உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சண்டேச அனுக்ரஹர்

"தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு இவ்வண்டத்தொடுமுடனே
 பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச்
 சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
 பாதகத்துக்குப் பரிசுவைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே"

                                             - திருப瘍பல்லாண்டு

    ஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாளுக்கு அண்மையில் விளங்கும் சிற்றூர் சேய்ஞ்ஞலூர்.  இங்கு பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான்.  அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார்.

    அவருக்கு ஐந்து வயதிலே, வேதங்களையும், வேதாங்கங்களையும், சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறியமறிவு உண்டாயிற்று.

    பாலியதசையிலே சான்றோர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர்.  நமக்கு அம்பல சத்தியைக் கொடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும் ஒரேபதி சிவபெருமானே என்பதை உணர்ந்தார்.  அவருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன்பு கலைதோறும் வளர்வதாயிற்று.

    ஒருநாள் ஓரிற்றுப் பசு ஒன்று மேய்ப்பனாகிய் இடையனைக் குத்தப் போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்தான்.  மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதைபதைப்போடும் அவன் சமீபத்திற் சென்று தடுத்தார்.  இப்பசுநிரையை இனி நீ மேய்க்க வேண்டியதில்லை.  நானே மேய்பேன் என்றார்.  விசாரசன்மன், ஆநிரைகளைத் தாமே மேய்க்கும் பொறுப்பேற்று செய்துவரும் நாளில், மணலால் இலிங்கம் அமைத்து, மாடுகள் சொரிந்த பாலைக் கொண்டு அவ்விலிங்கத்துக்குத் திருமஞ்சனமாட்டி, வழிபட்டு வந்தார்.  இதனால் வீடுகளில் அம்மாடுகள் கொடுக்கும் பாலின் அளவு குறைந்து விடவில்லை.  மாடுகள் மேய்க்கும் இடத்தில் தன் மகள் பாலைக் கறந்து விருதாவாக மணலிலே சொரிகிறான் என மறைந்து இருந்து கண்ட எச்சதத்தன், தன் மைந்தனின் சிவபூசைத் திறத்தினை உணராது, பூசனைக் கிடையூறாகக் காலால் உதைத்துச் சிதைக்க, சிவாபராதம் பொறுக்காத விசாரசன்மன், மாடு மேய்க்கும் கோலால் எச்சதத்தனின் காலில் அடிக்க, அது வாளாக மாறி அவன் காலைத் துணித்தது.  சிவபூசைக்கு வந்த அவ்விடரை நீக்கியவராகிய விசாரசருமர், முன் போல அருச்சனை செய்ய; சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி அருளினார். விசாரசருமர் அது கண்டு மனம் களித்து விழுந்து வணங்கினார்.  பரமசிவன் அவரைத் தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, "நீ எம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா" என்று அருளிச் செய்து அவரை அணைத்து அவருடைய திருமேனியைத் தடவி உச்சிமோந்தருளினார்.  சிவபெருமானுடைய திருக்கரத்தினாலே தீண்டப்பட்ட அவ்விசாரசருமருடைய திருமேனி சிவமயமாகித் திவ்வியப் பிரகாசத்தோடு விளங்கிற்று.  "நாம் நம்முடைய தொண்டர்களுக்கெல்லாம் உன்னைத் தலைவனாக்கி, நாம் ஏற்றுக் கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தந்தோம்" என்று திருவாய் மலர்ந்தார்.  தம்முடைய சடையிலே தரித்திருக்கின்ற கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினார்.

அண்டர்பிரானும் தொண்டர் தமக்கதிபனாக்கி, அனைத்து நாம்
உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர் பொற்றடமுடிக்குத்
துண்டமதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்.

                                - சண்டிகேஸ்வர நாயனார் புராணம்

விசாரசன்மன் சண்டேச நாயனாராகி விட்டார்.  எச்சதத்தர் சிவத்துரோகஞ் செய்தும், சண்டேசுர நாயனாராலே தண்டிக்கப்பட்டமையால், அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தார்.

