உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சைவத்தில் சமரசமா?

மா.பட்டமுத்து எம்.எஸ்.ஸி., பி.டி.
சங்கரன்கோவில்

 

    'சிவ சிவ'(டிசம்பர் 2005) இதழில் 'தண்மையும் வெம்மையும் நானே ஆயினான்' என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது.  அதில் 'சமரச மணம் கமழவும்' எனவும், 'சமய நல்லிணக்கம்" எனவும், 'சமயப் பிணக்கின்றி' எனவும், 'நஞ்சுண்ட அரனையும் மண்ணுண்ட மாலவனையும் இணைத்து' எனவும் சைவ சமயத்திற்கு மாறுபட்ட கருத்துகள் பேசப்படுகின்றன.  இச்சமரசப் பேச்சு சைவ சமய மேன்மைக்கு எவ்வளவு பாதகம் விளைவிக்கும் என்பதை விளக்குவதே இம்மறுப்பின் நோக்கமாகும்.

நாராயணன் யார்?

    திருநாவுக்கரசு சுவாமிகள் 'அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே' எனவும்.

    'நூறு கோடி பிரமர்கள் நொந்தினர்
    ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
    ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
    ஈறிலாதவன் ஈசன் ஒருவனே' எனவும்

அருளிச் செய்கிறார்.  முதலில் கூறப்பட்ட அரியும், அடுத்த திருப்பாடலில் காணப்படும் நாராயணனும் ஒருவரா? வெவ்வேறான தெய்வங்களா? ஒருவராக முடியாது.  இருப்பின் அழியக் கூடிய நாராயணன் சிவபிரானின் தேவி என்று அபத்தமாக முடியும் அன்றோ! எனவே அவ்விருவரும் ஒரே தெய்வமல்ல என்பது தானே போதரும்.

மூன்று வகைப்பட்ட நாராயணன்

    சிவபிரானின் தாதான்மிய சக்திகள் நான்கில் புருஷ சக்தியே நாராயணன எனப்படும். அந்நாராயணன் தான் எந்தையின் தேவி.  'அரியலால் தேவியில்லை' என்ற அருள்வாக்கு இந்த நாராயண சக்தியையேக் குறிப்பிடுகிறது.

    இனி, சுத்தவித்தை 'முத்திபெற்று மலவாசனை மாத்திரம் உடையவராய்க் கீழுள்ள உருத்திரன், மால், அயன், இந்திரன் முதலியோரைத் தொழிற் படுத்துவோராகிய உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோருக்கும் அவர் தறுகரணாதிகட்கும் இடமாம் என்றுணர்க; என்று சிவஞான பாஷ்ய மொழியைச் சிந்திக்க.  இதில் தொழிற்படுத்தும் நாராயணன், தொழிற்படும் நாராயணன் என இருவகை நாராயணர் பேசப்படுகின்றனர்.  தொழிற்படுத்துகின்ற நாராயணனும் உயிர்த்தான்.  மலவாசனை மாத்திரம் உடையவன்.  பிறப்பிறப்பற்ற நிலை பெற்றவன்.  அவனது இருப்பிடம் சுத்தவித்தியா தத்துவம்.

    அவனால் தொழிற்படுத்தப்படும் நாராயணன் கீழுள்ள பிரகிருதியில் உள்ளவன்.  அவன் 25 தத்துவங்களையே பேசும் வைணவர்களின் தெய்வம்.  அவனே 'ஆறு கோடி நாராயணர்' என அப்பர் பெருமானால் அடையாளம் காட்டப்பட்டவன்.  ஐயிரு பிறப்பெடுத்தவனும் அவனே.  அங்ஙனம் 25 தத்துவங்களுட்பட்ட நாராயணனும், 36 தத்துவங்கட்கு அப்பாற்பட்ட சிவபிரானும் சமரசத் தெய்வங்கள் என்று கூறுவது சரியா?

    பஞ்சராத்திரம் என்றழைக்கப்படும் வைணவம் சித்தாந்த சைவத்தில் புறச்சமய வரிசையில் காணப்படுகிறது.  அந்த வைணவமும், நமது 'மேன்மை கொள்' சைவமும் இருபெரும் தெய்வமுடையன எனறு சமரசம் பேசுவது பொருந்துமா? 12 பக்கங்களில் 'மாலறியா, நான் முகனும் காணாமலை' யாம் திருவண்ணாமலையின் ஈடிணையற்ற சிறப்பினை விரிவாக எடுத்துரைத்த கட்டுரைக்கு அடுத்து 'நஞ்சுண்ட அரனும், மண்ணுண்ட மாலவனும்' இருபெரும் தெய்வம் எனக் கூறும் கட்டுரை இடம்பெற்றது விசித்திரமன்றோ!

சங்கரன் கோவில் சமரசத் தலமா?

    சமரசம் கமழ்கின்ற, சைவ வைணவப் பேதமில்லாத தலமாகக் கட்டுரையாசிரியர் சங்கரன்கோவிலை வருணிக்கிறார்.  அத்தலத்தின் ஸ்தல புராணத்தில் இக்கூற்றுக்கு எள்ளளவு கூட ஆதாரமில்லை.  சிவபிரானின் ஓர் அம்சம் அல்லது ஒரு கூறே மஹாவிஷ்ணு என்ற உண்மையை உலகவர்க்குத் தெருட்டவே அன்னை ஈண்டு கோமதியாகத் தவம் புரிகிறாள்.  சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தருள்பவர் பரசிவப்பிரபுவே அன்றி மால் அல்ல.  'இக்காட்சி போதும் மீண்டும் தங்கள் சுய வடிவத் திருமேனி காட்சி தந்தருள்க' என அம்மை வரம் வேண்டியபோது, ஈசுரன் சங்கரலிங்கப் பெருமானின் அருள்வடிவம் காட்டியருள்கிறார்.  சங்கரனும் நாராயணனும் (ஆகிய இரு பெருந் தெய்வங்கள்?) கூட்டணி அமைத்து காட்சி தந்தாரில்லை.  சிவபிரான் நாராயணனைத் தமது இடப்பால் வைத்துக் காட்டுவார்.  ஆனால் திருமால் தமது வலப்பால் எம்பிரானை வைத்துக் காட்ட முடியுமா? சங்கர நாராயணர் ரிஷப வாகனத்தில் தான் தோன்றுகிறார். பாதி ரிஷபம், பாதி கருடன் எனக் காட்சி தந்தால்தானே இரு மதமும் சமரசம் எனப் பேச முடியும்!

