உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

மறைவழக்கமிலாதமாபாவிகள்
பறிதலைக்கையர்பாயுடுப்பார்களை
முறியவாதுசெய்த்திருவுள்ளமே
மறியுலாங்கையின்மாமழுவாளனே
ஞானநின்புகழேமிகவேண்டுந்தென்
ஆலவாயிலுறையுமெம்மாதியே

-திருஞானசம்பந்தர்

திரு.மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு

தாம் 14-03-07 தேதியிட்டு சென்னை அரனருள் நிறுவனர் மற்றும் செயலர் திரு.சாமி தண்டபாணி கவனத்திற்கு எழுதிய கடிதமும், அதனைத் தொடர்ந்து தருமையாதீனம் 26வது குருமகாசந்நிதானம் அவர்களுக்கு எழுதியுள்ள புன்சொல்லும் காணும்படி நேர்ந்த தீவினைக்கு வருந்துகிறோம்.

    அது தொடர்பாகத் தமக்கு சில வினாக்களும்; விளக்கமும் இதன்மூலம் வைக்கிறோம்.

வினாக்கள்:

1) அறுவகைச் சமயத்துள் தாம் எச்சமயத்தைச் சார்ந்துள்ளீர்.

2) உம் போன்றோர் வேள்வி செய்யலாம் என்ற விதி எந்த நூலில் உள்ளது?

3) தாம் செய்யும் வேள்கிக்குரிய செய்முறை நூல் எது?

4) தமக்கு ஆச்சாரியர் யார்? அவர் அப்படிச் செய்தாரா? அல்லது பொய்ச் சொன்னாரா? ஆட்சி, ஆவணம், சாட்சி உண்டா?

5) பன்னிரு திருமுறை, பதினான்குசாத்திரம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய சைவ நூல்கள் வேதாமகத்தை ஏற்றுள்ளதா? ஒதுக்கியுள்ளதா?

6) சைவ சமயாச்சாரியர்கள் சந்தானாச்சாரியர்கள் யாரேனும் வேதாகமத்துக்குப் புறம்பாகக் கிரியைகள் ஏதேனும் செய்ததுண்டா?

7) திருவள்ளுவர் கூறும் அந்தணர் நூல் எது? அவர் சொல்லும் "ஒத்து" என்பது எது?

 

விளக்கம்:

அ.  ஆச்சாரியரை வேதம் சொல்லி வரவேற்றதை தவறென்று சுட்டியுள்ளீர்.  திருஞானசம்பந்தப்பெருமானைத் தலங்கள் தோறும் வரவேற்ற நிகழ்வுகளிலெல்லாம் வேதம் முழங்க வரவேற்றார்கள் என்றுதான் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

    தில்லையில் திருஞானசம்பந்தர் வரவேற்கப்பட்டதைக் கூறும் பெரியபுராணப் பாடல்.

    "வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்து ஓங்க
    சீதவாச நீர் நிறைகுடம் தீபங்கள் திசைஎலாம் நிறைந்து ஆரச்
    சோதிமாமணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக்
    கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு கொடுபுக்கார்"

என்று தானே சேக்கிழார் மொழிகிறார்.  இதில் தவறு ஏது?

ஆ.  "தமிழ் வழிபாட்டிற்கு ஆதரவாக தற்போது தமிழக அரசு தோற்றுவிக்கும் பயிற்சிப் பள்ளிகளுக்கு எதிராகக் கருத்துக்களை எடுத்துவிட்டதும்" என்று தாம் எழுதியிருப்பது தவறானதும் உள்நோக்கம் கொண்டதுமாகும்.

இ.     சடங்குகளுக்கு திருமுறைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் அருளியதை "திருமுறைகளில் சடங்கு ஆற்றுவதற்கு உரிய மந்திர ஆற்றல் இல்லையென்று" அவர்கள் சொன்னதாகக் கூறுவதும் தவறானதும் உள்நோக்கம் கொண்டதுமாகும்.

ஈ.  "கர்மத்தை செய் பலனை எதிர்பார்க்காதே" என்பது கீதவாக்கியம் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற திருமுறைத்தொடரில் கடமையும் உரிமையும் குறிக்கப்படுகிறது என்று அருளியதை "சித்தாந்த நூல்களைக் காட்டிலும் கீதையே மிக உயர்ந்த நூல்" என்று குருமகாசந்நிதானம் சொன்னதாகக் கண்டிருப்பதும் தவறானதும், உள்நோக்கம் கொண்டதும், விஷமத்தனமானதுமாகும்.

உ.  "திருமுறைகள் ஓதாய்' என்ற குருமகாசம்பந்தரின் வாக்கிற்கிணங்க அவர்கள் திருமுறைகளை ஓதியும், ஓதுவித்தும் வருகிறார்கள்.

    இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயன் விளைக்கக்கூடிய திருமுறைகளை (ஞானநூல்கள்) கிரியைகளுக்குப் பயன்படுத்தாதீர்கள். அது திருமுறைக்குப் பெருமை சேர்ப்பதாகாது.  திருமுறைகளுக்கு ஊடகங்கள் தேவையில்லை என்பதே அவர்கள் கருத்து.

    ஆச்சாரியனுக்கு எழுதியுள்ள தமது எழுத்துக்கள் தமது பண்பைக் காட்டுவதாக உள்ளது.

    சமண சாக்கியர்கள் போல் "குருஞானசம்பந்தரை" வாதுக்கழைத்துள்ளீர் அதனை ஏற்பதே முறை.

    எனவே நீரும் உம்முடன் மூவரும் தருமைக்கு வாருங்கள். முன்னிலையாக மூன்று குருமகாசந்நிதானங்கள் இருக்கட்டும்.  தருமையாதீனம் புலவர்கள், அடியார்கள் நால்வர்கள் இருப்பார்கள்.

    தாம் தோற்றால், தாம் செய்யும் இத்தொழிலை விட்டுவிட வேண்டும்.  தாம் வென்றால் தாம் செய்யும் தொழில் சரியானது என்று அறிக்கையை நாங்களே வெளியிடுகிறோம்.

    ஒருக்கால் அதற்கு முன்னதாகத் தமக்கு, தாம் எழுதியது தவறென்று தெரிந்தால் தாம் வந்து, குருமகாசந்நிதானத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தெளிவும் பெறலாம்.

    இரண்டும் செய்யாவிட்டால் தம் எழுத்துக்கு தம்மீது நீதிமன்றத்தில் மானநட்ட வழக்குத் தொடரவும்; தாம் செய்யும் செயல்களுக்கு நீதிமன்றம் மூலம் தடை பெறவும் இதையே அறிக்கையாகக் கொள்ளவும்.

திருச்சிற்றம்பலம்

ஆகமத்தொடுமந்திரங்கள்மைந்த சங்கதபங்கமாப்
பாகதத்தொடிரைத்துரைத்தசனங்கள் வெட்குறுபக்கமா
மாகதக்கரிபோற்றிரிந்துபுரிந்துநின்றுணுமாசுதேர்
ஆகதர்க்கெளியேனலேன்றிருவாலவாயரனிற்கவே.

-திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்

 

தருமபுரம்                                                      இப்படிக்கு

29-03-2007                                                    புலவர் மு.குஞ்சிதபாதம்

                                                             மே/பா எம்.வேதையன்
                                                                   தருமபுரம்.

  

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ ல்லாம"

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1