சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


திருநெல்வேலி ஜில்லா, சேரன்மாதேவி தாலுகா போர்டு பிரஸிடெண்டு அவர்களும், திருநெல்வேலி ஜில்லா டிஸ்திரி கட்டுபோர்டு மெம்பரவர்களும், ஜில்லா Educational Board மெம்பர் அவர்களும், சிவதேவஸ்தான கமிட்டிமெம்பர் அவர்களும், டிஸ்டிரிகட் கோர்டுவக்கீல் அவர்களும் "சிவஞான போதம் உபந்நியாச" மாதிய நூல்களின் ஆசிரியரவர்களும், பல சைவ சபைகளில் தலைமைபூண்டும், சொற்பொழிவு நிகழ்த்தியும் வருபவர்களுமான அம்பாசமுத்திரம்.

ஸ்ரீமத்.V.P.காந்திமதிநாத பிள்ளையவர்கள் B.A.

எழுதியது


  இவ்வாராய்ச்சிக்கு இலக்காய் நிற்கும் "திருநான்மறை விளக்கம்" செந்தமிழ்ச் செல்வி 1-வது சிலம்பின் பல இதழ்களில் வெளிவந்துள்ளது.  இவ்வியாசத்திற் சில புதிய கொள்கைகள் காணப்படுகின்றன.  வடமொழி மறைகள் சைவ மறைகள் அல்லவென்றும், வடமொழி ஆகமங்கள் சைவ முதல் நூல்கள் அல்லவென்றும், இம்மறைகட்கும் ஆகமங்கட்கும் வேறாய்த் தமிழ் மறைகளும், தமிழ் ஆகமங்களும் பண்டைக் காலத்தில் இருந்தனவென்றும், இத்தமிழ்மறைகளும் தமிழ் ஆகமங்களும் இருந்தன வென்பதைத் தேவார திருவாசக முதலிய சைவத்திருமுறைகளும், புறநானூறு, தொல் காப்பியம் முதலிய பண்டைத் தமிழ்நூல்களும் விளக்குகின்றனவென்றும், இவைபோல்வன பிறவும், இத்திருநான்மறை விளக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.  இவ்வடமொழி மறைகட்கும் வடமொழி ஆகமங்கட்கும் வேறாய்த் தமிழ்மறைகளும் தமிழ் ஆகமங்களும் இருந்தன வென்பதில், எவர்க்கும் எவ்வித வருத்தமுமில்லை.  இதனால் வடமொழி மறைகட்கேனும் வடமொழி ஆகமங்கட்கேனும் எவ்வித இழுக்கும் ஏற்படக் காரணமில்லை.  அப்படியே சைவர் அனைவராலும் போற்றப்பட்டு வரும் சைவத் திருமுறைகட்கு வேறாய்த் தமிழ் மறைகள் இருந்தன வென்பதிலும் எவர்க்கும் எவ்வித வருத்தமுமில்லை.  பண்டைக்காலத்திலும் தமிழ் மறைகள் இருந்தன வென்பது தமிழ் மக்கட்குப் பெரும்சிறப்பே.  ஆனால் "மறை" "வேதம்" என்னும் சொற்கள் இப்போதுள்ள வடமொழி மறையையாவது தமிழ் மறையையாவது குறிக்காது, பண்டைக் காலத்தில் இருந்து மறைந்து போனதாகச் சொல்லப்படும் தமிழ் மறையையே குறிக்கு மென்றும், பண்டைத் தமிழ்நூல்களிலும் நம்சைவத் திருமுறைகளிலும் வழிங்கப்படும் இச் சொற்களும் இப்பண்டைத் தமிழ் மறையையே குறிக்கு மென்றும், இந் நான்மறை விளக்க வியாசத்திற் கண்டிருப்பதே, சைவமக்கட்கும் தமிழ் மக்கட்கும் மிக வருத்தத்தை உண்டாக்கியது.  இவ்வியாசத்தில் சைவத்திருமுறைகள் மறைகள் அல்ல வென்று கழிக்கப்படவில்லையாயினும், இத்திருமுறைகளிற் காணப்படும் "மறை" "வேதம்" என்னும் சொற்கள் பண்டைத் தமிழ்மறையையே குறிக்குமென்பதால், இப்போதுள்ள வடமொழிமறைகள் மாத்திரமன்றி நம் சைவத் தமிழ்த் திருமுறைகளுமே, மறைகளகா என்பது, இவ்வியாசத்தின் கருத்தாய் முடிகிறது.  இக்கருத்தைப் பற்றிய ஆராய்ச்சி சைவ மக்கட்கும் தமிழ் மக்கட்கும் அவசியம் வேண்டற் பாலது.  இவ்வாராய்ச்சியையே இந்நூல் முக்கியமாய் மேற் கொண்டுள்ளது.

