உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

கங்காளர்

"குறளா யணுகி மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்
 திறவான் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை
இறவேச வட்டி வெரி நெலும்பை யெழிற் கங்காளப்படையென்ன
அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்கணாணன் திருவுருவம்"

                                                          - காஞ்ச男ப்புராணம்.

    திருமால், வாமனவடிவேற்று, மாவலிபால் சென்று மூவடி மண் கேட்டுப் பெற்று, ஈரடியால் மூவுலகும் அளந்து, மூன்றாவது அடியால் மாவலியைக் கீழுலகிற்கு அனுப்பிய திரிவிக்கிரம வடிவங் கொண்டார்.  அதன்பின் அவர் உலகையும் அழிக்கத் தொடங்கினார்.  வாமனனது உக்கிரத்தைத் தணிக்க வேண்டித் தேவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.  சிவபெருமானும் உலகைக் காத்தற் பொருட்டு, வஜ்ஜிராயுதங் கொண்டு வாமனன் மார்பில் அடிக்க, வாமனன் இறந்து வீழ்ந்தார்.

    வாமனனது கங்காளத்தை (முதுகெலும்பை) எடுத்துத் தனது தண்டாகச் சிவபெருமான் வைத்துக் கொண்ட வடிவமே கங்காளமூர்த்தி என அழைக்கப்படுகிறது.  உபதேச காண்டத்தில் கங்காளர் வரலாறு கூறப்படுகிறது.

"பற்றினன் வயிரத்தண்டம் பகிரண்டம் அதிர ஓச்சிச்
சுற்றினன் உருமுக்காலத் தொழித்தனன் துளவமார்பின்
எற்றினன் எற்றலோடும் எரிபடு சண்டவாயு
முற்றுற விற்றுவீழு மூவெங்கிரியிற் சாய்ந்தான்"

"கருநிறக் கமஞ்சூன் மேகக் காரதள் உரித்து வாங்கித்
திருநிறத் தமையக் காளகஞ்சுக மென்னச் சேர்த்தி
வெரிநுறப் பிடுங்கு மென்புதண்டென வெடுத்துக்கொண்டான்
மருமலர்த் துளவ மாயோன் ஆணவ மயக்கந் தீர்ந்தான்"

    ஆணவம் போக்கிய அரனாரின் அருளாடலைக் காட்டுவது கங்காள மூர்த்தியாகும்.

    அம்சுமத் பேதாகமம், காமிகாமம், காரணாகமம், சில்பரத்தினம் போன்ற நூல்களில் கங்காளமூர்த்தி திருவுருவம் காட்டப்படுகின்றது.

