சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணட்த்து மாவைக் கந்தவேள் ஆலய ஆதீன குரவருள் ஒருவரும், பெளராணிகரும், சைவப்பிரசாரகரும் கவிப்புலவரும், ஆகிய
பிரமஸ்ரீ ஸா. குமாரசாமிக் குருக்களவர்கள்
கண்ட வுரை


    செந்தமிழ்ப்புலவரும், நந்தலில் அன்பரும், உந்திய ஒழுக்கரும், சந்தத மியற்றும் அந்தமில் பூசையும், நிந்தையில் அடியவர் சுந்தரத்தொண்டும் பந்தம தகற்றும் பான்மையிற் செய்யும் பத்த சிரேட்டரும், வித்தகநூல் விநோதரும் சத்துறு கண்டனம் பத்தோ மேலும் பற்பல படைத்தீந்து பாரிற் சைவம் பரப்பினரும் பரப்புகின்றவரும் பரப்புவாருமாகிய ஸ்ரீமத் சாம்பசிவம் பிள்ளையவர்கள் எமது பார்வைக்கு அனுப்பிய "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" வரப்பெற்றுப் பார்வையிட்டு அவ்வுத்தம சிரோமணி சைவர்கட்குச் செய்த பேருபகாரத்தைக் கருதிக் கருதிக் கருங்கல்லினும் வலிதாய எமதுள்ளம் நெக்குநெக் குருகிற்று.  ஆராய்ச்சி நூலின்கண் உள்ள பூர்வபட்சிகள் கொள்கைகளையும் சித்தாந்தியார் மறுப்புக்களையும் உற்று நோக்கும்போதெல்லாம் முறையே துக்கானந்தவெள்ளம் பொழியும் துணை விழிகள்.

    இந்நூலில் வடமொழிக்கண்ணே வேதசிவாகமங்கள் ஈசனால் செய்தருளப்பட்டு அன்றும் இன்றும் என்றும் நின்று நிலவுதலும் இன்னோரன்ன பிறவும் காண்டல் கருதல் உரை என்னும் மூன்றினாலும் நிறுவப்பட்டிருத்தல் கரதலாமலகம் போலக் காணப்படுகின்றது.  அது, ஆராய்ச்சி நூலைப் படிப்பவர் தாமே அறிந்து கொள்வர்.  யாம் கூறியது மிகைபோலும்.

    வடமொழி தென்மொழிகளை ஒருங்கே தந்த ஈசன் கல்லாலின்கண் நால்வர்க்குபதேசித்த தமிழ்மறைகள் கடல்கோட்பட வடமொழி வேத சிவாகமங்களையே இத்தமிழுலகு கொள்ளத் திருவுளம்பற்றினராயின் அதனை மாற்றவல்ல சிருட்டிகர்த்தர் யாவரோ! ஆயினும் ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அவனருள் வயத்தராய்ச் சாகரத் தாழ்ந்து தமிழ் மறைகளைக் கொணர்ந்து தமிழுலகுக்கீவரேல் அதனை விலக்கவல்லார் யாவரோ!!

    "அந்தமின் மறையெல்லா மடிதலை தடுமாறிச் - சிந்திட முனிவோருந் தேவரு மருளுற்ற" காலத்தில் ஈசன் விண்டுவை நோக்கி விண்டுவே! நீ ஒருகலையுடன் புவியிற் போந்து அம்மறைகளை முறை நிறுவி வருகவென்றாஞ்ஞை செய்ய அவர் வியாசராய்ப் போந்த சரிதம் இப்பொழுது ஞாபகத்துக்கு வருகின்றது.

    ஐயிரு புராணநூலமலற் கோதியுஞ் - செய்யபன் மறைகளும் தெரிந்து மாயையால் - மெய்யறு சூளை வியாதர் புகல்வராயின், நான்மறையுள் ஒருமறையில் ஒரு பகுதியைத்தானும் நல்லாசிரியரிடத்துக் கற்று அதன் உண்மைப் பொருளறிந்து அதன் வழியைத் தூற்றாது போற்றி உய்தற்குத் தவஞ்சிறிதுங் கழிபிறப்பிற் செய்து வையாதவர்கள் மயங்கி மாறு கொளக் கூறிமறை நிந்தகராதல் ஆச்சரியமன்று.

    எங்ஙனமாயினும் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் கூறும் தமிழ்மறைகள் உலகறிய வெளிவரும் வரையும் சிவஞானச் செல்வர் சாம்பசிவம் பிள்ளையவர்கள் எழுதிய "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" நின்று நிலவுதல் ஒருதலை என்பது கடைப்பிடிக்க உலகு.

    "ஆராய்ச்சி" நூல் ஆக்கியோர் "உப்பு முலகு முள்ளளவும் வாழ்ந்து திப்பிய நூல் பல இன்னும் இதுபோற்செய்து இப்புவிக்கீந்து செப்பஞ்செய்து உவந்தினிதிருக்க வரந்தருகவென மன்றவன் மதலை தன்றிருவடியினை புந்திகொண்டிறைஞ்சுதும் புவியி லென்றுமே.

  


Hosted by www.Geocities.ws

1