உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

   

சமய அறிவு

திரு. T.R.திருவாய்மொழிப்பிள்ளை B.A.,

சிரஸ்தார், கலக்டர் ஆபீஸ், திருநெல்வேலி


சமயம் ஆவசியகம்

    சமயம் என்றாலும் மார்க்கம், மதம் என்றாலும் பொருள் ஒன்றே, உயிரின் அறிவை மறைத்து நிற்கும் அறியாமை என்னும் நோயை நீக்கி உயிரை மேல் நிலைக்குச் செலுத்துவது சமய ஞானமாகையால், உண்மைச் சமயஞானத்தையும் அச்சமயக் கொள்கைகளையும் ஆராய்ந்து கடைப்பிடித்து ஒழுகவேண்டியது அறிவுடைய மக்கள் கடமையாகும்.  நம் உடம்பில் ஒரு நோய் காணப்படுமாயின், அனுபவமுதிர்ந்த வைத்தியர் ஒருவரை அழைத்துக் கையைக் காட்டுகிறோம்.  வைத்தியர் நம்முடைய நோயும் நோய்க்குக் காரணமும் தெரிந்து கொண்டு, அந்நோய்க்குத் தக்க மருந்தை எடுத்து, ஒரு நாளைக்கு இத்தனை முறை இன்ன அளவில் சாப்பிட்டு, இன்ன பத்தியமும் செய்யவேண்டும் என்று சொல்லுகிறார்.  அதுபோல் நம்முடைய உயிரின் அளவை ஆணவம் ( அல்லது அறியாமை) என்ற நோய் பற்றியிருக்கிறது.  இந்த நோயைத் தீர்ப்பதற்கு வேதாகமங்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்த அனுபவமுடைய தேசிகர் ஒருவரை யடையவேண்டும்.  அவர் நம்முடைய உலகத் துன்பங்கள் யாவும் ஆணவம் என்னும் நோயால் வந்தன என்று தெரிந்து கொண்டு கணக்கில்லாத சமயங்களாகிய மருந்துகளில் நோயை நீக்குதற்குச் சிறந்த ஒளஷதம் எதுவென்று பார்த்து, அந்த சமயமாகிய மருந்தை உயிரறிவு ஏற்றுக்கொள்ளும் முறையிலும் அளவிலும் கொடுப்பர்.  பால்யர்களுக்கும் பலஹீனர்களுக்கும் மருந்து கொடுக்கும் முறை வேறு; உடல் உரம் பெற்றவர்களுக்கும், பெரிய மனிதருக்கும் மருந்து கொடுக்கும் முறை வேறு.  குழந்தைகள் எளிதாக உண்ணும் பொருட்டு ருசியான பதார்த்தங்களில் மருந்தைக் கலந்து கொடுப்பதுபோல மந்த அறிவையுடைய பக்குவமில்லாத உயிர்களுக்கு கதைகளில் சமய உண்மைகளைப் பொதிந்து ஊட்ட வேண்டும்.  உயிரைப் பற்றிய நோய் நீங்க வேண்டுமானால் சமய உண்மைகளாகிய மருந்தை உட்கொண்டு அச்சமயத்துக்குரிய ஒழுக்க ஆசாரங்களாகிய பத்தியங்களைக் காத்தலும் வேண்டும்.  பத்தியம் இல்லாவிட்டால் மருந்து எதிர்பார்த்த பயனைத் தராதததுடன் கெடுதியும் விளைத்துவிடுமல்லவா? ஆகவே அனுபவமுடைய தேசிகரிடத்திலே உண்மைச் சமய ஞானத்தைக் கேட்டுத் தெளிந்து அச்சமயாசாரங்களைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டுவது இன்றியமையாததென்பது பெறப்பட்டது.

