உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

மகா சிவராத்திரி விரத நிர்ணயம்
இந்த ஆண்டு (விய-2007)

திருவாவடுதுறை ஆதீனத்தில் நிர்ணயிக்கப்பெற்றது

    மகாசிவராத்திரி விரதம் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் அனுஷ்டிக்க வேண்டும் என்பது சிவ ஆகம விதி.  ஆனால் சதுர்த்தசியானது ஒரு சில நாட்களில் நாள் முழுவதும் இருக்கும்.  சில நாட்களில் பகலில் மட்டும், சில நாட்களில் இரவில் மட்டும் இருக்கும்.

    இவற்றுள் திரியோதசி உடன் கூடிய சதுர்த்தசி உத்தமம் என்றும், சதுர்த்தசி மட்டும் உள்ளது மத்திமம் என்றும், அமாவாசையுடன் கூடியது அதமம் என்றும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.  மேற்கூறியபடி மகாநிசி (லிங்கோத்பவர்) காலத்தில் சதுர்த்தசியுடன் அமாவாசை சேருமானால் அந்த நாளை விடுத்து முதல் நாளே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மகாநிசி (லிங்கோத்பவர்) காலம் என்பது இரவு இரண்டாம் யாமத்தில் கடைசி ஒரு நாழிகையும், மூன்றாம் யாமத்தில் முதல் ஒரு நாழிகையும் சேர்ந்த இரண்டு நாழிகை நேரம்.  அதாவது 48 நிமிடங்களைக் குறிக்கும்.  இந்த காலமானது சூரிய உதய அஸ்தமனத்தின் அடிப்படையில் வேறுபடும்.

    இந்த ஆண்டு பஞ்சாங்கங்களில் மாசி மாதம் 4-ம் தேதி 16-02-2007 வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் அன்றைய தினம் அமாவாசையும் இருப்பதால் சிவராத்திரி கொண்டாடுவது தோஷம் என ஆகமங்களில் கூறப்பட்டுள்ளதால் ஆகமவல்லுனர்களைக் கொண்டு எந்த தினத்தில் சிவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும் என்ற பரீசிலணையில் கீழ்க்கண்ட விபரங்கள் தெரியலாயின.

    மாசி மாதம் 3-ம் தேதி 15-02-2007 வியாழக்கிழமை சூரிய உதயம் காலை 6.00 மணி 38 நிமிடம்.  சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் 6.00 மணி 18 நிமிடம். (28-ம் நம்பர் பாம்பு பஞ்சாங்கம்) இரண்டுக்கும் இடைப்பட்ட நேரம் 11.00 மணி 40 நிமிடம் (29.10) அஸ்தமனத்தில் இருந்து மறுநாள் காலை சூரிய உதயம் வரை உள்ள 12.00 மணி 20 நிமிடம் (30.50) இரவு காலமாகும்.  இரவு காலமான 12.20ல் பாதி 6.10.

    சூரிய அஸ்தமனம் 6.18 உடன் கூட்ட இரவு 12.28 ஆகும்.  அதாவது இரவு 12.28 என்பது இரண்டாம் காலத்தின் முடிவு நேரமாகும்.  இதன் கடைசி ஒரு நாழிகை (24 நிமிடம்) இரவு 12.04, மூன்றாவது யாமத்தின் முதல் ஒரு நாழிகை (24 நிமிடம்) இரவு 12.52, இது தான் மகா நிசிகாலமாகும்.

    15.02.2007- வியாழக்கிழமை திரியோதசி திதி 48.12 இரவு 1.55 வரை உள்ளது.  அதற்கு மேல் சதுர்த்தசி இன்று மகாநிசி காலமான 12.04 முதல் 12.52 வரை திரியோதசிதான் உள்ளது சதுர்த்தசி திதி இல்லை.

