சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணத்து விக்டோரியாக் காலேஜ் பிரின்சிப்பலும், சைவப்பிரசாரகரும், ஞானதான வள்ளலும், பரம்பரையாக வருகின்ற வித்துவ சந்ததித் தோன்றலும், விழுமிய குணனெலாந்துறுமிய மேன்மையாளரும், வடமொழி தென்மொழி சாத்திரங்களும் இவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களும் ஒப்பநோக்கி மொழிபெயர்ப்பின் மாறுபாடகளை மிக நுணுகியறிந்து பிறர்க்குப் போதிக்கும் வன்மையுமுடைய மகா வித்துவ சூளாமணியுமாகிய

ஸ்ரீமத் S.சிவபாத சுந்தரம் பிள்ளை B.A.,

யவர்கள் எழுதியது
 


   ஒவ்வொரு சமயத்தவருந் தத்தம் முதனூல்களிவை யென்பதைப் பற்றிய ஐயம் எக்காலத்தும் நிகழாமல் அவற்றையறிந்து நிலையான வாய்மையெனக் கொண்டு வருவது சமயத்துக்கும் சமய நூலுக்கும் உள்ள ஒற்றுமையை இனிது விளக்கும்.  இன்று வரையும் வைணவர் தமது முதனூல், வேதபாஞ்சராத்திரங்களென்றும், பெளத்தர் பிடக நூலென்றும், கிறிஸ்தவர் பைபிளென்றும், முகமதியர் கொறானென்றும், கனவிலும் ஐயுறாது கருதுகின்றனர்.  அநாதியானதும் அநாதியான முதனூல்களையுடையதும் எனக் கொள்ளப்படும் சைவ சமயத்தின் பிரமாண நூல்களே சில ஆண்டுகளாகச் சில நவீன விவேகிகளுக்குச் சந்தேகத்துக்கும் திரி புணர்ச்சிக்கும் இடமாயின.  கோடாணு கோடி யாண்டுகளாகச் சைவக் கல்விமான்களாலும் சிவபத்த சிரோமணிகளாலும் சிவ ஞானிகளாலும் முதனூலெனக் கொள்ளப்பட்ட வேதங்களையும் ஆகமங்களையும், மேனாட்டு நாகரிகத்தையும் வேண்டிய அளவு பருகாத இப்புத்தறிவினர் பசு நூல்களெனத் தள்ளுகின்றனர்.  மேலைத் தேசங்களிலே சுயாதீனமென்றொன்று தோன்றி வரம்பு கடந்து யாண்டும் பரவி ஆண் பெண்ணென்னுமிரு பாலாரது சிந்தையைத்திருக்கி எண்ணுதற் கரிய இழிவான செயல்களையும் மாபாதகங்களையும் செய்வித்து வருகின்றது.  