சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் - நற்றாடொழாஅ ரெனின்" என்றவண்ணம் வாலறிவன் நற்றா ளன்றி மாலறிவர் சிற்றாடொழாதவரும், சிவனடியவரைச் சிவனெனக் கண்டு வழிபாடு செய்பவரும், பொதுநன்மை கருதியும் சிறப்பு நன்மை கருதியும் இலங்கை இந்தியா என்னுந் தேயங்களில் நடைபெறும் பல பத்திரிகைகளுக்கு விஷயதானஞ் செய்யும் ஞானவள்ளலும், வண்ணைவைத்தீசுரர் ஒருதுறைக் கோவையாசிரியரும், சைவதூஷண கண்டனத்தாளாளரும், சுத்தாத்துவித சைவ சித்தாந்தியும், அருங்கலை விநோதரும், "கற்றவந் நற்றுணை" வரும், "உடுக்கையிழந்தவன் கைபோலவாங்கே - யிடுக்கண்களைவதாநட்பு" என்றவண்ணம் நட்பின ரிடுக்கண் விரைந்துகளை பவரும், திருமுறைப்பாராயணரும், பொதுநலப் பிரியரும், கவிராசருமாகிய மகாவித்துவரத்தினம் யாழ்ப்பாணத்து வண்ணை நகர்

ஸ்ரீமத். வைத்தியலிங்க பிள்ளையவர்கள்

அபிப்பிராயம் இது:-


   "நிலையிற் பிரியேல்" என்னுந் தலைமைச் சூத்திரப்படி தமக்குரிய எவ்வகை நிலையிலும் எந்நாளும் மாறுபாடில்லா மகா மகிமை பொருந்திய கொள்கையினரும், "ஒதுவதொழியேல்" என்னும் போதமார் சூத்திரப்படி சித்தாந்த சாத்திரம் பதினான்கையும் திருமுறை பன்னிரண்டையும் மிகவிசேடமாக ஒதுதலையே பொழுதுபோக்கும் விளையாட்டாகவுடையவரும், "ஞயம்படவுரை" என்னுஞ்சூத்திரப்படி தாம்பேசுஞ் சொற்களில் தமக்கும் பிறர்க்கும் நன்மையுண்டாகப் பேசுபவரும், "அறஞ்செயவிரும்பு" என்னுஞ் சிறந்தசூத்திரப்படி பசு புண்னிய சிவ புண்ணியங்களைப் பகுத்துணர்ந்து அவற்றுள் விசேட புண்ணியங்களையே விசேடமாகச் செய்பவரும், "ஊக்கமது கைவிடேல்" என்னும் போக்கறு சூத்திரப்படி தம்முயிர்கும் பிற வுயிர்க்கும் உறுதிபயப்பதிதுவே யெனக்கருதித்தாம் மேற் கொண்ட "ஆராய்ச்சித்" தொழிலில் மனஞ்சோராமையைக் கைவிடாதவரும், "எண்ணெழுத்திகழேல்" என்னுங் கண்மணியனைய சூத்திரப்படி தருக்க விலக்கண மிரண்டையும் தமதிரு கண்களாகப் போற்றி யொழுகுபவரும், "இயல் பலாதன செயேல்" என்னும் மயலிலாத சூத்திரப்படி தரும நூலுக்குப் பொருத்தமில்லாதவைகளைச் சந்ததமுஞ் செய்யாதவரும், "காப்பதுவிரதம்" என்னும் மாப் பெருஞ் சூத்திரப்படி உயிர்களுக்குத் தீங்குசெய்யாமல் அவைகளைக் காப்பாற்றுவதே விரதமாகவுடையவரும், [இப்புண்ணியர் தாம் இயற்றி அச்சிட்டு வெளிப்படுத்திய பலப்பல "ஆராய்ச்சி" நூல்களாலும் இவர்கள் தம் பொருள் பலர்க்கும் பயன்படும்படி வாழ்பவர் என்பது அறியலாம்.] "கிழமைப்படவாழ்" என்னும் பழமைச் சூத்திரப்படி தம்மிடத் திலுள்ள பொருள் பிறருக்கும் உரிமைப்படும்படி வாழ்பவரும் "நூல்பலகல்" என்னும் மால்பல வகற்றும் மாண்பார் சூத்திரப்படி அறிவை வளர்க்கின்ற நூல்கள் பலவற்றையுங் கற்றுக்கொள்பவரும், "சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு" என்னும் அவத்தைப்பாற்று மருஞ் சூத்திரப்படி சிவத்தைப் பேணிச் சிவபூசை செய்பவருமாகிய திருச்சிராப்பள்ளி வித்துவ சிகாமணியாகிய சாம்பசிவம் பிள்ளையவர்கள் தாமியற்றித் "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" என மகுடநாமம் புனைந்து அச்சிடுவித்த பிரதி யொன்று எம்முடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தித் தரும்படி எமது பார்வைக்கனுப்பியிருக்கின்றார்கள்.