    2.  இத்தகைய ஆராய்ச்சி நூல் வெளிவருவதை விரும்பி நின்றவர்களில் நானும் ஒருவன்.  இவ்வாராய்ச்சியை நானே செய்ய நினைத்தது முண்டு, ஆனால் இவ்வாராய்ச்சிக்கு வேண்டிய பண்டை நூற் பயிற்சியும் காலவசதியும் எனக்கில்லையேயென்று மலைந்தேன், என்றாலும் இயன்றவரை இவ்வாராய்ச்சியிற் றலையிடலானேன்.  இவ்வாராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட வியாசத்தில் பல திருமுறைப் பாசுரங்களும் பண்டைநூற் பாடல்களூம் ஆராய்ச்சி செய்யப்பட்டிருந்தாலும், இப்பாசுரங்களேனும் பாடல்களேனும் முழுமையும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை.  இவ்விவற்றிற்கு முன் பின்னுள்ள பாசுரங்கள் பாடல்களும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை.  இவ்விவற்றின் ஓரோர்பகுதி மாத்திரம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.  இத்தகைய ஆராய்ச்சி சரியான முடிவுகளைத் தருமா? என்று சந்தேகிக்கலானேன்.  இதுவுமன்றி இப்பாசுரப் பகுதிகளும் பாடற் பகுதிகளுமே இவ்வியாசத்திற் கட்டிய முடிபுகளை ஆதரியாமலிருப்பதோடு, அம்முடிபுகட்கு மாறாகவு மிருப்பன போல் எனக்குத் தோன்றியது.  என்றாலும், வியாச ஆசிரியர் சிறந்த கல்வியாளரென்பதைப் பாராட்டி, அவ்வியாச முடிபுகளைப்பற்றிய என் கருத்துக்களைப் பல ஐயப்பாடுகளாகத் திரட்டினேன்.  அவற்றின் பெரும்பகுதி, எனது நண்பர் ஒருவர்மூலம், செந்தமிழ்ச் செல்வியில் வெளியாகும்படி வியாச ஆசிரியருக்கு அனுப்பப்படாது. இதுவரை இவ்வையப்பாடுகளும் வெளிவரவில்லை.  அவற்றிற்கு விடைகளும் வெளிவரவில்லை.  இவ்வையப்பாடுகளே இவ்வாராய்ச்சி நூலில் 209-வது பக்கத்தில் குறிக்கப்பட்டிருப்பன.  இதனிடையில், இவ்வாராய்ச்சியின் 29-வது பக்கத்தில் சொல்லியபடி "காது பொத்தரை" என்று தொடங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரப் பாசுரத்திற்கு வியாச ஆசிரியர் கொண்ட பொருளைப்பற்றிய என் அபிப்பிரயத்தை இவ்வாராய்ச்சி  ஆசிரியர் திருவாளர் மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் கேட்டார்கள்.  இதுகாரணமாயும், பின்னர் இவ்வாசிரியரை நேரிற்கண்டு உரையாடியதன் மூலமாயும், இவர்கள் இந்நான்மறை விளக்க வியாசத்தை ஆராய்ச்சி செய்து வருகிறார்களென்று தெரிந்தேன், தெரிந்தும் என் பாலுண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை.  இவர்பாலுள்ள சைவப்பற்றையும் தமிழ்பற்றையும்  நான் எவர் பாலும் கண்டதில்லை, இவர்பாலுள்ள ஊக்கத்தை நான் எத்துணை இளையோரிடத்தும் கண்டதில்லை.  இவர்பாலுள்ள சைவக்கல்வியும் தமிழ்க் கல்வியும் எவரையும் கவரத்தக்கது.  இவரே, இவ்வாராய்ச்சிக்கு தகுதியுடையாரென்றும், இவராலேயே வியாச முடிவுகளைப் பற்றிய எவ்வித ஐயப்பாடுகளும் தீரலாகு மென்றும், துணிந்தேன்.  இவரது ஆராய்ச்சி நூல்விரைவில் வெளிவருமென்றும் துணியலானேன்.