பிராகிருதர்

    இத்தகைய சமய அறிவை - உயிரி璽் நோயை நீக்கும் அறிவை - பற்றிப் பேசத் தொடங்குங்கால் சிலருக்கு ஆமணக்கெண்ணெய் குடிப்பது போலிருக்கும்.  உடனே குமட்டலும் வந்துவிடும்.  சமயஞானத்தைப் பற்றிப் பேச இதுவோ சமயம்? நரை திரை மூப்புவந்து கோலூன்றி நடக்கும் காலத்தில் அல்லவா சாத்திரக் குப்பைகளைப் புரட்டி வேதாந்த சித்தாந்த வியவகாரம் பண்ணி நேரத்தைக் கழிக்க வேண்டும்? இப்பொழுது என்ன அவசரம்? என்று சர்வஜ்ஞர்கள் பலர் பிரசங்கம் செய்வர்.  இவர்கள் அறுவது வயது வரை இருப்பதற்கு பிரமாவிடத்தில் வரம் பெற்று வந்திருக்கிறார்கள் போலும்.  ஆனால் எல்லாரும் வாங்கி வந்திருக்க மாட்டார்கள்.  எந்த நிமிஷம் இவ்வுடலைவிட்டு உயிர்பிரியும் என்பது விளங்கவில்லை.  இவ்வுடல் அழியுமுன்னர் விரைவில் நமது உயிருக்கு வேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலை கொஞ்சமும் இவர்களுக்கு இல்லை.  அது மாத்திரமா? 'கடவுளேது, மோக்ஷமேது, கடைந்தெடுத்த புளுகைத் தவிர வேறென்ன, எவனோ எழுதி வைத்தான்.  அதைக் குருட்டுத்தனமாக நம்பி வருகின்றனர்.  பழைய கர்நாடக ஆசாமிகள்' என்ற பரிகாசமும் வேறே! இவர்களுக்குச் சொல்லும் ந்ல்லுபதேசம் அத்தனையும் செவிடன் காதில் ஊதுவதையே யொக்கும்.  சம்சார சாகரத்திலே அழுந்தி ஆசைப்புயற்காற்றால் கொதித்தெழுகின்ற பயங்கரமான வினை அலைகளால் துன்பப் பாறைகளில் மொத்துண்டவுடனேதான் 'ஆ! தெய்வமே கண்ணில்லையா? எனக்கு இரங்காயா?' எனக் கதறுவர்.  இந்தக் கூட்டத்தாரை நம் சாத்திர நூல்கள் பிராகிருதர் என்று கூறும்.  அதாவது பிரகிருதி அல்லது உலக சம்பந்தம் உடையவர்கள்.  உலக இன்பங்களிலே ஈடுபட்டவராய் மெய்ஞ்ஞானத்தை அடைவதற்கு ஆற்றலும் அறிவும் காதலும் இல்லாதவர்கள்.  இவர்களை விடுத்து இன்னொரு சாராரைப் பார்ப்போம்.

வைநயிகர்

    ஒரு சாரார் தெய்வபக்தி, அடியார் பக்தியுடையவராய் இருக்கிறார்கள்.  இவர்கள் சமயம் விதித்த ஒழுக்கநெறியில் வழுவாது நிற்கிறார்கள்.  உண்மையறிவையடைய வேண்டும் என்ற ஆசை இவர்களிடம் மிகுதியாக உண்டு.  உண்மை நூல்களை நல்லாசிரியரிடத்தில் கற்றுத் தெளிந்து அவ்வழியில் நிற்கிறார்கள்.  இவர்களே வைநயிகர் எனப்படுவர்.  இவர்களுக்கே ஏனையோரிலும் சிறப்பாகச் சமயஞானம் வேண்டப்படும்.

 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்பதற' வல்லவா?

சமய பேதங்களும் தருக்கவறிவும்

    உலகத்தில் பல்வேறு வகைப்பட்ட சமயங்கள் உள்ளன.  அவற்றின் கொள்கைகளும் வேறு; சமய வொழுக்கங்களும் வேறு.  அவை யாவும் நம்முடைய உயிர் இப்பொழுதிருக்கும் நிலையைவிட்டு இதைவிட ஓர் உயர்ந்த நிலையையடையும் என்பதை மாத்திரம் ஒப்புக்கொள்கின்றன.  ஆனால் அந்த நிலை எப்படிப்பட்டது என்பதிலும், அதை அடையும் உபாயம் யாது என்பதிலும், அந்நிலைமையை உயிர்களுக்குக் கொடுப்பவன் ஒருவன் உண்டா உயிர்கள் தாமே யடையுமா என்பதிலும், கொடுப்பவன் ஒருவன் உண்டானால் அவனுடைய இலக்கணம் இது என்பதிலும் அவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள சம்பந்தம் இது என்பதிலுமே சமயங்கள் யாவும் பேதப்படுகின்றன.  இவ்வேற்றுமைகளில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பொருந்தாதவற்றைத் தள்ளி உண்மையை உணர்வதற்குத் தருக்க அறிவு அவசியம் வேண்டப்படும்.

