சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


யாழ்ப்பாணத்து நல்லூரைச்சார்ந்த சிவிகையார்தெருச் சித்திவிநாயக ராலயத் தரும கர்த்தரும், பற்பல வித்தியாசாலைகட்கு மானேஜரும், இங்கிலீஷ்படித்த வாலிபரும் பிறரும் சைவ சமயத்தி னுண்மையுணர்ந்து சைவப்பிரசாரகராதற் பொருட்டுச் சரஸ்வதி பாஷாபிவிருத்திச் சங்கமெனப் பெயரியசபை ஒன்று தாபித்துச் சிறிதுந்தளரவிடாது செவ்வனே நடத்திவருபவரும், பெரிய கோர்ட்டு நீதவானாயிருந்து கவரண்மெண்டார் குடிகள் என்னும் இருபாலார்க்கும் நடுநின்று தமது உத்தியோகத்தைச் "சமன்செய்து சீர்தூக்குங் கோல் போலமைந்தொருபாற் - கோடாது" நடத்தினமையால் இருதிறத்தார் மதிப்பையும் ஒருங்குபெற்றுத் தற்காலம் இளைப்பாறும் மகாப்பிரபுவாகிய ஸ்ரீமாந்.காசிப்பிள்ளையவர்கள் அருந்தவப் புதல்வருமாகிய

அட்வக்கேற் ஸ்ரீமந்.அருளம்பலம்

என்னும் பொருளம்பலப் பேர்தரித்த மகாவித்துவரத்தினத்தின்

அபிப்பிராயம் இது:-


    திரிசிரபுரவாசரும், "மறைகணிந்தனை சைவ நிந்தனை பொறாமன" முடையாரும், அறிஞர் வியக்கும் ஆராய்ச்சி மதுகைச்சீருறு சான்றோரும், சமயநூல் வரம்பிகவாதிமைய வரும் இறும்பூதெய்த அமைவுடன் ஆதரித்துப் பிரமாணசகிதம் பேசுபவருமாகிய, ஸ்ரீமத் சாம்பசிவ பிள்ளையவர்கள், ஸ்ரீமத் கா.சுப்பிரமணிய பிள்ளை அட்வக்கேட் அவர்கள் "செந்தமிழ்ச் செல்வி" வாயிலாக வெளிப்படுத்திய "திருநான்மறை விளக்க"த்தைக் கண்ணுற்று அதன் கணுள்ளன அப் பிரமாணமெனக் கண்டு, அதனை யாவருமறிந்து இலகுவில் உண்மைகடைப் பிடிக்குமாறு "திருநான்மறை விளக்கவாராய்ச்சி" என்னுஞ் சிறந்த நூலொன்றியற்றி அச்சிடுவித்து அதிற் கட்டாத பிரதி ஒன்று எமக்கனுப்பி எமதபிப்பிராயத்தைத் தமக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    எமது இலெளகிக உத்தியோகமும் வைதிக வுத்தியோகமும் பிறிது கருமத்திற் பிரவேசிக்கக் காலந்தாராவாயினும், "திருநான்மறை விளக்கவாராய்ச்சி" என்னுமிந்நூலைப் படித்துண்மையுணர வேண்டுமென்னும் பேராசையால் விழுங்கப்பட்ட யாம் அதன் வயத்தராயினமையின் உத்தியோகத்துக்குரிய காலத்திற் சிறிது காலத்தை இந்நூல் படித்தலிற் போக்கிப் படித்து முடித்து அரியாதனவெல்லாம் அறிந்தும், தெளியாதனவெல்லாந் தெளிந்தும், பூர்வபக்கத்தார் கூறுவனவெல்லாஞ் சைவசாத்திர முரணான புதுக்கொள்கைகள் என்பதோர்ந்தும், இத்தகைய மிக்க நியாயமான கண்டனநூல் மாந்தர்க்கு "விளக்கத்" தினால் நேர்ந்த  மயக்கொழித் துண்மை தெரித்துறுதி பயத்தற் பொருட்டு அத்தியாவசியகம் வேண்டற்பால தொன்றே யென எமது மனநேர்ந்தும் பேரானந்தப் பெருங் கடலுட்டிளைத்தாம்.

