சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணத்துப் புலோலிநகர்ச் சாரதாபீட வித்தியாசாலைத் தாபகரும், தலைமைப் போதகாசிரியரும், தமிழ் சமஸ்கிருதம் என்னும் துவிபாஷா வல்லுநரும், சைவப்பிரசாரகரும் பெளராணிகரும், பசுபதீச்சுரன் கோயில் அருச்சகரும், கர்ஷணாதிப் பிரதிஷ்டாந்தம் பிரதிஷ்டாதி உற்சவாந்தம் உற்சவாதிப்பிராயச் சிந்தாந்தமுள்ள சைவாகமக்கிரியைகளில் வல்லுநரும், "சமன் செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் - கோடாமை" யைத் தமக்கணிகலமாக உடையவரும், அப்பர் ஆயுட் பருவமுற்றும் அடையுமாணவர்கட்குச் செப்பமாய்க் கல்வி கற்பிக்குந் தேற்ற நனியுடையரும், தம் நடையினால் மாணாக்கரையும் நன்னடையினராகச் செய்பவரும் ஆகிய

பிரமஸ்ரீ ம.முத்துக்குமாரசுவாமிக் குருக்களவர்கள்

அபிப்பிராயம் இது:-


      திரிசிரபுரத்து வித்துவ சிரேட்டரும், சுத்தாத்துவித சைவ சித்தாந்தப் பேரன்பரும், நந்திபெருமான் சிவபிரானிடத்து வேண்டிப் பெற்றுக்கொண்ட பெரும்பேறு பதினாறனுள் முதற்கண்வைத் தெண்ணப்பட்ட "மறைக ணிந்தனை சைவ நிந்தனை பொறாமன" முடையவரும், லெளகிக உத்தியோகத்திலே அமர்ந்தும் ஆங்கிலங் கற்ற வேனையோர் போல அதன் வயத்தினராகாது, சிவதூஷண சிவசாஸ்த்திர தூஷண சிவனடியார் தூஷண கண்டனமும் சிவபூசா நியமமுமாகிய வைதிகோத்தியோகத்திலே அமர்ந்திருக்கின்ற வருமாகிய ஸ்ரீமத் சாம்பசிவ பிள்ளையவர்கள் ஸ்ரீமத் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்களால் வெளியிடப்பட்ட "திருநான்மறை விளக்க"த்தைப் பார்வையிட்டு அது காண்டல் கருதல் உரை என்னும் மூன்று பிரமாணங்கட்கும் பொருத்தமில்லாதிருத்தலைக்கண்டு அதனை உலோகோபகாரமா வெளிப்படுத்தியாவர்க்குந் தெரிக்கக் கருதித் "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" எனப் பெயரிய சிறந்த நூலொன்றியற்ரி அச்சிடுவித்து அதில் ஒரு புத்தகம் எமது அபிப்பிராயம் எவ்வியல்பிற்றென்றறிதரற்பொருட்டு எமக்கனுப்பினார்கள்.

    நாம் அவ்"வாராய்ச்சி" நூலைப் மிக நன்றாக அமைந்து பார்வையிட்டேம்.  "ஆராய்ச்சி" உடையார், "விளக்கம்" உடையார்கொள்கைகள் நவீனக்கற்பனைகளென நன்கு விளக்கிச் சிறப்புடைப் பிரமாணங்கொண்டு மறுத்திருத்தல் மெய்யுணர்வுடையார் வியத்தற்குரிய மிக்க அழகு வாய்ந்திருத்தலை ஓர்ந்து கழிபெருங் காதலும் களிப்பும் விழிப்பும் உடையமாயினேம்.

    கலியுக தருமத்திற்கேற்ப உண்மையுணரும் கல்வியறிவிலார் பரந்துவரும் இக்காலத்திலே உண்மையுணரவல்ல கல்வி யறிவாளராம் ஸ்ரீமத்.திரு.மா.சாம்பசிவபிள்ளையவர்கள் இருத்தலை "ஆராய்ச்சி" நூல்வாயிலாக அறிந்து அற்புதமிஃதற்புதமெனக் கருதிக் கூதூகலமடைகின்றேம்.

    "வடமொழி வேதங்களையும் வடமொழி ஆகமங்களையும் பிரமாணமாகச் சைவர்கள் கருதுவாராயினர், அங்ஙனம் கருதினமையால் வந்த மயக்கிற்களவில்லை" என்றார் 'விளக்க' மெழுதினோர்.

    அவற்றைப் பிரமாணமாகக் கருதின சைவர் யாரெனில், சிவபிரான், உருத்திரர், நந்திபெருமான், சனற்குமாரர், சத்தியஞானதரிசனிகள், பரஞ்சோதி முனிவர், விஷ்ணுமூர்த்தி, பிரமதேவர், இந்திரன், மற்றைத்தேவர்கள், மெய்கண்டதேவர், அருணந்திசிவாசாரியர், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவாசாரியர், திருவாவடுதுறை யாதீன சந்நிதானங்களும் அவர்கள் சீடர்களும், தருமபுரவாதீன சந்நிதானங்களும் அவர்கள் சீடர்களும், திருவண்ணாமலை யாதீன சந்நிதானங்களும்  அவர்கள் சீடர்களும், சொர்க்கபுரவாதீன சந்நிதானங்களும் அவர்கள் சீடர்களும், அரதத்தாசாரியரும், அப்பைய தீக்ஷிதரும், நீலகண்டசிவாசாரியர் முதலினோருமேயாம்.  திருவருட்பேற்றிற்குச் சிறிது இலக்காது சாத்திரஞான மணந்தானும் வீசப்பெறாதார் மயக்கற்றவராம்.  சிவபிரான் முதல் திருவருட்பேற்றிற் கிலக்காய் மெய்யுணர்ந்தாரெல்லாம் மயக்கமுடையராம்.  "கண்டன மின்றியாங் கலியின்வண்ணமே" மயக்கமற்றவர்க் கெல்லாம் மயக்கங் கற்பித்தார்க்கும் அவரைச் சார்ந்தார்க்கும் ஆராய்ச்சி நூலால் மயக்கநீக்கிய பேரறிஞராகிய சாம்பசிவ பிள்ளையவர்கட்கு எல்லா நன்மைகளையும் ஈந்தருளும்வண்ணம் பசுபதீசுவரரைப் பிரார்த்திக்கின்றேன்.


Hosted by www.Geocities.ws

1