    3.  நான் துணிந்தபடி "திருநான்மறைவிளக்க ஆராய்ச்சி" என்னும் இந்நூல் விரைவில் வெளிவரலாயிற்று.  நான் திரட்டி யெழுதிய ஐயப்பாடுகள் யாவுமே என்னை விட்டு நீங்கின.  வியாசத்தில் எடுத்தெழுதப்பட்ட திருமுறைப் பாசுரங்களிற் பல, தப்புப் பாடங்களென்று இவ்வாராய்ச்சியில் நிறுவப்பட்டிருக்கின்றன.  சில பாசுரங்கட்கு வியாசத்திற் கூறப்பட்டுள்ள பொருள்கள் தப்பென்றும் முன்னோடு பின் முரண் என்றும் காட்டப்பட்டிருக்கின்றன.  சில பாசுரங்கட்கு வியாசத்திற் கூறிய பொருள்கள் அப் பாசுர ஆசிரியர்கள் கருத்துக்கு மாறென்று, அவ்வாசிரியர்கள் அருளிய வேறு பாசுரங்கள் மூலம் விளக்கப்பட்டு மிருக்கின்றன.  இவையன்றி இவ்வியாசத்திற் கண்ட பண்டை நூற் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும், இத்தகைய பிழைகள் மலிந்துள்ளன வென்றும் காட்டப் பட்டிருக்கின்றன.  தமிழ் மறைகளும் தமிழ் ஆகமங்களும் பண்டைக் காலத்திலிருந்து மறைந்தனவென்பதை, நம் சைவத் திருமுறைகளும் பண்டைத் தமிழ் நூல்களும் சிறிதும் ஆதரிக்கவில்லை யென்று, பசுமரத்தாணிபோல் இவ் வாராய்ச்சியில் தாபிக்கப்பட்டு மிருக்கின்றது.  இச்சைவத் திருமுறைகளும் பண்டை நூற் பாடல்களும் "வேதம்" "மறை" என்று கூறுவதெல்லாம் வடமொழி வேதங்களையே என்று நன்கு உணர்த்தப்பட்டு மிருக்கின்றது.  இதுவுமன்றி நமது சைவத்திற்குத் தமிழ்மொழி வடமொழி என்னும் இருமொழிகளும், மக்கட்கு இரு கண்கள் போல் நிலவி நமக்கு வேண்டிய ஞானங்கள் அனைத்தையும் உதவுகின்றன என்றும், இவ்வாராய்ச்சியில் வெள்ளிடை மலைபோல் விளக்கப்பட்டு மிருக்கின்றன.