    யாமும், எம்மைப்போலவே இங்கிலீஷ்கற்று அட்வக்கேற் உத்தியோக முதலிய பெரிய உத்தியோகங்களில் அமர்ந்துள்ளவர்களும், உயிர்க்குறுதி பயக்குஞ் சைவசமய விஷயத்திற் கருதியுத்தி அனுபவப் பிரமாணங்களைக்கொண்டு மேதாவியர் தாபித்திருக்கின்ற உண்மைகளை உணராது, மனத்திற் றோற்றிய திரிபுணர்ச்சியால் அவைகளை மறுக்கப்புகுதல் "ஒப்பிலா மலடி பெற்றமகனொரு முயற்கொம் பேறித் - தப்பிலாகாயப் பூவைப் பறித்த "லாறாமன்றிச் சிறிதும் பயன்படா தென்பது இங்கிலீஷ் படித்த எமக்கு நன்குதெரியும்.  அது கா.சு. "அடவக்கேட்" அவர்கள் வெளிப்படுத்திய "திருநான்மறை விளக்கத்"தாலும், சாம்பசிவபிள்ளையவர்கள் இயற்றிய அதனாராய்ச்சியாலும் யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.  ஆயினும் விளக்கத்திலிருந்து இரண்டு மூன்று முக்கியவிடயங்களை ஈண்டெடுத்துக்காட்டு முகத்தானே பயன்படாமையை வெள்ளிடை மலைபோற் றெள்ளிதிற் புலப்படுத்துகின்றாம்.

    1.  ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் தமிழ் முனிவர் நால்வர் தமிழில் நான்மறை செய்தனர்; தேவாரங்களில் இறைவன் கல்லாலடியில் நால்வர்க்கு நான்மறைகளை நான்மறைப் பொருள்களைப் பகர்ந்தனர் என்ற பகுதிகளெல்லாம் தமது கொள்கையைக் குறிக்கின்றன என்கின்றார்.  இன்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த "காதுபொத்தரைக்கின்னார்" என்பதை முதலாகவுடைய திருநின்றியூர்த் தேவாரம் தமது கோளை வலியுறுத்தற்கு முக்கிய ஆதாரம் என்றுஞ் சொல்லுகின்றார்.  இன்னும் "நால்வர்க் கொளிநெறிகாட்டினை" என்னுந் திருஞானசம்பந்த சுவாமிகள் திருவெழு கூற்றிருக்கைத் துணுக்கையும் அதனை வலியுறுத்து மென்கின்றார்.

    இவையெல்லாம் அவர் கொள்கையைச் சிறிதும் வலியுறுத்தாமையைச் சித்தாந்த பாநுவாகிய "திருநான்மறைவிளக்க" வாராய்ச்சி நூலாசிரியரவர்கள் பல்லாற்றானும் நன்றாக விளக்கிக்காட்டி அவர் கொள்கையைப் பூர்வபக்கமாக்கி உண்மைக் கொள்கையைச் சித்தாந்தஞ் செய்திருக்கும் அழகு அறிஞர் வியக்கத்தக்கது; ஆகலான் ஆண்டுக்கண்டுண்மை கடைப்பிடிக்க.

    "காதுபொத்தரைக்கின்னார்" என்பதில் கின்னரர் என்னுஞ்சொற்கு ஆந்தைஎன்று ஸ்ரீ அடவக்கேற் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பொருள் கூறியிருக்கின்றார்கள்.  ஆந்தை என்று ஒரு தமிழ்முனிவருக்குப் பெயராயிருக்கலாம் என்கின்றார்கள்.  இவர்கள் தமிழ்முனிவர் சமஸ்கிருதமுனிவர் என்று நவீனக் கொள்கை ஒன்று மேற்கொண்டனர்கள்.  இன்னுஞ் சிலகாலத்துள் இங்கிலீஷ்முனிவர் இந்துஸ்தான்முனிவர் என்றற் றொடக்கத்த முனிவர்களைச் சிருட்டித்தும் விடுவார்கள், யாவரும் விழித்திருங்கள்; பார்க்கலாம்.

    இதுபற்றித்தான் தமிழ்சமஸ்கிருத சித்தாந்தசாத்திரங்களை நல்லாசிரியரிடத்துப் பல்காற் பயின்று, பயின்றவண்ணம் ஒழுகலாற் சிறிது சிறிதாகத்திருவருட்கிலக்காய் வாராத இங்கிலீஷ் படித்த நம்மவர் பண்டைநல்லாசிரியர் நியாயவாயிலா னிறுவிய கொள்கையை மறுத்துத் தாம்புதுக்கொள்கை நாட்டமுயவல் "ஒப்பிலாமலடி பெற்றமகனொரு முயற்கொம்பேறித் - தப்பிலா காயப்பூவைப் பறித்த" வாறாமன்றிச் சிறிதும் பயன்படாதென்று மேலே கூறினாம்.  இது "ஏதுவின்முடித்தல்" என்னு முத்தி.

