சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணத்துச் சார்ந்த பருத்தித்துறை வாசரும், கந்தபுராண விருத்தி யுரையாசிரியரும், வாக்கிய பஞ்சாங்க கணிதரும் தமிழ் சமஸ்கிருத பாஷாபிமானரும், வித்தியா விருத்திச் சங்கத் தருமகர்த்தரும் ஆகிய

பிரமஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள்

அபிப்பிராயம் இது:-


      வடமொழி தென்மொழி யென்னும் இருமொழிகளும் எங்கட்கெல்லாம் இரண்டு கண்களெனத்தக்கனவாய் இன்றியமையாதிருப்பவும் அஃதறியாமையினாலோ! ஒரு மொழி மேன்மட்டுங் கொண்ட அபிமானத்தாலோ! கலியின் முதிர்ச்சியினாலோ! சிலர் தென்மொழியாகிய தமிழைப் போற்றுதற்காக வடமொழியை ஒதுக்கத் தலைப்பட்டுச் சிற்சில ஆண்டுகளாகப் பற்பல விபரீதங்களைச் செய்து வருகின்றார்கள்.

    குறித்த இருமொழிகளினதும் தாரதம்மியங்களை ஆராய்ந்து நிச்சயிப்பது அவ்விரண்டினும் நிரம்பிய புலமையுடையார்க்கே இயைவதொன்றாம்.  அத்தகைய புலமையுடையார் பலர் பற்பல நூல்களையும் உரைகளையும் இயற்றியுள்ளார், அவையெல்லாம் அனைவராலும் அன்றுமுதல் இன்றுவரை பொன்னே போற்போற்றப்பட்டு வருகின்றன, அவர்கள் தங்கள்நூல்களிலாவது உரைகளிலாவது இங்ஙனம் துரபிமானச் செயல்களைச் செய்யாது உள்ளதை உள்ளவாறே கூறிப்போந்தனர்.

    இக்காலத்திலே ஒரு தமிழ்நூலைத்தானும் நல்லாசிரியரிடத்தே ஐயந் திரிபு அறியாமை என்னும் முக்குற்றமும் நீங்கக் கல்லாது தாமாகவே மனம்போனவாறு பார்த்துவிட்டு, தாமறியாத வடமொழியை இகழ்வாரும், அம்மொழியிலிருந்து தமிழிலெடுத்தாளப்படும் நூல்களைமறுத்துப் பிறிது கற்பனைசெய்வாரும், தமிழில்வந்து வழங்கிய வடசொற்களைத் தமிழிற்கே இயற்கையாகவுடைய சொல்லென்பாருமாய் வழூஉப்படுவார்பலர்.

    எங்கள் தமிழ்மொழி, வடதிசையினின்று வந்தவரும், வடமொழியை இனிது பயின்றவரும் ஆகிய அகத்தியமகாமுனிவரால் (அகத்தியன் பயந்த செஞ்சொலாரணங்கு என்னும் பாரதநூலுடையார் கூற்றாலும் அது நன்கு விளங்கும். ) ஆதியில் வளர்க்கப்பெற்றது.  அம்முனிவர்க்குக் கண்ணுதற்பெருங்கடவுளால் உபதேசிக்கப்பட்டது.  ஆதியில் தமிழிலக்கணநூல் செய்தாரும் அம்முனிவரே! அவருக்குப் பிற்பட்ட தொல்காப்பியனாரும் தமிழ் மொழியோடு (ஐந்திரநிறைந்த தொல்காப்பியன் என்பதனாலுமஃதறிக)  ஆரிய மொழியும் கற்றே இலக்கணநூல் செய்தனர்.  பண்டைக்காலத்தின் சங்கத்திருந்து தமிழாராய்ந்த புலவருள்ளும் பலர் இருமொழிகளினுந் தேர்ச்சியுடையரா யிருந்தனர்.  சங்கந்தவிர்ந்த பின்னிருந்த புலவருள்ளும் பலர் அவ்வாறேயிருந்தனர்.  அவர்களால் வடமொழியி லிருந்த நூல்கள் பற்பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.  எவராவது ஒருவர் ஒருமொழியை முற்றக்கற்பினும் அம்மொழிக் கியைபுடைத்தான பிறிதொரு மொழியையுங் கற்பின் புலமைத்திறம் மிக நிரம்பப் பெறுவர்.  ஆதலின் தமிழைக் கற்போர் தமது புலமை மிகநிரம்புதற்பொருட்டு உடன் கற்கற்பாலது அதனோ டியைபுடைய வடமொழியே.  வடமொழிகற்போர் தமது புலமை மிக நிரம்புதற்பொருட்டு உடன்நற்கற் பாலது அதனோ டியைபுடைய தமிழ் மொழியே.

