்.ஜஹபர் உசேன்
(மீவா பொது செயலாளர்)
|
|
|
|
|
|
வேண்டுகிறோம்...! |
நம் சங்கம்..! |
|
சங்கமெனும்
கூட்டிற்குள்
சங்கமித்த நாம்
சன்மார்க்க வழிநடந்து
சமுதாய நர்பணியில்
சாதனைகள் பல புரிந்து
சமத்துவம் படைக்க
வல்லோனை வணங்கி வேண்டுகிறோம்..!
ஒற்றுமையெனும் வளையத்திற்க்குள்
ஒரணியில் கைகோர்த்து
ஏகோபித்த முடிவெடுத்து
என்றென்றும் நிலைத்திட
ஏந்திய கைகளுடன்
ஏகனிடம் வேண்டுகிறோம்..!
மறை கூறும் மொழி கேட்டு
மாநபி வழி நடந்து
மன்றங்கள் ஒன்றிணைந்து
மகத்துவம் பெற்றிட - இறைவனிடம்
மன்றாடி வேண்டுகிறோம்..!
-அஹமது குரைஷி |
மறையோனின் நெறியில்
மாநபியின் வழியில்
நிறைவோடு பணிபுரிய
நெஞ்சார்ந்த உறுதியுடன்
சமுதாய நற்பணிக்கு-எம்
சங்கத்தின் அர்ப்பணிப்பு
சத்தியவழி நடப்பதே
சமுதாயத்தில் நம் பொருப்பு
- க.மு. நெய்னார்
முஹம்மது
|
|
|
|
|
தூக்கம்
விற்ற காசுகள் |
பணம் பணமறிய அவா
|
|
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்
" என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!
"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
- ரசிகவ் ஞானியார், துபாய் |
அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!
அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!
கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!
மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!
நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?
ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொண்றும்.....
உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?
கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்......
நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது.....
தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...
மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!
குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...
வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?...
உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!
என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி
ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!
காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?
பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....
வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும், விரகத் தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...
என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யார் அறிவார்?
எழுதியவர்:
கொடுவாயூர் ஜாஃபர் சாதிக் பாகவி |
|
வழமையான செய்திகள் |
|
மனித நேயம் எங்கோ
பதுங்கிக்கொண்டபோது - வெறும்
மண்டை ஓடுகளே இங்கே விதைக்கப்பட்டன
பூவும் கொடியுமாய்ப்
பூத்துப்பொலிந்த - எங்கள்
கிராமத்து மண்ணிலெல்லாம் - இன்று
எருக்கலை மட்டும் பூத்திருக்கு!
பச்சை மரங்கள்
காற்றசைவில் படபடக்ககூட
அச்சப்பட்டு வாழ்கின்றது
எங்கள் அயலட்டம்..
இருண்டுவிட்ட தெருவோரத்தில்
இரவிரவாய்த் 'தேடுதல்'நடக்கும்
இங்கொன்று அங்கொன்றாய்
எம்மவர் காணாமல் போவர்...
தேசத்தின் பிறிதொரு மூலையில்
அடையாளம் காணப்படாதவர்களாக
புலிச் சின்னம் பொறித்து - அவர்கள்
புதைக்கப்படுவார்கள்
தேசம் 'வழமைக்குத் திரும்பியதாக'
தெற்கில் செய்தி வரும் - ஆம்
இவைகள் தான் வடக்கிலும் கிழக்கிலும்
வழமையான செய்திகள்
தனேஸ்-
நன்றி: மாணவர் முரசு |
|
|
|
|
எங்களின் நாட்கள் |
கோபம் |
|
அஸ்தமனத்தை
அறிவிக்கும் எங்கள் அதிகாலைகள்
பூபாளத்திற்கு பதிலாக முகாரியையே முன்வைக்கும்
பூமியில் கேட்கும் முழக்கங்களால்
மேகங்கள் மோதிக்கொள்வதை நிறுத்தி வாய்பொத்தி நிற்கும்
துரத்திக்கொண்டுவரும் துப்பாக்கி ரவைகளால்
தென்றல் காற்று கிழிபடும்.
'ஷெல்'லக்குழந்தைகள் மனித பொம்மைகளின்
அங்கங்களை கழற்றி விளையாடும்
பொட்டிழந்த எங்கள் பெண்ணிலவுகளை
சோக மேகங்கள் ஆக்கிரமித்துக்கொள்ள
அமாவாசை அவர்களிடம் நிரந்தரமாகும்.