    கின்னார் என்பதற்குப்பொருள் ஆந்தைஎன்றும், தமிழ் முனி ஒருவர்க்கு அதுபெயராயிருக்கலாம் என்றும் கூறியதை நோக்குந்தோறும் நகைச்சுவைக்குப் "பார்ப்பனத்தமிழ்" உதாரணமென்று நச்சினார்க்கினியர் தொல்காப்பிய வுரையுட் கூறியது அக்காலத்துக்குரித்து இக்காலத்துக்குச் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் கொள்கைகளையே யுரித்தெனக்கூறல் வேண்டும் என்றும் இனிப் பொருளதிகாரம் அச்சிடுவிப்போர் "பார்ப்பனத் தமிழ்" என்பதை நீக்கிச் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் கொள்கைகளை அச்சிடுவித்தல் வேண்டும் என்றும், அங்ஙனஞ் செய்தற்குப் பிரமாணம் என்னை? என்பார்க்கும் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானே" என்றும் கூறாநிற்பேம்.

    கின்னரர் என்பதன் பொருள் ஆந்தை என்று எக்கோசத்திற் கண்டார்! எவ்விலக்கியத்திற் கண்டார்! எவ்வான்றோர் ஆட்சியிற் கண்டார்.  இவர், ஒரு சொற்குப் பொருள் கோண் முறை இஃதென இலக்கணநூல் கூறுமாறும் அவ்வாறே இலக்கியங்களில் அப்பொருள் கோண்முறை அமைந்திருக்குமாறு கண்டு உரையாசிரியர்கள் உரை கண்டிருக்குமாறும், ஆன்றோரவற்றை உச்சிமேற் கொண்டொழுகுமாறும் ஒரு சிறிதுமறியாது உத்தியோக ஆற்றல் கொண்டு சமய நிலையையும், சாத்திர நிலையையும் ஆன்றோர் நிலையையும் இலக்கண நிலையையும் இலக்கிய நிலையையும் தருக்க நிலையையும், நியாய நிலையையும் மாற்றிப் புதிதாக ஒரு சைவ சமயம் வகுத்துவிடலாம் என்று எண்ணங்கொண்டிருக்கின்றார்.

    "ஒன்றை நினைக்கி னதுவொழிந்திட் டொன்றாகும்
    அன்றி யதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
    நினையாத முன்வந்து நிற்பினு நிற்கும்
    எனை யாளு மீசன் செயல்"

    என்றவாறு முடியுமன்றி இவர் எண்ணம் ஒன்றும் பயன்றராது.  பயன்றருங்கால் முன்னிலை மாத்திரையே.  அந்த முன்னிலையும் வினை யொழிந்தாற் றானே ஒழியுமென்பதை மறுப்பார் யார்.

    இவர் கின்னார் என்பதனை உயர்திணைச் சொல்லென்று அறியாராய் ஆந்தையென அஃறிணைப் பொருள் கொண்டதை நினைக்கும்போது "குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியனிங்கில்லைக் குறும்பியளவாக்காதைக் குடைந்து தோண்டி யெட்டினமட்டறுப்பதற்கோ வில்லி யில்லை" என்னுஞ் செய்யுள் நினைவுக்கு வருகின்றது.

    இங்ஙனம் ஒரு சிறிதும் ஒவ்வாத திரிபு பொருள் இவர் கொண்டால் "நாரா யணனை நராயணனென்றே கம்பன் - ஒராமற் சொன்ன வுறுதியால் - நேராக - வாரென்றால் வர்ரென்பேன்" என்று காளமேகப்புலவர் அறைந்த வண்ணம் நாம் கின்னரர் என்பதற்கு வீணை என்றும், கின்னரப்பட்சி யென்றும் பொருள் கொள்கின்றாம்.  பொருள்கோண் முறைகளை விடுத்து மனம் போனவாறு பொருள் கொள்ள மற்றையோரும் ஆரம்பித்துவிட்டால் இவர் கொள்கையை இவர் தாபித்தற் கென் செய்வர்!

