சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலிச் சிவன் கோவில் அர்ச்சகரும், மானேசரும், பற்பல சிவாலய குகாலய முதலிய சைவாலயங்களில் துசாரோகணஞ் செய்து உற்சவநடாத்தும் வித்தகரும், "முப்போதுந்திருமேனிதீண்டு"ம் உத்தமோத்தம வருணத் தண்ணளிமிக்காரும், வித்துவான்கள் எனப்படுவார் யாவரே யாயினும் அவர்பாற் பத்திமை பழுத்தொழுகும் மெய்த்தகு பண்பினரும், கல்வி விநோதரும், ஈகையாளரும், சைவப்பிரசாரகரும், ஞானப்பிரகாச சபையின் நிரந்தர அக்கிராசனரும், பெளரராணிகரும், கர்ஷணாதிப் பிரதிஷ்ட்டாந்தம் பிரதிட்டாதி உற்சவாந்தம் உற்சவாதிப் பிராயச்சித்தாந்தம் என்னும் பரார்த்தக் கிரியைகளில் மிகப்பயின்றவரும், பொது நலப்பிரியரும் ஆகிய,
பிரமஸ்ரீ சி.சபாபதிக்குருக்களவர்கள்
இவ்வுரை கண்டாராவர்.


    மகா-ஸ்ரீ கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் "செந்தமிழ்ச்செல்வி" என்னும் பத்திரிகையில் "திருநான்மறை விளக்கம்" எனத் தலைக்கட் பெயர் பொறித்து எழுதிய விடயமெல்லாம் சைவ சாத்திர முரண்களெனக் கண்டு கண்டனங் கண்டு அச்சிட்டு அதில் ஒரு பிரதி எமதபிப்பிராயம் அறிதற் பொருட்டு எமக்கனுப்பி வைத்தார் ஒரு பெரியார்.

    அவர் தாம் யாரெனின் சைவ சாத்திரமுரணினர் எனப்படும் யனைகட்கொப்பற்ற சிங்கேறும், நாத்திகர்களாகிய வனத்திற்கோ ராத்திகக் கோடரியும், கற்றவர்காமுறும் பொற்பார் புலவரும், நெற்றிநேத்திரத்தனைப் பற்றொடு பூசை நித்தலும் புரியும் பளகறு தவத்தரும், மூவொருபாஷை மேவரப் பயின்று தரவிலதாகத் தமதுளங் கொண்டவரும், சைவ சித்தாந்த மெய்வரக்கற்றுப் பன்னிருதிருமுறை நன்னருற்றோர்ந்து வாதிக ளேங்கி மனமயலகலப் போதனை செய்யும் புண்ணிய கண்ணியரும், நீதி நூல்கள் பேதியா துணர்ந்து இலக்கியம் பயன்று இலக்கணந் தேர்ந்து தருக்கம் படித்துத் தாம்பெரிதோங்குநரும், திருப்புகழ்ப் பெருமான் "சேவடி படருஞ் செம்மலுள்ள" த்தரும் ஆகிய ஸ்ரீமத் திரு.மா.சாம்பசிவம் பிள்ளையவர்களே!

    இப் பெரியார் அனுப்பிய "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" என்னும் பெருநூலை யாம் அரைப்பாகம் வரை பார்வை யிட்டேம்.  எமது சிவாலய பூசை முதலாய கைங்கரியங்கள் முழுப்பாகமும் இப்பொழுது பார்க்க இடந்தந்தில, ஆயினும் எமது கருத்துப் பழு துறாவண்ணம் பின்னர் எஞ்சிய பாகத்தையும் பார்வையிட்டுப் பூர்த்தி செய்தின்புறலாமென் றெண்ணி ஒருவாறு மனந்தேறினேம்.  அது நிற்க.

    ஒரு பானை சோற்றிற் கோரவிழ் பதம் பார்த்தல் என்னும் பொருளையுடைய "தாலீபுலாகநியாயத்" தானே பார்த்த பாகத்தைக் கொண்டு பாராத பாகமும் இத்தன்மைத்தென்பது இனிது விளங்கிற்று.

    அவ் "வாராய்ச்சி" தான், சைவ நூற் பிராமணங்களையும் யுத்தி அநுபவங்களையும் தன்னக முழுதுங் கொண்டு, "திருநான்மறை விளக்க" முடையார் புதுக்கொள்கைகள் முற்றும் சுருதி முதலிய மூன்றற்கும் சிறிதும் ஒவ்வாமையை வெள்ளிடை மலை போற் றெள்ளிதிற் காட்டித் திகழ்கின்ற சிறப்பு, "விளக்க" முடையார் உளக்கமலமு நெகிழ்த்தின்புறுத்தி உண்மை கடைப்பிடிக்கச் செய்யுமென்ப தொருதலை.

