உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

அர்த்தமுள்ள ஆழித்தேர்

ஆழித்தேர் பக்தர்கள் பேரவை,
திருவாரூர்.

    சைவ சமயத்தின் தலைமை பீடம், சப்த விடங்க ஸ்தலம், மூலாதார ஸ்தலம் என்ற பல பெருமைகளை தன்னகத்தே கொண்டு விளங்கும் ஸ்தலம் திருவாரூர் திருத்தலம் ஆகும்.  யாவர்க்குமான ஈசன் தனக்கென உகந்த ஆருரில் அமர்ந்து, அஜபா நடனமாடி, ஆழித்தேரில் பவனி வந்து ஆனந்தத்தில் அடியார்களுக்கு அருள்பாளித்து வருகின்றார்.

    திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் பல விழாக்கள் உண்டு. இதில் மிக விஷேசமானது பங்குனி உத்திர திருவிழா ஆகும்.  இது மொத்தம் 55 நாட்கள் விழா.  பங்குனி உத்திர திருவிழாவில் மிக முக்கியமானது ஆழித்தேர் திருவிழாவாகும்.  இதில் பங்குனி உத்திர உற்சவமானது நமது தமிழ் நட்சத்திரங்கள் 27க்கும் 27 நாள் விழாவாக நடைபெறுகின்றது.

    ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி பூச நட்சத்திரத்தில் நேருக்கு சென்று, ஆயில்ய நட்சத்திரத்தில் தேரில் பவனி வந்து, உத்திர நட்சத்திரத்தில் அடியார்களுக்கு பாத தரிசனம் காண்பித்து பங்குனி உத்திர திருவிழா நிறைவுறும்.

 முதல் நாள் உற்சவம்  த்வஜாரோகணம்  வினாயகர், சுப்ரமணியர் புறப்பாடு
 2ம் நாள் முதல் 7ம் நாள் உற்சவம் வரை  வினாயகர், சுப்ரமணியர் உற்சவம்  வினாயகர், சுப்ரமணியர் புறப்பாடு
 8ம் நாள் முதல் 10ம் நாள் உற்சவம் வரை  பக்தோற்சவம்  நால்வர் புறப்பாடு
 11ம் நாள் உற்சவம்  காலபைரவர் உற்சவம்  காலபைரவர் புறப்பாடு
 12ம் நாள் உற்சவம்  காட்சி கொடுத்தார் உற்சவம்  காட்சி கொடுத்தார் உற்சவம்
 13ம் நாள் உற்சவம்  சந்திரசேகரர் பட்டோற்சவம்  சந்திரசேகரர் புறப்பாடு

சந்திரசேகரர் பட்டோற்சவம்

     ஆரூரில் ஈசன் ராஜாவாக (தியாகராஜர்) இருப்பதால் அவர் சிம்மாசனத்தை தவிர பிற வாகனங்களில் எழுந்தருளமாட்டார்.  எனவே இவருக்குரிய திருநாட்களில் வாகனங்களில் வீதி உலா வருவதற்காக சந்திரசேகரருக்கு பட்டோற்சவம் செய்விக்கப்படுகிறது. இதை தொடர்ந்து தியாகராஜருக்காக சந்திரசேகரர் வீதிகளில் வாகனங்களில் எழுந்தருள்கின்றார்.

 14ம் நாள் முதல் 16ம் நாள் உற்சவம் வரை  சந்திரசேகரர் கேடக உற்சவம்  சந்திரசேகரர் புறப்பாடு
 17ம் நாள் உற்சவம்  வன்மீகநாதருக்கு சகஸ்ர கலசாபிஷேகம்  சந்திரசேகரர் புறப்பாடு
 18ம் நாள் உற்சவம்  வசந்த உற்சவம், அஷ்டதிக்கு த்வஜாரோகணம்  சந்திரசேகரர் புறப்பாடு
 19ம் நாள் உற்சவம்  இந்திர விமான உற்சவம்  சந்திரசேகரர் புறப்பாடு
 20ம் நாள் உற்சவம்  பூத வாகன உற்சவம்  சந்திரசேகரர் புறப்பாடு
 21ம் நாள் உற்சவம்  வெள்ளி யானை வாகன உற்சவம்  சந்திரசேகரர் புறப்பாடு
 22ம் நாள் உற்சவம்  வெள்ளி ரிஷப வாகன உற்சவம்  

 சந்திரசேகரர் புறப்பாடு

 23ம் நாள் உற்சவம்  கைலாச வாகன உற்சவம் / ஸ்ரீ தியாகராஜர் மகா இரதாரோஹனம்  சந்திரசேகரர் புறப்பாடு
 24ம் நாள் உற்சவம்  ஆழித்தேர் உற்சவம்  சந்திரசேகரர் புறப்பாடு

    ஆழித்தேர் திருவிழா

    ஈசனின் ஐந்து கர்மங்களில், அழிக்கும் கர்மத்தை குறிப்பதாக ஆழித்தேர் திருவிழா நடைபெற்று வருகின்றது.  (ஐந்து கர்மங்கள் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல்)

    தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணாகரன் என்ற மூன்று அசுரகுலத் தலைவர்களது நகரங்கள் (வானத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றவை) முறையே பொன், வெள்ளி, செம்பால் ஆக்கப்பெற்ற கோட்டைகளுடன் திகழ்ந்தது.  இம்மூன்று அசுரர்களும் தங்களது நகரங்களோடு பறந்து திரிந்து தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி, அஞ்சி நடுங்க வைத்தனர், அவ்வமயம் சிவபெருமான் அவர்களுடன் போர் புரிந்து அவர்களை அழித்தார் என்பதே ஆழித்தேர் உற்சவம் ஆகும்.