    இவர் ஆனந்தன், பதஞ்சலிமுனிவர் என்றும், மத்தியந்தன முனிவர், வியாக்கிரபாதர் என்றும் கூறப்படுவதால், ஆந்தை என்றும் ஒரு முனிவருக்குப் பெயரிருக்கலாம் என்று திரிபுணர்ச்சி கொண்டார்.  அவர்கள் அப்பெயரெய்திய காரணங்களையும் அவர்கடெய்வத் தன்மைகளையும் அவர்கள் பூர்வ சரிதங்களையும் புடைபட ஒற்றியறியுமறிவின் மதுகையின்றிச் சைவசமயக் கொள்கையும், சைவசாத்திர நுண்மையும், அதனை யறிந்தனுட்டானத்திற் காட்டிவைத்த ஆன்றோ ரருள் வண்மையும் நல்வினையல்லதால் அறியாது நின்று ஏமாக்கும் இவர் மேல் யாவரும் இரக்கங்கொண்டு "இடிப்பாரை யில்லாத வேமார மன்னன் - கெடுப்பாரிலானுங் கெடும்"  ஆகலான் இவர்க்கு இடித்துப் புத்தி சொல்லல் வேண்டும்.  அங்ஙனஞ் சொல்லுபவர்களே "துணைவர் மேலையோர் ஒன்னலர் விழைந்தவாறுரைக்கின்றார்கள்" என்பேம்.  நல்வினையல்லது என்பதற்கு "இல்லறமல்லது" என்புழிப்போலப் பொருள்கொள்க.

    இனி, கின்னரர் என்பது கின்னரம் யுடையவர்கள்யத்தை வாசிப்பவர், கிஞ்சித் நரத்தன்மை யுடையவர்கள் என்று பொருடந்து பதினெண் கணத்துள் ஒரு வகுப்பாரை உணர்த்தி நிற்றல் கோசத்திற்கும் இலக்கண விலக்கியங்கட்கும் ஒப்ப முடிந்த முடிபென்பதைக் கற்றாரை வழிபடுமுறையில் வழிபட்டுக் கற்று உண்மை கடைப்பிடியாது இன்னும் இன்னும் விபரீதமே மேற் கொள்வாராயின், கின்னரம் என்பதன் பொருள் ஆந்தையன்று ஆட்டுக்குட்டி யென்று நாமும் வரம்பிகந்து சாதிப்பான் புகுதற்கு யாது தடையுளதென்றறிக.

    இருந்தவாற்றால் அட்வக்கேற் அவர்கள் "கல்லாத மேற் கொண்டொழுகல் கசடற - வல்லதூஉமையந்தரும்" என்னுந் திருக்குறளையுங் கருதுவாராக.

    இனி, காதுபொத்தரை, என்னுந்தேவாரத்தின் மூன்றாம் அடிமுதலை வேதம்செய்தவர் என்றும் அட்வக்கேற் பிரித்து மனம்போனவாறு பொருள்கூறுகின்றார்.  அங்ஙனம் பிரித்தற்கு இலக்கணம் இடம்தராது.  என்னை?  மோனையில்லாமையால், மோனையில்லாச் செய்யுட்களும் இலக்கியங்களுட் பயின்றுவரக் காண்கின்றோமெனின், அது பற்றி எமக்கு ஆட்சேபமின்று, மோனையிருக்குஞ் செய்யுளை இல்லாதசெய்யுளாக்க இலக்கணம் இடந்தாராதென ஆக்ஷேபிப்பேம்.  ஏதம் என்று பிரித்தால் எய்திய, இன்பம், யானும், இணையடி எனச் சீர்பலவற்றுள்ளும் பல மோனைசெறிந்து மூவகைமோனையுள் உத்தம மோனையாகநிற்கும் பெரியதோர் செய்யுட் சிறப்பை அழிக்க யாரான் முடியும்!  ஆகலான் அப்படிப் பிரித்தல் பிழையென்பதை எழுத்தறி புலவருள் மறுப்பார் யார்?

