சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


திருச்சிராப்பள்ளி அடுத்த உறந்தைமா நகரவாசியாரும் ஸ்ரீமீனாட்சிசுந்தர வித்தியாசாலைக்குத் தலைவரும், துறைசை ஸ்ரீநமசிவாயமூர்த்திகள் நான்மணி மாலை ஆதிய அரிய நூல்களியற்றியோரும் செந்தமிழ் செல்வி யென்னும் சஞ்சிகைக்கு அரிய பெரிய விஷயதானம் செய்துவருபவரும் ஆகிய சித்தாந்த சைவப்பிரசாரகர்

ஸ்ரீமத் தே. பெரியசாமி பிள்ளை அவர்கள்

அபிப்பிராயம்.


    ஸ்ரீமத் திரு.மா.சாம்பசிவம் பிள்ளை யவர்களாலாக்கப் பெற்று அன்புரிமையின் அளிக்கப்பெற்ற "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" (Private Copy) என்னும் பெரிய அரிய நூலை நன்கு பார்வையிட்டுக் கழிபேரு வகை கைவரப் பெற்றாம்.

    "திருநான்மறை விளக்கம்" என்னும் நூற்கண் உத்திவாதமாகத் தாபிக்கப் புக்க, முன்னோர் கருத்துக்கு முரணான கொள்கைகளையெல்லாம், திருவருட் பெருஞ் செல்வர்களான சைவசமய சந்தான குருமணிகள் திருவாய் மலர்ந்தருளிய தெய்வச் செந்தமிழ் வேதசிவாகம சார சித்தாந்த உண்மை நூற் பிரமாண வாயிலாகவும், முறையே மறுத்தும், ஆன்றோராசாரம் வழுவா துண்மைநிலையிட்டும் ஒளிரும், 'திருநான்மறை விளக்க ஆராய்ச்சி' என்னும், பிள்ளையவர்கள் திப்பிய நூல் இப்புவியோருட்சிலர் தாமும் தெளிவிலாது மயங்காமைப் பொருட்டு வேண்டற்பால தொன்றேயா மென்ப தெமது கருத்து.

    தசரதன் மதலையாகிச் சானகியை மணந்ததாதிய இராம இராவண சமரீறாகக் கூறும் இராமகாதை ஆரியர் கற்பனையெறும், முருகன் எனும் அரசன் ஒருவன்; அசுரன் எனும் பிறிதொருவனோடெதிர்த்துப் பொருதுவென்ற காதையே, சுப்பிரமணியர் பரமாக மாறிக் கந்தபுராணமென வழங்கப்பெறுகின்றதென்றும், இன்னோரன்ன பல கூறித் தொன்னெறி பிழைபடக் காண்பாருஞ் சிலருளராகலின், அமுதினுமினிய தமிழ் மொழி மாட்டுத் தமக்குள்ள ஆர்வமிகையானே 'திருநான்மறை விளக்கம்' வரைந்த ஆசிரியரைப்பற்றி விளம்புவதென்னை?

    பழுத்த சைவப்பற்றும், திண்ணிய அன்பின் அழுத்தமான சிவ பூஜையும் செறிந்துள்ள நண்பரவர்கள் தாங்கண்ட விளக்கத்தை ஆன்றோர் முறைந்து உண்மை தேரா வுளத்தினராய்த் 'திருநான்மறை விளக்கம்' வெளிவரக் கண்டார்போலுமென எண்ணுகின்றேம்.

திருவிடைமருதூர்.
20-6-26
 


Hosted by www.Geocities.ws

1