    சண்டேச நாயனாருக்குச் சிவபெருமான் அருள் புரிந்த கோலமே சண்டேச அனுக்கிரகமூர்த்தி என்று போற்றப்படுகிறடு.  அம்சுமத்பேதாகமத்தில் இக்கோலம் விவரிக்கப்படுகிறது.  இவ்வடிவில், சிவபெருமான் பார்வதி தேவியுடன், உமாசகித மூர்த்தியைப் போல அமர்ந்திருப்பார்.  அவரது முகம் இடப்பால் திரும்பியிருக்கும்.  அவரது வலக்கரம் வரதமாகவும், இடக்கரம் சண்டேசர் தலைமீது வைத்தும் காணப்படும்.  சண்டேசர் பணிவுடன் தன்னிரு கரங்களையும் குவித்து வணங்கியவராய் சிவபெருமான் முன்பு பத்மாசனத்தின் மீது நிற்பார்.

    உத்தரகாமிகாகமத்தின்படி, சிவபெருமானும் தேவியுடன் சந்திரசேகரர் கோலந்தாங்கி அமர்ந்திருப்பார்.  அவருக்கே முன்னால் கூப்பிய கரங்களுடன் சண்டேசர் நின்று கொண்டிருப்பார்; அல்லது அமர்ந்திருப்பார்.  சிவபெருமான் தனது வலக்கரத்தில் ஒரு மாலையைக் கொண்டு இடது கையால் அதனைச் சண்டேசர் தலையைச் சுற்றிக் கட்டுவது போன்று விளங்குவார். பூர்வ காரணாகமும் சில்பரத்தினமும் இம்முறையிலேயே இவ்வடிவத்தைக் கூறுகின்றன.

    சண்டேசுரர் சிவபூசையின் இறுதியிலே பூசிக்கப்பட்டு, சிவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அன்னம் பானீயம் முதலியனவும் தாம்பூலம் மாலை சந்தனமும் ஆகிய நிருமாலியங்களை ஏற்று சிவபூசாபலத்தைக் கொடுக்கும் அதிகாரம் உடையவர்.  இச்சண்டேசுர பூசை செய்யா வழிச் சிவபூசையாற் பயன் இல்லை அது

"சண்டனையர்ச் சித்தவரே சம்புவையர்ச் சித்தபலங்
கொண்டிடுவர் மற்றையர் கொள்ளார்"

                                - சை&வ சமய நெறி

என்னும் சைவசமயநெறி திருக்குறளான் உணர்க.

    உலகில் புண்ணியச் செயல்களுக்கு நன்மையான பயன்கிட்டும்; பாவம் புரிந்தால் தீமை விளையும்.  இது பொதுவான உண்மை.  தட்சன் பெரிய வேள்வி செய்தான்.  அது மிகவும் புண்ணியம் தரத்தக்க செயல்.  ஆனால் அந்த வேள்வியில் அவன் தனது தலையை இழந்தான். வேள்வி நாசப்படுத்தப்பட்டு வந்திருந்த தேவர்களும் கடவுளரும் அவமானம் உற்றனர்.  புண்ணியச் செயல் அங்கு பாதகமாகி விட்டது.  காரணம் தக்கன் சிவபெருமானை இகழ்ந்து அவமதித்து செருக்கடைந்திருந்தான்.  நோக்கம் தவறாக இருந்தால் செயலும் பொய்த்துவிடும்.  இதுபோலவே நோக்கம் உயர்ந்ததாக இருந்து செயல் தவறாகும் போது அச்செயல் தண்டிக்கப்படுவது இல்லை என்பதைக் காட்டுவது சண்டேசர் வரலாறு.

"அரனடிக்கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்
பரனடிக் கன்பிலாதார் புண்ணியம் பாவமாகும்
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மையாய்த்தே"

                                - சி&வஞான சித்தியார்.

   இது காறும் கூறியவற்றால் சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவத்துரோகத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெள்ளிதிற் பெறப்பட்டது.

    ஆதலால், இச்சரீரம் உள்ளபொழுதே சிவலிங்கார்ச்சனைக்கு உரியோர்கள் சைவாசிரியரை அடைந்து, சிவதீட்சை பெற்று, விதி வழுவாது மெய்யன்போடு சிவபூசை பண்ணுக சிவனைப் பூசை செய்யாதவர்களுக்கு ஒரு துணையும் இல்லை.  அது

"தமக்கருக மோருருவிற் பூசை சமையார்
தமக்குத் துணையாதோ தான்"

என்னும் சைவ சமய நெறித் திருக்குறளால் அறிக.