    இனி, இலக்கண வரம்புட்படாது வேண்டியவாறு பிரித்து வேண்டாத பொருள்கூற ஒருவர் தலைப்படின், யாம் எதுகைசீர் முதலியவற்றையும் எம்மனம் போனவாறு திரித்து 'எமக்கு வேண்டியபடி பொருள்கொள்ளுவேம்.  அப்போது செய்யுளுறுப்புகள் அழிந்து செய்யுளுமில்லையாகும்; அஃதில்லையாகவே, பொருள்கோளும் இல்லையாகும், சொல்லுதலுமில்லையாகும்; எழுதுதலும் இல்லையாகும்; நூலும் இல்லையாகும், படிப்பும் இல்லையாகும், வாதமும் இல்லையாகும், ஆகலின், மோனைஇயல்பாக இல்லாமலே செய்யுள் செய்யும் புலவன் செய்யுள் செய்துவிட்டால் அது குற்றமாகாது செய்யுளிலக் கணத்திற்கு ஒப்பமுடிந்ததென்றும், மோனை இருக்கும்படி செய்யுள் செய்துவிட்டால் அதினும் உத்தமமோனை இருக்கச் செய்துவிட்டால் மோனைவருமாறு பிரிக்காவிடின் அது குற்றமாய்ச் செய்யுளிலக்கணத்திற்கு ஒப்பமுடியாதென்றும் நன்கனந்தேறுக.

    இலக்கணத்திற்குமாறாக இலக்கியத்திற்குப் பொருள் கோடல் குற்றம் என்பதும் வீடு பேறும் இல்லையாகும் என்பதும் "எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான் - மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகு - மொழித்திறத்தின் - முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து - கட்டறுத்து வீடு பெறும்" என்னும் வெண்பாவாலறிக.

    இனி, வேதம் என்று பிரித்தமைக்கு மோனை வேண்டுமானன்ல் "எய்தியவின்பம்" என்பதில் "வின்பம்" மோனை யென்றார்.  "வின்பம்" என்று ஒரு சொல் எங்குள்ளது? எய்திய இன்பம் என்னும் பதங்கள் முறையே உயரீறும் உயிர் முதலுமாய் நிற்றலின் உயிர்மேலுயிர் ஏறிப் புணராது; புணர்க்க அவற்றினிடையே வகரவுடம்படுமெய் தோன்றும்; தோன்றிய மெய்யில் வருமொழி முதலுயிரேறி எய்திய வின்பம் என முடிந்தது.  உடம்படுமெய் மோனையாதற்கு அட்வக்கேட்டே நவீன இலக்கண நூலும் உண்டாக்க வேண்டும்.  பழைய இலக்கணம் இடந்தராது.  ஒரு செய்யுளடியை இலக்கணத்திற்கு மாறின்றிப் பிரிக்கத்தானும் தெரியாத இவர் தொல்காப்பியத்திற்கு முன்னுரை கொடுத்து விட்டார்.  இவர் முன்னுரை எப்போதும் அறிஞர்க்குப் பின்னுரையாகவே தோன்றும் என்பது இம்மோனை வகுப்பாலும் யாவரும் எளிதிலுணர்ந்து கொள்ளலாம்.

    இனி, நல்லாசிரியர்பால் இலக்கண விலக்கிய தருக்க நூல்களை வழிபடு முறையில் வழிபட்டுக் கற்று அதன்பின் இலக்கண தருக்க மிரண்டையும் இரண்டு கண்களாகக் கொண்டு சைவ சாத்திரங்களையுங் கற்றுத் தேறிக் கற்றவண்ணம் ஒழுகும் ஒழுகலாறுடைய நல்லோர் கருதல் காண்டல் உரை என்னும் மூன்று பிரமாணங்கட்கும் மாறுபாடின்றிச் செய்த முன்னுரையன்றி இங்ஙனங் கல்லாதார் மூவகை பிரமாணங்கட்கும் மாறாக நவீனக் கொள்கையை மேற்கொடு செய்த முன்னுரையன்றி இங்ஙனங் கல்லாதார் மூவகை பிரமாணங்கட்கும் மாறாக நவீனக் கொள்கையை மேற்கொடு செய்த முன்னுரை நூலுரை யாசிரியர்க்குங் குற்றங் கற்பித்துக் கற்போர் கருத்தைத் திரித்து விபரீத நெறியில் விடுத்து, நூலுரைகளில் அவர்கள் வைத்த நம்பிக்கையைத் தடுத்து, இம்மை மறுமை வீடு என்னும் மும்மைப் பயன்களையுங் கெடுத்து பிறவித் துன்பத்துட் படுத்துத் தீமையையே பயந்துவிடும்; ஆகலான், அத்தகைய முன்னுரையோடும் வெளிப்படும் நூல்களை விடுத்து நன்மைபயக்கும் நல்லோர் பதிப்பு நூல்களையே உண்மைச் சமயப் பற்றுடையவர்கள் வாங்கிப் படித்து நன்மையடைய வேண்டும்.

