உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சைவ நன்நெறி

(திருமுறை மன்றம்,
ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவாரப்பணித் திருக்கூட்டம்,
 
ஸ்ரீமாணிக்கவாசகர் சைவ சபை,
கோவில்பட்டி வெளியீடு)

1. ஸ்ரீ சிவபெருமானார் அருளிச் செய்த இருக்கு முதலிய நான்கு வேதங்களும், காமிக முதலிய இருபத்தெட்டு ஆகமங்களும், சைவ சமயத்துக்குச்சர்வ பிரமாண சாத்திரங்கள் ஆகும். வேத ஆகமங்களின் சாரமாக விளங்கும் சைவத்திருமுறைகள் பன்னிரெண்டும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், சிவஞானம் கைவரப்பெற்ற அருளாளர்களின் அனுபவ வாக்கு.  அவை தமிழுக்கே உரியன.

2. அவ்வருளாளர்கள், உலக நன்மைக்காகவும், உயிரினங்களின் துயர் தீர்த்தல் பொருட்டும், சைவசமயம் தழைத் தோங்கும் பொருட்டும், "திருநெறிய தமிழில்" தேவாரத் திருமுறைகளைப் பாடி, ஸ்ரீ சிவபெருமானாரிடம் விண்ணப்பம் செய்து கொள்ள, கருணைக்கடலாகிய ஸ்ரீ சிவபெருமானார் துயர் தீர்த்து அருள் செய்தார்.

3. அவர்கள் தேவாரத் திருமுறைகளைப்பாடி, எலும்பைப் பெண்ணாக்கியது, பாலைநிலத்தை நெய்தல் நிலமாக மாற்றியது, இறந்த வணிகனை உயிர்ப்பித்தது, ஆண்பனையைப் பெண்பனையாக மாற்றியது, நீற்றரையைக் குளிரச் செய்தது, கல்லைத்தெப்பமாக மிதக்கச் செய்தது, பாம்பின் விடம் நீக்கியது, முதலை உண்ட சிறுவனை உயிருடன் மீட்டது, ஊமைப்பெண்ணைப் பேச வைத்தது, போன்ற பல அற்புதங்களைத் திருவருள் துணை கொண்டு செய்தார்கள்.

4.  பிற்காலத்தும் சந்தானக் குரவர்களுள் முதல் ஆச்சாரியராகிய ஸ்ரீ மெய்கண்டதேவநாயனார் திரு அவதாரம் செய்வதற்கு, தேவாரப்பாடலே காரணமாக அமைந்தது.  இக்காலத்தும் ஸ்ரீ சிவபெருமானாரிடத்து அன்பு கொண்டு, திருமுறைகளைப்பாடி, விண்ணப்பித்துக் கொண்டால், அப்பெருமான் அருள் பாலித்து வருவதைக் காண்கிறோம்.

5.   இத்துணைச்சிறப்புக்களும், ஆற்றலும், பொருந்திய தேவாரத்திருமுறைகளை உபசாரவழக்காக "திரு அருட்பா" என்று "தமிழ் வேதம்" என்றும் போற்றுகிறோம்.

6.  சமஸ்கிருத வேத மந்திரங்களை, ஆலயங்களில் நடந்து வரும் பரார்த்த பூஜைகளிலும், ஹோமங்கள், யாகங்கள், நித்திய அனுஷ்டானம், ஆன்மார்த்த சிவபூஜை, போன்ற கிரியைகளிலும் ஓத வேண்டும் என்பது சைவ ஆகம விதியாகும்.  சமய ஆச்சாரியார்களும், சந்தான ஆச்சாரியார்களும், வேத கேள்விகளைப் போற்றியம், செய்தும், வந்துள்ளார்கள்.

7.   ஆன்மாக்கள் சைவ சமயநெறி நின்று, தக்க ஆச்சாரியாரிடத்து சிவதீட்சை ஏற்று, நித்திய அனுட்டானம், ஆன்மார்த்த சிவ பூஜை, ஆகிய சாதனங்களைச் செய்து, குருவழிபாடு, சிவலிங்கவழிபாடு, அடியார் வழிபாடு ஆகியவைகளை நியமமாகச் செய்து வந்தால், அவை படிமுறையில்பக்குவப்பட்டு, ஆணவ மலம் நீங்கப்பெற்று, அருட்சக்தி பதியப்பெற்று, சிவஞானம் கைவரப்பெற்று, ஸ்ரீ பெருமானாருடன் அத்துவிதமாகக் கலந்து அப்பெருமான் தரும் முக்தியாம் பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்.  என்பது சைவ ஆகமங்கள் கூறும் முடிந்தமுடிபு ஆகும். இவைகளையே பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்தசாத்திரங்களும் இவற்றின் வழி நின்று சொல்லும் அனைத்து சைவநூல்களும் பறை சாற்றுகின்றன.