ஒரு குழந்தையானது பிறந்த பதினைந்தா நாள் அழுது தாய்க்குரிய சுயாதீனமாகிய மனவமைதியைக் கெடுத்ததனாலே இச் சுயாதீனமானது அதனுடைய கழுத்தை அவளைக் கொண்டறுப்பித்தது.  இக்கொடிய பூதம் வேறெக் கொடுமையைத்தான் செய்யமாட்டாது! பிறவூர் நாகரிகம் வரமுன்னர் பார்ப்பாரும் மற்றையோரும் ஓர் உடலின் வெவ்வேறு பகுதிகள் போலவும், ஆரியமுந் தமிழும் உடன்பிறந்தார் போலவும், வாழ்ந்து வந்ததை யறியாதவர் யாவர்! நான்கு வருணத்தவரும் ஒருவருக்கொருவர் துணை செய்து தத்தந் தொழில்களை யாற்றி வருவதே தக்கதாதலால் அவர்கள் மக்கட் சாதியாகிய புருடனின் தலை கை உடல் காலாகிய பகுதிகளென வேதம் கூறிற்று.  புது நாகரிகத்தின் பயனாக இவர்கள் ஒருவரை யொருவர் கெடுக்குந் தன்மையராய், அந்தணர் ஏனையோர்க் கிடர் செய்ய, அவர்கள் அந்தணரிற் கொண்ட அழலானது அவர்களோடு சிறிதுந் தொடர்பில்லாத தாகிய ஆரியத்தை அவர்களது மொழியென மயங்க வைத்து அதிற்றாவி அதிலுள்ள எமது பிரமாண நூல்களாகிய வேதாகமங்களிலும் பற்றியது.  அன்றியும் தக்க குருவின்றித் தன்னைக் கற்போரை எக்காலமும் மயங்க வைத்துப் பலபுறச் சமயங்கள் தோன்றுதற்கிடனாய் நின்ற வேதங்களைப் பிற நாட்டுப் பிற சாதிப் பிற சமயத்தவரது மொழி பெயர்ப்புகளிலும் ஆகம் விரோதமான பாடியங்களின் துணண கொண்டுங் கற்றதன் பயனாய், அவை இந்திரன் முதலிய சிறு தேவர்களைப் பற்றிக் கூறுகின்றன வென்றும், அவர் பாற் செய்யப்படுங் கொலை குடி முதலிய பயிலும் வேள்விகள் பல பல வென்றும் திரிபுணர்ச்சியுற்று, இவற்றாற் சைவ சமயத்திற்கு இழுக்குண்டாகுமெனக் கருதியும் வேதத்தை யிகழ்பவருண்டு.  இவ்விகழ்ச்சிக் கொரு காரணமாகிய சைவாபிமானப் பெருங் குணத்தை நாமென்றும் பாராட்ட வேண்டுமாயினும் இது அதி பாதகமாகிய சிவ நூனிந்தையாகவும் சிவனடியார் நிந்தையாகவும் முடிதலால் எம்மனம் புழுங்கி வருந்திப் புற்றில் வாழரவம் முதலியவற்றிலுங் கொடிதென இதற்கஞ்சி யொதுங்குவதே கடனாகின்றது.