    அவ்"வாராய்ச்சி" யாம் அரும்பெரு நூற்கு இலக்காக்கப் பட்ட ஸ்ரீ வேதாசலம் பிள்ளையவர்களும், ஸ்ரீ கா.சுப்பிரமணிய பிள்ளையவர்களும் தாங்கள் மேற்கொண்ட புதுக்கொள்கைகளைச் சைவநூற் கொள்கைகள் என்று ஆராய்ச்சியில்லார் கருதும்படி வெளியிட்டு வருகிறார்கள்.  அவற்றைப் பார்க்க விரும்புவோர் முறையே "திருவாசகவிரிவுரை"யிலும், "திருநான்மறைவிளக்கம்" அச்சிடப்பட்ட "செந்தமிழ்ச்செல்வி" என்னும் மாசிக பத்திரிகையிலும், அன்ன பிறவற்றிலும் பரக்கக் காணலாம்.

    இவ்விருவருக்கும் ஒருவருக்குமில்லாத ஒரு சூக்கும அறிவு தலைப்பட்டிருத்தலை எப்பாலர் அறியினும் தப்பாமல் ஆற்றலும் ஆச்சரியமடைவர்.  அது தான் மற்றெவ்விலக்கணத்த தெளிற் கூறுதும்:-

    க. தாங்கள் பிரமாணமாகக் கொண்டதொன்றைப் பிறர் பிரமாணமாகக் காட்டினால், பதில் சொல்லமுட்டுற்று, அது இடைச்செருகல் என்று கூறி விடுதல்.

        உ.  பலபொருளொரு சொல் ஓரிடத்திற் பிரயோகித்திருந்தால் அதற்கு அவ்விடத்திற்கு ஏற்பதொரு பொருளை விடுத்துத் தாம் மேற்கொண்ட கொள்கைக்கேற்ப வலிந்திழுத்துப் பொருந்தாப் பொருள் கோடல்.

        ங.  ஒரு நூலில் ஒரு விடயத்தைப் பற்றி முன்பின்னுள்ள தொடர்புபடச் சொல்லி வரும் பொருத்தப் பொருட் சம்பந்த நோக்காது தாங்கொண்ட நவீனக் கொள்கைக்கேற்பப் புதுப்பொருள் கோடல்.

        ச.  தாம் காட்டும் பிரமாணம் எதிரி கொள்கையைத் தாபித்துத் தமக்குப் பிரதிகூலமாய்த் தம்மைத் தோல்வித் தானத்துட்படுத்திவிடுதலை எள்ளத்தனையுங் கருதாதொழிதல்.

        ரு.  தங்கள் புதுக்கொள்கைக்குப் பிரமாணமின்மை செவ்விதிற் றெரிந்துவைத்தும் தெரியாதோர் போல, தேவார முதலியவற்றைத் தங்கள் கொள்கைக்கு ஏற்பத் திரித்துப் பாடங்கோடல்.

    சா. "சித்திரம் பேசேல்" என்ற ஒளவையார் திருவாக்கைச் சிறிதுஞ் சிந்தியாது அறவே மறந்து அதுவே பேசுதல்.

    எ. தாங்கள் தங்கள் கொள்கையைத் தாபித்தற்கு நூல் வரம்பிகந்து புதிதொன்று கூறின், ஏனையரும் வரம்பிகந்து அதற்குமேற் புதிதொன்று கூறின் அப்போது தாம் செய்யக் கிடந்த தொன்று மின்றென வுணராது களித்தல்.

    அ.  தங்கள் புதுக்கொள்கை, அதனையறியு மறிவாற்றலில்லாத சைவசமயிகளுக்குத் தெய்வபத்தியைக் கெடுத்து மனம் போனவாறு ஒழுகச்செய்து நரகத்திற்காளாக்கிவிடும் என்பது கருதி யிரங்காதுவிடுதல்.

