உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சக்ரதானர்

    சிவபெருமான் ஜலந்தராசுரனைக் கொன்ற சக்கராயுதத்திற்கு சுதரிசனம் என்று பெயர். அதனைத் தனக்குத் தந்தருள வேண்டுமென்று திருமால் சிவபெருமானைப் பூசித்து வந்தார்.  தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் திருமால் பூசித்தார்.  ஒரு நாள் ஒரு பூக்குறைய தமது கண்ணையே பறித்து மலராகச் சாத்தினார்.  அவரது பூசைக்கு உகந்த சிவபெருமான் அவருக்குச் சக்கரப்படையை வழங்கியதோடு கமலக்கண்ணன் என்ற திருப்பெயரையும் கொடுத்தருளினார்.  சிவபெருமான் சக்கரதான மூர்த்தியானார்.  திருமால் சக்கரபாணி ஆனார்.

   அதர்வண வேதத்தில் காணப்பெறும் சரபோநிடதத்தில் "எவருடைய இடது பாதத்தில் விஷ்ணு தமது கண்மலரை அர்ச்சித்துச் சுதரிசனமென்னும் சக்கரம் பெற்றுக் கொண்டாரோ அந்த உருத்திரமூர்த்திக்கு வணக்கம்" என வருகிறது.  திருமால் சிவபெருமானைப் பூசித்துச் சக்கரம் பெற்ற வரலாறு மகாபாரதத்திலும் குறிப்பிடப் பெறுகிறது.  தமிழில் கூர்மபுராணத்தில் மாயோன் நேமி பெற்ற அத்தியாயம் என்று ஒரு அத்தியாயமே உள்ளது.  அதில் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு விரிவாகப் பேசப்படுகிறது.

"வையம் பொதிந்த செங்கனிவாய் மாயோன் அன்புக்குண் மகிழ்வுற்(று)
ஐயன் கையாற் புறநீவி யடியிற் புனைந்த மலர்க்கண்ணும்
எய்த நல்கிச் சுதரிசனமென்னுஞ் சுடராழியும் ஈந்து
செய்ய கமலக் கண்ணன் என்னும் பெயருஞ் சிறப்புனொடும் அளித்தான்"

தேவாரப்பாக்களில் சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரம் அருளிய தலமாகத் திருவீழிமிழலையைக் குறிப்பிடப்படுகிறது.

"தந்தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த
            சக்கரமெனக் கருளென்று
அன்றரி வழிபட்டு இழிச்சிய விமானத்திறையவன்
            பிறையணி சடையன்
நின்ற நாள் காலை யிருந்த நாண்மாலை கிடந்த
            மண்மேல் வருகலியை
வென்ற வேதியர்கள் விழாவறா வீழிமிழலையானென
            வினைகெடுமே"

                                - திருஞ甶ன சம்பந்தர்.

"நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றழி யொருநாளென்று குறையக் கண்ணிறைய விட்ட
ஆற்றலுக்காழி நல்கி அவன் கொணர்ந்திழிச்சுங்கோயில்
வீற்றிருந்தளிப்பர் வீழிமிழலையுன் விகிர்தனாரே"

                                - தி;ருநாவுக்கரசர்

"சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி
 நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
 நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
 அலராக இடஆழி  அருளினன்காண் சாழலோ"

                                - மா;ணிக்கவாசகர் (திருசாழல்)

"பாலுக்குப் பாலகன் வேண்டி
    அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள்
    செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
    சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில்வல்
    லானுக்கே பல்லாண்டு கூறுதுமே"

                                - சே;ந்தனார் (திருப்பல்லாண்டு)

உத்திரகாமிகாகமும், ஸ்ரீ தத்துவநிதியும் சக்ரதான மூர்த்தியின் வடிவமைப்பினைக் காட்டுகின்றன.

    உத்தரகாமிகாகமத்தின்படி இவ்வடிவத்தில் சிவபெருமான் மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டு ஜடாமகுடம் புனைந்து சாந்தமூர்த்தியாகத் திகழ்கிறார்.  அவர் தனது வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்க அமைத்து அமர்ந்திருப்பார்.  அவரது இரு வலக்கரங்களிலும் டங்கமும் சக்கரமும் இருக்கும்.  இம்மூர்த்தியைச் சுற்றி பிரபாமண்டலமும் சிரஸ்சக்கரமும் அமைந்துள்ளன.  இவரது இடப்பக்கம் பார்வதி அம்மையார் அமர்ந்திருப்பார்.  வலப்புறம் நான்முகன் நிற்பார்.  முன்னே திருமால் தனது இருகரங்குவித்து அஞ்சலி செய்து வழிபடுவது போன்றோ, தாமரை மலர்களையும் தனது கண்ணையும் அர்ப்பணித்து வழிபடுவது போன்றோ விளங்குவார்.

    ஸ்ரீதத்துவநிதியின்படி, சக்கரதானமூர்த்தியின் கரத்தில் டங்கத்திற்குப் பதிலாகப் பரசு இருத்தல் வேண்டும்.  இவருக்கு இடப்பக்கம் திருமால் நின்று கொண்டிருப்பார்.  அவரது தோற்றம், அவர் சிவபெருமானை வழிபட்டு வரம் பெறவும், சக்கரத்தைப் பெற்றுக் கொள்ளவும் தயாராக இருப்பதைக் காட்டும்.

    சிவபெருமான் திருமாலுக்கு ஒரு பீதாம்பரத்தையும் கெளத்துவமணியையும் சக்கரத்தையும் வழங்குவது போன்ற அமைப்புடையவராயிருப்பார்.

    காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில், மதுரைக் கோயில் சக்கரதானமூர்த்தி சிற்பங்கள் சிறப்புடையன.  சக்கரதானமூர்த்தியை வழிபட்டால் வினைகள் நீங்கும்.   


 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1