சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணத்துக் கந்தவனக் கோயிலர்ச்சகரும், சைவப் பிரசாரகரும், புராணிகரும், தமிழ் சமஸ்கிருத பாஷா வல்லுநரும், ஆன்மார்த்த பரார்த்தங்களை மந்திரங் கிரியா பாவனைகள் வழுவாது செய்தலில் அதிசமர்த்தரும் மகா வித்துவானுமாகிய

பிரமஸ்ரீ கனகசபாபதி குருக்களவர்கள்

அபிப்பிராயம் இது:-


  கல்வி யறிவொழுக்கங்களா னுயர்ந்த நன்மக்களாயினோர் யாதானுமோர் விஷயத்தை யெடுத்துத் தாபிக்கப் புகுங்கால் அஃது பண்டைநூன் மரபிற்கும் வழக்கியன் மரபிற்கும் ஒத்ததா! அன்றா! எனப் பூர்வ பராமரிசஞ் செய்து தாபிக்கக் கூடும் பரிசதேல் அதிற் றலையிடுதல் நியாயமேயாம்.  அஃதற்றாக, ஸ்ரீமாந் வேதாசலமவர்கள் திருவாசகத்தில் "மூவாநான்மறை முதல்வா போற்றி" என்னும் அடியிலுள்ள "மூவாநான்மறை"ச் சொற்றொடர் தொல்காப்பியம், இறையனாரகப் பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞான போதம் என்னும் நூல்களைக் குறிக்கு மென்றும், வடமொழி நான்கு வேதங்களையும் குறியாதென்றும் தம் உளம் போனவாறு ஒரு நவீன கற்பனையை வெளியிட்டனர்.

    அக்காலையில் அக்கற்பனைக்கோளை, ஆராய்ச்சிவல்ல ஆசிரியர் ஸ்ரீமத்.சாம்பசிவபிள்ளையவர்கள் நியாய வாற்றலாற் கண்டித்துவிட்டனர், பிறருங் கண்டித்தனர்.

    இக்காலையில் ஸ்ரீமாந்.  சுப்பிரமணியபிள்ளையவர்கள் "திருநான்மறைவிளக்கம்" என்னும் முகநாமத்துடன் "செந்தமிழ்ச் செல்வி" என்னும் பத்திரிகை வாயிலாகப் பகிரங்கப்படுத்திய விஷயத்தை நோக்கும்வழி முற்றும் அபூதகற்பனையாகவே யிருக்கின்றது.  அவர் நான்மறையாவன வேறு தமிழ் நூல்கள் என்றும், அவை முதற்சங்கத் திறுதியிலுண்டான கடல்கோளில் ஆண்டுள்ள ஏனையநூல்களோடு இறந்துபோயின என்றும், நமது சைவாசாரியர்களது திருவுளக் கருத்தும் அதுவே என்றும் கட்டுரைத்தனர்.  "ஒப்பிலியநாதிமுத்த னோதியவேத" நிலைமையினை இங்ஙனம் முறைபிறழ்த்தத்துணிந்த துணிவே துணிவு.

    இன்னும் கல்லாலடியில் நால்வர்க்கு இறைவன் வேதமாதியவற்றையும், அவற்றின்பொருளையும் உபதேசித்தருளினான் என்னும் உண்மை நூற் றுணிபையும் மறுத்தனர்.

    பின்னும் சாமவேதமென்று தமிழ்மறையில் வருமிடங்களிலெல்லாம் வடமொழிச் சாமவேதமென்று பொருள்கொள்ளாது இன்னிசைப்பாடலென்று பொருள் கொள்ளவேண்டுமென்றும் சிவபிரானுக்குத் தமிழிலேயே மிக்க விருப்பமென்றும் உரைத்தனர்.

    இன்னோ ரன்ன வியைபிலாக் கற்பனை
    பன்னினர்; பற்பல பண்டித ரானோர்
    பார்த்து நகைசெயும் பரிசவே; யவற்றை
    ஈர்த்தொரோ வொன்றா வியைந்த நூற் காட்டொடு
    மளக்குங் கருவிகொண் டழகுற நுனித்து
    விளக்கமா யாய்ந்து மெய்மை தெரித்துக்
    கண்டன மியற்றிக் கற்றோர் மற்றோர்
    அண்டா மகிழ்கொள வவனியில் விடுத்த
    அருஞ்செய லாளரா மான்றநூற் கேள்வியோர்
    பெருங்கரு ணாநிதி பேணுசாம் பசிவ
    பிள்ளையென் றியாவரும் பேசுநா மத்தினர்
    பிள்ளையம் மதியினன் பேதமி லருளால்
    நன்றே வாழுக, நன்றியிங் கிதனை
    என்று மறவா திதயத் திருத்தி
    நனிபா ராட்டி நான்மறை விளக்கம்
    நுனிமதி யாய்விலர் நுவன்ற கற்பனையா
    உரையவ் வியாத்தியோ டோரதி வியாத்தி
    புரையசம் பவமிவை பொதிந்ததா தலினப்
    பொய்ப் பொருள் கொளாமே பொருவக றொன்மை
    மெய்ப்பொருள் கொள்ளுதன் மேலவர் கடனே.


Hosted by www.Geocities.ws

1