    கூ.  இந்நவினக் கொள்கையுடைய இவ்விருவரில் முன்வைத் தெண்ணப்பட்ட ஒருவர் நான்மறை சிவஞான சித்தி, தேவாரம், திருக்குறள், இறையனாகப்பொருள், தொல்காப்பியம் என்று கூறப் பின்வைத் தெண்ணப்பட்ட மற்றொருவர் இவை யன்று; அது வேறு; அது கடலாற் கொள்ளப் பட்டதென்றல்.

    இங்ஙனம் இவ்விரு பெருமர் சூக்குமவறிவும் நவமாகப் பிரிந்து, அவற்றுள்ளும் ஒவ்வொன்று பலவேறுவகைப்படப்  பிரிந்து செல்லுஞ் செலவினையுடைய விலக்கணத்தன.

    இவ்வறிவு இருந்துழி யிருந்து தீட்டாத் தீட்டும் பயனில் பல முரண் விடயங்கட்குட் புதைந்து கிடக்குமன்றி அறிஞர் அவைக்களத் தணுகி அரை மாத்திரைதானும் நின்று பயன்றருவதொன் றன்று என்பதஃதறியவல்ல அவர்பாற் றோன்றாமைக்குக் காரணம் என்னைகொல்லோ! வினையென்பேமா! வினையன்று; கலிவலி என்பேமா! அஃதன்று; கண்ணுதற் பரமன் பிரேரக மென்பேமா! அதுவுமன்று; சார்ந்த இனத்தியல் பென்பேமா; என்னென்பேம்! என்னென்பேம், சிவதா! சிவதா! அது கிடக்க.

    திரிபுரத்தசுரர்கள் தேவர்க்குச் செய்த சகித்தற்கரிய இடுக்கண்ணை அவர் முறையீட்டால் அறிந்து கருணைமீக்கூர்ந்து அதனை ஒழிக்கத் திருவுளங்கொண்ட செகதீசனாகிய சிவபெருமான், அவ்வசுரர்கள் சிவபூசா துரந்தரர்களாயிருத்தலின், அப்பெரும்பேறுடையாரைப் பரமபதியாகிய தம்மாலும் கோறல் முடியாதென்றுணர்ந்து முகத்தால் சிவபூசைவிசிட்டஞ் செகத்தினர்க்குத் தெரிக்க திருவுளங்கொண்டு தமது "நால்வகைப்பட நண்ணிய சத்தியுள் - மாலு மாதலின்" அம்மாலாகிய விண்டு தேவரைக் கூவி இதனைச் செவியறிவுறுப்பாராயினார்.  அது வருமாறு:-

    விண்டுவே! நீ பெளத்தகுரவனாயும் நாரதன் உனது சீடனாகவும் கோலங்கொண்டு திரிபுரஞ்சென்று அப்புரவாசிகட்குப் பெளத்த சமய போதனைசெய்து சிவபத்தியையும் சிவபூசையையும் விடுவித்து, பெளத்த பத்தியையும் பெளத்த பூசையையுந் தொடுவித்துவரக்கடவீர் என்று அறிவுறுத்தினார்.  சமணசமயத்தையும் போதிக்கும்படி தெரித்தார் எனக் கூறும் புராணமும் உண்டு.

    சிவபிரான் தெரித்தருளியவாறு விண்டுதேவரும் நாரதரும் கோலங்கொண்டு திரிபுரஞ் சென்று பெளத்த சமண போதனைசெய்து அவ்வசுரர் சிவபத்தி சிவபூசைகளைக் கெடுத்துப் பெளத்தபத்தி பெளத்த பூசைகளைக் கொடுத்து மீண்டனர்.

`    அதன்பின் சிவபிரான் திரிபுரதகனஞ் செய்து தேவர்களை இரக்ஷித்தார்.  அக்காலத்து விண்டுதேவர் போதனையைக் கேட்டும் அதில் மனம்பற்றாத மூவர் சிவபத்தி சிவபூசைகளை விடாதிருந்தனர்.  அவர் அவ்விசேடத்தால் தகிக்கப்படாது உய்ந்தார்.  இதனால் சிவபத்தி சிவபூசைகளின் விசிட்டம் எத்துணை சிறந்ததென்பது யாவரும் எளிதிலறிந்து யாவரும் கடைப்பிடியாக மேற்கொண்டு உய்யக்கடவர்கள்.