    'ஐய நின் கூறே மாலும் அயன் முதல் தேவும் என்னும் மெய்யுணர்வே எஞ்ஞான்றும் விளைவுற வேண்டும்'

என்ற தலபுராணப் பாடல் வரிகள் அரனின் கூறுதான் அரி என்ற உண்மையை ஆணித்தரமாக நிலைநாட்டுகிறதல்லவா? 1000ல் 10 ஒரு கூறு.  அதேபோல சிவபிரானின் ஒரு கூறுதான் திருமால்.  ஆயிரமும் பத்தும் சமமா? அதே போல் அரனும் அரியும் சமமா? அரனாகிய பெரிய தெய்வத்தின் ஓர் அம்சமே சிறிய தேவனாகிய மால் என்ற பேருண்மையைக் காட்டுவதே சங்கரன்கோயில் திருத்தலம்.

    இதனைப் போன்றே உருத்திரன், மால், அயன், என்ற மும்மூர்த்திகளையும் தம்பால் காட்டிய சிவநாயகனே சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் ஆவர்.  மூவரின் கூட்டணி வடிவன்று அது.  'தேவர்கோ அறியாத தேவதேவன்.  செழும் பொழில்கள் பயந்து காத்தளிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்' என்று மணிவாசகப் பிரபு வணங்கும் எந்தையே அந்தமூர்த்தி.

வேண்டாம் இந்த சமரசம்

    நஞ்சுண்ட அரனும் மண்ணுண்ட மாலவனும் இரு பெருந் தெய்வங்களாகக் கட்டுரையாசிரியர் நினைக்கிறார்.  அரன் உண்ட நஞ்சு மண்ணுண்ட மாலவனை விரட்டியடித்துத் துயரூட்டியதை அவர் மறந்து விட்டாரா? திருவையாற்றில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே ஆஞ்சநேயர் இருப்பதால் அரியும் அரனும் ஒரே தெய்வம் என்ற சமரசத்திற்கு வலிமை ஏறுமா? சமயப் பிணக்கு சைவர்களால் தான் வருகிறதா? பெளத்தம், சமணம், வைணவம் ஆகிய புறச் சமயங்கள் அவ்வப்போது நமது சைவத்தின் மீது விடும் அஸ்திரங்களின் வரலாற்றைக் கட்டுரையாளர் மறந்துவிட்டாரா? பிற மதங்கள் எல்லாம் 'ஓரும் வேதாந்தத்தின் உச்சியில் பழுத்த ஆரா இன்ப அருங்கனி'யாகிய சித்தாந்த சைவத்தின் சோபானக் கிரமமாக அமைந்துள்ளன அல்லவா?

    சிவாலயங்களில் அறுவகைச் சமய மூர்த்தங்களையும் கோஷ்ட மூர்த்தங்களாகக் காணும் கட்டுரையாளர் அறுவகைச் சமயம் என எம்மதங்களைக் குறிப்பிடுகிறார்? ஏகான்மவாதியாகிய சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டும் ஷண்மதமா? நமது சைவம் காட்டும் புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப்புறச் சமய, அகச் சமயம் ஆகியவற்றுக்கும், சங்கரரின் ஷண்மதத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதைக் கட்டுரையாளர் புறக்கணித்து விட்டாரா?

பணிவான விண்ணப்பம்

    'சைவ சமயமே சமயம்', 'சைவத்தின் மேல் சமயம் வேறில்லை, அதில் சார் சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வமில்லை' இவ்வுண்மையை நம்மவர் உளத்து நன்கு பதிய வைக்க எழுந்தனவே (கட்டுரையாளர் எடுத்துக் காட்டும்) கீழ்காணும் ஆதாரங்கள்.

    "வாது செய்து மயங்கும் மனத்தராய்
    ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள்
    யாதோர் தேவர் எனப் படுவார்க் கெலாம்
    மாதேவன் அலால் தேவர் மற்றில்லையே"

(இத்திருப்பாடலின் முதல் 2 அடிகள் கட்டுரையில் இடம் மாறியுள்ளன)

    'யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
    மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்
    வேதனைப்படுமிறக்கும் பிறக்கும் மேல் வினையும் செய்யு
    மாதலால் இவையி லாதான் அறிந்தருள் செய்வன் அன்றே'

இவை 'முக்கண்ணனையும் முகில் வண்ணனையும் இருபெருந் தெய்வங்கள்' என்ற கூற்றை மறுக்கப் போந்தவையே.  முக்கண்ணன் முழுமுதற் பரம்பொருள்.  ஆனால் முகில் வண்ணனோ 'வேதனைப்படும், இறக்கும், பிறக்கும், மேல்வினையும் செய்யும்' உயிர் வர்க்கமே எனவே இச்சமரச நோக்கு நமக்கு வேண்டாம் எனப் பணிவன்புடன் கட்டுரையாளர்க்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   

 

திருச்சிற்றம்பலம்.


 

Hosted by www.Geocities.ws

1