    அட்வக்கேற் தொல்காப்பியத்திற்கு மாத்திரமோ சிவஞான பாஷியத்திற்கும், சித்தாந்த சாத்திர மூலம் பதினான்கிற்கும் முன்னுரை கொடுத்திருக்கின்றார்.  அவை அவ்வுரை நூல்கட்குப் பொருத்தமில்லாதனவாய், உரை நூலாசிரியர் கட்கு அறியாமைக் குற்றமேற்றி, அதன் வாயிலாக உரை நூல்களும் குற்றமுடையனவென்று யாவர்க்குங் கற்பிக்கின்றன.  அவை அங்ஙனஞ் செய்கின்றனவோ! அன்றோ! எனச் சந்தேக முறுவோர் அவற்றை பார்வையிட்டு உண்மை தெளிக.  அவற்றிற்கும் மறுப்பு எழாநிற்கும்; ஆண்டு விரிக்கப்படுவவற்றால் எல்லாம் வெளியாகும்.  "ஒன்றினமுடித்தறன்னின முடித்தல்" என்னு முத்தியினால் "முன்னுரை" யைப்பற்றி இயைபு நோக்கிச் சிறிது, பேசப்பட்டது.  இனிமேற் கொண்ட விடயத்திற் போதுகின்றாம்.

    "மாதவர் குழுவுடன் கேட்ப" என்புழி "மாதவர்" யார்? "வேதஞ் செய்தவர்" என்புழி அவர் யார்? இருபாலரும் ஒருபாலரெனின், இலக்கண வரம்பிகவாது பொருளியையுமாறு கொண்டுகூட்டி முடிவுசெய்து காட்டுக.

    அறம் பகர எது அம் செய் தவர் எனப் பிரித்து அற முதல் நான்கையும் பகர்தற்குக் காரணமாகச் செவ்வியதாய்ச் செய்த தவத்தையுடையவர்கள் என்பதே பொருத்தப் பொருள்.  பகர என்னும் எச்சம் காரியப்பொருட்டில் வந்தது.  வழுவின்றிச் செய்த தவம் என்பார் அஞ்செய் தவம் என்றார்; வழுவுறு தவம் அறம் பகர்தற் கேதுவாகாதாகலான்.  அம்-அழகு. செய்தல் முற்பிறப்பிலுஞ் செய்தல்.  தவத்தர் - தவத்தினையுடையர்.  இன்னும் இதினுஞ் சிறந்த பொருள் நல்லாசிரியர் கூறுவர்.  ஆராய்ச்சி நூலிலும் கூறப்பட்டது.

    2.  "நால்வர்க்கொளி நெறிகாட்டினை" எனத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளியது வேதஞ் செய்தவர் நால்வர் தமிழ் முனிவர் என்பதனைத் தாபிக்கும் என்று அட்வக்கேற் அறைகின்றார்.

    நால்வர் தமிழ் முனிவர் வேதஞ் செய்தார் என்று இத்திருவெழு கூற்றிருக்கைத் துணுக்கையில் எங்கே காணப்படுகின்றது? நான்கு பேருக்கு ஞான மார்க்கத்தைத் தெரித்தீர் என்பது பதப்பொருள்.  இதற்குச் சரிதங்கொண்டாராயப்புகின் ஞான மார்க்கத்தை வெஃகிவந்தடைந்த சனகாதிமுனிவர் நால்வர்க்கும் கல்லாலநீழற் கீழ்ச் சிந்முத்திரைக் கரத்தால் ஞான நெறியைத் தெரித்தருளினீர் என்று விரித்துக் கூறல் வேண்டும்.  அத்துணையே யன்றிப் பிறிது கூறுவனவெல்லாம் திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய மற்றைத் தேவாரங்கள் எல்லாவற்றிற்கும் முழுமாறு என்பதனை அவ்வத் தேவாரங்களை நோக்கி யாவரும் அறிந்து கொள்ளலாம்.  ஆராய்ச்சி நூலாசிரியர் நன்றாக விரித்து விளக்கியிருத்தலாலும் அறிந்து கொள்ளலாம்.

    3.  ஆகமம் இருபத்தெட்டையும் தமிழ்நாட்டு மகேந்திர மலையில் சிவபெருமான் தமிழில் அருளிச்செய்தார் என்கிறார்.

