சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


ஸ்ரீலஸ்ரீ, ஆறுமுகநாவலரவர்கள் யாழ்ப்பாணத்து வண்ணை நகர்ச் சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயரும், சைவப்பிரசாரகரும், பொதுநன்மைப்புதினப் பத்திரிகைகட்கும் சிறப்புநன்மைப் புதினப்பத்திரிகைகட்கும் விஷயதானஞ் செய்பவரும், வித்தியாவிநோதசபைக் காரியதரிசியும், கொக்குவில் மாத்தனுநகர்ப் பிள்ளையார் கோயிலாதீன தருமகர்த்தரும், மதுரைத் தமிழ்ச்சங்க அங்கத்தராயிருந்து தமிழைப் பல வழியாலும் பரிபாலித்து வந்த வித்துவசிரோமணியாகிய ஸ்ரீமத் அ.குமாரசுவாமிப் புலவரவர்கள் நன்மாணாக்கரும் ஆகிய

கெளரவ பிரமஸ்ரீ, சீ.முருகேசையரவர்கள்

அபிப்பிராயம் இது:-


   "கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க வதற்குத் தக."

எனவுத்தா வேத முரைத்தாங்குக் கற்கவேண்டு நூல்களைக் கசடறக் கற்று அக்கற்றலுக் கேற்ப நிற்கவேண்டு நிலையில் நிற்கும் வித்துவ சூளாமணியாகிய சிவஞானச் செல்வர் ஸ்ரீமத் திரு.மா.சாம்பசிவ பிள்ளையவர்கள் "செந்தமிழ்ச் செல்வி" என்னும் மாசிக வாசிக பத்திரிகையிலே ஸ்ரீமத் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் வெளிப்படுத்திய "திருநான்மறை விளக்க"த்தில் உள்ளனவற்றை அநுவதித்துத் தக்க பிரமாணங்களால் மறுத்துத் "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" எனப் பெயரிட்டு அச்சிடுவித்த பெருநூலில் ஒரு பிரதி எமக்கனுப்பி எமதபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி கேட்டிருக்கின்றார்கள்.  யாம் அந்நூலை முற்றுநோக்கி யாவர்க்கும் பயன்றருவதொரு நன்னூலெனக் கண்டு கருத்துளடங்காக் கழிபெருங் களிப்புக்கொண்டேம்.  எம்மைப்போலவே எமது சைவசமயிகள் யாவரும் இந்நூலை வாங்கிப் படித்துணர்ந்து களிப்புறல் வேண்டும் என்பது எமது கருத்து.

    அரசாங்க புருடர்கள் எழுதிவிட்டால் பகுத்தறியும் அறிவாற்றலில்லாரெல்லாரும் அதனைச் சரியெனக்கருதி மயங்குவர்.  எழுதினவரின் கல்வி, சமயபத்தி, சமயநூல் வழி யொழுகும் ஒழுக்கம், உண்மை, நீதி முதலியவற்றை நோக்கி மதிப்பார் அரியராயினர்.  ஸ்ரீ கா.சு. முதலானவர்களைப் பின்பற்றி மற்றுமதிகார வர்க்கத்தினரும் பிறரும் மயக்கமுற்று ஆன்ம லாபத்தை இழவாவண்ணம் அதிகார புருடராகிய ஸ்ரீ சாம்பசிவ பிள்ளையவர்கள் இக்காலத்துத் "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" என்னு மிந்நூலியற்றியது மிகவும் உசிதமேயாம்.  "விளக்க" முடையார் கொள்கைகளை "ஆராய்ச்சி" உடையார் மறுத்திருக்கும் திட்பமும் நுட்பமும் சிறப்பும் நல்லறிவாளர் எல்லோரும் வியக்கற் பாலனவேயாம்.

    உலகத்திலேயுள்ள உண்மைச்சைவர் யாவரும் ஒற்றுமை யடைந்து நிற்கின்ற இடத்திலே ஸ்ரீ கா.சுப்பிரமணிய பிள்ளையவர்களுக்கும், ஸ்ரீ.வேதாசலம் பிள்ளையவர்களுக்கும், அவ்விருவரும் சொல்லுவனவற்றையும் எழுதுவனவற்றையும் ஆராய்ச்சியின்ற நம்புவோர்களுக்கும் வேற்றுமை தோன்றின விலக்குவார் யாரே!