"திருக்கோயிலில்லாத திருவி லூருந்
திருவெண்ணீ றணியாத திருவிலூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடாவூரும்
பாங்கினொடு பலதளிகளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்க மூதாவூரும்
விதானமும் வெண்கொடியு மில்லாவூரு
மருப்போடு மலர்பறித்திட்டுண்ணாவூரு
மவையெல்லா மூரல்ல வடவி காடே"

"திருநாம மஞ்செழுத்துஞ் செப்பராகிற் றீவண்ணர்
திறமொரு காற் பேசாராகி லொருகாலுந் திருக்கோயில்
சூழாராகி லுண்பதன் முன்மலர் பறித்திட்டுண்ணராகி
வருநோய்கள் கெடவெண்ணீ றணியாராகி
லளியற்றார் பிறந்தவாறேதோ வென்னிற்
பெருநோய்கண் மிகநலியப் பேர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே"

என்னும் திருநாவுக்கரசர் தேவாரங்களால் உணர்க.

    சண்டேசர் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப் பெறுகிறார்.  சூரியன் - தேஜஸ்சண்டர்; விநாயகர் - கும்பச் சண்டர்; சுப்ரமண்யர் - சுமித்ரசண்டர்; சிவன் - த்வனி சண்டர்.

    சிதம்பரம் கோயிலில் ஆதிச் சண்டர் நான்கு முகங்களுடன் விளங்குகிறார்.  திருவாரூரில் யமனே சண்டேசர் பொறுப்பை ஏற்றுள்ளார்.  சிவபூசையில் பஞ்சாவரண பூசையின் மூன்றாவது ஆவரணத்தில் ஆதிச் சண்டர் வருகிறார்.

"புண்ணியம் பாதகமாகிப் போற்றிய
அண்ணலந் தக்கனார் அகத்து நாணிய
புண்ணியம் பாதகமாகப் போற்றிய
அண்ணலந் தண்டிதன் அடிகள் போற்றுவாம்"

எனத் தணிகைப் புராண ஆசிரியரோடு நாமும் சண்டேச அனுக்கிரஹ மூர்த்தியை வழிபட்டு உய்வோம்.

    காமதகனம் பற்றி வடமொழி லிங்கபுராணம் விரிவாகப் பேசுகின்றது.

    சூரபன்மாதியரின் கொடுமையால் தீமையின் வலிமை மிகுந்து உலகம் அல்லலுற்றது.  அவுணர்களை அழிக்க இறைவனைப் பணிந்து பரவினர் நல்லோர்.  கயிலையில் மோன மூர்த்தியாக - யோகியாக - தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து நால்வர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு பற்றி சொல்லாமற் சொல்லும் குருமூர்த்தியாக எழுந்திருளியிருந்தார் சிவபெருமான்.  இமவான் மகளாக அவதரித்து உமையம்மையார் பெருமானைத் திருமணம் புரிந்து கொள்ளக் கடுந்தவம் இயற்றி வந்தாள்.  இவர்கள் திருமணம் நிகழ்ந்து ஒரு குமாரன் தோன்றி அசுரர்களை அழித்தாக வேண்டும்.  யோகியாய் விளங்கும் இறைவன் போகியாக மாற வேண்டும்.  அவருக்கு உமையம்மைபால் மனம் செல்ல வேண்டும்.  ஆம் அவருக்கு காமம் வரவேண்டும்! என் செய்வது விண்ணோர் கூடினர்.  இந்திரன் காமனை அழைத்துச் சிவபெருமான் மீது மலரம்பு தொடுக்கப் பணித்தனன்.  மன்மதன் அஞ்சினான்.  இந்திரனால் அழிவதை விடச் சிவபெருமானால் உய்வடைவது உயர்வு தரும் எனத் துணிந்தான்.  சிவபெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான்.  சிவபெருமான் மோனங்கலைந்து கண் திறந்தார்.  நெற்றிக்கண் வீழ்த்தது.  மன்மதன் சாம்பலானான்.  காமன் மலர்களைத் தானே சிவன்மீது செலுத்தினான்! கல்லெறிந்த சாக்கியருக்குக் கதியளித்த கண்ணுதற் கடவுள் மலர் எறிந்த மன்மதனை மாய்த்துவிட்டார்! என்ன நியாயம்! ஆம், மன்மதன் மலர் எய்திய போதிலும் அவன் உள்ளம் பக்தியால் அதனைச் செய்யவில்லை.  சக்கியர் கல்லெறிந்த போதிலும் அவர் உள்ளம் சிவபெருமான் மீது கனிந்து பக்தி மிகுந்திருந்தது.  செயலை விட நோக்கம் தான் முக்கியம்.  ஆதலால் தான் மன்மதன் கதி அவ்வாறாயிற்று.  மன்மதன் பாணம் மாதேவனை மயக்கிவிடவில்லை என்பது ஈண்டு கருதத்தக்கது.  தனது அமர காதலனை மன்மதன் மாய்ந்தது கண்டு இரதிதேவி புலம்பினாள்.  இறைவனைப் பலவாறு துதித்துப் பரவினாள்.  தனக்கு மாங்கல்ய பிச்சை அருள வேண்டினாள்.  சிவபெருமானும் அவள் நிலைக்கு இரங்கி, அருவமாய் தன் தொழில் செய்யுமாறு மன்மதனைப் பணித்து உயிரளித்து அருள்புரிந்தார்.