    கங்காளமூர்த்தி நின்ற கோலத்தில் இருப்பார்.  அவரது இடக்கால் பூமியில் நன்கு ஊன்றியிருக்கும்; வலக்கால் சற்றே வளைந்து அவர் நடந்து செல்வதைக் காட்டும்.  ஊமத்தை மலர், சர்ப்பம், பிறை ஆகியவற்றைச் சூடிய ஜடாமகுடம் புனைந்திருப்பார். மகிழ்ச்சி நிறைந்த முகத்தினராய், இனிய பாடல்களை இசைத்துக் கொண்டு, புன்முறுவல் பூத்து அவர் திகழ்வார்.  அவரது முத்துப் போன்ற பற்கள் பாதி தெரியுமாறு வாய் அமைந்திருக்கும்.  இரு காதுகளிலும் சாதாரண குண்டலங்கள் அல்லது வலக்காதில் மகரகுண்டலமும், இடக்காதில் சங்கபத்திரமும் அணிந்திருப்பார். நான்கு கரங்கள் இவர் கொண்டிருப்பார்.  முன் வலக்கரம் பாணத்தையும், முன் இடக்கரம் உடுக்கையும் ஏந்தியிருக்கும். பின் வலக்கரம் நீண்டு வளர்ப்புப் பிராணியான மானின் வாய்க்கருகே கடக ஹஸ்தமாயிருக்கும். பின் இடக்கரத்தில் கங்காளதண்டம் ஏந்தியிருப்பார்.  அதில் இறந்தோரது எலும்புகள் கட்டப்பட்டிருக்கும்.  மயில் இறகாலும் கொடியாலும் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  படுக்கை வாட்டில் இக்கங்காள தண்டமானது இடது தோளில் வைத்து, அதன் ஒரு முனையைப் பின் இடக்கையில் பற்றி இருப்பார்.  அரையில் கச்சமும், அதில தங்கத்தாலமைந்த ஒரு சிறுவாள் வெள்ளிப் பிடியுடன் தொங்குமாறு விளங்கும்.  திருவடியில் மரப் பாதுகைகளை அணிந்திருப்பார்.  உடலெங்கும் பாம்பு அணிகலன்களாகத் திகழும்.  அவரைச் சுற்றிலும் எண்ணற்ற பூதகணங்களும் பெண்டிரும் ஆடியும் பாடியும் கூடியிருப்பர்.  ஒரு பூதம் பெரிய பாத்திரம் ஒன்றைத் தனது தலைமீது வைத்துக் கொண்டு இடப்பக்கம் நிற்கும்.  பிச்சை ஏற்கும் உணவு வகைகளைச் சேமித்து வைக்கவே அப்பாத்திரத்தை அப்பூதம் சுமந்து நிற்கும்.  கங்காளமூர்த்தியிடம் கொண்ட காமத்தால் பெண்டிர் ஆடைநெகிழ நிற்பர்.  எண்ணற்ற முனிவர், தேவர், கந்தருவர், சித்தர், வித்தியாதரர் ஆகியோர் இவரைச் சுற்றி நின்று கைகுவித்து அஞ்சலி செய்து கொண்டிருப்பர்.  இவருக்கு முன்னால் வாயு தெருவைச் சுத்தம் செய்வார்; வருணன் நீர் தெளிப்பார்; பிறதேவர்கள் மலர் தூவிப் போற்றுவர்; முனிவர்கள் வேதம் ஓதுவர்; சூரியனும், சந்திரனும் குடைபிடிப்பர்; நாரதரும் தும்புருவும் தம் இசைக் கருவிகளுடன் பெருமானுக்கு உகந்த பாடல்களைப் பாடுவர்.

    கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயில் என்னும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் கங்காளமூர்த்தி திருவுருவம் மேற்குறித்த அமைப்பில் சிறப்பாகத் தனி சந்நிதியாக அமைந்துள்ளது.  சுசீந்திரம், தென்காசி, திருச்செங்காட்டங்குடி, தாராசுரம் கோயில்களில் விளங்கும் கங்காளமூர்த்தி வடிவங்கள் சிறப்புடையன.

    திருமுறைகளில் கங்காளமூர்த்தி குறிப்பிடப் பெறுகிறார் வள்ளல் கையது மேவுகங்காளமே என்று திருஞானசம்பந்தரும், கங்காள வேடக்கருத்தர் என்று திருநாவுக்கரசரும், கங்காளம் தோள் மேலே காதலித்தான் என்று மணிவாசகரும் பரவுகின்றனர்.

"கங்காளர் கயிலாய மலையாளர்
    கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
    விடையாளர் பயிலும் கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
    இறகுலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல்
    இரைதேரும் திருவையாறே"

    அப்போது விஷ்ணுவும் ஆகா! துஷ்டர்களுக்கு அபயம் கொடுத்தால் உலகங்கட்குப் பீடையல்லவா என்று அவர்களுக்கு அபயம் கொடுத்த அப்பிருகு பத்தினியின் தலையைத் துண்டித்து, பின்னர் அந்த அசுரர்களையும் சமுகரித்துவிட்டுப் போனார்.