    தமிழிற்குச் சிறப்பெனக் கூறத் தக்கனவாய சொற்களின் றொகையினும்பார்க்க ஒருமடங்கதிகமான சொற்கள் வடமொழியிலிருந்து தமிழில் வந்து வழங்குகின்றன.  இங்ஙன மிருத்தலால் அச்சொற்களைச் சேர்த்து நூல்களையும் உரைகளையும் இயற்றிய தமிழ்ப் பெரும் புலவரது பாததுளியின் றுணையளவேனும் திருபாடையும் பெறாதார் அச்சொற்களை நீக்கவும் தமிழை வடமொழியுடன் றொடர்பற்ற பாஷையாக்கவும் துணிவது நகைக்கிடனாமன்றி முற்றுப்பெறத்தக்க கருமமன்று.

    பண்டைக்காலத்தில் பற்பல வருணத்தாரும் வடதிசையினின்று தமிழ்த்தேசத்தில் வந்து காலந்தோறும் குடியேறினர்.  தமிழ்த்தேயத்தில் நான்கு வருணத்தார் முதலாயினோராயிருப் போரனைவரும் வடதிசையினின்று வந்து குடியேறினவர்களது பரம்பரையினரே யென்று நினைத்தற்குப் பல காரணங்களுண்டு.  இக்காலத்தில் இத்தேசத்தில் இருப்பவர்கள் பூர்வீகமான தமிழரின் பரம்பரையினரென்றாவது வடதிசையினின்று வந்து குடியேறினவர்களைன் பரம்பரையினரென்றாவது தங்களை நிச்சயித்துக்கொள்ள வியலாது.  ஆதலின், இருமொழிகளுள் ஒன்றைத் தம்முடையதென்றும், மற்றொன்றை அங்ஙனமன்றேன்றும் நினைப்பதும், துரபிமானங் கொண்டு ஒரு பாஷையை வெறுப்பதும் பேதமைப்பாலதாம்.  இருமொழிகளையுங் கற்றாலென்! ஒன்றை மாத்திரங் கற்றாலுமென்! அனைவரும் அவ்விரு மொழிகளையும் தாய்மொழி யென்று போற்றுதல் கடமை, இஃதிங்ஙனமிருக்க, ஸ்ரீமான் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அட்வகேட் "திருநான்மறை விளக்கம்" என்னுந் தலைப்பெயர் புனைந்து எழுதிய வியாசத்தில் "நான்மறை" என்பது வடமொழியிலுள்ள நான்கு வேதங்களல்லவென்றும், "நான்மறை" யென்னு நாமத்துடன் தமிழிற்றானே ஒரு நூலிருந்திறந்ததென்றும் அங்ஙனமிறந்த நூலையே நான்மறை யென்பதுணர்த்துமென்றும் வெளிப்படுத்தினர்.

    அவ்விஷயத்தில், "பொய்யமை பொய்யாமை யாற்றினறம்பிற - செய்யாமை செய்யாமை நன்று" என்னுந் திருக்குறட் கிலக்கியமாகிய வித்துவ சூளாமணியாம் ஸ்ரீமான். திரு.மா. சாம்பசிவ பிள்ளையவர்கள் "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" என்னும் பெயருடன் தம்முடைய அபிப்பிராயத்தை ஒரு புத்தகமாக எழுதி அச்சிட்டிருக்கின்றார்கள்.  அவர்கள் தம்பாலார் துவாரமாக அதில் ஒரு புத்தகம் எமக்குச் சேர்ப்பித்து எமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படியாக கேட்கப்பட்டேம்.

எமது அபிப்பிராயம் வருமாறு:-

    தமிழில் நான்மறையென்னும் பெயருடன் ஒருநூல் இருந்ததாக எவ்வாற்றாலுந் தெரியப்படவில்லை.  இருந்ததென்று சொல்லுதற்கு யாதொரு ஆதாரமுமில்லை.  மறை என்பது வேதத்தின் பரியாய நாமம் ஆதலால், நான்மறை என்றது வடமொழியிலுள்ள நான்கு வேதங்களையே யுணர்த்தும்.

    "நாடா முதனான் மறைநான் முதனாவிற் - பாடா, விடைப்பா ரதம்பகர்ந்தேன்" என்னும் நாமகள் வாக்கும் வடமொழி வேதங்களையே வெளிப்படுத்துகின்றது; என்னை! "இடைப் பாரதம் பகர்ந்தேன்" என்றதனாற்பாரதம் வடமொழியாதலின் இனம்பற்றி மறையும் வடமொழி யென்பது தேற்றமாகலின்.

    இனி, தமிழிற் செய்யப்பட்டதோர் நூலையே கலைமகள் வாக்கு வெளிப்படுத்திற் றென்னின், அதுவே முதனூலுமாய் அன்று தொட்டின்றுவரை யாவராலு மாளப்பட்டு வரல்வேண்டும்.  கடல்கோள், ஆட்சியை அசைக்கவுமாட்டாது; ஆகலானும் மறைதமிழன்று.