    தற்காலத்தில் சிலர் சமரசக்கொள்கை ( 'வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை' என்ற தாயுமான சுவாமிகள் கூறிய சமரசம் வேறு.  வேதாந்தம் என்பது உபநிடதம்.  சித்தாந்தம் என்பது சிவாகமம்.  இவ்விரண்டன் கருத்தும் ஒன்றே என விளக்கச் சமரசமென்று  சொன்னதேயன்றி எல்லாமதக் கொள்கைகளையும் சமரசமாகக் கொள்ளவேண்டுமென்று கூறியதில்லை.  ஆகையால் தாயுமான சுவாமிகள் சொன்னதும் இங்கே சொன்னதும் முரணில்லை) என்ற

சமரச ஆராய்ச்சி

 ஒரு குழறுபடைக் கொள்கையைத் தொண்டை வெடிக்கப் பிரசங்கம் செய்கிறார்கள்.  'எல்லாச் சமயமும் ஒன்று தானே. ஒரு சமயத்துக்கும் இன்னொரு சமயத்துக்கும் என்ன வித்தியாசம்' என்று சொல்லுகிறார்கள்.  சமய சம்பந்தமாக வெறி கொண்டு கலகம் விளைத்தலும் ஒரு சமயத்தாரை இன்னொரு சமயத்தார் இகழ்ந்துரையாடலும் நாகரிகமுடைய மக்கள் செய்கையாகமாட்டா வென்பதில் சந்தேகமில்லை.  ஆனால் 'கடவுள் ஒருவர் உண்டு.  அவரே உலகங்களை யெல்லாம் படைத்துக்காத்து அழிக்கிறார்; அவரின்றி ஓரணுவும் அசையாது' என்று சொல்லுகிற சமயமும், 'கடவுளே இல்லை' யென்று சொல்லும் ஒரு சமயமும் எப்படி ஒன்றாகும்.  'உயிர்வேறு, உலகம் வேறு, கடவுள் வேறு, கடவுள் ஆளுபவர், நாம் அடிமைகள்' என்று சொல்லுகிற சமயமும். 'கடவுளே உலகம் உயிர் முதலியனவாக இருக்கிறார்.  நாமும் கடவுள்தான் உலகமும் கடவுள்தான்.  எல்லாம் கடவுள்தான்' என்று சொல்லுகிற சமயமும் எப்படி ஒன்றாகும்? ஐந்தும் மூன்றும் பத்து என்று சொல்லுவதும் ஒன்றாகுங் காலத்தில் இம்மதங்கள் யாவும் ஒன்றாகும்.

ஒரே சமயம் கூடுமா?

இனிச் சிலர் 'உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படியான மதம் ஒன்று ஏற்படுத்தி அதைப் பரப்ப வேண்டும்' என்கிறார்கள்.  இது மலைகல்லி எலி பிடிப்பதைத் தவிர வேறில்லை உலகத்திலுள்ள மக்கள் கண்க்கில்லாதவர்.  அவர்களின் அறிவும் பல திறப்பட்டனவாதலால் ஒருவர் அறிவதைப்போல் மற்றெருவர் அறிய முடியாது.  ஓர் உபாத்தியாயர் ஒரே பாடத்தை 40 மாணாக்கர்களுக்குக் கற்பிக்கும்பொழுது ஒவ்வொறு மாணாக்கணும் அவனவன் அறிவின் திட்ப நுட்பங்களுக்கேற்பவே அறிகிறான்.  சிலர் நன்றாய் அறிகிறார்கள், சிலருக்கு விள்ங்கியும் விளங்காமலும் இருக்கும்.

