சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணத்து நல்லூர்க் கைலாசநாத சுவாமி தேவஸ்தானத் தருமகர்த்தரும், "முப்போதும் திருமேனி தீண்டும்"
உத்தமோத்தம அந்தணர் குலதிலகரும், சிவாகம விற்பன்னரும்,
சோதிடத்தலைவரும், யந்திரவித்துவ சிரோமணியும்,
கிரியாகாண்டக் கண்ணாடியுமாகிய,
பிரமஸ்ரீ ந.வே.கார்த்திகேயக் குருக்களவர்கள்
இவ்வுரை கண்டார்


    சைவசமயிகளுட் சிலர் ஏறக்குறையப் பதினைந்து வருட காலமாகச் சைவசித்தாந்த நூல்களுக்கும், பரம்பரையாக் அந்நூல்வழி யொழுகிவந்த வருகின்ற ஆன்றோர் கொள்கைகளுக்கும் மாறாகத் தாம் வெவ்வேறு புதிய கொள்கைகளை மேற் கொண்டு எழுதியும் இயம்பியும் வருகின்றார்கள்.  அவருள் முன்வைத் தெண்ணப்படுவோர் ஸ்ரீவேதாசலப் பிள்ளை, ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளை என்னுமிரு பெருமக்களுமேயாவர்.

    ஈண்டு ஏனையோரை விடுத்து அவ்விருவரையும் எடுத்துக் கொண்டது எற்றுக்கெனின், உண்மைச் சைவாபிமானமும், ஓவாத தமிழ் சமஸ்கிருதாபிமானமும், "துலைநாவன்ன சமநிலையுள்ள "மும், நூல்வரம்பிகவாத மேல்வரம் புடைமையும், ஆன்றோராசாரம் என்று போற்றலும், சிவபூசைப்பத்தி சிவனடியார் பத்தியும், விபூதி உருத்திராக்கமாகிய சிவசின்ன தாரணமும், "உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம்" என்னும் ஒளவையார் திருவாக்கை அனுதினமும் அறிஞர் நினைவு கூரச்செய்தலும், "எல்லார்க்கு நன்றாம் பணிதல் அவருள்ளும் - செல்வர்க்கே செல்வந் தகைத்து" என்னுந் திருக்குறளுக்கு இலக்கியமும், இன்னன நன்மைகள் பிறவும் மன்னித்துறுமும் மாண்பார் வித்துவதிலகராகிய ஸ்ரீமத். திரு.மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் எமது அபிப்பிராயங் கேட்டற் பொருட்டு அனுப்பிய "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" என்னுந் திருத்தகு நூலில் அவ்விருவரையுமே சுட்டிப் பேசப்பட்டிருத்தலினா லென்றுணர்க.

    வேதாசலப் பிள்ளை என்பாரது நவீனக் கொள்கையை ஆராய்ச்சி ஆசிரியர் பத்திரிகை மூலமாகவும், சிறு புத்தக மூலமாகவும் மறுத்தொழித்தமையை அப்பத்திரிகை முதலியவற்றைப் பார்த்தறிந்திருக்கின்றேம்.  அவற்றிக்கு மறுப்பு இன்னும் வந்திலது.  வருதற்கு வழியில்லை.  ஆகலான், இனி மேலும் வாராது.  வாராது. ஒருகால் மானமேலிட்டால்வரின் பிழையுறவரும்; அழிபட்டொழியும்.

    சைவசாத்திர விரோதக் கொள்கையராகிய வேதாசலப் பிள்ளை என்பார் யாழ்ப்பாணம் வந்தபோது உண்மைச் சைவ வித்துவான்கள் அவரது புதுக்கொள்கையை அங்கீகரித்திலராய் வித்துவ சபையில் அதனைத் தாபிக்குமாறு அழைத்தார்கள்.  அவர் வரவில்லை. வாராமையால் ஸ்ரீமத் கைலாச பிள்ளையவர்கள் இந்து சாதன பத்திரிகை மூலமாகவும் சிறு புத்தக மூலமாகவும் அவரது சைவ விரோதக் கொள்கையைப் பிரமாண சகிதம் மறுத்து விட்டார்கள்.  அவற்றிற்கும் இன்று வரை மறுப்பெழுத வலியிலராயினார்: என் செய்வார்! பாவம்! பாவம்!! பிரமாணமின்மையிற் பேசாதொழிந்தார்.  "கல்லாத மேற்கொண் டொழுகுவான் கசடற - வல்லதூஉமையந் தரும்" என்பதற்கிலக்கியராகாது மோன முற்றிடல்மாமதியேயாம்.