   நாம் அவ் "வாராய்ச்சி" நூலைப் படித்துப் பார்த்தபோது, ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல்.  அட்வக்கேட்டு, அவர்கள் "திருநான்மறை விளக்கம்" என ஒரு விஷயம் வரைந்து, சென்னையிலிருந்து வெளிவருகின்ற "செந்தமிழ்ச் செல்வி" என்னும் மாதாந்த சங்கியைப் பத்திரிகையில் முதலாவது சிலம்பின் இருபதாம் பக்க முதல் இருநூற்றைம்பத்தேழாம் பக்கம் வரையினும் பிரசுரித்திருக்கின்றார் என்று அறியலானேம்.  அதன் கருத்தாவது, தமிழ்நாட்டில் தமிழ் முனிவராயுள்ளார் நால்வருக்குச் சிவபிரான் கல்லால விருக்ஷத்தினடியிலே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்தம் நான்கனையு முணர்த்த அத்தமிழ்ப் பெரியார் திருக்குறள்போன்ற "நான்மறை" என்னும் பெயருடன் நூல்கள் தமிழிற் செய்திருந்தார்கள் என்பதும், அந்நூல்களுடன் "ஆறங்க" மும் தமிழிலேயே இயற்றியிருந்தன என்பதும், அந்நூல்களனைத்தும் முதற்சங்கத்திறுதியில் அச்சங்கத்தின் ஏனைத்தமிழ்நூல்களுடன் கடல்கோட்பட்டு இறந்துபோயின என்பதும், நமதுசமயாசாரியர் திருவுள்ளக் கருத்தும் அதுவே என்பதும், பிறவுமாம்.