    உலகர் "கண்டது கலக்கும் பளிங்குப்போலச்" சார்ந்ததன் வண்ணமாந் தன்மையராதலின் , மேலே சுட்டப்பட்ட இருவரும் எழுதிய விடயங்களை நோக்கினபோது அவர் கொள்கையராயினார் சிலர், ஸ்ரீமத் சாம்பசிவ பிள்ளையவர்கள் எழுதிய "திருநான்மறைவிளக்க ஆராய்ச்சி"யை நோக்கும்போது "ஆராய்ச்சி" நூலுடையார் கொள்கையினராவார் என்ப தொருதலையென நாம் சொல்லவும் வேண்டுமா!

    "ஆராய்ச்சி" நூலை அமைந்து நோக்கும்போது, அதனாக்கியோராகிய சிவஞானச்செல்வராம் ஸ்ரீமத் சாம்பசிவ பிள்ளையவர்களே, சைவசமயந்தழைத்தோங்குதற் பொருட்டுத் தமது உடல் பொரு ளாவி மூன்றையும் உதவிய பெரியார் என்பது பெரிதும் விளங்குகின்றது.

    ஸ்ரீ கா.சு.முதலானவர்களுக்குப் பிரதிகளில் இல்லாத "பிரதிபேதம்", "இடைச்செருகல்", உண்மைக்கு மாறுபட்ட உரைகள், மெய்யறிவிற் பெரியார் வெஃகாத கொள்கைகள் என்றின்னன வேராளமாயுள்ளன.  ஆற்றாதார் கூற்றுக்களவுமில்லை.

    இவர்கள் கொள்கைக்கு மாறாக நாமும் சில எழுதுகின்றாம்.  தமிழர் வேறு; ஆரியர் வேறு; என்று பகுத்தல் முடியாது; என்னை! கடவுள் வழிபாடு, பாஷை, தேசாசாரங்கள் கலந்திருத்தலாலென்க.

    ஆரியரையும் ஆரிய நூல்களையும் நீக்கிவிட்டால், தமிழர் ஒன்றுமிலராய்க் குன்றுவரே! அந்தோ! தமக்கும் உரிமை பூண்ட ஆரியநூலை ஆரியர்க்கேயுரியதென அவர்மீது கொண்ட கோபத்தாற் கைவிட்டுத் தாம் வறியராக முயலுதலை நோக்கும் போது எமது தம்பியர்கள் இக்கதியடையலாமா என்னும் இரக்கம் எமக்குத் தவநனியுண்டு.  அந்நிய தேயத்தார் ஆரிய நூல்களைக் கூட்டுண்டன்றோ அறிவுப் பெருஞ் செல்வராயினார்.  அவர்கள் ஆரியமே எல்லாவற்றிற்கும் மூலம் என்று பலப்பல புத்தகங்களில் வெளிப்படுத்திப் புகழ்ந்து கொண்டாடி மேன்மையடையக் கண்டிருந்தும், நமது சகோதரர் தமது பொருளை அவர்க்குக் கொடுத்துத் தாம் அவற்றை அடைய விரும்பாது வெறுத்தல் விதியார் செய்த சதியே! "விதிவழி புந்தியு மேவுமேகொலாம்"

    "யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
    சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
    வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட
    மனையானை மாற்றார் கொள."

ஆகலான் நாமிரங்கியும் ஆவதொன்றில்லை.  ஆயினுஞ் சகோதரவாஞ்சை புத்திசொல்லுகவென்று பிடர்பிடித் துந்துகின்றது.  அதுபற்றி இத்துணை எழுதினாம்.  இனி அப்பாற் செல்வாம்.

இருபெரு மக்களே!

