சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


தஞ்சாவூர் டிஸ்டிரிகட்டு கோர்ட்டு வக்கீலும், தஞ்சைமா நகரம் முனிசிபாலிட்டி சேர்மனாக விளங்கியவர்களும், தமிழ் ஆங்கில பாஷைகளின் ஆராய்ச்சியிற் றேர்ந்தவர்களும், 'தமிழ் வரலாறு' என்னுமோர் அரிய தமிழ்நூல் இயற்றியவர்களும், சித்தாந்த சைவத்தில் ஈடுபட்டவர்களுமாகிய

Row Bahadur K.S.சீனிவாசப்பிள்ளையவர்கள்  

எழுதியது
 


   ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளையவர்கள் எழுதியிருக்கிற நான்மறை விளக்க ஆராய்ச்சி என்னும் நூலையும் அதைப்பற்றி யாழ்ப்பாணம் விக்டோரியா கல்லூரித் தலைவர் ஸ்ரீமான் சிவபாத சுந்தரம் பிள்ளையவர்களும், தச்சநல்லூர் பண்டித சிரோமணி ஸ்ரீமான் இலக்குமணப்போற்றி யவர்களும் எழுதியிருக்கிற அபிப்பிராயங்களையும் ஒருவாறு வாசித்துப் பார்த்தேன்.  அவ்விருவர்கள் அபிப்பிராயத்தோடு நான் பெரும்பாலும் ஒவ்வுகிறேன்.  ஸ்ரீமான் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் நல்ல குலத்தில் பிறந்தவராயிருந்தும் இந்த நான்மறை விளக்கம் எழுதியிருப்பது கலியுகக் கூத்துக்களில் ஒன்றென்று தோன்றுகிறது.  அசஞ்சல சிவபக்தியில் சிறந்த குடும்பத்தில் தோன்றிய ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளையவர்கள் மேலே கண்ட ஆராய்ச்சி என்னும் நூலை எழுதியிருப்பது சைவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது.  முதிர்ந்த இந்த வயதில் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டு அவர்கள் இந்த அராய்ச்சியை எழுதியிருக்கிறார்கள் என்பது இதை வாசிப்பதனாலேயே தெளிவாக விளங்கும்.  ஸ்ரீமான் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் ஆன்றோர்கள் வாக்கைத் திரித்துப் பொருள் கொண்டும் கொள்கைகளை மாற்றியும் எழுதியிருப்பவற்றையெல்லாம் பிசகென்று ஆராய்ச்சியால் பிள்ளையவர்கள் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.  ஸ்ரீமான் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து சைவத்தின் உண்மைகளைத் திரிக்க எத்தனித்திருப்பது உலகத்தில் சிலருக்கு ஐயத்தைக் கொடுக்ககூடும்.  ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளையவர்கள் ஆராய்ச்சி நூலை வாசிப்பதனாலே அவ்வையங்கள் நீங்குமென்பது திண்ணம்.  இவ்வாராய்ச்சி நூல் சைவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கவேண்டியது அவசியம்.  இத்தகைய ஆராய்ச்சி செய்வார் கிடைப்பது இக்காலத்தில் மிகவும் அருமை.  பிள்ளையவர்களுக்கு இத்தமிழுலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றது.


Hosted by www.Geocities.ws

1