உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சோமாஸ்கந்தர்

    சிவாலயங்களில் ஐந்து எழுந்தருளும் திருவுருவங்கள் இன்றியமையாதன.  கணேசர், முருகர், சோமாஸ்கந்தர், அம்பிகை, சண்டேசர் என்பன அவை.  இவற்றுள் தத்துவச் சிறப்புமிகுந்த தனித்தன்மை வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்தர் ஆகும்.  சிவபெருமான் தேவியுடனும் கந்தனுடன் காட்சி தரும் அருட்கோலம் இறைவனை இல்லறத்தானாக - இனிய கணவாக - பாசம் மிக்க தந்தையாகத் தநயனுடன் காட்டும் இவ்வடிவம் களித்து மகிழ வேண்டிய கவின்மிகு கருணை உருவம் ஆகும்.

"ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே
மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்"

                                    - கந்தப胱ராணம்

சச்சிதானந்தம் சோமாஸ்கந்தமூர்த்தியின் தத்துவமாகும்.

சத்து சித்து ஆனந்தம்
உண்மை அறிவு இன்பம்
சிவன் உமை ஸ்கந்தன்
அருமை எளிமை அழகு

    சத்தாகிய சிவத்துக்கும் சித்தாகிய அம்மைக்கும் நடுவே ஆனந்தமே வடிவான கந்தனோடு விளங்கியமைந்த சோமாஸ்கந்தர் ஈசானத்தில் தோன்றியவராவர்.  இவரே சிவாலயத்தில் ஆட்சி செலுத்தும் பிரதான மூர்த்தியாவார்.  இவ்வடிவின் உட்கருத்துக்கள் பல.  "அருமையில் எளிய அழகே போற்றி" என்ற திருவாசக வரியின் உட்பொருள் இவ்வடிவமே என்பர் ஆன்றோர்.  உண்மையும் அறிவாகிய நன்மையும் சேர்ந்தால் கிடைப்பது இன்பம் என்பதை இக்கோலம் எடுத்துக் காட்டுகின்றது.  இம்மூர்த்தத்தில் சிவபெருமான் - கடந்த நிலையையும், இறைவி - கலந்த நிலையையும், கந்தன் - கவர்ந்த நிலையையும் காட்டுகின்றனர்.  கணவன் - மனைவி - குழந்தை என்னும் இல்லறத்தின் முப்பொருட்டன்மையை முழுமையாக்குவது இவ்வடிவம் என்பாரும் உளர்.  குழந்தையைப் பெற்றோர் நடுவில் வைத்துக் கொண்டாடும் கோலாகல வடிவம் இது.  அனைத்துச் சிவாலயங்களிலும் சோமாஸ்கந்தருக்குச் சிறப்பிடம் தரப்பட்டிருப்பினும் திருவாரூர் இப்பெருமானுக்கு உரிய சிறப்புத்தலமாகும்.  கமலைத் தியாகேசர், ஆழித்தேர் வித்தகர் என்றெல்லாம் இத்தலத்தில் போற்றப் பெறுகிறார்.  திருவாரூர் நான்மணிமாலையில்

"தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியே - அம்மேனி
மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்
தானே குடைவேம் தனித்து"

என்று அருள்மிகு குமர குருபர சுவாமிகள் பாடுகின்றார்.

    மாபெரும் யோகியான சிவபெருமானை மாபெரும் போகியாகக் காட்டும் இக்கோலம் குறித்து ஐங்குறுநூறு கூறுவன

"மறியிடைப் படுத்த மான்பினை போலப்
புதல்வன் நடுவணன் ஆக, நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை! முனிவின்றி
நீல்நிற வியலகம் சுவைஇய
ஈனும் உம்பரும் பெறலருக் குரைத்தே"

    சில்பரத்தினம் என்னும் நூலில் இம்மூர்த்தி மூன்று வடிவங்களால் விளக்கப்படுகிறது.  சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் இடக்காலை மடித்து வைத்து, வலக்காலைத் தொங்க அமைத்து விளங்குகிறார்.  புலித்தோலையும் பட்டினையும் உடுத்த இவர் நான்கு கரங்களுடையவர்.  வலக்கரங்கள் இரண்டிலும் பரசுவும் (மழு), அபயமும், இடக்கரங்கள் இரண்டிலும் மானும், வரதமும் அல்லது சிம்ஹகரணமுத்திரையும் அமைந்துள்ளன. இவர் வலது காதில் மகர குண்டலம் அணிந்திருப்பார்.  ஜடா மகுடமும், சர்ப்பக்கணங்களும், பற்பல அணிகலன்களும் இவர் பூண்டிருப்பார்.  சிவபெருமானுக்கு இடப்பக்கம் தேவி அமர்ந்திருப்பாள்.  அவளது இடக்கால் கீழே தொங்க, வலது காலை மடித்து அமர்ந்திருப்பாள்.  அவளது இருகரங்களுள் வலக்கரம் தாமரை மலரையும் இடக்கரம் சிம்ஹகரணம் அல்லது ஆசனத்தில் வைத்த நிலையில் கொண்டிருக்கும்; சிவபெருமானுக்கும் உமைக்கும் நடுவே கந்தன் சிறுகுழந்தையாக நிற்கிறார். இவர் உமையின் மடியில் அமர்ந்தோ, நடனமாடிக் கொண்டோ இருத்தலும் கூடும்.  கரண்ட மகுடம் மகர குண்டலங்கள், சன்னவீரம் ஆகியவற்றை அணிந்திருப்பார்.  அவரது இருகரங்களுள் வலக்கரம் தாமரை மலர் வைத்திருக்கலாம்; அல்லது இரு கரங்களிலும் தாமரை மலர் இருக்கலாம்.  தேவியின் வலக்கரத்தில் நீலோற்பல மலரும், இடக்கரம் வரதமும் கொண்டிருத்தலும் உண்டு.  அம்பிகை பச்சைநிறத்தினளாகச் சிவப்பு பட்டாடை அணிந்து விளங்குவாள். கந்தன் நடனமாடும் கோலத்தில் இருப்பின் அவனது இடக்கரம் பழத்தையும், வலக்கரம் சூசி முத்திரையும் கொண்டிருக்கும்.  சில வடிவங்களில் இடக்கரம் தொங்க விடப்பட்ட நிலையில் அமைந்திருக்கும்.

    சோமாஸ்கந்த வடிவத்தின் இருபுறமும் நான்முகனும் திருமாலும் தம் தேவியருடன் நீற்றல் வேண்டும் என்று காரணாகமம் கூறுகிறது.

    குடந்தையருகே நாச்சியார் கோயிலை அடுத்த இராமநதீச்சரம் சோமாஸ்கந்தர் வடிவில் அம்பிகையின் கரத்தில் இடபம் காணப்படுகிறது.

    உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் வடிவம் ஸ்ரீலங்கா திருக்கேதீச்சரத்தில் உள்ளது.

    சிவத்தலங்கள் சிலவற்றில் சிவபிரான், அம்பிகை, முருகன், ஆகியோர் சன்னதிகள் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளன.

"செய்யமேனிக் கருங்குஞ்சிச் செழுங்கஞ் சுகந்துப் பயிரவன்யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்த தெங்கே எனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய மறைந்த அவர்தம் மலைபயந்த
தையலொடுஞ் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்"

                                                    - பெரிய姊ுராணம்.

    சோமாஸ்கந்தர் வடிவத்தைத் தொழுவார் இல்லறத்தில் நன்மக்களோடு நலம் பல துய்த்து மகிழ்வர்.           


 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1