    கடவுள் வழிபாட்டுநூல், சோதிடம், சிற்பம், வைத்தியம் முதலிய தமிழ் நூல்கள் ஆதியிலே யுண்டு; அப்போதே யழிந்து விட்டனவென்றால், அன்று முதல் இன்று வரை ஆரியத்திலுள்ள அந்நூல்களும், ஆரியருமன்றித் தமிழ்ச் சகோதரர்களுக்கு அவற்றைத் தெரித்தார் பிறரில்லையே! ஆகலான், "எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை - செய்நன்றி கொன்ற மகற்கு" என்ற திருக்குறளைச் சிந்தித்து உங்கள் சகோதரர்களாகிய ஆரியரோடும், உங்கட்கும் பிதிரார்ச்சிதமாயுள்ள ஆரியபாடை நூலோடும் நண்பரயிருந்து உண்மை கடைப்பிடியுங்கள்.

    சற்காரியவாதங் கூறுஞ் சைவசித்தாந்தத்தின்படி "உள்ளதுபோகாதில்லதுவாராது;" "முயற்கோடு" முதலியன போல, ஆகலான், வேதாகமங்கள் காரியப்படும்போது தூலமாயும், காரியப்படாதபோது காரணத்தில் சூக்குமமாயும் என்று முள்ளன.  அவை சிருட்டிதோறும் காரியப்படுவன.  சிலபோது ஆன்மாக்களது கன்மகாலங்கட் கேற்ப அவைகள் சிவாஞ்ஞையால் மறைக்கப்படும்போது உமாதேவியார், விண்டு, பிரமா முதலியோர் வேண்ட உடனே வெளிப்படுத்தப்படும், அஃதன்றி மூன்றா முகந்தொறும் மறைகளை நன்கு விளக்க முறச் செய்ய வியாசர் சிவாஞ்ஞையால் வருவர்; சிவபிரானும் மறை ஞானத்தைப் போதிக்கத் தென்முகத் தெய்வமாயவருவர்.  அவருடன் நான்கு மாணாக்கரும் வருவர்.  அது:-

    "முறையின்வந் தெய்து மூன்றா முகந்தொறு முடிவி லாத
    மறுவறு தவத்து வேத வியாதன்வந் துதிப்ப னன்னான்
    அறிவரு மறைக ளியாரு மறிந்திட வேண்டி யன்பால்
    நெறியினிற் பகுத்து மன்னு முலகினி னிகழ்த்து வானே."

    "உலகமுய்ந் திடுவான் ஞான மொழிவற வுணர்த்த வேண்டி
    மலைவறு தவத்தோ(தக்கிணாமூர்த்தி) னாகி வருகுவன் யானு மென்பால்
    அலைவறு மன்பி னோடு மடைகுவர் நால்வரன்னோர்
    தலைமைசேர் ஞான மெய்திக் கைலையங் கிரியிற் சார்வார்"

என்னும் இலிங்க புராணத்தாலும்,

"கொடுத்தவா கமந்தா னாள்பல கழிய விறத்தலுங் கொங்கலர் கூந்தல்
மடத்தகை யுமையா ளிறைவனை நோக்கி மாய்ந்தவா கமமெலா மெடுத்து
நடத்திடல் வேண்டு மென்னலு மைத்த நள்ளிரு ணடுவணின் றாடும்
விடைக்கொடி யுயர்த்தோ னாகம முழுது முன்புபோல் விளங்கிட விரித்தான்."

"விரியுமா கமத்தை யண்ணறன் னருளால் யானுமெய் தெரியகத் தியனும்
பொருவிலா ருருவுந் ததீசியு முலகி லுரைசெய்தேங் கலியுகம் பொருந்தி
மருவிடுந் தோறு மறுவறு யோகா(தக்கிணாமூர்த்தி) சாரியன் மாசறு வடிவாய்க்
கரியுரி போர்த்தோ னெய்திமற் றதனை யுய்ந்திடக் கழறுவ னன்றே"

"கழறிட வெய்து காலைக டோறுங் காசின்மா ணாக்கர்க் ணால்வர்
பழுதற வடைவா ருய்ந்திட வுணர்ந்தோர் மற்றவர் பங்கய மலர்த்தாள்
தொழுதன ரேத்தி விரித்தவா கமத்தைத் துகளர வுணர்ந்துநஞ் சிவன்றாள்
உழுவலன் போடு முளத்தினி லிருத்தி யோங்கிய முத்திசேர் குவரால்"

"என்றலு நாலா முகம்வருந் தோறு மெய்திடு குரவர்தம் பெயரும்
ஒன்றிய வறிவா லுயர்ந்தமா ணாக்கர் பெயருநீ யுரைத்தியா லென்ன
மன்றலந் துளவ மலர்புனை கண்ணன் வணங்கிமுன் னின்றன னுரைப்பத்
துன்றுவார் சடிலத் திறையவன் மலர்த்தா டொழுதுப மன்னியுப் பகர்ந்தான்"

என்னும் வாயுசங்கிதையாலு முணர்க.

