சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


மதுரைத் தமிழ்ச்சங்கப் பரீக்ஷகரும், யாழ்ப்பாணச் செந்தமிழ்ச்சங்க அக்கிரசனாதிபதியும், சைவ பரிபாலன சபைத் தாபகரும், இந் துசாதனப் பத்திரிகையைப் பத்திராதிபராயிருந்து சில வருடங்கள் சைவ சமய வளர்ச்சிக்கு ஏதுவாக மிகச்சிறப்புற நடாத்தினவரும், கிறிஸ்துமதகண்டன சபைத் தலைவரும், யாவராயினும் சைவ சமய தூடணஞ் செய்யில் அவரை, நூல்வரம் பிசுவாது சலிப்பின்றி என்றும் கண்டனஞ் செய்பவரும், நல்லூர்க் கைலாச பிள்ளையார் கோயிற் றருமகர்த்தரும், சைவப் பிரசாரகரும் இந்துக் காலேஜ் உற்பத்திக்கு வித்தாயுள்ளவரும், தமிழ் சமச்கிருதம் இங்கிலீஷ் என்னும் முப்பாஷை விற்பனரும், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்கள் தமையனார் புதல்வரும், அவர்கள் மாணாக்கரும், அவர்களுடைய பல சைவப் பிரகாச வித்தியாசாலைத் தரும பரிபாலகரும் ஆகிய,

ஸ்ரீமத் கைலாச பிள்ளையவர்கள்  

இவ்வுரை கண்டார்


   தம் வாழ்நாள் முழுதும் சைவ தூஷண பரிகாரஞ் செய்த விற்றானே போக்கிச் சிவபுண்ணியத்திற் றலைப்பட்டுப் பரோபகாரத்திற் சிறந்தவரும், உண்மைச் சைவவித்துவான்களாலும் சாதுக்கள் பிறராலும் மிகமதிப்புற்று விளங்குகின்றவரும் பன்னூற் பயிற்சியின் நுண்ணறி வுடையவரும் ஆகிய ஸ்ரீமான் திரு.மா.சாம்பசிவம்பிள்ளையவர்கள் இற்றை நாளிற் றாமியற்றிய "திருநான்மறை விளக்க ஆராய்ச்சி" என்னும் அரியதொருநூலை வெளியிடுவதன்முன் மற்றைய சைவவித்துவான்களுடைய அபிப்பிராயங்களையும் அறிய விரும்பி அதிற்சில பிரதிகள் யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பியிருக்கின்றார்கள்.  எனக்குக் கிடைத்த பிரதியை முழுதும் கிரமமாக வாசிக்க எனக்குச் சமயங்கிடைக்கவில்லை.  வாசித்தபாகங்கள் ஒவ்வொன்றிலும் அவர்கள் எழுதப்பட்டவைகள்.  ஸ்ரீ வேதாசலம் பிள்ளை கொள்கையை மறுத்து யான் எழுதிய "தற்காலச்சமயநிலை இரண்டாம்பாகம்" "தென்றமிழ்த்தனிமாட்சி" முதலிய பத்திரிகைகளை நினைவுகூரச் செய்தன.  யான் ஒருவிடயத்திற்கு ஒரு பிரமாணங்காட்டியிருத்தல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கிற்று.  அதுநிற்க.

    ஸ்ரீ.வேதாசலம்பிள்ளை ஸ்ரீ.கா.சுப்பிரமணியபிள்ளை முதலிய சிலர் பிராமணர் மேற்கொண்ட பொறாமையினாலே ஏறக்குறையப் பதினைந்து வருஷகாலமாகப் புதுக்கொள்கைகளும் புதுஅருத்தங்களும் புதுத்திருத்தங்களும் கற்பிக்கின்றார்கள்.  அவற்றுட்சில மாதிரிக்காக இங்கே யெடுத்துக்காட்டுகின்றேன்.

    தொல்காப்பியருக்கு எங்களிலும்பார்க்க மிகச் சமீபகாலத்திருந்த இளம்பூரணர்முதலிய உரையாசிரியர்கள் சகலராலும் பிறவித்துவான்களாலும் விலக்கப்படாத தொல்காப்பியச் சூத்திரங்கள் பல தங்கள் புதுக்கொள்கைகளுக்கு விரோதமாயிருத்தல் கண்டு, அவைகளெல்லாம் பிற்காலத்தாரால் அந்நூலில் இடையிடையே செருகப்பட்டன வென்று இவர்கள் சொல்லுகிறார்கள்.  இவர்களுடைய கண்களுக்குத் தங்கள் கொள்கைக்கு மாறானவைகளெல்லாம் இடைச்செருகலாகவே தோன்றுவது வழக்கம்.