    தமிழ்நாடு எது? அதில் மகேந்திரம் என்ற மலையுண்டா? இவர் தயை கூர்ந்து அதனைக் காட்டுவாரா?  தமிழில் சிவபெருமான் செய்த ஆகமங்கள் எங்கே? அவற்றையும் கடல்கொண்டு போயிற்றென்று கூற மறந்துவிட்டனரே! இனி என் செய்வார்! மகேந்திரம் கையிலை என்று ஆராய்ச்சியாசிரியர் விளக்கிக் காட்டி யிருக்கின்றார்.  அதுவே சரி என்பது பல சைவ நூல் வல்லார்வாய்க் கேட்டுணர்க.  இங்கிலிஷ் அதனை யுணர்த்தாது.  பிற சைவ விஷயத்தினையும் உணர்த்தாது.

    ஒவ்வொரு அரசினர் தாமும் தத்தஞ் சமய விடயங்களைத் தத்தஞ் சமய குரவரிடம் கேட்டு அவர் சொல்லியவண்ணஞ் செய்தலை நாம் காண்டல் அளவையால் நன்கறிந்திருக்கின்றாம்.  அதற்குக் காரணம் அவர் சமய சாத்திரத்தைப், பரம்பரையில் அறிந்து உண்மை கடைப்பிடித்தவர் என்று கைக்கொண்டமையேயாம்.  நம்மவர் கற்றவரிடத்து அங்ஙனம் கேளார்.  இவை தம்முள் வேற்றுமை.  எமது அரசினர் சமய விஷயத்திற் றாம் பிரவேசிப்பதில்லையென்றும், ஒவ்வொருவரும் தத்தஞ் சமயக் கொள்கையை மேற்கொண்டொழுகலாம் என்றும் வாக்குத்தத்தஞ் செய்து செய்தவண்ணமே நடந்துவருகின்றார்.  அதுமட்டோ ஒவ்வொரு மதத்தார்க்கும் வேண்டிய காலங்களில் அதன்பொருட்டு உதவியுஞ் செய்கின்றனர்.  தேசாபிமானம், பாஷாபிமானம், சாதியபிமானம், சமயாபிமானம் என்னும் நான்கனுள்ளும் சமயாபிமானஞ் சிறந்ததாகலான் அதிற்றலையிடின் தமதரசு, சமய விஷயத்திற் பிறழ்ச்சி செய்விக்க முயன்ற அரசினர் சில்லாண்டிற் சிதைந்தழிந் தொழிந்தமைபோலாம் என்பதநுபவத்திலறிந்துதான், அங்ஙனமாகாது தமதரசு செவ்விதின் நீடுநடந்து நிலைக்க வேண்டுமென்பது நினைந்து தான், அறிந்த வண்ணம் நடப்பதே தகுதி யென்று துணிந்துதான் சமய விஷயத்தில் இதுகாறும் தலைப்படாமல் அரசு நடாத்துகின்றனர்.  அங்ஙனம் நடாத்துதல்,

    "தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
    அத்தன் சிவன்சொன்ன வாகம நூனெறி
    எத்தண் டமுஞ்செயு மம்மையி லிம்மைக்கே
    மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே"

    என்னுந் திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளிய திவ்விய திருமந்திரத்தினோடு அத்துவிதமுற்று நிற்குஞ் சிறப்பு அறிஞர் உள்ளக்கமலத்தை அலர்த்தா நிற்கும்.  இத்தகைய பெருஞ் சிறப்புவாய்ந்த நமது காருண்ணிய அரசரின் கீழிருந்து உத்தியோக நடத்தும் நம்மவரும் அவ்வரசரைப் போலத் தங்கள் தங்கள் சமயநூல் வரம்பு கடவாது ஒழுகி அரசர்க்கும் குடிகட்கும் இதத்தைச் செய்தல் வேண்டும்.  அப்படியே மற்றச் சமயத்தவர் செய்யக் காண்கின்றோம்.  நமது அட்வக்கேட் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் சைவசாத்திரங்கட்கு முற்றும் விரோதமாகப் புதிதொன்றோ பல வகுத்து அவற்றை மேற்கொண்டு தாபிப்பான் புகுந்து ஆரியரையும், சிவபிரானாற் செய்தருளப்பட்ட வேதாகமங்களையும், அவ்வேதாகமங்களே முதனூல்கள் என்று கூறுந் தமிழ்ச் சைவ சாத்திரங்களையுஞ் சைவர்களையும், சைவர்களுக்கு உண்மைவழிகாட்டி நன்மை புரிந்த சைவ நூலாசிரியர் உரையாசிரியர்களையும், தூஷியாமற் றூஷிக்கின்றார்.  அங்ஙனந் தூஷித்த றகுமோ என்பார்க்கு இறைவன் கல்லானிழற்கீழ் நால்வர்க்கு உரையிறந்த பொருளைச் "சொல்லாமற் சொல்ல" வில்லையா என்று உத்தரங்கூறித் தப்பிவிடலாம் என்று எண்ணினர்போலும், அப்படியானாற் சரிதான், நாமும் சமயநேர்ந்தால் அவ்வாறு சொல்வேம்.