    அத் "திருநான்மறை விளக்கத்" தைக் கண்ணுற்று ஸ்ரீமத். சாம்பசிவ பிள்ளையவர்கள் அதனை முற்றும் நிராகரித்து, வேத சிவாகமங்கள் சிவபிரான்வாக்கே என்றும், அவைகளே ஆதியில் உண்டான முதநூல்களென்றும், அந்நூல்களினின்றே உலகத்திற் காணப்படும் எல்லாவகை நூல்களும், பல ஆசாரக்கொள்கைகளும், ஆன்மாக்களின் கன்மத்துக்கும் காலதேய வர்த்தமானங்களுக்கும் இணங்கத்தோன்றின என்றும், தோத்திர வடிவமாகிய தமிழ் மறைகள் வேத சிவாகமங்களின் சாரமாயுள்ளனவென்றும், ஆரியருக்கும், தமிழருக்குந் தந்தையார் சிவபெருமானே என்றும், அதுபோல அவரே இருமொழிக்குங் குரவர் என்றும், நான்கு வேதம் ஆறங்கம் இருபத்தெட்டாகமம் தமிழில் இருந்தன வென்பது தேவார முதலியவற்றிற் கூறியிருப்பதாகச் சொல்லுதல் "முயலுக்குக் கொம்பு மூன்று முழம்" என்பது போல வெற்றுரையே என்றும், தொல்காப்பியர் சங்கப் புலவர்கள் சைவ சமயாசாரியர்கள் ஆதியாகச் சந்தானாசாரியர் ஈறாகவும், ஆதி நமச்சிவாய தேசிகர் முதல் சிவஞான சுவாமிகள் ஈறாகவுமுள்ள மகான்களும் இவர்குப் பிற்றோன்றல்களாகிய பெரியாரும் தமிழாராய்ச்சியிற் புகுந்திருந்த புறமதக் கல்விச் செல்வரும் இதுகாறும் தமிழில் நான்மறை யாதியாய மூவகை நூல்கள் இருந்தன வென்று கூறவில்லை என்றும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசக சுவாமிகள் திருமாளிகைத் தேவர் கருவூர்த் தேவர் நக்கீரர் தாயுமான சுவாமி முதலிய மகான்களின் திருவாக்குகளையும் பிற முக்கிய நூல்களையும் மேற்கோளாக  எடுத்துக் காட்டி அட்வக்கேட்டுக் கொள்கையைப் பூர்வபக்கமாக்கித் தமது கொள்கையைச் சித்தாந்தஞ் செய்து என்றுமழியாவியல்பினிறீஇ அவ் "விளக்க வாராய்ச்சியை" அறுபது விஷயங்களாக வகுத்தும் காட்டியிருக்கும் சிறப்பு எமது உள்ளத்தை இடையீடின்றிக் குளிர்வித்து மகிழ்விக்கின்றது.

    இருமொழிக்கும் முதற்குரவர் சிவபெருமானே என்று நமது சமய சாத்திரங்களெல்லாம் முழங்கா நிற்பவும், ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளை, அட்வக்கேட்டு அவர்கள் உழக்குக்குள்ளே கிழக்கு மேற்குப் பார்ப்பவர்போல, ஆரியந் தாழ்ந்தது தமிழ் உயர்ந்தது என விகற்பம் கற்பித்து விஷயம் எழுதியது மரபன்று.  அது நிற்க.

    கல்லால விருக்ஷத்தின்கீழ், கடவுளருள்பெற்ற தமிழ் முனிவர்கள் இயற்றிய தமிழ்வேத வேதாங்கங்களும், மகேந்திரம் என்பது கைலாசமலை என்பதறியாது தமிழ் நாட்டு மகேந்திரமலை யெனப் புதிதொன்று வகுத்து அதிலிருந்து சிவபிரான் இருபத்தெட்டுத் தமிழ் ஆகமங்களையும் கூறியருளினார் என்று கற்பனை செய்த ஆகமங்களும், கடல் வாய்ப்பட்டும் படாதும் மறைந்து பல்லூழி காலமாகியும் இதுகாறும் அவற்றைப் பழமைபோலத் தமிழுலகத்திற்குத் தோற்றுவித்துக் கொடாமல் வாளாவிருத்தல் அக்கிருபா மூர்த்தி ஆன்மாக்கண்மீது முகிழ்ந்த பெருங்கருணைக் கிழுக்காமென்று புறமதத்தரும் கூறும்படி இழுக்காக எழுதிவிட்டார்.  அந்தோ! இவர் ஒரு வகுப்பார்மீது கொண்ட கோபாவேசம் தமக்கு வரும் ஏதத்தை யுணராதவண்ணஞ் செய்துவிட்டது அது நிற்க,

