உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

ஜலந்தரவதர்

"இருகூறாகச் சலந்தரனை இறுத்து மாட்டி அவ்வடிவம்
 அருகே தோன்றச் சுதரிசனம் அங்கைத் தலத்தின் மிசைஏந்தி
 முருகார் கடுக்கைத் தண்ணறும் பூந்தொடையல் வாகை முடிவிளங்கத்
திருவார் காட்சி யளித்தருளும் தேவர் கோமான் திருவுருவம்"

                                             - காஞ்ச男ப் புராணம்

    தேவர்களாயினும் அகந்தை மேலிடும்போது அல்லலுக்கு ஆளாகி, உழன்றுப் பின் இறைவனருளால் இடர்நீங்கப் பெறுவர் என்பதற்கு நமது புராணங்களில் பல வரலாறுகள் உண்டு.  இறைவன் அருளில்லையேல் யாராயிருந்தாலும் இன்பமுடன் வாழ இயலாது.

"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது" என்று திருக்குறள் புகட்டும் தத்துவமும் அது தான்.  சிவபெருமான் ஒருவரே பிறப்பு இறப்பு இல்லா பேரருளாளர் அவரை வணங்கினால் தான் முக்தி கிடைக்கும்..

    ஒரு நாள் தேவேந்திரன் கயிலைக்குச் சென்றான்.  அவனுக்கு அறிவு புகட்டச் சிவபெருமான் வடிவு மாறி எதிரே நின்றார்.  அவரை நோக்கி 'நீ யார்?' என இந்திரன் வினவினான்.  அவர் பதிலேதும் கூறவில்லை.  வெகுண்டான் இந்திரன்; தன் வச்சிராயுதத்தால் அவரைத் தாக்கினான்.  அது பொடியாக உதிர்ந்தது.  உடனே சிவபெருமான் ஓர் உருத்திரர் வடிவாக நின்றார்.  இந்திரன் வணங்கித்தன் பிழை பொறுத்தருள வேண்டினான்.  ஆனால் உருத்திரன் வடிவில் ஏற்பட்ட வியர்வையிலிருந்து ஒருவன் தோன்றினான்; கடலரசன் அவனை வளர்த்தான்.  அவனுக்கு ஜலந்தரன் என்று பெயர்.  அவன் அசுரர்களோடு சேர்ந்து ஆற்றல் மிகுந்து விளங்கினான். காலநேமி என்பவனுடைய மகளான பிருந்தையை மணந்து தருக்குமிக்குச் செருக்கோடு வாழ்ந்தான்.  மேருமலையிலிருந்த தேவர்களோடு 'போரிட முனைந்த ஜலந்தரனோடு திருமால் இருபதினாயிரம் ஆண்டுகள் எதிர்த்துப் போரிட்டும் அவனை வெல்ல முடியவில்லை.  ஜலந்தரன் அடுத்து கயிலை சென்றான்.  இந்திரன் அங்கே ஒளிந்திருந்தான்.  கயிலைக்குப் போரிடச் செல்ல வேண்டாம் எனப் பிருந்தை தடுத்தாள்.  ஜலந்தரன் அவள் சொற்குச் செவி சாய்க்கவில்லை.  இந்திரன் தன்னைக் காத்தருளுமாறு கயிலை நாதனைத் துதிக்க, அவரும் அவனுக்கு அபயம் அளித்தருளினார்.  கயிலையை அவரும் அவனுக்கு அபயம் அளித்தருளினார்.  கயிலயை அடைந்த ஜலந்தரன், முன்னால் வயது முதிர்ந்த முனிவர் ஒருவர் தென்பட்டார்.  அவர் ஜலந்தரனை நோக்கி, "நீ யார்?" என வினவ, அவனும் 'நான் ஜலந்தரன், சமுத்திரராஜன் மகன், சிவபெருமானுடன் போரிட வந்தேன்' என்று இறுமாப்புடன் பதிலளித்தான்.  முனிவர் நகைத்து, "கண்ணுதற் கடவுளோடு போரிடக் கருதினால் கணத்தில் உயிர் இழப்பாய் உயிர் பிழைக்க வேண்டில் உடனே திரும்பி ஓடிவிடு" என்றார்.  ஜலந்தரன், 'என் ஆற்றலை விரைவில் நீர் காண்பீர்' என, முனிவரும் தன் பாதத்தால் தரையில் ஒரு சக்கரம் போல கீறி, இவ்வலையத்தைச் சிரமேல் ஏற்றுத் தாங்குவாயோ? என்றார்.  உடனே ஜலந்தரன் "இது ஒரு பெரிய செயலோ" என நகைத்து அதனைத் தன் இரு கைகளாலும் எடுத்து மார்பிலும் புயத்திலும் தாங்கிச் சிரத்தின்மேல் வைத்துக் கொள்ள அச்சக்கரம் அவனை இருபிளவாகப் பிளந்துவிட்டு, மீண்டும் முனிவர் வடிவிலிருந்த சிவபெருமான் கரத்தினன அடைந்தது.  சிவபெருமான் விழித்தீயினால் அவனது சேனையும் சாம்பராயிற்று.  இந்திரனும் தேவர்களும் சிவபெருமானைத் துதித்துப் போற்றினர்.

