தமிழ் கிறிஸ்தவர்கள்   

   ஒரு மாதாந்திர மின்னிதழ்

இதழ்-1  ஜூன் - 2003

முதல் பக்கம்
வேதபாடம்
வாழ்க்கை வரலாறு
இருதய துடிப்பு
தமிழகம்
கட்டுரைகள்
இனைப்புகள்
எங்களைப் பற்றி

இங்கு மிஷினெரிகளின் வாழ்க்கை வராலாறுகளை தங்களுக்கு அளிக்கிறோம்.

வில்லியம் கேரி

வில்லியம் கேரி நார்த்தாம்டன்ஷயரில் 1761 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி பிறந்தார். இவர் தந்தை எட்மண்ட் கேரி பல இடங்களுக்கு பயணம் செய்து கொண்டு நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் கேரியின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தபடியால், வாழ்க்கைச் சற்றுக் கடினமாகத் தான் இருந்தது. சிறுவனாக இருந்தபோதே, வில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. அவன் செடிகள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினான். தான் கண்டிராத தூர தேசங்களுக்குப் பயணம் செய்து, அங்குள்ள மக்களைக் காணவும் அவன் தணியாத ஆவல் கொண்டிருந்தான். அவன் விரும்பும் மற்றொரு பொருள் புத்தகங்கள். அவன் புத்தகங்களில் அநேக முறை அப்படியே ஆழ்ந்துவிடுவான். மிகவும் இள வயதிலேயே இலத்தீன், கிரேக்கு மொழிகளையும் கற்றறிருந்தான்.

எனினும், பணப் பற்றாக் குறையினிமித்தம் வில்லியம் பள்ளியை விட்டு விலக வேண்டி வந்தது. ஒரு செருப்பு செய்யும் தொழிலாயின் கீழ் வேலையைக் கற்றுக்கொள்ளும்படி சேர்ந்தார். அங்கு ஒரு நண்பன் மூலம் இரட்சிப்பைக் குறித்து அறிந்த கேரி, தன் வாழ்வைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். 1781 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி டாரதியை திருமணம் செய்தார் இளம் கேரி. பாப்டிஸ்டு மிஷனெரி இயக்கத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் ஒரு மிஷனெரி, இந்தியாவின் தேவைகளைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது வில்லியம் கேரி, அந்தப் பேச்சின் மூலம் சவாலைப் பெற்றவராய், இந்தியாவிற்கு மிஷனெரியாகச் செல்லும்படியாகத் தன்னை அர்ப்பணித்தார். கேரியின் இந்த முடிவு டாரதிக்கு அதிக சந்தோஷத்தைத் தருவதாக இல்லை. அவள் பள்ளிக்குச் சென்றவளோ அல்லது கல்வியறிவு பெற்றவலோ அல்ல. ஆனால் இறுதியில் உடன் வருவதாக ஒப்புக் கொண்டாள்.

வில்லியம் கேரி, குடும்பத்துடன் 1793 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி கல்கத்தாவில் வந்து இறங்கினார். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இந்தியாவில் தொடங்கியபோது அநேக துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. மிகவும் மோசமான ஏழ்மையான வாழ்க்கை நிலை, வித்தியாசமான உணவுப் பழக்கவழக்கங்கள், அதிக வெப்பம், பணப்பற்றாக்குறை, புது வாழ்க்கைச் சூழல், தனிமை மற்றும் இவற்றின் மத்தியில் நான்கு சிறு பிள்ளைகளையும் பராமரிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இந்தக் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்னும் ஒரு பெங்காலிக் கிறிஸ்தவர் இவருக்கு தனது மொழியைக் கற்றுத்தர முன் வந்தது பெரும் ஆசீர்வாதமாக அமைந்தது.

கேரி தன் பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும்பொருட்டு தாவரவியல் பூங்கா ஒன்றின் மேலாளராகவும், மை தயாரிக்கும் தொழிற்சாலையின் மேலாளராகவும் மற்றும் மொழியியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றினார். ஆனால் பெரும்பாலான நேரத்தை வேதாகமத்தை மொழிபெயர்ப்பதிலேயே செலவிட்டார். இந்த காலக்கட்டத்தில் தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும், அநேக திடீர் திருப்பங்களால் ஏற்கனெவே மனமுறிவு அடைந்திருந்த தன் மனைவியையும் இழந்தார். இந்த சூழ்நிலையிலும் வில்லியம் கேரி மனமடிவு அடையவே இல்லை. தன் எஜமானரின் அழைப்பைத் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தார் அவர்.