    வேதங்கள் இப்பரதகண்டத்திலே பற்பல மதத்தார்க்கும் முதனூல்களாக விருக்கின்றன.  அவர்கள் அவ்வேதத்திற் கூறப்பெற்ற மந்திரங்களாற் சந்தியாவந்தன முதலிய கருமங்களை நாடோறுஞ் செய்து வருகின்றனர்.  பலர் அவ்வேதத்திலமைந்த மந்திரங்களைக் கொண்டே மதசம்பந்தமான கிரியைகளைச் செய்து வருகின்றனர்.  அங்ஙனஞ் செய்வோர் ஒரு தேசத்தின் மாத்திர மிருப்பவர்களு மல்லர்.  பற்பல தேசங்களிற் பலகோடிக் கணக்கினராக விருக்கின்றார்கள்.  தமிழிற் செய்யப்பட்ட நான்மறை யென்னு  நூலொன்றுளதாயின் அவரெல்லாம் அந்நூலிலுள்ள அம்மந்திரங்களையேகைக் கொண்டவர் என்று சொல்லல்வேண்டும்.  அது மெய்யாயின் அநூலிறப்பதற்குக் காரணமின்று.

    ஒரு நூலிறப்பதாயின் அதனைக் கற்பாரும் கேட்பாரும் ஆதரிப்பாரும் இன்மையே காரணமாகும்.  அல்லது உலக அறிவே காரணமாக வேண்டும்.  பரதகண்டத்திலே ஒரு சிறுபாகமழிந்தபோதே அந்நூலும் அழிந்ததெனின், அந்நூல் அக்கண்டத்திலே யிருந்தவர்களாற் கைக்கொள்ளப்படாத நூலாய் முடியும், "மறைமொழி மதங்கட் கெல்லா மறை பிரமாணம்"  "நான்மறைக் குலத் தந்தணர்" "மறையவர்" என்று வரும் பற்பல ஆன்றோர் வாக்குக்களானே அந்நூல் பரந்து வழங்கிவரும் முதனூலென்பது தெளியக்கிடக்கின்றது.  இத்தகைய பெருமைவாய்ந்த முதனூலை மாற்றுவிக்கக் கருதித் தமிழ் நூல் கடல்கோட்பட்டதென்றால் சுருதி யுத்தி அநுபவங்கட்குச் சிறிதும் பொருந்தாது.

    தற்காலத்திலும் அத்தகைய வேதங்களை அனுசரிப்பவர்களாகக் கோடிக் கணக்கானோர் இப்பரதகண்டத்தில் வாழ்கின்றனர்.  அவரெல்லாம் தங்கள் முன்னோர் தமிழில் நான்மறை என்னும் ஒரு நூல் இருந்ததென்றும், அதன் வழியே நித்திய நைமித்திகங்களைச் செய்து வந்தார் என்னும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  குறித்த சுப்பிரமணிய பிள்ளையவர்களும் அவர்பாலார் சிலரும் அதற்கு என்ன செய்யக்கடவர்.

    வேதங்கள் முன்னர்க் குறித்தவாறே பற்பல மதத்தினரால் முதனூலாகக் கொள்ளப்பட்டபோதும் வைதிகர் எனப்படுவோர் வேதத்தை மாத்திரமே முதனூலாகக் கொள்பவர்கள். வைதிக சைவர் எனப்படுவோர் வேதாகமம் என்னும் இரு நூல்களையும் முதனூல்களாகக் கொள்பவர்கள்.  ஆதலால் நான்மறை சிறந்ததெனக் கூறும் இவர் கொள்கை இவ்விரு பாலார்க்கும் மிக வெறுப்பைத் தரத்தக்கது.  அதுவேயுமன்றி வேத நிந்தனையாகிய மிகு பெருபாவமுமாம்.  இவர் கொண்ட ஆகமக் கொள்கைக்குங் கதி யிதுவேயாம்.

    இவ்விதமான விபரீதங்களில் அறிவிற் குறைந்தார் ஏமாந்து பழி பாவங்களை அடையாத வண்ணம் குறித்த ஸ்ரீமாந் சாம்பசிவ பிள்ளை என்னும் நடுநிலையாளராகிய வித்துவ சிரேட்டரவர்கள் செய்து வரும் விடாமுயற்சியாகிய பெருஞ் சிவபுண்ணியம் மிகவும் வியக்கத்தக்கது.  பொதுநலங்கருதி இப்பெருமை வாய்ந்த ஆராய்ச்சி நூலை வெளிப்படுத்திய ஆசிரியரவர்களூக்கும் அதற்கு எவ்வகைத் துணைபுரிந்தார்க்கும் பலவகை நன்மைளெல்லாவற்றையும் பாலித் தருள்புரியுமாறு பரமசிவன் பாதாரவிந்தங்களைப் பணிந்து பரசுதும்.


Hosted by www.Geocities.ws

1