    2.  "வேதமொடா கமம் மெய்யா மிறைவனூ" லாதலானும் "ஆகமமாகி நின்றண்ணிப்பான்றாள் வாழ்க" என்ற திருவாதவூரடிகளது திருவாக்கிருத்தலாலும் வேதத்தைக் கற்கத் தொடங்குமுன் ஆகமப் பொருளோடு வேதப்பொருள் முரணாதென்பதையும் ஆகமத்தைக்கொண்டே வேதப்பொருளைக் காணவேண்டுமென்பதையும் நாமுணர்தல் வேண்டும்.  ஆகமத்திலே பரமபதி சிவபெருமானெனப்படலாலும் கொலை புலால்கள் முதலிய விலக்கப்பட்டிருத்தலாலும், இவற்றுக்கு மாறான கொள்கைகள் வேதத்திலே தோன்றாவென்ற திடநம்பிக்கை யெமக்கிருத்தல் வேண்டும்.  இவை யுளவாயின் சாயனர் மாக்ஸ்முல்லர் முதலியோரது கருத்தே வேதப்பொருளென்ற துணிபு வரமாட்டாது.

    3.   வேதத்திலே காணப்படும் இந்திரன் வருணன் முதலிய பெயர்கள் பரமபதியைக் குறிப்பவை யன்றி அவரது பெயரைத் தாங்குந் தேவப் பிறப்பினரைக் கருதாவென்பதைக் காட்டுதற்கே [ (இருக்கு வேதம் க-கசாஉ-கஉ; அ-க-க.) - "மாமிசத்தை விலக்கி மற்றைய பதார்த்தங்களைச் சுத்திசெய்து சமைத்துச் சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல சித்திகள் உண்டாகும்."   "உயிர்கள் ஒன்றையுங் கொல்லாத இல்வாழ்வானுக்கு மேம்பாட்டைக் கொடு"  (யசுர்வேதம் ஙசா-கஅ) - "கடவுளே எல்லாப் பிராணிகளிலும் நான் அன்பாயிருக்கவும், அவைகள் என்னில் அன்பாயிருக்கவும் அருள் செய்"] இந்திரன் மித்திரன் வருணன் அக்கினி திவியன் சுபர்ணன் கருத்மான் முதலிய பல பெயர்களால் அறிவாளிகள் கடவுளைச் சொல்லுகிறார்கள்.  ஆயினுங் "கடவுள் ஒருவரே" என்னும் மந்திரமும் (இருக்குவேதம், க-கசாச-சாச), "ஒருவர்தாம் பலபேருளர் காண்மினே" என்னும் தேவாரமும் எழுந்தன.  வேதத்திலே கடவுளைக் குறிக்கும் பெயர்களுள் நூற்றுக்கு மேற்பட்டவைகளை ஸ்ரீமத் தயாநந்த சரசுவதி எடுத்து அவைகள் யெளகிகமாகப் பரமப்தியையே குறித்தலைத் தமது சத்தியார்த்தப் பிரகாசமென்னும் நூலிற் காடியருளினர்.  இந்திரன் என்னுஞ் சொல் பரமபதியையே குறித்தலை "பரமபதியின் பெயர் இதந்தர (இதம் பச்யதி = இதைக் காண்கிறது)  ஆயினும் ஞானிகள் மெய்க்கருத்தைக் காட்டாத இந்திரனென்னும் பதத்தையே உபயோகிக்கிறார்கள்" என்னும் (இருக்குவேத) ஐதரேய பிராமணத்திற் காண்க. (க-ங-கசா).

    4.  வேதத்தி லோரிடத்துங் கொலை விதிக்கப்பட்டில தென்பதே யதன் மெய்க்கருத்தை யறிந்தோரது கருத்தாம்.  வேதமொழிகளுக்குப் பெரும்பாலும் யெளகிகார்த்தமன்றி (இயற்கைப் பொருள்), ரூடார்த்தம் (ஆட்சிப் பொருள்) பொருந்தாது.  வேத பாடியகாரர் பிற்காலத்ததாகிய காவிய சம்ஸ்கிருத முறைப்படி பொருள் கொண்டமையாலும் சிலர் அசுத்த வாமச்சார்புடைமையாலும் வேதங்களுக்குத் தகாத பொருளைக் கண்டனர்.  கொலையை விலக்குவனவன்றி விதிப்பனவல்ல * அன்றியும் வேதத்திலே கொலையை விதிப்பதெனத் தோன்று மெம் மந்திரத்ததக்காட்டிலும் அது கொலையை விதிப்பதன்றெனப் பிராமணத்தோடு காட்டத்தக்க வேத வித்துவான்களிருக்கின்றார்கள்.  [இவ்வுண்மையை நன்குணர விரும்புவோர் பின் வரும் புத்தகங்களை வாசிப்பாராக:- Pandit Guru Datta's works Part I, Behari Lal Shastri's "Vedas and their Angas and Upangas" Vol.I, available at the Vedic Book Depot, Lahore Road, Lahore] சர் கர்னல் கோல்புறூக (Sir Col Colebrooke) என்னும் ஐரோப்பிய பண்டிதர்தாமும் அசுவமேதத்திலே ஒருயிருங் கொல்லப் படுவதில்லை யென்றெழுதி யிருக்கிறார்.  [Colebrooke's essays on the Vedas; also quoted on page 55 of the "Twelve Principal Upanishads" published by Rajaram Tukaram, Tatya.]வேதத்தின் வழிநூல்களாகிய பிராமணங்களுட் சிலவற்றிற் கொலை விதிக்கப்பட்டதெனின் அவைகள் வேதமல்லாமையால் அக்குற்றம் வேதத்தை யடையாதாதலும் அவைகள் சிற்றறிவினராகிய மனிதராற் செய்யப்பட்டமையால் பிராமண நூல்களாகாமையாலும் அது சைவ சமயத்தைத் தாக்காதென வறிக.

