சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணத்து வட்டுக் கோட்டைக் கண்ணலிங்கேசுர சுவாமி கோயிலாதீந கர்த்தரும், பெளராணிகரும், சைவப் பிரசாரகரும், கந்தசட்டி புராணம் சிவராத்திரி புராணம் முதலியவற்றின் ஆக்கியோரும், ஆகிய

பிரமஸ்ரீ சிவசுப்பிரமணிய சிவாசாரியரவர்கள்

அபிப்பிராயம் இது:-


   சைவ நூலாராய்ச்சியிற் பெரிதும் வல்லுநரும், இங்கிலிஷ் கற்றுச் சப் மாஜிஸ்திரேட் உத்தியோகத் தமர்ந்தும் ஆன்மப் பெரும் பேறாகிய சிவ பூசையைச் சிறிதும் விதிதவறாது இன்றும் நடத்துகின்றவரும், சைவ சமயாபிமானிகளுள் தற்காலம் முதல்வைத் தெண்ணப்படுபவரும் ஆகிய ஸ்ரீமாந்: திரு. மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள், ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளை "அட்வக்கேட்" பெருங்கேட்டிற் கேதுவாக வெளிப்படுத்திய "திருநான்மறை விளக்கத்" தைப் பன்முறை ஆராய்ந்து அவ்வளவும் புரட்டும் கற்பனைகளுமா யிருத்தலை யன்றிச் சைவ சாத்திரமுரணாயிருத்தலையும் செவ்விதிற் றேர்ந்து, தேர்ந்தமை யினமையாது "நாம் பெற்ற வின்பம் பெறுக விவ்வையகம்" என்ற வண்ணம் அவற்றையெல்லாம் பிறரும் அறிந்து மயக்க மொழிதற் பொருட்டு மூவகைப் பிரமாணங்களான் மறுத்து அதற்குத் "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" எனப் பெயர் தந்து அச்சிட்டு அதில் ஒரு பிரதி அனுப்பி எமது அபிப்பிராயத்தை தெரிவிக்கும்படி கேட்டிருக்கின்றார்கள்.

    எமது அபிப்பிராயத்தை மிக விரித்துச் சொல்லுதற்கு மனங் கருதுகின்றது.  அதற்கு மிக முதிர்ந்த வயோதிகம் இடந்தராமையால் "சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்" என்னும் யுத்திப்படி கூறுவான் றொடங்குகின்றாம்.

    நாம் இத் "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" என்னும் அரிய பெரிய நூலைப்பார்க்கத் தொடங்கிப் பார்வையிட்டு வரும் போது வயோதிகம்பற்றி மனம் சீக்கிரம் இளைத்துவிடும், உடனே பார்த்தலை நிறுத்திவிடுவேன்.  இவ்வாறு பார்வையிட்டு முடிக்க இரண்டு வாரங்கள் சென்றுவிட்டன.  "விளக்கத்"திலுள்ள புரட்டுகளையும், சைவ சாத்திர முரண்களையும், கற்பனைக் கொள்கைகளையும் "ஆராய்ச்சி" ஆசிரியர் மிக நுணுகிக் கண்டுபிடித்து அவற்றை மறுத்திருக்குந்தேற்றம் அறிஞரால் மிக வியந்து கொண்டாடத்தக்கது.  இனி விரிக்கச் சத்தியிடந்தரவில்லை.  ஆதலால் சுருக்கமாய் விளக்க முடிக்கப் போகின்றோம்.

    நாம் இத் "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" என்னும் விசிட்ட நூலை ஆராய்ந்து அதிற் சொல்லப்பட்டன வெல்லாம் சத்தியம் சத்தியம் முக்காலும் சத்தியம் என்று தெளிந்து அந்நூல் உயிர்க்குறுதி பயக்கும் நன்னூலெனக் கைக்கொண்டேம்.  அதில் வரைந்து உதாகரித்து மறுத்துச் சொல்வன யாவும் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இன்றியமையாத அறிவுப்பெருஞ் செல்வமாகிய அரும் பொருள்களென நன்றாக வற்புறத்துகின்றாம்.

    இந்த அரிய பெரிய நூலை இயற்றி உலகோபகாரமாக்கிய திரிசிரபுரம், ஸ்ரீமத் சாம்பசிவம் பிள்ளையவர்கள் தற்காலத்துச் செய்யும் அருஞ் செய்கைகளையும், இனிமேல் உலகம் திருந்துதற் கேற்ற வழி வகைகளையும், மேலும் மேலும் அபிவிருத்தி செய்தருளும் வண்ணம் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய பரமசிவனைத் திரிவித கரணங்களாலுஞ் சேவித்து, அப்பிள்ளையவர்கள் அரோக திடகாத்திரராய்ப் பூரணாயுசுடன் வாழுகவென ஆசீர்வதிக்கின்றாம்.


Hosted by www.Geocities.ws

1