இந்த சமயத்தில் ஒரு இளம் மிஷனெரிக்குழு வில்லியம் கேரியுடன் இணைந்து பணிபுரியும்படியாக வந்தது. இது அவருக்கு மிகவும் அதிக மன உற்சாகத்தைத் தந்தது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து, வேதாகமத்தைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து, அவற்றை அச்சிட்டனர். ஆனால் முற்றிலும் எதிர்பாரத நேரத்தில் அந்த துயரச்சம்பவம் நேர்ந்தது. ஒரு மாலை நேரத்தில், அச்சிடும் பணிக்குப் பொறுப்பாக இருந்த வில்லியம் வார்டு என்பவர் காற்றில் புகையின் வாசம் வருவதாக உணர்ந்தார். அவர் கூச்சலிட்டபோது, அனைவரும் கூடி நெருப்பை அணைக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் காரியம் கை மிஞ்சிப்போய் விட்டது. அவர்களுடைய பல ஆண்டு உழைப்பு நெருப்புக்கு இரையானது. அநேகமாக அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் அழிந்துவிட்டன. ஆனால் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து பணிபுரிந்து வேத புத்தகத்தை அநேக மொழிகளில் மொழிபெயர்த்தனர். இறுதியில் வில்லியம் கேரி 1834 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி தன் வாழ்க்கை ஓட்டத்தை முடித்தார்.

செராம்பூர் குழுவினர் வேதாகமத்தை, ஆர்மீனியம், அசாம், வங்காளம், பர்மியம், சீனம், குஜராத்தி, ஹிந்தி, காஷ்மீரம், மலாய், மராத்தி, நேபாளம், ஒரியா, பஞ்சாபி, புஷ்டோ, பெர்சியம், சமஸ்கிருதம், தாய், தமிழ், தெலுங்கு மேலும் 27 மொழிகளில் மொழிபெயர்த்தனர். அது மட்டுமல்ல, கேரி தாம் தத்தெடுத்த இந்த இந்திய மண்ணில் 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த காலக்கட்டத்தில் அவர் தம் தாய் நாடான இங்கிலாந்திற்கு செல்லவே இல்லை. அவர் அந்தக் காலத்தில் நிலவிய கொடிய சமூகப் பழக்கமான ""சதி'' யை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். குழந்தைகளைப் பலியிடும் பழக்கத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தியாவின் முதல் செய்தித் தாளைப் பிரசுரித்தவரும் இவரே. இராமாயணம் போன்ற இந்தியப் புராணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தியாவின் முதல் அச்சகத்தையும் நிறுவினார்.

கேரியின் வாழ்வு ஒரு முழுமையான ஒன்று. அவரது தீராத ஆவல் இந்திய மக்களுக்கு அவர்கள் மொழிகளில் தேவ வார்த்தையை அளிக்க வேண்டும் என்பதே. தேவன் பேரிலும், தொலைந்து போன இந்த உலக மக்களின் பேரிலும் அவருக்கு இருந்த அன்பு அளவிட முடியாததாக இருந்தபடியால், எந்த ஒரு தியாகமும் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்

தரித்திர் ஆனதில்லை

இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டமடைந்தோர்

நஷ்டப்பட்டதில்லை


முதல் பக்கம் | வேதபாடம் | வாழ்க்கை வரலாறு | இருதய துடிப்பு | தமிழகம் | கட்டுரைகள் | இனைப்புகள் | எங்களைப் பற்றி
Tamil Unicode enabled web site
Best viewed with  Windows 2000 and Windows XP or Windows 98 with
'Latha' unicode font. Download 'Latha' font click here

This site is best viewed using IE5.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact [email protected]
Last updated: 06/11/03 05:44:23 PM.

Hosted by www.Geocities.ws

1