    5.  வேதங்களில் விதிக்கப்பட்ட குடியெனப்படுவது சோமாச மென்பர்.  இவ்விபரீதமும் சாயனர் முதலியோரது ஞானக் குறைவினாலுன்டாயது.  சோமஎன்பது மதியென்றும், சோமாசமாவது மதியினால்வரும் சிற்றறிவென்றும், அதை இந்திரனுக்கு நிவேதித்தலாவது இச்சிற்றறிவைக் கடவுள் பாற் செலுத்தலென்றும், இந்திரன் அதற்குப் பிரதியாகத்தரும் பசுவெனப்படுவது பேரறிவென்றும், சாயனர் சோமாசமானது ஒரு பூண்டின் சாரமெனப்பொருள் கொண்டது நிருத்தம் நிகண்டு வியாகரணம் முதலியவற்றிற்கு மாறானதென்றும், ஸ்ரீ அரவிந்தகோசர் "ஆரிய" என்னும் இங்கிலிஷ் பத்திரிகையில் அநேக வருஷங்களுக்கு முன்னெழுதினர்.  இதுவே யுண்மையான பொருளென்பதற்கு அருணகிரிநாதருடைய இக்கருத்தமைந்த பாடல்கள் சான்றாகும்:-

    "புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டி யனபாய்
    முத்தியை வாங்க வறிகின்றிலேன் முதுசூர் நடுங்கச்
    சத்தியை வாங்கத் தாமோ குவடு தவிடு படக்
    குத்திய காங்கேயனே வினை யேற் கென் குறித்தனையே"

    "யா மோதிய கல்வியு மெம் மறிவுந்
    தாமே பெற வேலவர் தந்ததனாற்
    பூமேன் மயல் போயற மெய்ப்புணர்வீர்
    நாமே னடவீர் நடவீரினியே."

    6.  பார்ப்பாரிற் கொண்ட வெறுப்பினாலும் வேதத்தின் மெய்ப்பொருளை உணராமையாலுண்டான அவமதிப்பினாலும் வேதங்கள் தமிழிலுள்ளன என்றகருத்துச் சிலருக்குண்டாயது.  ஆயினும் அவ்வேதங்க ளிவை யென்பதைப்பற்றி யவர்களுக்குள் ஒற்றுமை யிருந்திலது.  ஒருசாரார் முயற்கோடன்ன இல்பொருள்களை மறையெனக் கொள்ளின் அவற்றின் உட்பொருளைப்பற்றிய ஆட்சேபங்களினின்றும் விலகலாமெனக் கருதியோ பிறகாரணம் பற்றியோ தோற்ற நிலையிறுதியாகிய இவற்றுளொன்றுக்குஞ் சாட்சி யில்லாத நூல்களைத் திருநான்மறைகளென அறைந்தனர்.  இக்குழுவினர் ஒருவர் இயற்றிய திருநான்மறை விளக்கமென்னும் நூலில் தமிழ் முனிவர் நால்வர் தமிழில் நான்மறைகள் இயற்றினாரெனவும் அவற்றை யழித்தது கடலெனவும் ஒரு கதையைக்கட்டினர்.  இக்கதையின் விசாரணையே சிவநேசச் செல்வராகிய ஸ்ரீமத் சாம்பசிவ பிள்ளையினது இவ்வரியநூலின் நோக்கமாம்.

    7.    இவர், விளக்க நூலாசிரியரது கொள்கைகளை முன்பின் அறுபது கூறாக வகுத்து அவற்றை யட்டவணைசெய்து ஒவ்வொன்றாக வெடுத்துத் தக்க பிரமாணங்களைக் கொண்டு தர்க்கரீதியாகப் புடைத்துப் பரம்பரையான சைவக்கொள்கையே உண்மையான தென்பதைத் "தடக்கையினெல்லிக்கனி" யெனக்காட்டினர்.  விளக்க ஆசிரியரது போலி நியாயங்கள் நான்காக வகுக்கப்பட்டன.  அவையாவன:-

