சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


திருநெல்வேலி ஜில்லா இந்து காலேஜ் தமிழ்ப் போதகாரியரவர்களும், தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் கெளரவ உபந்யாசகரவர்களும், சுருதிசூக்திமாலையின் தமிழ் மொழிபெயர்ப்பு, சிவதத்துவவிவேகம், குமரகுருபர சுவாமிகள் பிரபந்த மிவற்றிற்கு அரும்பொருள்விளக்க உரை ஆசிரியரவர்களும் வடமொழிச் சுருதி சூக்திமாலையை உரையுடன் பரிசோதித்தர்களுமான

ஸ்ரீமத்.வி.சிதம்பரராமலிங்கம் பிள்ளையவர்கள் B.A.

எழுதியது


  இவ்வாராய்ச்சி நூல் வெளிவருதற்குக் காரணமாயிருந்தது திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் பிரசுரமாகும் செந்தமிழ்ச் செல்வி யென்னும் பத்திரிகையின் முதற் சிலம்பில் எழுதப்பட்டிருக்கும் திருநான்மறை விளக்கமென்னும் வியாசமாகும்.  அவ்வியாசம், பரம்பரையாசரணை ஆசாரியர்களது அருளுப்பாடு என்னுமிரண்டனுள் ஒன்றனையேனும் அடிப்படையாகக் கொண்டதாகவுமில்லை; உண்மையுணர்தலென்னும் நோக்கத்துடன் கெளரமாக எழுதப்பட்டதாகவுமில்லை; தற்காலங் காணப்படும் சமுதாய சச்சரவை முன்னிட்டு, அதற்கோர் அரணாகுமென கொண்டு சமயசாத்திரப் பிறழ்ச்சிசெய்துவிடல் வேண்டுமென்ற கருத்துப்பற்றி எழுந்ததாகக் காணப்படுகின்றது.

    இஃதிங்கனமாகவும் 'புதியன கண்ட போழ்துவிடுவதே புதுமை பார்ப்பார்' என்பதற்கிணங்கப் புதுமை பார்க்கும் சிலர் அவ்வியாசத்திற் காணப்படும் விஷயங்கள் பலவும் வாய்மையெனக் கொள்வாராயினர்.

        அவ்வியாசத்திலே பிரமாணங்களெல்லாம் உள்ளவாறு எழுதப்படாமல் திரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன; வேதவாராய்ச்சி சைவ பரம்பரை முறையிற் செய்யப்படாமல் புறச் சமயிகளையும் ஹூண பண்டிதர்களையும் பின்பற்றிச் செய்யப்பட்டிருக்கிறது.  வேதபாஷையாகிய ஆரியபாஷா ஞானமின்றி வேதத்தைக்குறித்துப் பலபல அவ்வியாசத்திற் கூறப்பட்டிருப்பது 'கல்லாத மேற்கொண்டொழுகல்' என்னும் பொய்யா மொழியை மெய்ப்படுத்துகின்றது.

    இதுகாறும் சைவசாத்திர வரிசையிலே நுழைதற்கு இடம் பெறாது பஞ்சம நிலையிலே நிற்கும் சித்தர் நூல் அவ்வியாசத்தில் அக்கிரஸ்தானம் பெற்றுவிட்டது.

    சாதாரண சைவப் பொதுசமூகம் இவற்றையெல்லாம் உணர்ந்து மெய்ம்மை தெரிவதென்பது தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் பெரிதும் குன்றிச் சமயஞானம் அருகிவரும் இக்கால நிலைக்கு இயலாததாகின்றது.  இவ்வாறு பரிதாபப்படவேண்டிய நிலையிலிருக்கும் சைவப் பொதுசமுதாயத்தார்மீது எழுந்த தமது அவ்வியாஜமான பெருங் கருணையினாலே திருச்சிராப்பள்ளி ஸ்ரீமாந்.மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் அவ்வியாசத்திற் காணப்படும் பொருந்தாக் கருத்துக்களையும் முடிபுகளையும் நன்கு எடுத்துக்காட்டி உண்மையை உணர்த்தியிருக்கின்றார்கள்.  அவர்கள் தங்கள் உடம்புநிலையையும் விருத்தாப்பிய தசையையும் சிறிதும் பொருட்படுத்தாது செய்த இப்பேருதவி வேறு யாராலும் செய்தல் இயலாது.  'இதனை இதனால் இவன் முடிக்கு மென்றாய்ந், ததனை யவன்கண் விடல்' என்றவாறு திருவருளே அந்நிய சாத்தியமாகாத இவ்வருஞ் செயலை இவர்களிடம் செலுத்தி உடனின்று உபகரித்ததென்பது எனது துணிபு.

    இவ்வாராய்ச்சிநூல் மனத்திருளை நீக்குதலின் ஞானபாநு; மெய்ம்மை விளக்கி மகிழ்வித்தலின் ஞானவாரமுதம்; அறிவனைத்தும் ஈதலின் இருபெரு நிதியம்.