    பிருகுமாமுனிவர் அங்குவந்து தனது மனைவியும் அசுரர்களும் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டார்.  இச்செயலைச் செய்தது விஷ்ணுதான் என்று ஞானதிருட்டியால் அறிந்தார்.  அசுரர்களோடு கூடத் தம் மனைவியையும் கொன்றவரான அவ்விஷ்ணு மீது மிகுதியாய்ச் சினம் கொண்டார்.  உடன் அவரைச் சபித்தார்.

    ஓகோ! இவ்விஷ்ணுவுக்குப் பூவுலகில் கோடி கோடிகளான பிறவிகள் உண்டாகி அந்த ஒவ்வொரு பிறவியிலும் மகா துக்கத்தையளிக்கலுற்ற தமது பெண்டிரை இழத்தல் நேரக்கடவது.

    இவ்வாறு சபித்துவிட்டுப் பரமசிவனிடமிருந்து தாம் சித்திபெற்ற மிருதசஞ்சீவினி என்ற வித்தையால் தமது மனைவியை பிழைப்பித்து விட்டார்.  அதன் பின்னர் அசுரர்களைக் கண்டிப்பவரான திருமாலும் அதனைக் கேட்டு நடுநடுங்கியவராகி அப்பாவம் தொலைவதற்காகப் வேண்டியதை அளிக்கலுற்ற சிவத்தலமான காஞ்சீபுரத்துக்குச் சென்று அங்குத் தேவாதி தேவரை பூசித்ததன் மேல் சிவபெருமான் இடபவாகன ரூடராய் தோன்றினார்.  திருமால் மிக்க பயத்தோடு வணங்கித் தமது சாபம் தீரும் வழியை வேண்டினார்.

    அவ்வமயம் திருமால் பிரமன் யாவருக்கும் அதிபரான பரமசிவன் திருமாலே! நமது அடியார்களால் இடப்பட்ட சாபத்திற்கு அவர்களாலேயே பிரதிசாபம் கொடுக்கத் தக்கதேயன்றி, நாம் பரிகாரம் கொடுப்பது இல்லை என்று நம்மால் சபதம் செய்யப்பட்டிருக்கிறது என்று திருமாலை நோக்கி, மந்த காசத்தோடு மேலும் திருவாக்கருளியதாவது:

    பிருகுமா முனிவரே! இவ்விஷ்ணுவை பல கோடி பிறவிகளைக் கொடுக்கலுற்ற உமது சாபத்தினின்று நீர் விடுதலை செய்விக்க வேண்டும்.  ஏனென்றால் இவரும் நம்மைப் பூஜிப்பதில் அக்கறைகொண்ட நமது ஓர் அடியவரென்றே அறியும்.  ஆயினும் இவருக்குப் பத்துப் பிறவிகள் உண்டாகி அவைகளில் ஒரு பிறவியில் மாத்திரம் இவர் பெண்டிரை விட்டுப் பிரிந்து நீண்டகால மளவும் துக்கமடைந்திருக்கலாகட்டும்.  இன்றி இதற்கு மேல் வேண்டாம்.  நீர் நம் அடியார்கட் கெல்லாம் முதல்வராகையால் நமது ஆக்கினையின்படி இவ்வாறே செய்யலாவீர் என்றார்.  முனிவரும் உடனே அவரை வணங்கி அப்படியே பாக்கியம் என்றார்.  அப்போது உடனே இலக்குமி வேந்தனும் பார்வதி நாதனைத் தண்டனிட்டு வேண்டிக் கொண்டதாவது.

    கருணைக்கடலும் அடியாருக்கு அன்பருமான தேவதேவேசா! பத்து பிறவிகளிலும் அடியேனுடைய அஞ்ஞானம் தொலைவதற்காகத் தேவரீர் நிக்கிரகானுக்கிரகங்களைச் செய்தருள வேண்டும் என்றார். அது கேட்டு இறைவரும் அப்படியே நல்லதென்றருளி மறைந்து அருளினார்.  திருமாலும் தமது இருப்பிடம் அடைந்தனர்.

   

 

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1