    "(க) நூல்களிலிருந்து பிரமாணமென வசனங்களை யெடுத்துக் காட்டி அவற்றினின்று பெறப்படாதவற்றை அனுமானமாகக் கூறுதல்.  (உ) இயைபின்றியும் முற்றொடர் பின்றியும் பொருள் கொள்ளல்.  (ங) ஆன்றோர் வாக்கை மாற்றுதல்.   (ச) தமது கருத்தையையே பிரமாணமாக்குதல்" என்பனவாம். இவரது கொள்கைக்கு யிராகியது தமிழ்முனிவர் நால்வர் தமிழில் நான்மறைகளைச் செய்தவரென்பது.  இதற்குத் துணையாகக் காட்டப்பட்ட "காது பொத்தரை" என்று தொடங்குந் தேவாரத்துக்கு இவர் கொண்ட பொருளின் எழு பொருத்தக்கேடுகள் உளவாகவும் அவற்று ளொன்றையேனும் நோக்கினாரல்லர்.  இத்தேவாரத்தின் மூன்றாமடியின் முதலில் வகர உடம்படுமெய்பெற்ற "ஏதம்" என்பது "வேதம்" எனநிற்க, இதுவேதத்தைக்குறிப்பதெனத்தீர்த்தனர்.  ஏதமென்பதிலுள்ள ஏகாரத்துக்குமோனையாக அவ்வடியில் வரும் "எய்திய" "இன்பம்" "இணையடி என்பவற்றிலுள்ள எகர விகரங்களை மதித்தாரல்லர்.  மூன்று சீர்கள் பின்னே மோனையாக வரும்போது முதலில் வருஞ்சீரை மோனையாகாமற் பதச்சேதஞ் செய்யச் செய்யுள்வழக் கிடந்தராது.  இரண்டாவது, கின்னரர் முதலியன மாதவர்க்குவமான மெனப்பட்டது.  அவற்றுக்கும் உவமேயத்துக்கும் ஒருவகை யொற்றுமையுமின்மையால் அது ஏற்கப்படமாட்டாது.  மூன்றாவது, அவைகள் உவமையாயின் "சீய்க்கோதில்" என வருமன்றிச் "சீயம் கோதில்" என வரமாட்டாது.  நான்காவது, அங்ஙன மாகாமையின், அவை "கேட்ப" என்பதற்கெழுவாயாக, மாதவர் ஆறாம் வேற்றுமைப் பெயராகும்.  இதனாற் "செய்து" என்பதற்கு மாதவர் எழுவாயாதல் பொருந்தாது.  ஆதலால் "ஏதம்" எனப்பிரியாமல் "வேதம்" எனக் கொண்டாலும் "மாதவர் வேதஞ் செய்து" எனச் சேராது.  ஐந்தாவது, வேதஞ் செய்தலால் வரத்தக்க சிறந்த வின்பமொன்றின்று.  ஆறாவது, அதனாவின்ப மிருப்பினும் அதைச் சுந்தரமூர்த்தி நாயனார் கேட்பதற்கிடமில்லை.  ஏழாவது, வேதஞ் செய்தலால் இன்பமுற்றமையைக் கேட்கினும் அது காரணமாக அவர் சிவபிரானது இணையடியையடைய வேண்டியதில்லை.  விளக்க ஆசிரியரது போக்கிங்ஙனமாகவும், இந்நூலாசிரியர் தேவாரத்தின் பொருளை நன்கு விசாரிப்பதே நடுநிலைக்கும் உண்மை யறிவுக்குஞ் சாதனமென நினைந்து தமது கொள்கையிற்றிருத்தி யடையாமல் விளக்க நூலாசிரியரையும் புலவர் பதின்மரையும் உசாவினர், பழிக்கஞ்சும் இப்பெருந்தன்மை வியக்கப்படத்தக்கது.