    16.02.2007- வெள்ளிக்கிழமை சதுர்த்தசி திதி 44.49 இரவு 12.34 வரை உள்ளது.  அதாவது மகாநிசி காலமான 12.04 முதல் 12.52 வரை உள்ள காலத்தில் 12.04 முதல் 12.34 வரை 30 நிமிடங்கள் தான் சதுர்த்தசி திதி உள்ளது.  பிறகு 18 நிமிடம் அமாவாசை சேர்ந்துள்ளது.  மேற்படி மகாநிசி நேரத்தில் அமாவாசை சேர்ந்துள்ளதால் சிவராத்திரி விரதம் விலக்கப்பட வேண்டும் என்பது ஆகமங்கள் விதிகளின் படி தெரிய வருகிறது.

    மேற்கண்ட சர்ச்சை போல் 1946 ஆம் ஆண்டு பார்த்திப வருடம் மாசி மாதம் 18- ஆம் தேதி 1-3-1946 வெள்ளிக்கிழமை 2-3-1946 சனிக்கிழமை இந்த இரண்டு நாட்களில் சிவராத்திரி விரதம் என்று அனுஷ்டிப்பது என்ற சர்ச்சையில் கீழ் கண்ட முடிவு திருவாவடுதுறை ஆதீனத்தால் தீர்மானிக்கப்பட்டது.

    1-3-1946 - பார்த்தி வருடம் மாசி மாம் 18 - ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதிசி திதியானது 47.56 இரவு 1.42 வரை உள்ளது.  பிறகு சதுர்த்தசி திதி உள்ளது இதில் மகாநிசிக்காலமான 12.04 முதல் 12.52 வரை சதுர்த்தசி திதி இல்லை.

    2-3-1946 - பார்த்திப வருடம் மாசி மாதம் 19-ம் தேதி சனிக்கிழமை சதுர்த்தசி திதியானது 46.38 இரவு 1.17 வரை உள்ளது.  பிறகு அமாவாசை திதி வந்தது.

    மகாநிசி காலமான 12.04 முதல் 12.52 மணி முடிந்த பிறகு 25 நிமிடம் கழித்துதான் அமாவாசை திதி வந்தது எனவே அன்றைய தினம் சிவராத்திரி விரதம் கொண்டாடப்பட்டது.

    2007 ஆம் விய வருடம் 1946 பார்த்திப வருடம் இரண்டு காலக்கட்டங்களிலும் சதுர்த்தசியோடு கூடிய அமாவாசை இருப்பினும் 1946 ஆம் வருடம் மகாநிசி காலமான 12.04 முதலி 12.52 மணி முடிந்த பிறகும் சதுர்த்தசி திதி உள்ளது.  ஆனால் 2007 ஆம் வருடம் மகாநிசி காலமான 12.04 முதல் 12.52 முடிய உள்ள காலத்திலேயே 18 நிமிடங்கள் அமாவாசை வந்துவிடுவதால் 16.02.2007 ஆம் தேதியை விடுத்து அமாவாசை சம்பந்தம் இல்லாத மாசிமாதம் 3-ம் தேதி 15-02-2007 - வியாழக்கிழமை சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆதீனத்தில் முடிவு செய்யப் பெற்றது.  அதன்படி, ஆதீனத் தலைமை மடம், கிளை மடங்கள் ஆதீனத்தைச் சார்ந்த சிவாலயங்கள் அனைத்திலும் மாசி மாதம் 3-ம் தேதி 15-02-2007 அன்று மகாசிவராத்திரி விரதம் அனுட்டிக்கபப்டும்.


தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபையின் (உறையூர், திருச்சி) ஆகம அறிஞர் குழுக் கூட்ட தீர்மானங்கள்.

    இடம்: சிவபுரம் வேத சிவாகம் பாடசாலை, மயிலாடுதுறை,

    நாள்: 13-01-2007, சனிக்கிழமை,

    நேரம்: பகல் 12.00 மணி.

    நிகழும் ஸ்ரீ வ்யய வருட சிவராத்திரியானது எல்லா பஞ்சாங்கங்களிலும் மாசி மாதம் 4-ம் தேதி 16-02-2007 வெள்ளிக்கிழமை, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதை சரி என்று சிலரும், தவறு என்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  எனவே, இவ்விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றது.