    தமிழில், கந்தபுராணம், ஜலந்தரவதம் குறித்துக் கூறுவதைக் கேளுங்கள்.  ஜலந்தரனது வரம்பிலாற்றலையும் அவன் செய்த இடையூறுகளையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார் கச்சியப்பசிவாசாரியர்.

"புங்கவர் யாரையும் புரங்கண்டேன் வரு
கங்கையை யடைத்தனன் கார்கொள் வேலையில்
அங்கியை அவித்தனன் அரியை வென்றனன்
இங்கிது தாங்குவ தரியதோ என"

ஜலந்தரன் சக்கரத்தை எடுக்கிறான்.

"புரத்தழல் கொளுவியோன் பொறித்த நேமியைக்
கரத்திடை எடுத்தனன் கணங்கொண் டெய்தலின்
உரத்திடைப் புயத்திடை உயிர்த்துத் தாங்கியே
சிரத்திடை வைத்தனன் தேவர் ஆர்க்கவே"

"செழுஞ்சுடர்ப் பரிதியைச் சென்னி கோடலால்
ஒழிந்திடு சலந்தரன் உச்சியே முதற்
கிழிந்தது முழுதுடல் கிளர்ந்து சோரிநீர்
இழிந்தது புவிதனில் இழுமென் னோசையால்"

    ஜலந்தரனை அழித்த வடிவமே ஜலந்தரவதமூர்த்தி, சலந்தராரி, ஜலந்தரஹரமூர்த்தி என்றெல்லாம் போற்றப் பெறுகிறார்.

    ஸ்ரீதத்துவநிதி இம்மூர்த்தியின் வடிவத்தை விவரிக்கின்றது.  செம்மேனியுடையவராய், உக்கிரமான முக்கண்ணும் இருகரங்களும் கொண்டு இவர் விளங்குகிறார்.  வலக்கரத்தில் ஒரு குடையையும் இடக்கரத்தில் ஒரு கமண்டலத்தையும் இவர் ஏந்தியிருப்பார்.  குண்டலம், ஹாரம், தண்டை, பாதுகைகளையும் இவர் தரித்திருப்பார்.  இவருக்கு முன்னே ஜலந்தரன் மஞ்சள் நிறமுடையவனாய், தனது இரு கரங்களையும் கூப்பி நிற்பான்.  அவனது கைகளின் நடுவே சுதரிசனம் தெரியும்.  அரையிலே வாள் தொங்கும்.

    ஜலந்தரனைச் சிவபெருமான் வதைத்த திருத்தலமாக விற்குடி வீரட்டம் விளங்குகின்றது.  தஞ்சை மாவட்டம் திருவாரூர் வட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  இத்தலம் பிருந்தை மயானம் எனவும் அழைக்கப்படும்.

    திருமுறைகளில் சலந்தரவதம் போற்றப்படுகின்றது.

"சலந்தரன் உடலந்தடிந்த சக்கரம் எனக்கு
அருளென்று அன்று அரிவழிபட்டு"

என்று திருஞான சம்பந்தரும்.

"சமரமிகு சலந்தரன் போர் வேண்டினானச்
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர்"

"கற்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆதி
கருமானுக் கருள் செய்த கருணையான்"

என்று திருநாவுக்கரசரும்.

"சலமுடைய சலந்தரந்தன் உடல்தடிந்த நல்லாழி"

என மாணிக்கவாசகரும போற்றுகின்றனர்.

    சலந்தரனைக் கொன்ற சுதரிசனமே சிவபெருமானால் திருமாலுக்கு அளிக்கப்பெற்றது.

"சக்கரம் மாற்கு ஈந்தானும்
    சலந்தரனைப் பிளந்தானும்
அக்கு அரைமேல் அசைத்தானும்
    அடைந்து அயிரா வதம் பனிய
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும்
    வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும்
    முக்கண்உடை இறையவனே"


 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1