    இந்நூலிலே மந்திர ராஜமாகிய பிரணவம் வடமொழியேயென்பது வடமொழி இலக்கண விதிப்படிச் சிவார்க்கமணிதீபிகையிற் கூறப்பட்டவாறு நன்கு விளக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயமாகும்.  மகேந்திரமலை கைலாயமேயென்று அவர்கள் துணிந்திருப்பது, அருச்சுனனுக்கு வேட்டுருவத்திற் சிவபெருமான் அருள்புரிந்த செய்தி கூறுவதாகிய 'வண்டார் குழலுமை நங்கை முன்னே மகேந்திரச் சாரல் வராகத்தின்பின், கண்டார் கவல வில்லாடி வேடர் கடிநாயுடன் கைவளைந்தா யென்னும்' என்னும் திருவிசைப்பா அருள் வாக்கினால் வலியுறுத்தப்படுகின்றது.  சிவாரூட சித்தரைப்பற்றிப் பிரஸ்தாபித்த விஷயம் முற்றிலும் உண்மையே; அச்சித்தரை நானும் நேரிலறிவேன்; அச்சித்தர் விளக்க வியாசத்தாரோ டொப்பச் சமுதாய சச்சரவிலீடுபட்டவரென்பதனை அவரியற்றிய மக்கட் சட்டமே புலப்படுத்தும்.

    வேதத்திற்குப் பொருள் நிருக்த முதலிய ஆறங்கங்கள் புராண இதிகாசங்கள் பரம்பரை வழக்கு என்னும் இவற்றைப் பற்றிக் காணுதல் வேண்டும்.  அவ்வாறன்றித் தற்காலம் உரையெனக் காணப்படும் சாயனருரை, மஹீதாருரை, ராவணருரை, ஹரிஸ்வாமியுரை முதலியனவெல்லாம் வேதப் பொருளை உள்ளவாறு விளக்குவன வன்மையின் மேனாட்டுப் பண்டிதர்கள் கூறும் வரலாற்று முறைகளும் பொருள்களும் போலியாக ஒதுக்கப்படும், ஸ்ரீமாந்: பிள்ளையவர்கள் தமது ஆராய்ச்சிநூலின் 56-வது பக்கத்திற் செய்திருக்கும் ஆராய்ச்சியே அதற்குச் சான்றாகும்.

    ஸ்ரீஞானசம்பந்தப் பெருமான் 'வேதம்' சிருட்டிகாலந் தொடங்கி பிரளயகாலம்வரை நிலை நிற்பதென.  'மறை முதனான்கு மூன்றுகாலமுந் தோன்ற நின்றனை' யென்றருளியும், ஸ்ரீவாகீசப் பெருந்தகை வடமொழி வேதசாகையின் பெயரை யெடுத்தோதிச் 'சந்தோக சாமமோதும் வாயானை' என்றருளியும், ஸ்ரீசுந்தரமூர்த்திகள் 'நாளும், ஞாலந்தான் பரவப்படுகின்ற நான்மறை யங்கமோதிய நாவன்' என்று தன்னைக் கூறியருளியும், ஸ்ரீஅருணந்திசிவம் வேதம் வடமொழியே யென்றும் அஃது அறம்பொருள் இன்பம் வீடென்னும் நான்கனையும் அருளுவதென்றும் 'ஆரியமாயறம் பொருளோடின்ப வீடெல்லாமறைந்து' என வெளிப்படக்கூறி யருளியுமிருப்ப இச்சுருதி கணங்கட்கு மாறாகவும் இப்பொழுதுள்ள தமிழ் வேதங்களாகிய திருமுறைகளைத் தமிழ் வேதங்களல்லவென நாத்திக்ம் பேசியும் அத்திருநான்மறை விளக்க வியாசம் செல்லுமானால் அதனை அறிவுடையார் கொள்ளாரென்பது யாம் கூறாமலே அமையும்.  அவ்வியாசத்தினர் கதி ஸ்ரீ வாகீசப் பெருந்தகை காலத்தரசனாகிய குணபரபல்லவ னியற்றிய மத்தவிலாசப் பிரகசனத்தில் வரும் பெளத்தபிக்ஷுவின் கதியேயாகும்.

    அவ்வியாசத்தினர் தமது அபார முயற்சியாலும் தமிழபிமானத்தினாலும் தமிழுக்குச் செய்த ஒரு பேருபகாரத்தை நாம் மறத்தல் முடியாது.  அவ்வுபகாரந்தான் யாதெனின்:- பொய்ப் பொருளுக்கு உதாரணமாக முயற்கோடு ஆகாயத் தாமரை யாமை மயிர்க்கம்பலம் என்று கூறப்படுவதோடு தமிழ் நான்மறை என்பதும் உதாரணமாகக் காட்டுமாறு செய்ததேயாகும்.

    ஸ்ரீமாந்: பிள்ளையவர்கள் சித்தாந்த சைவர்களின் பரம்பரையாசரணையை மேற்கொண்டு நடுவுநிலை திறம்பாது சைவ சமய பிரமாண நூல்கள் வடமொழி வேதங்களே யென்னும் உண்மையை மிகுந்த கெளரவத்துடன் எவ்வித மயக்கமும் வாசிப்போருக்கு உண்டாகா வண்ணம் உபகரித்த பேருதவி சைவ வுலகத்தால் மிகவும் பாராட்டத்தக்கது.

       சைவத்திற் பதிந்த மெய்யன்புடையா ரனைவரும் அந்நூலைச் சாவதான சித்தத்துடன் படித்து மெய்யுணர்ந்து சிவபெருமான் திருவருட்கிலக்கமாறு வேண்டுகின்றோம்.

   


Hosted by www.Geocities.ws

1