    இனி, திருக்குறளில் ருசா0-ம் பாட்டை "ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்" என்று உள்ளபடியே கொண்டு, பரிமேலழகர் மணக்குடவர் முதலிய உரையாசிரி யர்களெலாம், ஆ என்பது பசு, அறுதொழிலோர் என்பது அந்தணர் என்றும் உரை எழுதியிருப்ப, இவர்கள், ஆம்பயன் அபயனென்றாயிற்று என்றும், அறுதொழிலோர் என்பது அறிதொழிலோர் என இருக்கவேண்டும் என்றும், இப்படியே இன்னும் பலவாகத் தங்கள் மனம் போனபடி திருத்தங்கள் செய்கிறார்கள்.  அதுநிற்க.

    தமது பாண்டிநாடே ஆதிமனிதருக்கு உற்பத்தித்தானம் தமது நாட்டாரே ஆதி திராவிடர் என்று புகழுகிற சுப்பிரமணியபிள்ளை அந்தவகையினாலே ஆரியர்களும் தங்கள் வமிசத்தவராயிருக்க, ஆரியரென்ற பெயரைச் சொன்னாலும் வெருளுதற்கும் வெகுளுதற்கும் காரணம் என்னோ? யெகோவா சிருட்டித்த ஆதாம் ஏவாளுடைய வமிசத்தாரே ஆரியரென்று அந்த யேகோவாவினுடைய சிருட்டியை இவர் ஸ்திரப்படுத்துகிறார்கள் போலும்.

    தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம், திருவிசைப்பா, பதினொராந் திருமுறை, பெரிய புராணம், கந்த புராணம், சிவஞானசித்தியார், சிவதருகோத்தரம், ஒளவையாருடைய நூல்கள் முதலிய அளவிறந்த சைவ நூல்களும், தொல்காப்பியர், கொடுஞ்செங்கண்ணனார், வண்ணக்கஞ்சாத்தனார் முதலிய சங்கப்புலவர்களும் சொல்லிய மறை வேதம் என்னுஞ் சொற்கள் ஆரியத்திலுள்ள வேதத்தையே குறிக்கின்றன வென்பது நிச்சயம்.

    தென்னாட்டிலிருந்த சைவர், வைஷ்ணவர், சமணர், பெளத்தர், ஆகிய சகலரும் தமிழர்களாகவும், தமிழில் வேதம் இருந்தது, அது கடலாற் கொள்ளப்பட்டுப் போயிற்று, தமிழ் ஆரியத்தினும் சிறந்தது, தமிழ் ஆரியத்தினும் முந்தியது என்னுங் கொள்கை அவர்களுக்கெல்லாம் இல்லாமற் போக, இந்நாட் சைவத்தமிழருள்ளே சிலருக்கு மாத்திரம் உண்டாயது பேராச்சரியமே.

    வைணவர்கள் ஸ்மார்த்தர்கள் மாத்துவர்கள் தங்கள் சமயங்களைத் தாபிக்க எடுத்தாளும் பிரமாணங்கள் ஆரியத்திலுள்ள வேதம் உபநிடதம் புராணம் இதிகாச முதலியனவே.  இன்றைக்கும் அவர்கள் பாராயணம் பண்ணுவது ஆரியத்திலுள்ள இராமாயணத்துச் சுந்தரகாண்டமே, கம்பர் தமது தமிழிராமாயணத்திற் பல விடங்களிலும் இராமருடைய பெயராக எடுத்துச் சொல்லும் "ஆரியன்" என்னுஞ் சொல்லை அவர்கள் அறிவுடையோன் என்னும் பொருளிலன்றி மிலேச்சன் என்னும் பொருளில் எடுக்கவில்லை.

    "மறையோர் செஞ்சொல் வேள்விப் புகையும்" என்றார் திருமங்கையாழ்வார்.

    "இன்னிய முழங்கி யார்ப்ப வீண்டெரி திகழ வேதந் துன்னினர் பலாசிற் செய்த துடுப்பினெய் சொரிந்து வேட்ப - மின்னியல் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான்" என்றார் சமணர் நூலாகிய சீவகசிந்தாமணி நூலுடையார்.  சைனருக்கு முக்கிய மந்திரமாகிய அஸ்தி நாஸ்தி என்பவைகளும் ஆரியச் சொற்களே யாகும்.

    "கற்பங் கைசந் தங்கா லெண்கண் - டெற்றெ னிருத்தஞ் செவிசிக் கைமூக்குற்ற வியாகர ணமுகம் பெற்றுச் - சார்பிற்றேன்றா வாரண வேதக் - காதியந்தமில்லை யதுவே நெறியெனும் - வேதிய னுரையின் விதியுங் கேட்டு"

    என்றார் பெளத்தநூலாகிய மணிமேகலை யென்னும் காவிய முடையார்.

    இப்படியே அவர்கள் நூல்களிலே பலப்பல வாக்கியங்கள் எடுத்துக் காட்டலாம்.  இங்கே சொல்லிய மறை வேதம் என்னுஞ் சொற்கள் தமிழ் வேதத்தை உணர்த்துமென்று இவர்கள் சொல்ல முடியுமா!