    சிலருக்கு விளங்குவதே யில்லலி.  இவ்வாறு ஆன்மாக்களின் அறிவு ஒரே தன்மையாய் இல்லாதிருப்பதை நமது அனுபவத்தில் பலகால்மும் தெரிந்திருந்தும் அவ்வான்மாக்கள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும் சமயம் ஒன்று ஏற்படுத்தக்கூடும் என்று கூறுபவர்களுக்கு  நாம் என்ன செய்வது?  சிரித்துத் தொலைக்க வேண்டுவதுதான்.

சமயங்களின் படிமுறை

    உயிர்களின் அறிவு பலதிறப்படவே அவைகள் பின்பற்றி யொழுகும் சமயங்களும் பலவாயின.  ஆனால் சமயங்கள் யாவும் உண்மை யாராய்ச்சி செய்பவர்களுக்கு ஒன்றற்கொன்று விரோதமானவைகளாகாமல் ('தெரிபொருட் பனுவற் படிவழி சென்று சென்றேறி' என்பது திருவிசைப்பா) படிகளாகவே இருக்கின்றன.

    கடவுள் ஒருவர் இல்லை.  உலகம் அழியாமல் நித்தியமாய் உள்ளது.  உலக இன்பமே மோக்ஷம் என்று உலோகாயதர் சொல்லுவர்.

    கடவுள் ஒருவர் இல்லை.  ஆனால் உயிர்கள் தம்மிடத்து உள்ள குற்றங்கள் நீங்கப்பெற்றுப் பரிசுத்த நிலையை யடைந்தவுடன் கடவுட்டன்மை வரும் என்று பெளத்த சமயத்தாரும் சமண சமயத்தாரும் கூறுவர்.

    கடவுள் வேண்டியதில்லை.  உயிர்களாற் செய்யப்படுகிற யாக முதலிய கர்மங்களே உயிர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் என்று மீமாம்சை நூலார் சொல்லுவர்.

    கடவுள் ஒருவர் உண்டு.  ஆனால் அவருக்கு இயற்கையாக ஞானம் கிடையாது.  உயிர்களைப்போல மனத்தோடு கூடினாற்றான் ஞானமுண்டென்பர் வைசேடிக நூலார்.

    சாங்கிய நூலார் உயிர்களும் கடவுளும் உண்டு.  ஆனால் இப்பொழுதிருக்கும் உயிரின் நிலைக்கும் மோக்ஷம் என்பதற்கும் வித்தியாசமில்லை என்றும் சுகமும் துக்கமும் தனக்கு வருவதாக எண்ணுவதாலேயே உயிரை அஞ்ஞானம் மூடிவிட்டதென்றும் உண்மையை அறிந்துவிட்டால் அதுவே மோக்ஷம் என்றும் கூறுவர்.

    பாதஞ்சல நூலார் மேற்கூறியபடியே கூறி உண்மையை அறிவதற்கு யோகப்பயிற்சி வேண்டுமென்பர்.

    வேதாந்திகள் என்ற மற்றொரு சாரார், உயிர் உலகம் என்ற பொருள்கள் கிடையா, எல்லாம் பொய்த்தோற்றம்.  பிரமம் ஒன்றே உண்டு.  அப்பிரமமே உலகங்களாகவும் உயிர்களாகவும் பிரதிபிம்பித்திருக்கிறது.  நாமும் பிரமமே, உயிர்களல்ல என்று ஞானத்தால் அறிவதே முத்தி என்பர்.

    இனி, உயிர், உலகம், கடவுள் என்ற பொருள்கள் எல்லாம் ஒன்றல்ல, வெவ்வேறு தான்.  ஆனால் உயிர் முத்திநிலையை யடைந்தவுடன் இறைவனைப் போல படைத்தல் காத்தல் அழித்தல் முதலிய தொழில்களைச் செய்யும் எனச் சிவசமவாதிகள் கூறுவர்.

