உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

உமாசகிதர்

    சிவபெருமானது அருட்சக்தியே உமை என அழைக்கப்படுகிறது.  சக்தி தன் வடிவே தன்னில் தடையிலா ஞானமாகும் என்பர் ஆன்றோர் ஞானமே உமை வடிவாகத் திகழ்கிறது.  சிவபெருமானது கருணையே அம்பிகை என்பது இதனால் புலப்படும். உமை என்பது சிவபெருமானது கருணையே என்று காட்ட அமைந்த திருக்கோலமே உமாசகித மூர்த்தி அல்லது உமா மகேச்வர மூர்த்தி ஆகும்.

   சுகாசனமூர்த்தி அருகே, தேவி அவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தால் இக்கோலம் உமாசகிதமூர்த்தி என அழைக்கப்படும்.  இறைவனின் இடப்பக்கம் இறைவி அமர்ந்திருப்பாள்.  இவர் ஒரு முகமும் முக்கண்ணும் நாற்கரங்களும் கொண்டிருப்பர்.  சுகாசனத்தில் அமர்ந்த இவர் புலித்தோலையும் பட்டாடைகளையும் அணிந்திருப்பார்.  இவரது பின் வலக்கரத்தில் மழுவும் பின் இடக்கரத்தில் மானும் திகழும். முன் வலக்கை அபயஹஸ்தமாகவும் முன் இடக்கை வரதஹஸ்தமாக அல்லது சமஹகரணமாகவும் அமைந்திருக்கும்.  குண்டலம், ஜடா மகுடம், சர்ப்பகங்கணம், யக்ஞோபவீதம் ஆகியன அணிந்து மிக அழகுடையவராகத் திகழ்வார்.  தேவி ஒருமுகமும் இருகரங்களும் கொண்டு விளங்குவாள்.  அவளது வலக்கரத்தில் பத்மமும் (தாமரை மலர்) இடக்கரம் சிம்ஹகரணமாக அல்லது ஆசனத்தில் பதிந்தவாறும் இருக்கும்.  தேவி கரண்டமகுடம் சூடி அழகே உருவாக வலக்காலைத் தொங்க அமைத்து அமைந்திருப்பாள்.

    சில்பரத்தினத்தின்படி, அவளது வலக்கரம் உற்பல மலரையும் இடக்கரம் வரதமும் கொண்டிருக்கும்.

    இம்மூர்த்தி அமைப்பில் இறைவனும் இறைவியும் ஒரே இருக்கையிலோ, தனித்தனியாக வெவ்வேறு இருக்கைகளிலோ இருக்கலாம்.

    ஸ்ரீலங்கா திருக்கேதீச்சரத்தில் உமா சகித மூர்த்தியின் அருமையான வடிவம் காணப்பெறுகிறது.  காஞ்சியிலும் மதுரையிலும் இத்திருக்கோலத்தைக் காணலாம்.

    மதுரைக்கோயிலில் தூண்சிற்பமாக இம்மூர்த்தி விளங்குகிறது.  இவ்வடிவத்தின் தனிச் சிறப்பாக, இறைவன் பின் வலக்கரத்தில் ஜபமாலையும் பின் இடக்கரத்தில் சூலமும் கொண்டு முன் வலக்கரம் அபயம், முன் இடக்கரம் வரதமாக விளங்குகிறார்.  இறைவியின் வலக்கரத்தில் உற்பல மலரும் இடக்கரம் கட்டியலம்பிதமும் அமைந்து விளங்குகிறது.

    திருமுறைகளில் இம்மூர்த்தி, போற்றப்பட்டுள்ளது. 

திருந்திழை யவளொடும் பெருந்தகை இருந்ததே அரவிடைமாதொடும் வீற்றிருந்த அழக

என்று திருஞானசம்பந்தரும

பண்ணினேர் மொழியாள் உமைபங்கர்

என்று திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும பரவுகின்றனர். 

கந்த புராணத்திலும் இக்கோலம் காட்டப்பெறுகிறது.

தந்துழி ஈசந்தன்னைத் தநயரும் அயனும்மாலும் வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி நந்தமது அருளதாகும் நங்கையோ டினிது சேர்ந்தாம் முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான்.


 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1