 25ம் நாள் உற்சவம்  பிராயசித்தாபிஷேகம்  ஸ்ரீ தியாகராஜர் மகா அபிஷேகம்
 26ம் நாள் உற்சவம்  சந்திரசேகரர் வேததீர்த்தம் அவபிருதஸ்நானம்  சந்திரசேகரர் தீர்த்தம் அருளல்
 27ம் நாள் உற்சவம்  பாத தரிசனம்  ஸ்ரீ தியாகராஜர் பாத தரிசனம்

 

சைவ சமயத்தின் மிகமுக்கிய திருவிழாக்கள்
  

1. சித்திரை மாதம் உத்திரத்தில் மதுரையில் திருக்கல்யாணம்

2. சித்திரை மாதம் விசாகத்தில் திருவையாறில் சப்தஸ்தானம்

3. கார்த்திகை மாதம் கார்த்திகையில் திருவண்ணாமலையில் தீபம்

4. மார்கழி மாதம் திருவாதிரையில் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்

5. மாசி மாதம் மகத்தில் கும்பகோணத்தில் மகாமகம்

6. பங்குனி மாதம் ஆயில்யத்தில் திருவாரூரில் ஆழித்தேர்

    சைவ சமயத்தின் தலைமை பீடமான இத்தலத்தில் நடைபெறும் தியாகேசரின் ஆழித்தேர் திருவிழா சைவ சமயத்தவர் தரிசிக்கவேண்டிய திருவிழாக்களில் மிகமுக்கியமானது.  ஆழித்தேர் திருவிழாவை தவிர மற்ற ஐந்து திருவிழாக்களும் மிகச் சரியாக, குறிப்பிட்ட நட்சத்திரம் மாறாது நடைபெற்றுவருகின்றது.

    திருவாரூரில் மட்டும் மரபுக்கு மீறி 23-ம் நாள் விழா, 24-ம் நாள் விழா மற்றும் 25-ம் நாள் விழாக்கள் நடைமுறை சிக்கல்கள் என்ற போர்வையில் தேவையற்ற காலதாமதத்துடன் நடைபெறுகிறது. அதாவது தீர்த்தம் மற்றும் பாததரிசனத்திற்கு (26, 27-ம் நாட்கள்) பிறகு 24-ம் நாள் திருவிழா (ஆழித்தேர்) நடத்தப்பட்டு, பங்குனி உத்திர திருவிழா அர்த்தமற்றதாக் ஆக்கப்படுகிறது.  (சம்பிரதாயங்கள் சடங்குகளாக மாறுகின்றது)

    "ஆழித்தேர் வித்தகனை நான்கண்டது ஆருரே!" என்ற திருநாவுக்கரசர் கூற்றுக்கிணங்க, திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்திய ஆழித்தேர் திருவிழாவை குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நடத்தி நாம் எல்லோரும் ஒன்று கூடி ஆழித்தேர் வடம்பிடித்து, ஒற்றுமை உணர்வை ஓங்கச்செய்வோம்.  ஆருரரின் அருள் பெறுவோம்.

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்குக நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.


    இவ்வாறு காலம் தவறி நடைபெறுவது நாட்டிற்கும், நமக்கு தீங்கு விளைவிக்குமென ஆன்றோர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.  இப்பொழுது நிகழும் இயற்கை சீற்றங்களுக்கு இது தான் காரணமோ? என்ற அச்சம் நமக்குள் ஏற்பட்டுள்ளது.

வேடிக்கை பார்க்கத்தான் வேண்டுமா?

நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா?

முடியும்.....நம்மால் முடியும்,  இனிவரும் காலங்களில் ஆழித்தேர்த் திருவிழா சரியாக நடக்க ஆவன செய்ய வேண்டியது பக்தர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.  எனவே பக்தர்களாகிய நாம் ஒவ்வொருவரும் திருக்கோவில் நிர்வாகத்திற்கு ஆகமத்தில் உள்ளபடி ஆழித்தேர் திருவிழாவை நடத்த வலியுறுத்தி கடிதம் எழுத வேண்டும்.  அக்கடிதத்தின் நகலை ஆழித்தேர் பக்தர்கள் பேரவைக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

இந்த ஆண்டு ஆழித்தேர் திருவிழா நடைபெற வேண்டிய நாள் விய வருடம் பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29-03-2007)

    ஆழித்தேர் பக்தர்கள் பேரவை.  இது சம்பந்தமாக தங்களது வினாக்களையும், கருத்துக்களையும் மேலும் தங்களின் மேலான பங்களிப்பையும் எதிர் நோக்குகிறது.  இப்புனித பணியில் நாம் அனைவரும் நம்மை ஈடுபடுத்தி தியாகேசனின் அருளைப் பெற வேண்டுகிறோம்.

கடிதங்கள் எழுத வேண்டிய முகவரிகள்:

1. நிர்வாக அதிகாரி அவர்கள்,
ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில்,
திருவாரூர் - 610 001.

E-mail to: [email protected]

2. ஆழித்தேர் பக்தர்கள் பேரவை
40/1 நேதாஜி சாலை,
திருவாரூர் - 610 001.

E-mail to: [email protected]

  

   

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1