உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

காலாந்தகர்

  "தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன்
  வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்தகாலன்
  பாடுதான் சொல்ல அஞ்சிப் பாதமே சரணம் என்னச்
  சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே"

                                          - திருந甶வுக்கரசர்

    கவுசிக முனிவரின் புதல்வராக விளங்கிய மிருகண்டு முனிவர் தம்மனைவி மருத்துவதியோடு இல்லறம் இயற்றிவரும் நாளில், ஆண்மகவு வேண்டி அருந்தவம் இயற்றிட அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயனுக்கு வயது பதினாறு என்பது பிரமன் வகுத்த கணக்கு! மார்க்கண்டேயன் மனம் சிவபெருமானைப் பற்றியிருந்தது.  நாளும் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.  வயது பதினாறு அடைந்தார்.  மார்க்கண்டேயனைக் கவர்ந்து செல்ல யமன் வந்துவிட்டான்.  அப்போது மார்க்கண்டேயனைக் கவர்ந்து செல்ல யமன் வந்துவிட்டான்.  அப்போது மார்க்கண்டேயன் சிவபூஜை செய்து கொண்டிருந்தார்.  யமனைக் கண்ட அவர் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டுவிட்டார்.  யமன் விடுவதாயில்லை சிவலிங்கத்துடன் மார்க்கண்டேயனையும் சேர்த்து பாசக்கயிற்றால் இழுத்தான்.  சிவபெருமான் தோன்றினார்.  காலனை உதைத்தார்.  காலன் வீழ்ந்தான்.  மார்க்கண்டேயன் "என்றும் பதினாறு" என்னும் பெருவரம் பெற்றுய்ந்தார்.

 "காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சன்
 படக்கடைக் கணித்தவன் அல்லாய்
 பேய் மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
 தொண்டனேன், பெரும்பற்றப் புலியூர்ச்
 சேமநற்றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட
 செல்வச்சிற்றம் பலக் கூத்த!
 பூமலர் அடிக்கீழ்ப் புராண பூதங்கள்
 பொறுப்பர் என் புன்சொலின் பொருளே"

மன்மதனை, யமனை, தக்கனை, தவ வலிமைமிக்க எச்சனை அழியும்படி செய்து பின்பு அவர்களுக்குத் திருவருள் பாலித்தவனாகிய சிவபெருமானே உன்னை அல்லாத பேய்த்தன்மை உடையவர்களை மனத்தினாலும் நினைக்காமல் நீங்கி நின்ற தவத்தினால் மேம்பட்ட சிவத்தொண்டர்களுக்குத் தொண்டனாகிய என்னை, பெரும்பற்றப்புலியூராகிய காவல் பொருந்திய நல்ல தில்லைப்பதியைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அங்கே ஆட்கொண்ட திருவருட்செல்வம் நிறைந்த சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே!

எனது அற்புதமான துதிச் சொற்களின் பொருளை உனது அழகிய தாமரை மலர் போன்ற திருவடியின் கீழ் உள்ள பழைமையான பூதகணங்கள் பொறுத்தருளுவர் அன்றோ? என்று திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா பாடலில் பரவுகின்றார்.

    தாயுமான அடிகள் மார்க்கண்டேயன் வரலாற்றைக் குறிப்பிடும் போது இனி அன்பர்கள் மரணத்தைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும் என்று தெளிவுறுத்துகிறார்.

"மார்க்கண்டர்காக அன்று மறவிபட்ட பாட்டை உன்னிப்
பார்க்கில் அன்பர்க்கு என்ன பயங்காண் பராபரமே!"

    காலகாலமூர்த்தியாகச் சிவபெருமான் அருள்புரிந்த தலம் தஞ்சை மாவட்டம் - மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள திருக்கடவூர் சிவத்தலம் ஆகும்.  இது மிகவும் தொன்மையான தலம்.  ஊழிக்காலத்தையும் கடந்து விளங்கும் தலமாதலின் அது கடவூர்.  அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான அங்கே, காலசம்ஹார மூர்த்தியின் அற்புதத் திருவுருவம் நமக்கு மரணத்தில் இருந்து காப்பளிக்கின்றது.