    மேற்கூறிய சமயக்கொள்கைகள் பலவற்றையும் தருக்க முறைப்படி ஆராய்ச்சி செய்து அவற்றின் பொருந்தாமைகளை விளக்க, இடம் போதாது என்றாலும் உலக வின்பமே முத்தியென்பவனைவிட உயிர்கள் சில சாதனத்தால் இப்பொழுதுள்ள நிலையினும் உயிர்ந்தநிலை யடையுமென்பவன் மேலல்லவா? அவனை விட வேதம் விதித்த சற்கருமங்களைச் செய்து கருமத்தை உடம்பட்டவன் மேலில்லையா? இம்மூன்று நாஸ்திகர்களைவிடக் கடவுள் ஒருவர் உண்டு என்று கொண்டவன் மேலில்லையா? இவ்விதம் அபிமானம் முதலிய குற்றங்கள் நம்மிடம் இன்றி நாம் உண்மையை ஆராய்வோமானால் ஒவ்வொர் மதமும் உயிர் வாழ்வு அடைவதற்கு ஒவ்வொர் படியென்பதை நன்றாக அறியலாம். நாமே இவ்வித ஆராய்ச்சி செய்வதற்கு நமக்கு அதிகமான வயது போதுமான அறிவு இல்லை.  கடவுள் அருள் பெற்ற பெரியோர்கள் அம்மதங்களை யெல்லாம் ஆராய்ச்சி செய்த சைவ சித்தாந்தம் ஒன்றே மோக்ஷத்திற்கு நேர்வழியென்பது அருளிச் செய்திருக்கிறார்கள்.

சைவ சித்தாந்தக் கொள்கை

    அச்சமயத்தின் முக்கிய கோட்பாடுகளாவன:-

    கடவுள் ஒருவர் உண்டு.  உயிர்கள் கணக்கில்லாதன.  உயிர்கள் அநாதியே செம்பிற் களிம்பு போல ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றன.  ஆணவ மலம் உயிரறிவை மறைத்து இறைவனை யடையவொட்டாமல் தடுத்து நிற்பதால்.  இறைவன் மாயையினின்றும் உலகங்களைப் படைத்து உயிர்களுக்கு அவ்வவற்றின் கர்மத்துக்குத் தக்க பலனைக் கொடுத்துப் பக்குவமடைந்தபின் அவற்றின் மலத்தைத் தகித்து முத்தியிற் சேர்ப்பர்.  சிவனடியை அடைந்த உயிர் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்.  இதுவே சைவ சித்தாந்த முத்தி.

சித்தாந்த சைவத்தைப் பற்றிப் பெரியார் அருளியன.

    சைவ சித்தாந்தம் இவ்வுயரிய கருத்துக்களைக் கொண்டது என்பதை விளக்கவே நமது குமரகுருபர சுவாமிகளும் 'ஓரும் வேதாந்தமென்றுச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனிபிழிந்த சாரம் கொண்ட சைவ சித்தாந்தம்' என்று வாயாரப் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்.  சைவ சித்தாந்தத்திற்கு மாபாடியம் செயத ஸ்ரீ சிவஞானசுவாமிகள் சைவ சித்தாந்த ஞானத்தால் தாம் அடைந்த ஆனந்த நிலையை

    "மாறினேன் சமய பேத வழிப்படும் புன்மை யெல்லாம்
    தேறினேன் வீடு சேர்க்குஞ் சைவ சித்தாந்த மென்றே
    யேறினேன் சிவலோக கத்தே யிரண்டறக் கலந்தொன்றாகி
    யாறினேன் வருத்த மெல்லாங் கலைசைக்கோ வருளினாலே'

என்றருளிச் செய்திருக்கிறார்கள்.

முடிவுரை

    பல வேறுவகைப்பட்ட சமயக் கொள்கைகளையும் அவை ஒன்றற்கொன்று படிக்கிரமமாவதையும், சைவ சித்தாந்தம் சிரஸ்தானமாக விளங்குவதையும் கண்டோம்.  இச்சைவ சித்தாந்த சாத்திரக் கருத்துக்களையெல்லாம் ஒருங்கே திரட்டிச் சாரமாக வைத்திருப்பன நம்முடைய சித்தாந்த சாத்திரங்கள்.  வேதம் ஆகமம் தேவார திருவாசக முதலிய பன்னிரு திருமுறைகளாகிய நதிகளிலுள்ள தெளிந்த நீரை எடுத்து அதில் அந்த ரசத்தை வார்த்துப் பருகும்படி அளிப்பது நமது சிவஞான பாஷ்யம்.  இத்தகைய சமயநூல்களை நம்மவர் பலரும் கற்று உண்மைச் சமய ஞானத்தை யடையுமாறு எல்லாம் வல்ல சிவபிரான் அருள் புரிவாராக.


 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம"

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1