    சிவராத்திரி விரதம், மாசி மாதத்தில் க்ருஷணபக்ஷ சதுர்த்தசியில் அனுஷ்டிக்க வேண்டுமென்பது ஸகலாகம ப்ரஸித்தம்.  ஆனால், சதுர்த்தசீ திதியானது ஒரு சில நாட்களில் நாள் முழுவதும் இருக்கும், சில நாட்களில் பகலில் மட்டும், சில நாட்களில் இரவில் மட்டும் இருக்கும்.   

    இவற்றுள் த்ரயோதசியுடன் கூடிய சதுர்தசீ உத்தமம் என்றும், பூர்ண சதுர்தசீ மத்யமம் என்றும், அமாவாஸையுடன் கூடியது அதமம் என்றும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.

    அதே ஸமயம், மஹாநிசி காலத்தில் சதுர்தசீயுடன் அமாவாஸை சேருமேயானால், அதை விடுத்து முன்னாளே சிவராத்திரி வ்ரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆகமங்களில் உள்ளது.  

    சிவராத்திரியின் காலம், இரவு இரண்டாம் யாமத்தின் இறுதி ஒரு நாழிகையும், மூன்றாம் யாமத்தின் முதல் ஒரு நாழிகையுமாகிய இரண்டு நாழிகை பொழுது = 48 நிமிடங்கள் ஆகும்.  இதற்கு மஹாநிசி என்று பெயர். ஸூர்ய உதயாஸ்தமனத்தின் அடிப்படையில் மஹாநிசியின் காலமானது வேறுபடும்.

    மாசி மாதம் 3-ம் தேதியின்று மஹாநிசி காலம் இந்திய நேரப்படி பின் இரவு 12.22 முதல் 1.10 வரை உள்ள நேரம் ஆகும்.  அன்று த்ரயோதசி திதியானது பின் இரவு 1.55 வரை இருக்கின்றது.  அதற்கு மேல் சதுர்தசீதிதியானது வருகின்றது.

    மாசி மாதம் 4-ம் தேதி சதுர்தசீதிதியானது பின் இரவு 00.34 வரை இருக்கின்றது.  அதற்கு மேல் அமாவாஸையானது வருகின்றது.  இதனால் 12.22க்குப் பிறகு அதாவது மஹாநிசி காலத்தில் சதுர்தசீ, அமாவாஸையின் சேர்க்கையானது ஏற்படுகிறது.

    இந்நிலையில், சதுர்த்தசீ அமாவாஸையின் சேர்க்கையானது மஹாநிசி காலத்தில் ஏற்பட்டால் அதை விடுத்து முதல் நாளே அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று முன்பு கூறிய கருத்தை தெளிவு படுத்தும் வண்ணம் 1914-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மஹாசிவராத்திரி நிர்ணயம் என்று நூலில் ஆகமப் ப்ராமாணம் காட்டி விளக்கப்பட்டுள்ளது.

    எனவே இவ்வருடம் மாசி மாதம் 4-ம் தேதி 12.34க்குப் பிறகு அதாவது மஹாநிசீயில் அமா ஸம்யோகம் (சதுர்தசீ, அமாவாஸையின் சேர்க்கையானது) ஏற்படுகின்ற காரணத்தால் அதில் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பது அனுசிதம் என்பதால் மாசி மாதம் 3-ம் தேதி 15-02-2007 வியாழக்கிழமையே அனுஷ்டிக்க வேண்டும் என்பதே ஆகம ஸம்மதம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவாச்சாரியார்கள்.

