உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

வீரபத்திரர்

"காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன்
நாமகள் நாசி சிரம்பிரமன் கரமெரியைச்
சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆ டாமோ"

                                             - திருவ甶சகம்

    னிதன் எவ்வளவு தான் வரம்பிலாற்றல் பெற்றிருந்தாலும் அகந்தை என்பது இருத்தல் கூடாது.  ஆணவமே மனிதனை அழிக்கும்.  வேறு புறப்பகை தேவையில்லை.  சான்றோர் ஒழுகலாற்று வரம்பினை எக்காலத்திலும் நாம் மீறலாகாது.  மரபுக்களைப் பேணிக்காத்தல் வேண்டும்.  இறைவன் அறக்கருணையாலும் மறக்கருணையாலும் மன்னுயிரைக்காத்து உய்வடையச் செய்கிறான்.  இறைவன் அருளைப் பெற விழைய வேண்டுமேயன்றி, எதிர்த்து அழியவேண்டாம் எனப்பல தத்துவங்களை உலகுக்குப் புகட்ட எழுந்த கோலமே வீரபத்திர வடிவம் ஆகும்.

    தக்கன் (தட்சப் பிரஜாபதி) தன் மகளான தாட்சாயணியைச் சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்து மகிழ்ந்திருந்தான்.  ஆனால் தன் அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான்; அவரை நிந்தித்தான்.  சிவபெருமானை அவமதிக்க வேண்டி, அவரை அழைக்காமலேயே மாபெரும் வேள்வி ஒன்றைச் செய்தான்; அனைத்துத் தேவர்களையும் அழைத்தான், உபசரித்தான்.  ஆனால் தன் மகளுக்கோ, மருமகனுக்கோ அழைப்பு அனுப்பவில்லை.  தந்தை செய்யும் வேள்வியைக் காணவும், தந்தையைத் திருத்தவும் நினைத்த தாட்சாயணி, சிவபெருமான் அனுமதி பெற்றுத் தந்தை வீட்டிற்கு வருகிறாள்.  தந்தையின் வெறுப்புணர்ச்சி அவளைத் திடுக்கிடச் செய்கின்றது.  வேள்விக் குண்டத்திலே பாய்ந்து அவள் மறைந்து விடுகிறாள்.  தன்னை அவமதித்ததையும், தனது தேவியின் மறைவையும் கேட்டு, தக்கன் மீது சினங்கொண்டு, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறக்கிறார்.  அதிலிருந்து தோன்றுகிறார் வீரபத்திரர்.

"பார்த்த திக்கினில் கொடுமுடி ஆயிரம் பரப்பி
சூர்த்த திண்புயவரை இரண்டாயிரம் துவக்கி
போர்த்த தாள்களில் அண்டமும் அகண்டமும் பெயர
வேர்த் தெழுந்தனன் வீரரில் வீரரில் வீரன்"

                                    - கந்தப甹ராணம்

வீரபத்திரரின் கண்களில் வீசும்பொறி ஊழி வெங்கனலையே எழுப்பியது

"மலை யதிர்ந்தன, மாதிரம் அதிர்ந்தன, வான
நிலை அதிர்ந்தன, வீரர்கள் அதிர்தலும் நெடுநீர்
அலை அதிர்ந்தன, மகம் செய்யும் மயன்மகன் குடுமித்
தலை அதிர்ந்திட அதிர்ந்தன வானவர் தொகுதி"

                                      - கந்தப甹ராணம்

   

தக்கனையும், யாகத்தையும் அழித்து, வந்திருந்த வானவர்களுக்கும் பாடம் புகட்டுகிறார் வீரபத்திரர்.  வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று திருநாவுக்கரசரும் மணிவாசகரும் பட்டியலிட்டுக் காட்டுகின்றனர்.  திருநாவுக்கரசர் தேவாரக் குறிப்பின்படி

"எச்சன் நிணத்தலை கொண்டார், பகன் கண்கொண்டார்,
இரவி பல் இறுத்துக் கொண்டார், மெச்சன் வியாத்திரன்
தலையும் வேறாக் கொண்டார், நமன் தாள் அறுத்தார்,
சந்திரனை உதைத்தார், புள்ளரசைக் கொன்று உயிர்
பின் கொடுத்தார், அக்கினகரம் கெடுத்தார்,
இந்திரன் தோள் நெரித்தார், திருமால் தலை
இழந்தார், பிரமன் தலை இழந்தார்" என்று வீரபத்திரரின் வீரச்செயல்கள் பேசப்படுகின்றன.

    சிவபெருமானை மதிக்காத யாகத்திற்கு வந்த காரணத்தாலே மேற்குறித்தோர் தண்டனை பெற்றனர்.  தீயாரோடு இணங்குதலும் தீமைதானே தரும்.  தக்கன் தன் தலையை இழந்தான் அவனுக்கு ஆட்டுத்தலையும் பொருத்தப்பட்டது.

"ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டியவா பாடி உந்தீபற" என்பார் மாணிக்கவாசகர்

அக்கினி தன் கரம் இழந்தான்.  அவன் தானே அவிர்ப்பாகம் ஏற்றான்.  அவன் கரத்தை வெட்டுவது முறை தானே!

