சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


திருநெல்வேலி ஜில்லா தச்சநல்லூர், இருமொழிகளிலும்
சிறப்புற்றவர்களும்
தமிழ் வளர்ச்சியில் முழுதும் ஈடுபட்டவர்களுமாகிய
ஸ்ரீலஸ்ரீ ஐயா இலக்குமணப்போற்றி ஐயா
அவர்களது அபிப்பிராயம்


    இத்திருநான்மறை விளக்க ஆராய்ச்சி யெனும் நூலைப் படித்தேன்.  இதிற் காணப்பெற்ற பொருளைப்பற்றி யென்கருத்தை வெளியிடல் வேண்டுமென இந்நூலாசிரியர் விரும்பிக் கொண்டார்கள்.  ஆதலால், என் சொற்ப அறிவிற்குப் புலப்பட்டதை இதில் எழுதுகிறேன்.

    திருநான்மறை விளக்க ஆசிரியரும், திருநான்மறை விளக்க ஆராய்ச்சி ஆசிரியரும் கல்வியிற் சிறந்த உண்மைச் சைவ ஒழுக்கமுடையோராவர்.  இவர்கள் சைவ நூல்களையே தாங்கள் பாராட்டுதற்குரியனவாகக் கொண்டவர்கள்.  ஆனால், அவற்றில் திருநான்மறை யெனும் பதப் பொருள்பற்றி வேறுபட்ட கருத்துடையராயிருக்கின்றனர்.  திருநான்மறை யென்பது வடமொழி வேதமா, தென்மொழி வேதமா என்பது அவர்கள் ஆராய்ச்சிக் குறிப்பு.  கருத்தின் வேறுபாடு ஆன்மாக்களின் பக்குவத்தைப் பொறுத்ததே.  வியாசசூத்திரம் ஒன்றினுக்கு நால்வர் பெரியார் ஒன்றிற்கொன்று முற்றும் மாறுபட்ட கருத்துள்ள நான்கு பாஷியங்களை வகுத்துள்ளார்.  ஒவ்வொருவரும் துர் அபிமானங்கொள்ளாமல் தங்கள் தங்கள் புத்தியிற் புலப்பட்டதை உள்ளவாறே வெளியிடுவது பெருமையேயாம் நிற்க.

    இத்திருநான்மறை பற்றிய ஆராய்ச்சிக்கு விஷயமாயுள்ள நூல்கள் முக்கியமாகத் தமிழ்த் தேவாரத் திருவாசகங்களேயாம்.  இவற்றை யருளிச் செய்த மகான்கள் கருத்தில் வடமொழி வேதங்களின்றி வேறு தமிழ் வேதங்கள் உண்டெனுங் கொள்கை ஒரு சிறிதுங் காணப்படவில்லை.  வடமொழிப் புராண இதிகாசங்களின் கதாசாரங்களின் தொடர்பின்றி அப்பா சுரங்களை ஆராயப்புகின் சிவபிரானுக்கு இட்டுள்ள திருநாமங்களில் ஒன்றுகூடக் காணக்கிடையாது.  இங்ஙனம் இருப்ப, அப்பாசுரங்களில் பிரயோகமாகிய பதங்களுக்கு வடமொழி வேதங்களுக்குப் புறம்பாகப் பொருள் கூறுதல் இயைபுறுமெனத் தோற்றவில்லை.  அன்றியும் தமிழிலுள்ள தேவார திருவாசகங்கள் திருவள்ளுவர் திருக்குறள் ஸ்ரீவைஷ்ணவ நூலாகிய நாலாயிரப் பிரபந்தம் இவை அனைத்தும் தமிழ் வேதங்களாகப் பாராட்டப்பட்டு வருகின்றன.

    "மறையளித்த திருவாக்கால்" தமிழில் அடியெடுத்தளிக்கப் பெற்ற திருத்தொண்டத் தொகை, பொல்லாப்பிள்ளையார் திருவாய்மலர்ந்த நம்பியாண்டார் நம்பி அந்தாதி, 'உலகெலாம்' என அடியெடுத்தருளப்பெற்ற பெரியபுராணம், இவை சுயம்பாகத் தமிழில் உண்டாயவை; மொழி பெயர்க்கப்பட்டனவல்ல.  இவைகளாவது வடமொழி வேதங்களை யெடுத்தாளாதிருக்கவில்லை.  சிவாகமங்கள் தமிழிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை யெனக்கொள்வாமெனின், சமய தீக்கையில் பிரயோகமாகும் மந்திரங்கள் கூடத் தமிழில் இல்லை.  வடமொழியில் உள்ளன.  இதனால் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி யென்பதை மறுக்கவில்லை.  இந்நூலின் ஆராய்ச்சி அளவில், இந்நூல் திருநான்மறை யென்பதை வடமொழி வேதமென நிலையுறுத்துகின்றது.  இந்நூலாசிரியர் சைவத் திருவாளர் சாம்பசிவம் பிள்ளையவர்கள் தக்கமேற்கோள்களை ஆராய்ந்து திருநான்மறை விளக்கத்திற்கண்ட ஒவ்வொரு விஷயத்துக்கும் தக்க விடை பகர்ந்துள்ளார்.  இவர்களது பெருமுயற்சி மிகவும் நன்கு மதிக்கற் பாலதாம்.   


Hosted by www.Geocities.ws

1