உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சிவரகசியம்
இதிகாசப் படலம்

 

    விஷ்ணுவானவர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த் ஓர் பெரிய யுத்தத்தில் தேவர் தோல்வி கண்டது கொண்டு அவ்வசுரர்களைக் கொல்வதற்காக அப்போது, மகா பயங்கரமான யுத்தம் செய்கையில், அசுரர்கள் விஷ்ணுவால் மிகுதியாயக் கண்டிக்கப் படலான போது, அவர்கள் விஷ்ணுவால் மிகுதியாய்க் கண்டிக்கப் படலான போது, அவர்கள் விஷ்ணுவால் தோல்வி அடையப் பெற்றவர்களாகிப் பிருகுமுனிவர் ஆசிரமத்துக்கு ஓடி அம்முனிவரின் மனைவிபால் சரணடைந்தார்கள்.  அப்போது விஷ்ணுவானவர் சக்கரத்தை எடுத்துக் கொண்டு தாமும் அவ்வாசிரமத்துக்கு வந்து அங்கு அவ்வசுரர்களைக் கொல்ல எத்தனிக்கையில், பிருகு பத்தினியானவள் ஓ! விஷ்ணுவே! முனிவர் இல்லாத சமயத்தில் நீர் ஆசிரமத்துக்குள் வந்தது தகாது.  மேலும் என்னை அண்டின அசுரர்களை நீர் சொல்லவும் தகாது,.  அந்த எல்லோருக்கும் நான் அபயம் கொடுத்திருக்கின்ற படியால் நீர் அவர்களைக் கொல்லாதீர் என்று கூறித்தடுத்தாள்.

    அப்போது விஷ்ணுவும் ஆகா! துஷ்டர்களுக்கு அபயம் கொடுத்தால் உலகங்கட்குப் பீடையல்லவா என்று அவர்களுக்கு அபயம் கொடுத்த அப்பிருகு பத்தினியின் தலையைத் துண்டித்து, பின்னர் அந்த அசுரர்களையும் சமுகரித்துவிட்டுப் போனார்.

    பிருகுமாமுனிவர் அங்குவந்து தனது மனைவியும் அசுரர்களும் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டார்.  இச்செயலைச் செய்தது விஷ்ணுதான் என்று ஞானதிருட்டியால் அறிந்தார்.  அசுரர்களோடு கூடத் தம் மனைவியையும் கொன்றவரான அவ்விஷ்ணு மீது மிகுதியாய்ச் சினம் கொண்டார்.  உடன் அவரைச் சபித்தார்.

    ஓகோ! இவ்விஷ்ணுவுக்குப் பூவுலகில் கோடி கோடிகளான பிறவிகள் உண்டாகி அந்த ஒவ்வொரு பிறவியிலும் மகா துக்கத்தையளிக்கலுற்ற தமது பெண்டிரை இழத்தல் நேரக்கடவது.

    இவ்வாறு சபித்துவிட்டுப் பரமசிவனிடமிருந்து தாம் சித்திபெற்ற மிருதசஞ்சீவினி என்ற வித்தையால் தமது மனைவியை பிழைப்பித்து விட்டார்.  அதன் பின்னர் அசுரர்களைக் கண்டிப்பவரான திருமாலும் அதனைக் கேட்டு நடுநடுங்கியவராகி அப்பாவம் தொலைவதற்காகப் வேண்டியதை அளிக்கலுற்ற சிவத்தலமான காஞ்சீபுரத்துக்குச் சென்று அங்குத் தேவாதி தேவரை பூசித்ததன் மேல் சிவபெருமான் இடபவாகன ரூடராய் தோன்றினார்.  திருமால் மிக்க பயத்தோடு வணங்கித் தமது சாபம் தீரும் வழியை வேண்டினார்.

    அவ்வமயம் திருமால் பிரமன் யாவருக்கும் அதிபரான பரமசிவன் திருமாலே! நமது அடியார்களால் இடப்பட்ட சாபத்திற்கு அவர்களாலேயே பிரதிசாபம் கொடுக்கத் தக்கதேயன்றி, நாம் பரிகாரம் கொடுப்பது இல்லை என்று நம்மால் சபதம் செய்யப்பட்டிருக்கிறது என்று திருமாலை நோக்கி, மந்த காசத்தோடு மேலும் திருவாக்கருளியதாவது:

    பிருகுமா முனிவரே! இவ்விஷ்ணுவை பல கோடி பிறவிகளைக் கொடுக்கலுற்ற உமது சாபத்தினின்று நீர் விடுதலை செய்விக்க வேண்டும்.  ஏனென்றால் இவரும் நம்மைப் பூஜிப்பதில் அக்கறைகொண்ட நமது ஓர் அடியவரென்றே அறியும்.  ஆயினும் இவருக்குப் பத்துப் பிறவிகள் உண்டாகி அவைகளில் ஒரு பிறவியில் மாத்திரம் இவர் பெண்டிரை விட்டுப் பிரிந்து நீண்டகால மளவும் துக்கமடைந்திருக்கலாகட்டும்.  இன்றி இதற்கு மேல் வேண்டாம்.  நீர் நம் அடியார்கட் கெல்லாம் முதல்வராகையால் நமது ஆக்கினையின்படி இவ்வாறே செய்யலாவீர் என்றார்.  முனிவரும் உடனே அவரை வணங்கி அப்படியே பாக்கியம் என்றார்.  அப்போது உடனே இலக்குமி வேந்தனும் பார்வதி நாதனைத் தண்டனிட்டு வேண்டிக் கொண்டதாவது.

    கருணைக்கடலும் அடியாருக்கு அன்பருமான தேவதேவேசா! பத்து பிறவிகளிலும் அடியேனுடைய அஞ்ஞானம் தொலைவதற்காகத் தேவரீர் நிக்கிரகானுக்கிரகங்களைச் செய்தருள வேண்டும் என்றார். அது கேட்டு இறைவரும் அப்படியே நல்லதென்றருளி மறைந்து அருளினார்.  திருமாலும் தமது இருப்பிடம் அடைந்தனர்.

   

 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1