8.  இந்நூல்கள் அனைத்தும், வேத சிவ ஆகமங்கள் ஸ்ரீ சிவபெருமானாரின் திருவாக்கு என்பதையும், அவைகளே சைவ சமயத்துக்குச் சர்வபிரமாணம் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளன.

9.    நம்பொருட்டு, திருமுறைகளை அருளிச் செய்த அருளாளர்கள், பதிகங்களின் இறுதிப்பாடலில், பாடல்களை ஸ்ரீ சிவபெருமானிடத்து விண்ணப்பம் செய்ய வேண்டிய முறைமையையும், அப்படிச்செய்தால் நாம் அடையும் பயன்களையும் கூறி, ஆணையிட்டும் அருளியுள்ளார்கள்.

10.   ஸ்ரீ சிவபெருமானிடத்து அன்பின்றியும், தவறான நோக்கிலும், செய்யவேண்டிய முறை தவறியும் செய்யப்படும், தோத்திரங்கள், கிரியைகள், ஹோமங்கள் யாவும் பயன் தாராது.  எதிர் விளைவுகளையும் ஏற்படுத்துச் செய்பவர்களுக்குக்கேடும் விளைவிக்கும் என்பதற்கு நம்முடைய புராணங்களில் பல சான்றுங்கள் உள்ளன.

11.  உடல் நோய் நீங்கும் பொருட்டு, மருத்துவர் வாய்வழி உட்கொள்வதற்கும் மருந்து கொடுக்கிறார்.  ஊசி மூலமாக நேரடியாகவும் மருந்தை உடலில் செலுத்துகிறார்.  மருந்துக்களை மாற்றிபயன்படுத்தினால் விளைவுகள் விபரீதம் ஆகிவிடுவது போல, வேதமந்திரங்களை எங்கு எவ்வாறு ஓத வேண்டும், திருமுறைகளை எங்கு எவ்வாறு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதற்கு விதிகளையும், மரபுகளையும், சைவசமயச் சான்றோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள், அதன்படி நடந்தால் தான் ஆன்மாக்களைப்பந்தித்துள்ள மல நோய் நீங்கிப் பிறவியின் பயனை அடையலாம்.

12.   சமீபகாலமாகச் சைவர்கள் அல்லாத புறச்சமயிகள் சிலர் சைவசமயிகள் போல் வேடமிட்டுக்கொண்டு, சைவ ஆலயங்களில் சமஸ்கிருத வேதமந்திரங்களை விடுத்துத் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும், ஆலயங்களில் நடைபெறும் நித்திய நைமித்யபூஜைகள், ஹோமங்கள், கும்பாபிஷேகங்கள் முதலியன திருமுறைகளை ஓதி நடத்த வேண்டும் என்றும், கூறி சைவ சமயத்துள்ளும், ஆலய வழிபாடுகளிலும் பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள்.

13.    இந்த வேடதாரிகள் எந்தவிதிகளும், மரபும், பிரமாணங்களும், இல்லாத நெறியல்லாநெறியினைத் தாங்களாகவே தான் தோன்றித்தனமாக ஏற்படுத்திக் கொண்டு அந்தநெறியல்லா நெறியை நம்முடைய சைவ சமத்துள்ளும், சைவ ஆலயங்களில் ஆகம விதிப்படி நடைபெற்றுவரும் வழிபாட்டுமுறைகளிலும், புகுந்தமுனைகிறார்கள்.  இம்மட்டோ இவர்கள் அட்டூழியம்!

 

14.  சைவ சமயத்தையும், தமிழ்மொழியையும், காத்து வளர்ப்பதையே தம்திரும்டத்துக்குறிக்கோளாகக் கொண்டு, திருமுறை ஞானத்துக்கு வரம்பாய் நின்று, உபதேசித்தும், திருமுறைகளைச் சீறியமுறையில் அச்சிட்டு சைவமக்களுக்கு உபகரித்தும், ஞானவேட்கை கொண்டுவரும் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு ஞானோபதேசம் செய்தும், சைவ சமய நெறி காத்து, ஞானச் செங்கோலோச்சிவரும் தருமபுரம் ஆதினம் ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமஹாசன்னிதானம் அவர்களை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும், வருகிறார்கள்.  இவர்கள் செயல் சூரியனைப்பார்த்து நாய் குரைப்பது போல் உள்ளது.  சைவ மக்கள் அனைவருடைய மனத்தையும் புண்படுத்தியுள்ளது.