    மேற்காட்டிய 'காதுபொத்தரைக்கின்னார்' என்ற தேவாரத்தில் தமிழ் மக்கள் நால்வர் தமிழில் நான்மறை செய்தனர் என்னும் கோளுக்கு எட்டுணை ஆதாரமுமில்லை யென்பது வெளிப்படை.  தேவார திருவாசகங்களில் பெயர் குறிப்பிடாமல் நால்வர், நால்வரெனப் பலகாலும் அருளியிருந்தும், அந்நால்வர்களின் குறி, குலம் அடையாளமாதிய அருளியிருப்பதைக்கொண்டும், நக்கீர தேவர் திருவாக்கில் விளக்கமாயருளியிருப்பதைக் கொண்டும், தாயுமானப் பெருந்தகையார் அந்நால்வர்களின் பெயரை விரித்திருப்பதைக் கொண்டும், அந்நால்வர்கள் கந்தப்புராணச் சரித்திரப்படி சனகாதியரே யென்றும், அவர்கட்கு அருளியவர் தட்சிணாமூர்த்திக் கடவுளே யென்றும், ஆராய்ச்சி ஆசிரியர் சித்தாந்தப்படுத்தியிருப்பது சைவ சமயிகளெல்லோரும் நோக்கத்தக்கது.  அப்பமூர்த்திகளது "ஆய்ந்தது வேதமாறங்கமன்று சுட்டது காமனைக் கண்ணாலே" என்னும் தேவாரப்பகுதியும் இப்பொருளைப் பசுமரத்தாணிபோல் வற்புறுத்துகின்றது.

    இந்நூலியற்றற்கு வேண்டிய சிரத்தையும் ஊக்கமும் முயற்சியும் அகன்ற அறிவும் இத்துணையவெனச் சொல்லற் பாலனவல்ல.  சிவநேசத்துக்கோர் வைப்பென விளங்கும் ஒருவரே யிதனை யிவ்வாறு செய்து முடிக்கத்தக்கவர்.  உலகம் இயற்கை முறையாக நடைபெறுங் காலத்தில் இவ்வகை நூல்கள் நோயில்லாக் காலத்துச் செய்யப்படும் மருந்துகள்போல மிகையாய் முடியும்.  திருநான்மறை விளக்க ஆசிரியரும் வேறு பலரும் சைவ சமயத்தவரதுள்ளத்தைக் கலக்கி மாபாதகங்களுளொன்றாகிய வேதாகம நிந்தையில் வீழ்த்த முயலும்போது இஃது ஓர் பரம ஒளஷதமாக வெமக்குக் கிடைத்தது, இதிலுள்ள "சைவத் தமிழ் மக்கட்கொரு விண்ணப்பம்" என்னும்  ருஅ-ம் விஷயம் நாமெல்லோரு மூன்றி நினைத்து தவறாதனு சரிக்கவேண்டிய போதனைகளையுடையது, மேனாட்டு நாகரிகம் சைவத்தின் மூல வேரைத் தறித்து நிற்கும் முறையைக் காட்டியெமது கண்களை திறப்பது. இவ்வரிய நூலைச் சைவப்பற்றுள்ளோர் யாவரும் பெற்றுத் தமது பெரும் பாக்கியமாகப் பாராட்டித் தம்மில்லங்கடோறும் வைத்துக்கொள்ளுவரென்பதற்கையமில்லை.  இது நான்மறை விளக்க நோயைத் தீர்ப்பதோடு இனிமேற் சைவ புருடனை அணுகத்தக்க வேறு நோய்களு மணுகாமற் காக்கத்தக்கதாதலாற் சைவ நாடானது பிள்ளையவர்களுக்கென்றும் நன்றி பாராட்டி அவர்களை வாழ்த்தி நிற்கும்.  சிவபெருமான் அவர்களுக்குத் திருவருள் சுரந்து மெய்ஞ்ஞானத்தை யூட்டிப் பேரின்பத்தைக் கொடுத்தருளுவர்.

புலோலி, யாழ்ப்பாணம், பங்குனிமீ கஉஉ


Hosted by www.Geocities.ws

1