    உத்தியோகத்தராகிய நம்முள் ஒருவர் செய்கின்றகுற்றம் மற்ற உத்தியோகத்தரைச் சற்றுமிலீர் -எத்துக்கு மூத்தீரிழி குலத் தேன்றன்னை வெஃகிப் - பித்துக் கொண்டார்போற் பிதற்றுவீ ரிவ்வேடர் - கொத்துக்கெலாமோர் கொடும்பழியைச் செய்தீரே"  என்ற வண்ணம் உத்தியோக வொப்புமையால் யாவரையும் குற்றதுக்குள்ளாக்கிவிடும்.  அதுமட்டோ!

    சிருட்டி யாரம்பகாலந்தொடுத்துக் கடவுளாலும் அவனருள்வழிப்பட்ட மெஞ்ஞானிகளாலும் இன்றுவரை ஒரே முகமாக உண்மையென மேற்கொள்ளப்பட்ட நல்விஷயங்களை இவர் மனம்போனவாறு புரட்டுவதால் இவர்விஷயத்தில் சைவ மக்களது பொதுவானசமூக அபிப்பிராயம் எவ்வாறாமோவென வருந்துகின்றேன்.

    அட்வகேட் ஸ்ரீமத் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் "செந்தமிழ்ச் செல்வி" என்னும் பத்திரிகையில் வெளிப்படுத்திய திருநான்மறை விளக்கத்திலுள்ள தமிழ் வேதமே ஆதியிலிருந்ததென்றன் முதலிய கற்பனை விஷயங்களெல்லாவற்றையும் தனித்தனி அநுவதித்துக் காண்டல் கருதல் உரை என்னும் மூன்று பிரமாணங்களாலும் மறுத்து உண்மையை விளக்கி "முன்னோர் மொழி பொருளை" நிறுவி யாவர்க்கும் நன்மை பயக்கும் பேருபகாரராக விளங்கும் பெரியாராகிய ஸ்ரீமத் சாம்பசிவ பிள்ளையவர்களுக்குச் சைவ சமய மெய்யன்பர்கள் மற்றைத் தானங்கடாமோ! இவையெல்லாம் ஒருங்கு துறுமிய குழுவேயோ! என்றிங்ஙனம் யோசிக்குமிடத்து இவையெல்லாம் அப் பெரியார் செய் பெருநன்றிக்கீடாகா; ஆகலான், அப்பெருநன்றியை மறவாதிருக்குமத்துணையே மெய்யன்பர்கள் செயற்பாலதாம்.

    மகைசுவரிய மகெளதாரிய உபகாரியாகிய இப்பெரியார் பூரணாயுசுடன் அரோகதிட காத்திரராயிருந்து கலியுகத்தை யாயிரத்தில் இன்னும் நவீனக்கொள்கை யுடையராய், சைவ சமய விரோதிகளாய், சிவதூஷகராய், வேதாகமநிந்தகராய், சமயாசாரிய நிந்தகராய், சந்தானாசாரிய நிந்தகராய், சைவத்தை வளர்க்கும் தற்காலப்பெரியார் நிந்தகராய் வருவாருளரேல், அவர்கள் நவீனக்கொள்கைகளையும் கண்டித்துச் சைவசமயத்துண்மையை நிறுவி உலகத்துநன்மக்களைப் பலவிதத்தாலும் ஓம்பிப் பேரானந்தத்தோடு பிரகாசப் பெருவாழ்வுறுமாறு பேரருள் புரிந்தருளும் வண்ணம் எமதுகுலதெய்வமாகிய பெருங்கருணைப் பிழம்பாயுள்ள சித்தி விநாயகர் திருவடியிணையை எம்புந்தியிலிருத்தி அந்தியும்பகலும் மனமாரச் சிந்திதஞ்செய்து வாயாரவாழ்த்தி, தலையாரக் கும்பிடுகின்றாம்.


Hosted by www.Geocities.ws

1