15.  தம்மை உணாரத்தகவிலராகிய இந்தப் போலி குருமார்களின் தொழில் என்ன என்பதை நம்முடைய ஆதினத்து குருமுதல்வர், ஸ்ரீ-ல-ஸ்ரீ குருஞான சம்பந்த சுவாமிகள்

    "தனையறியார் ஈசன்றனையறியார் பாச
    வினையறியார் ஆனந்தமேவார் - தனையறியுஞ்
    சிட்டர்தமக் கில்லாத தீங்குரைப்பர் பொல்லாத
    துட்டர்தமக் குள்ள தொழில்."
 - என்று

பின்னர் வர இருக்கும் நிகழ்வுகள் முன்னரே ஞானத்தாலறிந்து, நமக்கெல்லாம் எச்சரிக்கை விடுப்பது போல அருளிச் செய்துள்ளார்கள்.  என்னே இவர்கள் கருணைத் திறம்!

16.  இந்தத்துட்டர்களின் செயல், தமிழ் மொழிப்பற்றினாலோ, சைவசமயப்பற்றினாலோ, எழுந்தது அல்ல, இவர்கள் நோக்கம் மொழிவெறியைத் தூண்டி, சைவ சமய நெறிகளையும், மரபுகளையும், குலைக்க வேண்டும் என்பதும், அதன் மூலம் தங்களுக்குச் சுயவிளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடிக்கொள்வதும், தமிழ்மொழிவழிபாட்டுப்பயிற்சி மையம் என்றபெயரில் இதையே தொழிலாகக்கொண்டு பொருள் தேடிக்கொள்வதும் தான் என்பது வெளிப்படை.

17.  இன்னும் சிலர், சிலதினங்களுக்கு முன்பு, சிவனடியார்கள் போல் வேடமிட்டு, ஸ்ரீ சிதம்பரம் திருக்கோயிலுக்குள் சென்று, அங்கு மரபுவழிநடந்து வரும் வழிபாட்டு நடை முறைகளுக்கு மாறாகச் சிலகுழப்பங்களைச் செய்ய, அங்கு பூஜைகள் செய்து வரும் தில்லைவாழ் அந்தணர்கள் (தீட்சிதர்கள்) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சென்று குழப்பம் செய்தவர்களை அப்புறப்படுத்த, வெளியேற்றப்பட்ட அவர்கள் பெரியோர் சிலையிலிருந்து புறப்பட்டு கோஷமிட்டுக்கொண்டு ஊர்வலம் சென்றார்கள் என்று செய்தித்தாள் மூலம் அறிகிறோம்.  இவர்கள் நோக்கம் வழிபாடு செய்வது அல்ல.  வம்பு செய்ய வேண்டும் என்பதே.

18.  சைவ ஆலயங்களை நிர்வாகம் செய்துவரும் தமிழக அரசு அங்கு நடந்து வரும் ஆகம வழிபாட்டு நெறிகளை, விதிமுறைகளை, மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை.  ஆலயங்களில் நல்ல வருமானம் இருந்தும் தேவையான பணியாட்களைக்கூட நியமனம் செய்யவில்லை.  ஆலயங்களில் வரும் வருமானங்களைச் சிந்தாமல், சிதறாமல், கொண்டு செல்வதைமட்டும் காண்கிறோம்.

19.  சைவசமய நெறிகளையும், வழிபாட்டு விதிகள் மற்றும் மரபுகளையும், சைவமக்களாகிய நாமே விழிப்புடன் இருந்து காத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.  இதற்கு உபாயம், தேவாரத் திருமுறைகள், சைவசமயசாத்திரங்கள், புராணங்கள், ஆகிய சைவ நூல்களைப் படிப்பதும், பிரசங்கம் செய்யப்படும் இடங்களுக்குச் சென்று, தக்கார் மூலம் கேட்பதும், அவைகளைச் சிந்தித்து ஐயமறத் தெளிவதும், அதன் மூலம், நம்முடைய சைவ சமய நெறிகளையும், மரபுகளையும் நாம் அறிந்து கொண்டு அதன்வழி ஒழுகலுமாம்.  அதுவே நம்முடைய கடமையும் சிவபுண்ணியச் செயலுமாகும்.

குறிப்பு: திருமுறை மன்றத்தின் சார்பில் வாரந்தோறும் ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு மேல், சாஸ்த்திர புராண, திருமுறை வகுப்புகள் நடைபெற்றுவருகிறது கேட்டுப் பயனடையுங்கள்.

  

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ ல்லாம"

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1