    இங்ஙனமிருத்தலால் அவரைப்பற்றித் "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி நூலுடையார் அந்நூலுள் தொட்டுக்காட்டி விட்டொழிந்தனர்.  அம்முறைபற்றி யாமும் அவர் கொள்கையை விடுத்து, கா.சுப்பிரமணிய பிள்ளை என்பார் கொள்கையைத் தொட்டுப்பார்த்து எமது அபிப்பிராயத்தைத் தெரிப்பாம்.

    கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பூர்வ பக்கமாகத் "திருநான்மறை விளக்கம்" எனத்தீட்டிய பத்திரிகையில், கல்லானீழலில் இறைவன், நால்வர் தமிழ் மக்களுக்கு ஞானத்தைக் கொடுக்க அவர்கள் தமிழ் நான்மறை செய்தார்கள் என்றும், சிவபிரான் வேதஞ் செய்திலர் என்றும், வடமொழி வேதம் தமிழ் வேதத்தைப் பார்த்து ஆரியர் கட்டின கட்டு வார்த்தை என்றும், தமிழ் வேதத்தைக் கடல் கொண்டுபோயிற்றென்றும், ஆறங்கங்களும் தமிழிலுள்ளன, அவையுங் கடல் கோட்பட்டன என்றும், பிறவாறும் பிரமாணமின்றி "வாயில் வந்தன வந்தன போற்றினார்" என்ற வண்ணம் மனத்திற்றோன்றிய தோன்றியபடி எழுதி யிருக்கின்றார்கள். "அறிஞர்க ணாடியே யவற்றைக் காண்கவே."

    "திருநான்மறை விளக்கத்" திற் காணப்படுவனவெல்லாம் சைவ சாத்திரங்களுக்கு முற்றும் மாறுபட்டனவேயாம்.  முக்கியமான சிலவற்றை ஈண்டெடுத்துக் காட்டினாம்.  இவைகளெல்லாம், சைவ சமயம் இல்லை; சைவ சாத்திரம் இல்லை; சாதி இல்லை; ஆச்சிரமம் இல்லை; சிவன் இல்லை; சீவன் இல்லை; புண்ணியம் இல்லை; பாவம் இல்லை; அவற்றின் பயன்களாகிய இன்பம் இல்லை; துன்பம் இல்லை; அவ்வின்பத் துன்பங்களை அனுபவிக்கும் சுவர்க்கம் இல்லை; நரகம் இல்லை; "கொலையொடு களவு காமங் குறித்திடு வஞ்ச மெல்லா - நிலையெனப் புரிதியற்றா னினக்குமேல் வருந்தீ தொன்று" இல்லை; எனவும் இன்னன பிறவும் கூறும் நாத்திகர்க்கும் உடன்பாடாகாதெனின், இவைகளெல்லாம் உண்டெனக் கூறும் ஆத்திக சைவசற்சனசங்கத்தணுத் துணைதானு மணுகாதழிந்துபடும் என்பதறையவும் வேண்டுங் கொல்லோ!

    உண்மைச் சைவ சற்சன சபையில் அவையணுத்துணையு மேறாவென்பது "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" என்னு நூலைப்படிப்பவர் நன்கறிவர்.  "ஆராய்ச்சி" ஆசிரியர். கா.சு. என்பார் கொள்கைகளெலாவற்றையும் தக்க பிரமாணங் கொண்டு மறுத்திருத்தலின் யாம் மறுப்பான் புகவில்லை.  அம்மறுப்புக்கு மதிப்புரை கொடுப்பான் புகுந்தேம்.  எமதபிப்பிராய மதிப்புரை இதுவேயாம்.

    நல்லாசிரியரை வழிபடு முறையில் வழிபட்டுக் கேட்கு முறையிற் கேட்டுச் சைவ சித்தாந்த நூல்களைக் கற்று உள்ளவாறுணர்ந்த நல்லோர்கள் "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" ஆசிரியர் அறிவின் மதுகையை அறிந்து வியந்து மகிழா நிற்பர்.  ஏனையோர் வியந்தென்? ஒழிந்தென்?

    சைவவுலகந் தடுமாறிப் பிறவிப்பயனை இழவாதவண்ணம் "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" என்னும் சிறந்த நூலியற்றி ஈடேறச் செய்த புலவர் திலகராகிய ஸ்ரீமத் சாம்பசிவம் பிள்ளையவர்கள் இன்னும் இதுபோலும் பெருநூல்கள் செய்து உபகரித்துப் பூரணாயுசுப் பெற்றுப் புண்ணியராய் ஆனந்த வாழ்வுறும்படி "சிற்சபை பொலியத் திருநடம்புரியு, மற்புதக் கூத்தர்" அருள்புரியுமாறு அனுதினமும், வேண்டுகின்றாம்.


Hosted by www.Geocities.ws

1