    சிவஸ்ரீ.ராஜப்பா சிவாசாரியார் - காஞ்சிபுரம், இராமநாத சிவாசாரியார் - திருக்கோலக்கா, விஸ்வநாத சிவாசாரியார் - மயிலாடுதுறை, சத்திய கீர்த்தி சிவாசாரியார் - உய்யகொண்டான்மாலை, நீலகண்ட சிவாசாரியார் - கஞ்சனூர், கல்யாணசுந்தர சிவாசாரியார் - கும்பகோணம், அருண சுந்தர சிவாசாரியார் - சென்னை, கணேச சிவாசாரியார் - திருவையாறு, இராமமூர்த்தி சிவாசாரியார் - திருஇந்தனுர், சபேசசிவாசாரியார் - மயிலாடுதுறை, சர்வேஸ்வர சிவாசாரியார் - காரைக்கால், செல்வ கபில சிவாசாரியார் - கபிலர் மலை, சிவராம சிவாசாரியார் - லால்குடி, தண்டபானி சிவாசாரியார் - திருவிடைமருதூர், சுவாமிநாத சிவாசாரியார் - திருவெண்காடு, சுவாமிநாத சிவாசாரியார் - திருமங்கலக்குடி, கண்ணன் சிவாசாரியார் - திருநன்றியூர், தவமணி சிவாசாரியார் - மயிலாடுதுறை, இராமநாத சிவாசாரியார்  - திருச்சி, ஆனந்த சிவம் - காரைக்கால், நடராஜ சிவாசாரியார் - திருமருகல், சுரேஷ் சிவம் - திருவையாது, பரமேஸ்வர சிவம் - கபிலர் மலை, பிச்சை சிவாசாரியார் - பிள்ளையார்பட்டி, வேத புரீஸ்வரசிவம் - பெரம்பூர், டி.வைத்யநாத சிவம் (குமார்) - பெரம்பூர், செந்தில்நாத சிவம் - கூறைநாடு, சாம்பசிவம் - மயிலாடுதுறை, கைலாசநாத சிவம் - அம்பகரத்தூர், மணிகண்ட சிவம் - திருக்கடையூர், சுந்தர சிவம் - காரைக்கால், ராஜாபட்டர் - திருப்பரங்குன்றம், கார்த்திகேய சிவம் - திருப்பரங்குன்றம், கல்யாண சுந்தர சிவாசாரியார் - மயிலாடுதுறை, சங்கரசிவாசாரியார் - லண்டன்.


திருவாளர் டி.சி.எஸ். இராமசங்கு பாண்டியன்,
தூத்துக்குடி.

  

    இவ்வாண்டு மாசி மாதத்தில் மகாசிவராத்திரி 16-02-2007 அன்று நிகழுவதாகத் திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கத்திலும் சென்னை வாசன் திருக்கணித பஞ்சாங்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அன்று அந்த இரு பஞ்சாங்கங்களிலும் இரவு மணி 12 அளவில் சதுர்த்தசி முடிந்து அமாவாசை ஆரம்பமாகின்றது.

    அதுபற்றி 1914 ஆம் ஆண்டு வெளிப்பட்ட "வைதீக சைவ மஹா சிவராத்திரி நிருணயம்" என்ற நூலில் கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.  அந்நூலின் ஆசிரியர்கள் திருநெல்வேலி ஆகமவித்வான் சின்னாண்டி தீட்சிதரும் மேற்படியூர் தில்லை நாயக தேசிகரும் ஆவார்கள்.

    (1). திரயோதசி சம்பந்தமன்னியில் கேவலம் அமாவாஸ்யையுடன் கூடின சதர்த்தசியானது பாபத்தைக் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது.  வாதுளாகமத்தில் அமா சம்பந்தத்தோடு கூடிய சதுர்த்தசியில் சிவார்ச்சனைச் செய்யக்கூடாது.  கவனியாமல் செய்தால் கர்மநாசத்திற்கு ஏதுவாகும்.

    (2). காமிகாமத்தில் திரயோதசியோடு கூடிய சதுர்த்தசியைத் தள்ளி அமாவாஸ்யையோடு கூடிய சதுர்த்தசியைப் பூஜா விஷயத்தில் உபயோகப் படுத்துவார்களாகில் அந்த ராத்திரியானது ஜனங்களுக்குப் பயத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் ராஜனுக்கு ஸ்தான சலனத்தை உண்டு பண்ணக்கூடியதாகவும் இருக்கின்றது.