குருதியலைகள் மோதிப் பாய்ந்து கீழ்வானை சிகப்பாக்கும்
-விவேக்-
'தடயங்கள்' கவிதைத் தொகுப்பிலிருந்து |
உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய
எச்சரிக்கையின் இறுக்கங்களை
நம் முகங்களில் படரவிட்டு
ஒருவரையொருவர் நம்பாமலேயே
ஒரு நீண்ட பயணம் முடித்து
விரோதத்திற்கும் நட்பிற்கும் இடையே
நாம் விலகிநின்று
பரஸ்பரம் சிரித்துக் கொள்கையில்
கூடவே நம்மைப் பார்த்து
கைதட்டி சிரித்துப் போகும்
நாம் நழுவவிட்ட காலங்களும்!
-யாரோ- |
|
|
|
|
காத்திருக்கிறேன் |
உதவுங்கள்..! |
|
பத்திரமாய் இருக்கிறது
பாதுகாப்புப் பெட்டறையில்
உன் கடிதம்.
அவ்வப்போது எடுத்துப்
பார்க்கிறேன்
பிரிக்கும்போதே
மடிப்புகளில் விரிசல்
பழுப்பேறி விட்டாலும்
பழைய தாளிலும் உன்
பளிங்கு உடல் வாசம்
முத்தான கையெழுத்து உன்
முறுவலைப் போல.
ஒவ்வொருவருக்கும்
கையெழுத்துப்
பிரத்தியேகமாம்
தனி மனித
அந்தரங்கம்
மன நிஜத்தின்
நிழல்
கையெழுத்தில்
அவரவர்தம்
தலையெழுத்தைக்
கூறலாமாம்
எனக்குத் தெரியவில்லை.
சில விஷயங்கள்
தெரியாமலிருப்பதே
நல்லதுதான்.
கவிதையாய் எழுதிவிட்டுக்
கடிதமென்று சொல்வாய்.
கவிதைக்குத்தான்
பொய் அழகு
வாழ்க்கைக்கு அல்ல
உண்மைகளை உதறிவிட்டு
ஒருநாள் சென்றுவிட்டாய்.
மறந்தே போனாயா
மறைந்தே தான் போனாயா?
என்றாவது நீ
வருவாயென்று
காத்திருக்கும்
என்னோடு
உன் கடிதமும்.
-ஷைலஜா |
கழுத்தில் தொங்கிய
தங்கச் சங்கிலியைக்
காணவில்லை நேற்றுமுதல்
ஓர்
ஆனாதை ஆசிரமத்தற்கு
வழங்கியிருக்கலாம்
மனம்
ஏவ்வளவு நிறைவாய்
இருந்திருக்கும்
உருப்படாத படம்
நூறு ரூபாய் தண்டம்
ஓர் ஏழை வீட்டு
அடுப்பெரிக்க
காரணமாயிருந்திருக்கலாம்
நல்லதாய் நான்கு
வாழ்த்தாவது வந்திருக்கும்
சட்டைப்பையில் இருந்த
பத்து ரூபாய்
பறிபோயிருக்கிறது
பேருந்து நிறுத்தம் வரும்முன்
கண்ணில்லாப்
பிச்சைக்காரிக்கு
கண்திறந்து போட்டிருக்கலாம்
ஆந்தச் சிரிப்பில்
மனம் ஆனந்தமடைந்திருக்கும்
சரி.. சரி.. சரி..!
இனியும் இந்த
லாம்.. லாம்.. கள் வேண்டாம்
புறப்படு
இன்றைய தேதிக்கு
உன் மனிதாபிமானத்தின்
மதிப்பென்ன
எத்தனையோ
மனிதநேய அமைப்புகள்
கைகள் ஏந்திய வண்ணம்
கொடுக்கத்தான்
மனிதர்கள் இல்லை.. --கவிஞர் புகாரி |
|
|
|
|
உலகம் |
|
|
சிரியுங்கள்...
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது...
அழுங்கள்...
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்...
பாடுங்கள்...
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன...
பெருமூச்செறியுங்கள்...
அவைக்
காற்றினில்
காணாமல் போகின்றன...
கொண்டாடுங்கள்...
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்...
கவலைப்படுங்கள்...
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை...
வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்...
ஆனால்-
|
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்...
விருந்தளியுங்கள்...
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது...
கையேந்துங்கள்...
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்...
வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது...
ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை...
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது...
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது...?
நம்பிக்கை கொள்ளுங்கள்...!
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து!-புஹாரி- |
|
|
|