சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் பரீக்ஷகரும், யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கத்தின் நிர்வாக சபை வித்தியா சபைகளின் அங்கத்தவரும் உதவிக் காரியதரிசியும், பரிக்ஷகரும், "உலகியல் விளக்க நூல்" ஆசிரியரும், சங்கநூல் ஆராய்ச்சி விநோதருமாகிய
பிரமஸ்ரீ நவநீதகிருஷ்ணபாரதியவர்கள்
இவ்வுரை கண்டார்


    தென்னந்தியாவிலேயுள்ள பார்ப்பன மக்களுட் பெரும்பாலார் அரசாங்க உத்தியோக வேணவா மேலீட்டானே தத்தமக்குரிய வைதிக சந்மார்க்க நெறியை மறந்து ஆங்கிலங் கற்றுத் தாம் பெரும் பதம் பெற்றுப் பாங்கிலரென்னும் பான்மையராயினர்.  ஆங்குள்ள ஏனையோரும் அப்பதங்களைத் தாங்களும் பெறுதற்குத் தடையாயிருப்பவர் பார்ப்பாரெனத் தாமே கருதிக்கொண்டு அவரை வெறுத்து அடக்குவான் முயல்கின்றனர்.

    அவர் தம் முயற்சி, அப்பார்ப்பார்க் குரியதென்று அவர் தாமே எண்ணிக்கொண்ட வடமொழியின் மீதும், அம்மொழியினார்ந்த வேதாகமங்கண் மீதும், அப்பார்ப்பார் மரபுடையரெனக் கருதப்படும் திருஞானசம்பந்த சுவாமிகள் போன்றார் மீதும், சக்த்தியல் கடந்த அகத்தியர் முதலாய முனிவர்கண் மீதும் வெறுப்புக் கொள்ளச் செய்து விட்டதெனின், வேறினி விளம்புதற் கியாதுள தவர்தம் முயற்சி விசேடம்!

    இன்னும் அவர்கள் தமது வெறுப்புவிசேட மொன்றையே நிலைக்களனாக வைத்துக் கொண்டு உண்மையை அறவே மறைத்துத் தொன்னூல் வரம்பிகந்து வேண்டிய மாறுபாடுகளை அச்ச நாண மணுத்துணையுமின்றி உஞற்றி வருகின்றனர்.  அவற்றுட் சிலவற்றை அறியவெஃகும் வேட்கையாளர் பொருட்டு ஈண்டு வரைகின்றாம்.

    திருக்குறளில் "அறுதொழிலோர்" என்றதனை "அறிதொழிலோர்" என்றும், தேவாரத்தில் "சைவவேடந் தானினைத்து" என்றதனைச் "சைவவேடந் தானிணைத்து" என்றும், பாடங்கொண்டும், தேவார முதலியவற்றில் "மறை" என்பது தமிழ்வேதம் என்றும், "அந்தணர்" என்பது "தமிழராகிய முனிவர்" என்றும்,. "சிவன்" என்பதற்குச் சிவந்த நிறம் உடையவன் என்றும் ஓராதாரமுமின்றி வாளா பொருள் கூறியும், தம்முடைய கொள்கைக்கு மாறுபட்ட பிரபலமான பிரமாணங்களை இடைச்செருகல் என்றும் எழுதியும் இயம்பியும், இன்னன பிறவா றுஞற்றியும் வருகின்றனர்.  இவ்வருவோருட்டலையாயார் ஸ்ரீ வேதாசலம் பிள்ளை என்பாரும் ஸ்ரீ கா.சுப்பிரமணிய பிள்ளை என்பாருமாவர்.

    கா.சு. என்பார் வடமாநிழற்கண் நால்வர்க்கருளிய மறை என்பது இருக்கு முதலியவற்றைக் குறியாது தமிழ் மொழிக்குரிய ஓம் என்பதனையே குறிக்கும் என்றும், ஆண்டுக் கேட்ட நால்வரும் சநகாதியர் ஆகார்; தமிழ் மக்களே ஆவார் என்றும், பிறாவாறும் மேலே குறித்த தம்மத மேலீட்டானே "திருநான்மறை விளக்கம்" என்னும் பொதுமொழி தலைப் பெய்ததொரு பொருளில் உரையைச் "செந்தமிழ்ச்செல்வி" என்னும் பொருத்தமில் பத்திரத்தில் வெளியிட்டிருக்கின்றார்.

    இந்தகாத செயலுக்கஞ்சி உண்மை வெளியிடற் கஞ்சாது முன் வந்து தோன்றியோர் பல சைவத் தமிழ்ப் பெரியாராவர்; அவர் தம்முள்ளும் தலை சிறந்த பெரியாராகிய ஸ்ரீமத். திரு.மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" எனப் பெயரியதோரரிய நூலொன்றியற்றி அதன் மாதிரிப் பிரதி யொன்றை எமக்கனுப்பி வைத்தனர்.

    அந்நூல் கா.சு. என்பார் காட்டிய போலிக் கொள்கைகளை வேரறுத்தில்லையாக்கிச் 'சைவப் பயிர் தழைத்தோங்க வைத்துச் சிவானந்தப் பேற்றினைச் சைவ வுலகந் துய்க்குமாறு செய்து விளக்கமுறுகின்றது என்பது எமது உள்ளக்கிடக்கை.

    அந்நூலாசிரியருக்கும், மாரிக்குப்போலச் சைவ வுலகம் என்ன கைமாறு செய்ய வல்லது! நூலும், ஆசிரியரும், சைவமும், தமிழும், வடமொழியும், அம்மொழி வேதாகமங்களும், அன்ன பிறவும் தழைத்து வளர்ந்தோங்கி நிலைபெறும்வண்ணம் அருள் புரிவான் கலியுகவரத! கந்த! முருக! எந்தை செவ்வேள்! கமலச்சேவடி! விமல! வேண்டுதும் பெரிதே.

   


Hosted by www.Geocities.ws

1