    "எரிபுனை நமது நோக்கால் இறந்தநின் உடலம் நீறாய்
    விரைவொடு போயிற்றன்றே வேண்டினள் இரதியன்னாட்
    குருவமாய் இருத்தியேனை உம்பரோ டிம்பர்க்கெல்லாம்
    அருவினை யாகியுன்றன் அரசியல் புரிதி என்றான்"

    என்று இந்நிகழ்ச்சியைக் கந்தபுராணம் பேசும்.  இரதியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனைக் கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யும்னனாகத் திருமால் பெற்றெடுப்பார் என்றருள் புரிந்தார் சிவபெருமான் என வடமொழிப்புராணம் பேசும்.  காம பாணத்தை விட உமையின் தவமே இறைவனது மோனங்கலையக் காரணமாயிற்று.  பார்வதி தன்தவத்தினாலேயே சிவபெருமானை அடையப் பெற்றார் என்று குமாரசம்பவம் விளக்குகின்றது.  சிவபெருமான் உமையை மணந்தருளினார்.

    எந்த நெற்றிக் கண்ணிலிருந்து காமனை எரித்த நெருப்புத் தோன்றியதோ, அதே நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றி அறுமுகச் செவ்வேளாகி, பார்வதி பாலனாகி - பூவுலகில் அசுரர்களை மாய்த்து அமரர் இடரும் அவுணர் உயிரும் அழிய அருள் புரிந்ததைக் கந்தபுராணம் விரிவாகக் கூறும்.

    காமனை எரித்த இறைவனைக் காமதகன மூர்த்தி என்று போற்றுகிறோம்.  இதில் சில தத்துவங்கள் பொதிந்துள்ளன.  இறைவனும் இறைவியும் பிரிந்திருந்த நிலையில் உலகுயிர்கள் செயலிழந்து கிடந்தன என்னும்போது அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மை புலப்படும்.  இறைவி மலைமகளாய் அவதரித்துத் தவம் இயற்றினாள் இறைவனை மணக்க, இறைவனோ தட்சிணாமூர்த்தி ஆக யோக நிலையில் இருந்தார்.

    ஒரு சிறந்த கணவனை அடையப் பெண்ணும்

    ஒரு சிறந்த மனைவியைப் பெற ஆணும் அருந்தவம் இயற்ற வேண்டும்.

    தவத்தினாலேயே கணவனுக்குத் தகுந்த மனைவியும் மனைவிக்குத் தகுந்த கணவனும் வாய்க்கும் என்ற தத்துவமும் இதில் வெளிப்படுகின்றது.  காமதகனம் நடைபெற்ற பிறகே குமாரசம்பவம் ஏற்பட்டது என்பது காமம் நீங்கித் த்வயோகத்தால் பிள்ளை பெறுவதே சிறப்புடையது என்பதனைப் புலப்படுத்தும்.

   
 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1