    (3) மகா நிசையிலிருக்கிற திரயோதசியோடு கூடின சதுர்த்தசியானது உத்தம சிவராத்திரி அமையோடு கூடின சதுர்த்தசி சிவராத்திரிக்கு யோக்கிய முள்ளதல்ல.  அதில் சிவனைப் பூஜித்தால் பிராணஹானியைச் செய்யும்.  ராத்திரி நாலாவது யாமத்தில் சதுர்த்தசியானது மத்தியம் சிவராத்திரி பூஜைக்கு யோக்கியமானது.  சிவசாயுஜ்யத்தைக் கொடுக்கத் தக்கது.  அதை விட்டு அமையோடு கூடின சதுர்த்தசியில் பூஜித்தால் ரெளரவ நரகத்தை அடைகிறான்.

    (4). யோகஜாகமத்தில் அமாவாஸ்யையோடு கூடின சதுர்த்தசியானது பிரேதத்திற்குச் சமானம்.  சதுர்த்தசி சம்பூர்ணமாயும் சுவல்ப அமாவாசையோடும் கூடினதாயும் இருக்கிறதோ அந்த ராத்திரியில் நித்திரை விழித்தால் பிரம்மஹத்திக்குச் சமம்.

      (5), லளிதாகமத்தில் திரயோதசியானது அம்பிகை வடிவமாகவும் சதுர்த்தசியானது சிவரூபமாகவும் இருக்கின்றது.  அந்தத் திரயோதசி சதுர்த்திசிகளுடைய சேர்கையானது புண்ணியமான சிவயோகமென்று சொல்லப்பட்டிருக்கிறது.

    (6).  வாதுளாகமத்தில் ஏகுமாரா சூரியோதயம் முதல் ராத்திரி இருபத்தொன்பது நாழிகைப் பரியந்தம் திர்யோதசியும் அப்பால் ஒரு நாழிகை சதுர்த்தசியும் எந்த தினத்தில் ஏற்படுகின்றதோ அந்த ராத்திரிதான் சிவ ராத்திரியாகும்.  அந்த தினத்திலேயே சிவனை அர்ச்சிக்க வேண்டும்.

    (7).  அந்த ஏழுவித சிவராத்திரிகளுக்குள்ளே முதலாவதான மகா நிசையில் வியாபித்த திரயோதசியோடு கூடின சதுர்த்தசியானது உத்தமோத்தமையான உமாசிவராத்திரி, அதில் பூஜிக்கத்தக்கது.

    (8). சுயாம்புவாகமத்தில் மகா நிசையின் விசேஷம் சொல்லப்பட்டிருக்கிறது.  ராத்திரி பதினைந்து நாழிகைக்கு மேல் பதினேழரை நாழிகை வரையில் மகா நிசை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    (9).  மகுடாகமத்தில் எக்காலத்தில் ஜோதிஷத்திற்கும் ஆகமத்திற்கும் விரோதம் ஏற்படுகிறதோ அந்தக் காலத்தில் ஜோதிஷத்தையே தள்ளி ஆகமத்தையே அனுஷ்டிக்க வேண்டும்.  பூஜைக்கு எந்த சாஸ்திரம் உபயோகமாயிருக்கிறதோ அந்த சாஸதிரமே எல்லா விஷயத்திலும் பிரதானமாயிருக்கிறது.

    (10). சிந்திய விசுவஸாதாக்கியத்தில் பிரதிஷ்டை, சம்புரோஷணம், தீக்கை,  சிவராத்திரி, சிவோத்ஸவம் இவைகளெல்லாம் ஸெளரமானத்தில் செய்ய வேண்டும் சாந்திரமானத்தில் கூடாது.

    எனவே மேற்கண்ட வற்றால் 15-02-2007 வியாழக்கிழமையே எல்லாக் கோவில்களிலும் தனிப்பட்ட முறைகளிலும் சிவராத்திரி கொண்டாடுவதே சிவபெருமானின் திருவருளைப் பெற உகந்ததால் அன்றே கொண்டாடும்படி வேண்டுகிறேன்.

   

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1