    4. இவ்வாராய்ச்சிநூல் நல்ல சமயத்தில் வெளிவந்ததென்று சொல்லலாம்.  இக்காலத்தில் அரசியல் முறையில், சமுதாயச் சச்சரவுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.  இச்சச்சரவுக்கும் நமது சைவசமயத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.  இச்சச்சாவை நம் சமயத்திற்குள் நுழைத்தற்கு எவ்வித காரணமில்லை.  வடமொழி எந்தச் சமுதாயத்தார்க்கும் சொந்த மொழியன்று எந்தச் சமுதாயத்தாருடைய பேச்சுப் பழக்கத்திலும் எந்தக் காலத்திலும் இருந்திருப்பதில்லை.  நமது இந்திய நாட்டிலுள்ள எல்லாச் சமுதாயங்கட்கும் இது பொதுமொழி யென்பதை இவ்விரு மொழிகளிலுமுள்ள இலக்கண இலக்கிய நூல்கள் வலியுறுத்தி உணர்த்துகின்றன.  பண்டைக் காலத்தொட்டு இந்நாள்வரை இவ்வடமொழி எல்லாச் சமுதாயத்தார்களின் ஆட்சியிலு மிருந்து வருகின்றது.  நமது சைவ நிலையங்களாகிய ஆலயங்களிலும் ஆதீனங்களிலும் இற்றை நாள்வரை ஆட்சி செலுத்திவருகின்றது.  நமது தமிழ்மக்களின் அனுட்டானம், பூஜை, சமயச் சடங்குகள் முதலிய அனைத்திலும் கையாடப்பட்டு வருகின்றது.  இதனை ஒதுக்குவதெப்படி? நமது ஆலய ஆதீன பூஜை உபதேசம் முதலியவைகளைத் தமிழ்ப் பூஜை முதலியனவாக மாற்றலாமா? அன்றி அந்நிலையங்களை அறவே விட்டு வேறுநிலையங்களை உண்டாக்கலாமா? நமது அனுட்டானம் பூஜை முதலியவைகளை ஒழித்துவிடலாமா? அன்றி, புதிய தமிழ் அனுட்டான முதலியவைகளை உண்டாக்கலாமா? இத்தனை சங்கடங்கட்கும் காரணம் வடமொழி நம் மொழியன்று, வேறு சமுதாயத்தார்மொழி, என்பதன் றோ? இக் கொள்கைக்கு ஆதரவு என்னை என்பதை வியாச ஆசிரியரும் விளக்கினாரில்லை.  சரித்திர ஆராய்ச்சியாற் போதரும் என்றல் மாத்திரம் போதுமா? ஹர்ஷகவி என்னும் வடமொழியாசிரியரும், சேனாவரையர் முதலிய தமிழ் இலக்கண ஆசிரியரும், வடமொழியைப் பொதுமொழி யென்றல் சரித்திர ஆராய்ச்சியில் இடந்தராதா? ஆகவே வடமொழி வேறு சமுதாயத்தார் மொழிஎன்ற பொருந்தாக் கொள்கையைச் சைவநன் மக்களும் தமிழ் நன்மக்களும் அறவே ஒழித்துவிட வேண்டுமன்றோ? இக்கருத்து என்று நம்நாட்டில் நிலைபெறுமோ, அன்றே நம்மொழியும் சமயமும் நாடும் முன்னேற்ற மடையும், நாமும் முன்னேற்றமடைவோம்.  இக்கருத்தே இவ்வாராய்ச்சி நூலின் முக்கிய நோக்கமாய்க் காணப்படுகின்றது.