    அம்சுமத் பேதாகமத்தில் காலசம்ஹார மூர்த்தியின் வடிவம் விளக்கப்பட்டுள்ளது.  இவ்வடிவில் பெருமான் மூன்று கண்களும் நான்கு அல்லது எட்டுத் திருக்கரங்களும், பக்கப்பற்களும் கொண்டு திகழ்கிறார்.  எட்டுத்திருக்கரங்கள் இருப்பின், வலக்கரங்கள் நான்கிலும் முறையே சூலம், பரசு, வஜ்ஜிரம், கட்கமும், இடக்கரங்கள் இரண்டிலும் கேடகமும் பாசமும் கொண்டு திகழ்வார்.  எஞ்சிய இரு இடக்கரங்களும் விஸ்மய, சூசி முத்திரைகளைக் காட்டும், அனைத்து அணிகலன்களையும் பூண்டு விளங்கும் இம்மூர்த்தி பவளச்செம்மேனியுடையராய் விளங்குவார்.

    இயமன் அச்சத்துடன் நடுங்கி நிற்கிறான்.  இடக்கரங்களுடன் பக்கப்பற்கள் தெரியுமாறு கரண்ட மகுடத்துடன் அவன் விளங்குகிறான்.  அவனது ஒருகரத்தில் பாசத்துடன் இருகரங்களையும் கூப்பி இறைவன் கருணைக்கு ஏங்கி வணங்கி நிற்கிறான்.

    காமிகாகமத்தின்படி, சிவபெருமானுடைய இடது பாதம் யமனை உதைப்பதாகவும், வலது பாதம் பூமியில் ஊன்றியதாகவும் அமைந்திருக்கும்.  அவரது இருவலக்கரங்களிலும் சூலமும் பரசும் விளங்கும்.  ஒரு இடக்கரம் நாகபாசம் கொண்டதாயும் மற்றொரு இடக்கரம் சூசிஹஸ்தமாயும் அமைந்திருக்கும்.  சிவபெருமானுடைய சூலம் யமனது கழுத்தில் குத்திச்செல்வதாக அமைந்திருக்கும்.  யமன் மயங்கிக் கீழே விழுந்து கிடப்பான்.  மார்க்கண்டேயர் வழிபடும் இலிங்கத்தினின்றும் பெருமான் தோன்றுவதாகவும் இம்மூர்த்தி அமைந்திருக்கலாம்.  இவ்வடிவில் இலிங்கமும் சிவபெருமான் வடிவமும் இலிங்கோற்பவ மூர்த்தி அமைப்பில் இருக்கும்.  சிவலிங்கத்தின் அருகே மார்க்கண்டேயர் பூசை புரிந்து கொண்டிருப்பர்.

    திருமுறைகள் காலகாலனைப் பலவாறு துதிக்கின்றன.  திருஞானசம்பந்தர் "மாணிதன்னுயிர் மதித்துணவந்த அக்காலனை உதை செய்தார்" எனப் போற்றுவார்.  சுந்தரரோ, "அந்தணாளன் உன் அடைக்கலம் புகுந்த அவனைக் காப்பது காரணமாக, வந்த காலந்தன் ஆருயிரதனை வவ்வினாய்" எனப் போற்றுகிறார்.  "காலனைக் காய்ந்த செய்ய காலனார்" எனச் சேக்கிழார் போற்றுகிறார்.

    உயிர்களுக்கெல்லாம் அந்தகனாம் யமனுக்கும் ஒரு அந்தகனாகத் திகழ்கிறார் சிவபெருமான், அவர் காலாந்தகர், காலாரி, காலசம்ஹாரமூர்த்தி என்றெல்லாம் போற்றப் பெறுகிறார்.  இக்கோலம் அடியவர்களுக்காக எதையும் செய்யவல்ல சிவபெருமானது பராக்கிரமத்தை விளக்கிக் காட்டுகின்றது.  காலனிடமிருந்து நம்மைக் காப்பவராகக் காலகாலமூர்த்தி திகழ்கிறார். 

   
 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1