    சங்கங்களிருந்த காலங்களில் அவற்றில் சைவர் மாத்திரந் தானிருந்தாரா? வேறு சமயிகளும் இருந்தார்களா? கடைச் சங்க நூலாலும் அச்சங்க மருவிய நூல்களாலும் கடைச் சங்கத்துப் பல்வேறு சமயத்தவரும் இருந்தாரென்று தெரிகின்றது.  அது அநுமானப் பிரமாணமாய் முதற் சங்கம் இடைச்சங்கங்களிலும் பலவேறு சமயிகள் இருந்தார் என்று நன்கறிவிக்கின்றது.  அவர்கள் யாவரும் கைக்கொண்டொழுகியது தமிழ் வேத வேதாங்க ஆகமங்களையா?  புறச்சமயத்தவர் தங்கள் சமயங்களை நிறுவ எடுத்தாண்ட பிரமாணங்கள், ஆரிய வேதப் பிரமாணங்களே! பாஞ்ச ராத்திரிகள் மாத்துவர் முதலியோர் இன்றும் ஆரிய வேதப் பிரமாணங்களையே எடுத்தாளுதல் கண்கூடன்றோ?  தமிழ்மறைகள் இருந்தன வென்பதற்கு அகச்சாட்சியின்று.  யாதாயினுமொரு புற மதச்சாட்சியாயினுங் காட்டுவாரா?  எமது சமயகுரவர் முதலாக எண்ணிறந்த மகான்கள் யாவரும் சிவபெருமானே வேத வேதாங்கங்களையும் ஆகமங்களையும் சொல்லியருளினாரென்று வெள்ளிடை விலங்கலை யொப்பப் பல பகுதிகளிலும் கூறியிருப்ப, அந்தப்பிரமாணங்களெலாவற்றையும் புறவேலைச் சமுத்திரத்தில் வீசி விட்டுத், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் கூறியருளிய தேவாரத்துணுக்கை ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு அவைகளின் பொருளுண்மை காணமாட்டாது, "கடலின்மீனுக்கு நுளையனிட்டது சட்டம்" என்றவாறு தம் மனஞ்சென்றபடி அர்த்தங்கொண்டு தமிழ்முனிவர்கள் தமிழ் மறை செய்தாரென்று அறிவிலாமாந்தரை மயக்குதல் கா.சுப்பிரமணிய பிள்ளையைப் போன்ற நன்மக்கட்கழகாகுமா? அது நிற்க.

    இனி, ஒருகாலத்தும் இல்லாத காரியமொன்றைத், "தாங்கற்ற - நூலளவே யாகுமா நுண்ணறிவு" என்ற வண்ணம் தாம் சிறிதே கற்ற தமிழ் நூலுணர்ச்சியினால் தாபிக்கப் புகுவாரையும், மேதாவியர், பொய்யர் வருக்கத்திற் சேர்த்தொதுக்குவரன்றோ? அது நிற்க.

    இதுகாறும் தமிழ் நிலத்துச் சைவர் எவ்வகைக் குழப்பத்திற்கும் உட்படாமல் தமிழ் மொழியும் வடமொழியும் பதிவாக்கெனக் கைக்கொண்டு தம்முட் சமமெனக்கொண்டு கூடி வாழ்ந்திருக்க, இக்காலத்து விபரீதக் கல்வியாளர் சிலர் வடமொழியினும் தென்மொழியே சிறந்ததெனக் கற்பனை செய்து வருகின்றார்கள்.  அங்ஙனம் தமது நவீன எண்ணத்தைச் சாதித் தெழுதிய "திருநான்மறை விளக்கம்" என்னும் வியாசத்தை ஸ்ரீமத்.  சாம்பசிவ பிள்ளையவர்கள் ஆராய்ச்சிசெய்து தக்க தக்க பற்பல நியாய ஏதுக்களால் மறுத்துவிட்டார்கள்.  அங்ஙனம் மறுத்த "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" என்னும் அரும் பெரு நூலைச் சைவ சமயிகள் வாங்கிப் படித்து உய்த்துணர்ந்து உண்மை கடைப்பிடிக்கக் கடவர்.  இவ்வரிய ஆராய்ச்சி நூலை ஆக்கிய பிள்ளையவர்கள் சரீர செளக்கியமும் பூரணாயுசும் பெற்று இன்னும் பல நன்னூல்கள் செய்து உபகரிக்குமாறு பேரருள் பாலித்தருளும் வண்ணம் சிவபிரான் செம்பொற்றாள்களைச் சிந்தையினும் சென்னியினும் வைத்துத் தியானிக்கின்றாம்.


Hosted by www.Geocities.ws

1