    5.  இது நிற்க, நம் சைவத் திருமுறைகளையும் தமிழ் மறைகளல்ல வென்று சைவ மக்களாவது தமிழ் மக்களாவது கழிப்பா ரென்று நான் கனவிலும் நினைத்ததில்லை.  இத்திரு முறைகளே, நம் திருக்கோவில் களில் நிகழும் எவ்வித வழிபாடுகளிலும் ஒதப்பட்டு வருகின்றன.  இவைகளே நம் சைவ சாத்திரங்கட்கு முதல் நூல்களாய் அவற்றின் உயர்தரக் கருத்துக்கள் அனைத்தையும் நிரம்பப் பெற்றுள்ளன.  இவைகள் மறைகளல்ல வென்றால் நம்திருக்கோவில்களில் ஓதுவதற்குறிய மறைகள் யாவை?  இன்றேல் நம்திருக் கோவில்கள் யாவும் வடமொழியாளர் கோவில் களாகமாறி விடுமன்றோ? இதுவன்றி நம்சைவ சாத்திரங்கட்கு முதல் நூல்களாய்க் கொள்ளக் கிடக்கும் தமிழ்மறைகள் தாம்யாவை? இன்றேல் நம்சைவ சாத்திரங்கள் முதல்நூல்களாய்க் கொள்ளக் கிடக்கும் தமிழ்மறைகள் தாம்யாவை? இன்றேல் நம்சைவ சாத்திரங்கள் முதனூலாதரவற்ற னவாய் முடியுமன்றோ?  எனவே, நம்தமிழ் மொழிக்குப் பண்டைமறை வேண்டுமென்று தேடுதல், இப்போதுள்ள தமிழ் மறையையும் இழந்து விடுவதாக வன்றோ முடிகின்றது.  இது வன்றி இச்சைவத் திருமுறையா சிரியர்களாகிய நம் சமய குரவர்களும், தத்தம் காலவர்த்தாமானங்களை அனுசரித்து, ஒரோர் இடங்களில் வடமொழி மறைகளையும் உண்மை மறைகளாய்க் கூறுகிறார் என்றல், இச்சைவகுரவர்கட்கு மாத்திரமன்றி நம் சைவ சமயத்திற்குமே இழுக்காய் முடியுமன்றோ? இத்தகைய இழுக்குகள் நம் சமயத்திற்கும் சமய நிலையங்கட்கும் நேராவண்ணம் பாதுகாப்பது சைவமக்கள் தமிழ் மக்களின் கடமையன்றோ? இக்கடமையைத் தீர்த்தற் பொருட்டே இவ்வாராய்ச்சி ஆசிரியர், தமது முதுமை முதலிய பல இடையூறுகளையும் பாராட்டாது, மிகுந்த முயற்சிகள் செய்து இந்நூலை வெளியிட்டுள்ளார்.

    6.  இத்துணைச் சிறப்புவாய்ந்த இந்நூல் வடமொழியாளர் தமிழ்மொழியாளர் ஆகிய இருமொழியாளரும் படிக்கத்தக்கது.  சைவத் திருமுறைகளாகிய தமிழ்மறைகளில், பல இடங்களிலும் புகழ்ந்து போற்றப்படுவன வடமொழி மறைகளேயெனத் தமிழ்மொழியாளந் தெரிந்துகொள்வர்.  வடமொழிமறைகளில் மறைந்துகிடக்கும் உயர்தரக் கருத்துக்களனைத்தையும் வெளியிட்டுவிளக்குவன தமிழ்மறைகளே யென வடமொழியாளரும் தெரிந்துகொள்வர்.  இரு மொழிகட்கும் கண்ணுதலார் முதற்குரவர் என்று திராவிடபாடியகர்த்தர் திருவாய் மலர்ந்தருளிய உண்மையை இந்நூல் நன்குவிளக்குகின்றது.  இனி நம்நாட்டில் வடமொழி உயரியது தமிழ்மொழி உயரியது என்னும் மொழிச்சச்சரவுக்கு இடமில்லையென்பதை இந்நூல் தெள்ளிதின் உணர்த்துகிள்றது.  இந்நூலை சைவ மக்களும் தமிழ்மக்களும் படித்து இதனாற்றரப்படும் பலன்களைப் பெற்று, உய்யும்படி அவர்களை வேண்டுகிறேன்.  இந்நூல் இயற்றிய ஆசிரியரும், மேலும் சிலகாலம் இவ்வுலகிலிருந்து இதுபோலொத்த பேருபகாரங்களைச் செய்யும்படித்திருவருளையும் பிரார்த்திக்கின்றேன்.


Hosted by www.Geocities.ws

1