    நாலா முகந்தொறும் எய்திடும் குரவர் பெயரும் மாணாக்கர் நால்வர் பெயருங் விரிப்பின் மிகப்பெருகும்; ஆகலின் வாயுசங்கிதையிற் காண்க.

    இப்பிரமாணங்களாலும் வேதாகமத்தோற்றம் சிவபிரானிடத்ததென்பது செவ்வனே உணர்க.  வேறு கூறுவன விழல்.

    "திருநான்மறை விளக்கம்" முழுதும் சைவசாத்திரங்களுக்கும், சைவப்பெரியோர் ஆட்சிக்கும் முற்றும் விரோதமே என்பதும், அதனைநம்பினோர் ஆன்மலாபத்தை இழந்து துன்புறுவர் என்பதும், ஆதலால் அதனைச் சைவசமயிகள் தீண்டுதற்கும் அருகரல்லர் என்பதும், கட்டளைச்சட்டமின்றி அரசன் செங்கோல் நடத்தாதவாறுபோலக் கடவுள் வேதாகமமாகிய சட்டமின்றி உலகத்தைநடத்தார்; ஆகலான், வேதாகமங்கள் ஒருகாரணம்பற்றி மறைந்தாலும் பின்பு தோற்றுவித்து விடுவோர் என்பதும், அங்ஙனந் தோற்றுவியாதிருந்தால் அவர்கருணைக் கிழுக்கென்பதும், தக்கனுக்குத் ததீசிமுனிவர் சொன்ன உண்மைகளை அவன் நன்றாக அறிந்துவைத்தும் பின்னும் இறைவனைமதியாமைக் கேது இருந்தமைபோல, ஸ்ரீ.கா.சுப்பிரமணியபிள்ளை யவர்களுக்கு வேதாகமங்கள் இறைவன் வாக்கென்பதும், நால்வர் சனகனாதியர் என்பதும், இவர்போல ஒவ்வொருகலியுகத்தும் நால்வர் மாணாக்கர் வெவ்வேறு பெயருடன் வந்தனர்; இன்னும் அப்படியே வருவார் என்பதும், நன்கு தெரிந்திருந்தும் அவற்றை மதியாது முரண்படப் பேசுதற்கு ஒரு பெரிய ஏது உண்டென்பதும், அவ்வேறு நீங்கினால் மதித்துப் பொருத்தமுறப் பேசுவார் என்பதும், பிறவும் "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" என்னும் நூலையும் வாயிலாகக்கொண்டு அறிந்துகொண்டேம்.

    இத்துணை நன்மைக்கேதுவாகிய மேற்படி "விளக்க வாராய்ச்சி" நூல்செய்த ஆசிரியர் ஸ்ரீமாந்.திரு.மா.சாம்பசிவ பிள்ளையவர்கள் நிறைந்த ஆயுளும், நிறைந்த செல்வமும், நிறைந்த ஆரோக்கியமும், நிறைந்தவன்மையும், இன்னனபிற நன்மைகளும் பெற்று நிலவுலகத்தின்னும் சைவவிரோதமாய்ப் பயனின்மையோடமையாது கேடும்பயக்குநூல் எழுமாயின் அதனையும் நிராகரித்து யாவர்க்கும் பெருநன்மை செய்துகொண்டு பேரானந்தப் பெருவாழ்வுறுமாறு எமது குலதெய்வமாகிய விநாயகக்கடவுள் பெருங்கருணை புரியும்வண்ணம் அப்பெருமான் திருவடிகளைச் சென்னியிற்கொண்டு தியானிக்கின்றாம்.


Hosted by www.Geocities.ws

1