"வெய்யவன் அங்கிவிழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தானென்று உந்தீபற"

                            - திருவ甶சகம்

இந்திரன் தோள் நெரிந்தது.  கருடன் உயிர் இழந்து மீண்டும் உயிர் பெற்றான்.  சந்திரன் தரையில் தேயப்புண்டான்.  சூரியன் தன் கண்ணையும் பற்களையும் இழந்தான்.

"உண்ணப்புகுந்த பகன் ஒளித்தோடாமே
கண்ணைப் பறித்தவாறு உந்தீபற"

"சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவாறு உந்தீபற"

                             - திருவ甶சகம்.

"பகன் தாமரைக்கண் கெடக்கடந்தோன்"

                            - திருக畅கோவையார்

திருமால் தலையிழந்தார்; பிரமன் தலை இழந்தார்;

இயமனும் தாளிழந்தான்; தலையிழந்தான் என்று கந்தபுராணம் இயம்பும்.

"கூற்றுவன் அலமந்தோடலும் வெட்டினன்
 அவன் தலை வீரவீரனே"  - கந்தபுராணம்

இவ்வாறு தக்கன் வேள்வியைத் தகர்த்த வீரபத்திரர் செயல்களைக் கூர்மபுராணம், வராகபுராணங்களும் பேசுகின்றன.  தக்கனுக்கும் உருத்திரனுக்கும் நிலவிய பகைகுறித்துப் பாகவதபுராணம் விவரிக்கின்றது.

    வீரபத்திரரைச் சிவனார் மகனெனக் கூறுவதும் உண்டு.  சிவபெருமானுக்கு நான்கு குமாரர்கள்; கணேசர், பைரவர், வீரபத்திரர், வேலர் என்பர்.

    சிவபெருமானுடைய அட்டவீரட்டங்களில் ஒன்றாக வீரபத்திரர் கருதப்படுகிறார்.  தக்கனைத் தண்டித்த பராக்கிரமம் நிகழ்ந்த தலமாகத் திருப்பறியலூர் வீரட்டத்தலம் போற்றப்படுகிறது.  தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருப்பறியலூரில் விளங்கும் வீரபத்திரர் எட்டுக்கரங்கொண்டு திகழ்கிறார்.

    காரணாகமும், ஸ்ரீதத்துவநிதியும் வீரபத்திரர் வடிவத்தை விவரிக்கின்றன.

    காரணாகமத்தின்படி, வீரபத்திரர் மூன்று கண்களும், நான்கு கரங்களும், அக்கினி ஜடையும், கோரப் பற்களும் கொண்டு, மணி, கபாலம், தேள்மாலைகளையும், நாக யக்ஞோபவீதத்தையும் தரித்திருப்பார்.  இவர் குறுகிய காற்சட்டையணிந்து பாதுகைகளும் அணிந்திருப்பார்.  இவரது முகம் மிகுந்த சினத்துடன் கொடிய நோக்குடையதாய் இருக்கும்.  தனது நான்கு கரங்களிலும் கடகம், கேடகம், தனுசு, பாணம் இவற்றை ஏந்தியிருப்பார்.

    ஸ்ரீதத்துவநிதியில் வீரபத்திரர் வடிவம் கீழ்வருமாறு காட்டப்படுகிறது; இவர் கோரமுகமும், கோரமான பற்களும் மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டிருப்பார்.  இடக்கரங்கள் இரண்டிலும் வில்லும், கதையும் கொண்டிருப்பார்.  வலக்கரங்கள் இரண்டிலும் கட்கமும் பாணமும் ஏந்தியிருப்பார்.  கபாலமாலை அணிந்து, கால்களில் பாதுகையும் தரித்திருப்பார்.  அருகே பத்திரகாளி விளங்குவாள்.  விரபத்திரருக்கு வலப்பக்கம் ஆட்டுத் தலையுடன் அஞ்சலி கரத்தனாகத் தக்கன் நின்று கொண்டிருப்பான்.

    கர்நாடக மாநிலத்தில் வீரபத்திரர் கைகளில் வீணை விளங்கக் காண்கிறோம்.

    திருமுறைகளில் வீரபத்திரர் பராக்கிரமங்கள்

"தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்"

"தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்"

"சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் கடரவன்
கரமும் முன்னியங்கு, பருதியான் பல்லும்
இறுத்தவர்க்கருளும் பரமனார்"

"தக்கனது பெருவேள்விச் சந்திரன் இந்திரன்
எச்சன் அருக்கன் அங்கி மிக்க விதா தாவினோடும்
விதிவழியே தண்டித்த விமலா"

என வரும் திருஞான சம்பந்தர் திருவாக்குகளும்

"விண்பட்ட பூதப்படை வீரபத்திரரால்
புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ"

என்று மணிவாசகர் திருவாக்கும்.

"புரம் கரி கருடன் மறலிவேள் இவர்மிகை செகுத்தோன்"

"எச்சன் வன் தலையும் விண்டுருள்"

என வரும் திருவிசைப்பா வரிகளும் ஈண்டு கருதத்தக்கன.

வீரபத்திரரைப் பிரதிட்டை செய்வதால் கொடிய தீமைகள் அகலும்; துன்பம் நீங்கி வாழ்வர் என ஆகமங்கள் கூறுகின்றன.  தத்தம் செயல்களில் வீரமும் வெற்றியும் வேண்டுவோர் வீரபத்திரரை வழிபடல் வேண்டும்.


 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1