    "வேண்டுவார் வேண்டுவதே யீயும்" பெருங்கருணைப் பெருவள்ளல் எங்கள் சிவபெருமானேயாதலால், தேவர் வேண்டுகோளை முடித்தற்கு அதற்குரியவாயிலை யுண்டாக்கி முடித்தருளினார்.  அதுபோல, கலியுக தருமம் இவையென விதித்த சிவபிரான், சைவசமயிகளிடத்து அவை காணப்படாமையால், அவற்றைச் சைவரைக்கொண்டு செய்வித்தற்குரிய வாயில் இஃதெனத் திருவுளங்கொண்டு வேதாசலம் சுப்பிரமணியம் என்னும் தமது தலப்பெயர் சுயப்பெயரோடு மானுட வடிவங்கள் எடுத்துக்கொண்டுவந்து சைவசமயிகளுடைய உறுதியான சிவபத்தி, வேதாகமபத்தி, வடமொழிப்பத்தி, பிராமணபத்தி, சைவசமய குரவர்பத்தி, சைவசமய சந்தான குரவர்பத்தி, சித்தாந்த சாத்திரப்பத்தி, பன்னிரு திருமுறைப்பத்தி, முதலியவற்றைக் கெடுத்து நவீன சைவமதத்தில் விடுத்து இருபத்தெட்டுக்கோடி நரகங்களிலும் மடுத்து வருத்தத் திருவுளங்கொண்டிருந்தாலு மிருக்கலாம்; அப்படி யாமாயின் அவ்விருவர்மீதும் குற்றமேற்ற இடமில்லை யென்றுங் கருதுகின்றாம்.

    "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" என்னும் பெரு நூலில் மிகக் கவனிக்கற்பால சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுகின்றாம்.

    வடமொழி வேதம் ஆரியர் கட்டியது; சிவபிரான் திருவாய் மலர்ந்தருளப்பட்டதன்று என்றும், சனகாதி முனிவர்கள் பிரமபுத்திரர்களன்று தமிழ் மக்கள் நால்வர் என்றும், அவர்கள் சிவபிரானிடத்து ஞானம் பெற்றுத் தமிழ் நான்மறை செய்தார்கள் என்றும், அவற்றைக் கடல் கொண்டுபோயிற்று என்றும், மறை, வேதம் என்று தேவார முதலியவற்றிலே கூறியிருத்தல் தமிழ் நான்மறையைச் சுட்டியது என்றும் கூறியிருத்தலும் இன்னபிறவுமாம்.  இவையெல்லாம் "அறையுமாடாங்கும்மடப் பிள்ளைகள் - தறையிற் கீறிடிற் றச்சருங் காய்வரோ" என்னுங் கல்வியிற் பெரிய கம்பர் அருமைப் பாட்டிற் கிலக்காவனவன்றிப் பிறிதன்றெனத் தெளிவோர் தெளிவர், தெளியார் என்றுந் தெளியார்.  அவர் கன்மத்திற்கு நல்லோர் இரங்கா நிற்பர்.

    வித்துவரத்தினமாகிய "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" நூல் ஆக்கியோர் சுருதி யுத்தி அநுபவம் என்னு மூன்றினாலும் மேற்படி விளக்கத்தை மறுத்துத் தமது பட்சத்தைச் செவ்வனே சித்தாந்தஞ் செய்திருத்தலின், நாம் அதனை மறுவலும் மறுக்கப்புகின் "பிட்டவேடணநியாய" மாய் முடியுமாகலான் அதிற் றலையிட்டிலம்.

    "ஆராய்ச்சி" நூலுடையார் உண்மைச் சிவபத்தியும், உண்மைச் சைவாபிமானமும், சைவ சாத்திரத்தின் உண்மைப் பொருளைப் புடைபடவொற்றி ஆராய்ந்தறியும் அறிவின் மதுகையும், மற்றைய பன்னூற் பயிற்சியும், நூல்வரம்பினின்று நுண்ணிதாக வாதஞ்செய்தலும், பிற பிற பற்பல நன்னலங்களும் ஒருங்குடையரென்பது அவர் "ஆராய்ச்சி" நூலால் நன்கு விளங்கும்.

    இத்தகைய பெரியார் இதுபோலும் நன்மை பயக்கும் பெருநூல்கள் இன்னும் இன்னும் பல பல செய்துகொண்டு பலர்க்குப்பயன்படச்செய்து பூரணாயுசுடன் நித்தியசுகமுடையராய் எம்போல்வாரை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் வண்ணம் பேரருள் பாலித்தருளும்படி எமது முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் றிருவடிமலரை எமதொருமுடி மலராகச் சூடித் தினந்தினம் சிந்திக்கின்றாம்.

   


Hosted by www.Geocities.ws

1