சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


ஸ்ரீ மாணிக்க வாசகர் அல்லது "நீத்தார் பெருமை", "திருபுக்கொளியூர் அவிநாசிக் கருணாம்பிகையம்மை பிள்ளைத்தமிழ்" ஆகிய நூல்களின் ஆசிரியரும், சைவ அவைக்கழகங்களினும் மற்றும் பொதுவிடங்களினும், உண்மைச்சைவ நெறியினையும், சிவத்தொண்டர் பெருமையினையும் சொற்பொழிவு செய்யும் சைவப்பெரியாரும் சென்னை சர்வகலாசங்கத்தின் அங்கத்தினரும் ஆகிய கோயமுத்தூர்

ஸ்ரீமத்.C.K..சுப்பிரமணியமுதலியாரவர்கள் B.A. F.M.U.,

எழுதியது


   சைவத் திருவாளர் திரு.மா.சாம்பசிவம்பிள்ளையவர்கள் எழுதிய "திருநான்மறைவிளக்க ஆராய்ச்சி" என்னும் கட்டுரையைப் பார்த்தேன்.  சைவத் திருமுறைகளிலும் மற்றும் ஆன்றோர் வாக்குகளிலும் "நான்மறை" என்றதொடர் பலகாலும் பயின்றுவருதல் காணப்பெறுகின்றது.  அச்சொற்றொடர்க்குப் பொருளாவது வடமொழியில் இப்போது வேதம் என வழங்கப்படுவனதாம் என்பது தொன்றுதொட்டுப் பயின்று வருவதாகும்.  அதனை அன்றெனக் காட்டப் புகுந்து தமிழில் நான்மறைகள் இருந்தன; அவை பின்னர் அழிவுற்றன என்றதொருகொள்கையை நிறுவச் சைவத்திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் "செந்தமிழ்ச் செல்வி"யில் "திருநான்மறை விளக்க" மெனப் பெயரிட்டு ஒரு கட்டுரை யெழுதினார்கள்.  இக்கட்டுரையி னெழுந்தவாதங்களைப் பல ஆதாரங்கள் காட்டி மறுத்துப் பழய கொள்கையை வலியுறுத்த எழுந்தது திருவாளர் சாம்பசிவம்பிள்ளையவர்களது இவ்வாராய்ச்சியாகும்.

    திருவாளர் சுப்பிரமணியபிள்ளையவர்கள் சுட்டிய முடிபுகள் பலர்க்கும் உடன்பாடாவன அல்லனவாய் நின்றன.  திருமூலர் முதற்சிவஞான முனிவர்வரைப் பல பெரியாரும் தமிழ் நான்மறை யென யாண்டும் சுட்டக்காண் கின்றிலம்.  அதுவே யன்றி "இன்றமிழ்மறைதந்தார்"; "வேதந் தமிழால் விரிக்தார்" என்றற்றொடக்கத்த திருமுறைத் திருவாக்குகள் தமிழ்நான் மறைக்கு மாறுபடுவனவாய்க் காணப்படுகின்றன.  ஆதலின் அது இன்னும் ஆராய்ச்சிக்கு இடனாய் நிற்கின்றது.

    திருவாளர் கா.சுப்பிரமணியபிள்ளையவர்களுக்குத் தமிழின்கணுள்ள ஆர்வம் மிகவியக்கத்தக்கது.  பண்டைக் கொள்கைகளிலும் திருமுறையாதி திருவாக்குகளிலும் திரு.மா.சாம்பசிவம்பிள்ளையவர்கள் கொண்டுள்ள பற்றும் ஆர்வமும் அது காரணமாக வேறொருபற்றுமின்றி மிகத்தளர்ந்த மூப்பிலேயும் மேற்கொள்ளும் முயற்சியும் அதனினும்மிக்க அதிசயம் விளைத்துநின்றன.

    தொன்றுதொட்டு அடிப்பட்ட சான்றோரான் வழங்கப்பட்டுவந்த கொள்கையினை உறுதிப்படுத்தத் திரு.மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் எழுதிய இவ்வாராய்ச்சிபெரிதும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை.

சேக்கிழார் நிலயம், கோவை
அட்சய, சித்திரைத் திங்கள் 24-வது நாள்.


Hosted by www.Geocities.ws

1