    ஸ்ரீவேதாசலம் பிள்ளை கொண்ட வேதமாகிய சிவஞான போதத்தில் "வேள்விப்புகை" "எரி" "பலாசிற் செய்த துடுப்பு" "நெய்" "கற்பம்" முதலியவைகளைக் கை முதலிய அங்கமாகக் கொண்ட "ஆரண வேதம்" என்பன எங்கேயாவது சொல்லப்படவில்லையே.

    ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளை வேதாசலம் பிள்ளைக்கு மாறுபட்டுச் சிவஞானபோத முதலியவற்றைத் தமிழ் வேதம் என்று கொள்ளாது, அது இவற்றிற்கு வேறாயுள்ளது; ஆழிவாயின் அகப்பட்டுவிட்டது என்கின்றார்.

    எனவே, இவ்விருவரும் கூறும் வேதங்கட்கும் வேறாய்க் கற்ப முதலிய அங்கங்களைக் கை முதலிய அவயவங்களாகக் கொண்டு ஆழிவாய்ப் பட்டழியாமல் இன்று நின்று நிலவும் ஆரிய வேதமே மேலே எடுத்துக் காட்டிய திருவாய் மொழி சீவகசிந்தாமணி மணிமேகலை என்னும் நூல்களிற் கூறப்பட்ட தென்பது பார்ப்பார்க்கும் கேட்பார்க்கும் சொல்வார்க்கும் பட்டப்பகல்போல வெட்டவெளியாகும்.

    வேள்விகள் ஆரியர்க்கே உரியன; ஏனையோர்களுக்கு அல்ல என்று சொல்லும் இவர்கள், பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னே, வைஷ்ணவர் சமணர் பெளத்தர் என்னும் சமயத்தோர் ஏனையோர்க்கும் உரியன என்று கூறியிருக்குங் கூற்றுக்களுக்கு யாது சொல்வர்?

    இனி, வைஷ்ணவர் முதலியோர் காரியம் இவ்வாறிருக்க சைவத் தமிழருள்ளே யாழ்ப்பாணத்தார் ஒருவர், "நீரிறையே யுண்க" "நெருப்பிறையே யுண்க" என்பன முதலிய தமிழ் மந்திரங்கள் இப்பொழுது உண்டாக்குகின்றாரென அறிகிறேன்.  இம் மந்திரங்களைத்தான் முன்னிருந்த ஆரியர்கள் "வருணாய சுவாகா" "அக்நயேசுவாகா" என்பனவாக மொழிபெயர்த்துக் கொண்டார்கள் என்றும், இதுபோலவே ஆதிதொடங்கித் தமிழிலிருந்த மறையை ஆரியத்தில் மொழிபெயர்த்துக் கொண்டார்கள் என்றும் மற்றை வருஷம் இப்புதுக் கட்சியார் சொல்லப் போகிறார்கள்.  எச்சரிக்கை, இவர்களுடைய கொள்கைகளைப் பேரறிவாளர் பொருட் படுத்தார்கள் என்பது நிச்சயம்.

    மகா வித்துவானும் சுத்தாத்துவித சைவ சித்தாந்தியும் சைவ தூஷண நிராகரண திலகருமாகிய ஸ்ரீமத் திரு.மா.சாம்பசிவ பிள்ளையவர்கள், ஸ்ரீ வேதாசலம் பிள்ளை, ஸ்ரீ கா.சுப்பிரமணிய பிள்ளை முதலானவர்களுடைய கொள்கைகளைப் பழைய உண்மை நூல்களையே வழியாகக் கொண்டு கண்டித்தியற்றிய "திருநான்மறைவிளக்க ஆராய்ச்சி" என்னும் இந்தச் சிறந்த நூலானது சைவத் தமிழ் மக்களெல்லாரும் பழைய நூற் கொள்கையிலே மிக்க விசுவாசத்தைத் தரவல்லதாகலால் அவர் கடந் தலைமேற்கொள்ளத் தக்கதொரு ஞானாபரண நூலாகும்.

    இத்தகைய பெருமை வாய்ந்ததொரு அரிய நூலை இயற்றித் தமிழ் மக்கள் உண்மை அறிந்து உய்யச் செய்த ஞானதான வள்ளலாகிய ஆக்கியோருக்குச் சைவர் செய்யுங் கைமாறு கண்டிலன், எனது குல தெய்வமாகிய கைலாச பிள்ளையார், அவர்கட்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து இதுபோலும் பல நன்னூல்களை இயற்றுவித்துச் சைவ சமயிகட்கு நன்மை செய்யும்படி அனுதினம் அவர் மலரடியை எனது சிரமலராகச் சூடித் தியானிக்கின்றேன்.   


Hosted by www.Geocities.ws

1