உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

    கோவை, பேரூர், மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் தலைவர் அவர்கள் திவ்ய சமுகத்திற்கு, கோவில்பட்டி திருமுறை மன்றத்தின் செயலாளர் மா.அழகுராஜன் எழுதிக் கொண்டது அநேக நமஸ்காரங்கள்.  தாங்கள் அடியேனுக்கு அனுப்பிய தங்கள் மன்ற வெளியீடான, "தமிழ்நாட்டில் தமிழுக்குத் தடையா?" என்ற அறிக்கை கிடைக்கப் பெற்றேன்.  தாங்கள் அறிந்தோ, அறியாமலோ, தபால் மேல் உறையில் அரசு அலுவல்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்துவதற்கு உரிய அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட ரூபாய் ஐந்துக்கான தபால்தலை ஓட்டப்பட்டு, அது குற்றச் செயலாகி இங்கு நான் ரூபாய் பத்து அபராதம் கட்டித் தபாலைப் பெற்றுக் கொண்டேன்.

    தமிழ் நாட்டில் தமிழுக்குத் தடையா? என்ற தங்கள் அறிக்கையின் தலைப்பு, தாங்களும் அறியாமையால் குழப்பிப் போய், சைவ மக்களையும் குழப்புவதாக உள்ளது.  நீதிமன்றத்தடை தமிழுக்கோ அல்லது சைவத் திருமுறைகளை, திருக்கோயில்களில் ஸ்ரீ சிவபெருமானார் முன் விண்ணப்பம் செய்வதற்கோ திருமுறைகளைப் பாராயணம் செய்வதற்கோ அல்ல.  திருநெறிய தமிழாகிய சைவத் திருமுறைகளை தமிழ் வழிபாடு என்ற பெயரில் ஹோமங்களுக்கும், கிரியைகளுக்கும் பயன்படுத்துவது சைவ சமய நெறியும், மரபும் அல்ல என்பது தான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடைக்கு விளக்கமாகும்.

    தாங்கள் வெளியிட்டுள்ள மேற்படி அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்பதைப் புரிந்து கொண்டோம்.  ஸ்ரீ சிவபெருமானார் அருளிச் செய்த முதல் நூல்களாகிய வேத, ஆகமங்களும், அவைகளைச் சாரமாகக் கொண்டும், அவைகளுக்கு அரணாகவும், அருளாளர்கள் அருளிச் செய்த பன்னிரு சைவத் திருமுறைகளும் பதினான்கு சித்தாந்த சாஸ்திரங்களும் சைவ சமயத்திற்குச் சர்வ பிரமாண நூல்கள் ஆகும்.  இவைகளோடு முரண்படும் நூல்கள் பிரமாணமாகா.  முரண்படும் செயல்கள் சைவநெறி ஆகா.

    தாங்கள் உண்மைச் சைவர் அல்ல என்பதும், தங்கள் செயல்பாடுகள் வடமொழி துவேசத்தாலும், இனதுவேசத்தாலும் எழுந்தவைகளே அன்றி சைவ சமயப் பற்றினாலோ, தமிழ் மொழிப் பற்றினாலோ அல்ல என்பதும், தங்கள் நோக்கம், மொழிவெறியைத் தூண்டி, சைவ சமயத்துள்ளும் திருக்கோயில் வழிபாட்டு நெறிகள் மற்றும் மரபுகளுள் குழப்பங்களை விளைவிக்க வேண்டும் என்பதும் தான், என்பதும் தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெளிவாகிறது.

    திருமுறை ஆசிரியன்மார்கள் நிறைமொழி மாந்தர்கள் என்பதிலோ, அவர்கள் அருளிச் செய்த திருமுறைகள் மந்திரவல்லமை உடையது என்பதிலோ உண்மைச் சைவர்களுக் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.  அவ்வருளாளர்களே, தாங்கள் அருளிச் செய்த பாடல்களை, ஸ்ரீ சிவபெருமானாரிடம் அன்பு கொண்டு கண்ணீர் மல்கி விண்ணப்பம் செய்து கொண்டால் பயன் அடைவார்கள் என்று ஆணையிட்டும் அருளியுள்ளார்கள்.  அவர்கள் ஆணையிட்டபடி திருமுறைகளை சுவாமியிடத்து நேரடியாக விண்ணப்பம் செய்வது தான் சைவ சமய நெறியாகவும் மரபாகவும் நடந்து வருகிறது.  ஆலயங்களில் பூஜா காலங்களில் திருமுறை விண்ணப்பம் செய்வதும், திருமுறைப் பாராயணம், முற்றோதல் செய்வதும் சிவபுண்ணியச் செயல்களே அதற்கு மாறாக, திருமுறை ஆசிரியன்மார்கள் நோக்கத்திற்கும், ஆணைக்கும் மாறாகத் திருமுறைகளைத் தவறான நோக்கில் ஹோமங்கள், யாகங்கள் போன்ற கிரியைகளுக்குப் பயன்படுத்துவது பயன் தராது என்பதோடு, சைவ சமய விரோதச் செயலுமாகும்.  இனிய நாதம் தரக்கூடிய புல்லாங்குழலை வாசிப்பதை விடுத்து அடுப்பு ஊதப் பயன்படுத்துவது அறிவுடைமை ஆகாது.  தாங்கள் தபால் தலையை முறை தவறிப் பயன்படுத்தியது குற்றமானது போல, நெறியல்லா நெறிக்குத் திருமுறைகளைப் பயன்படுத்துவது பயன் இன்மையுமாகிக் குற்றமுமாகும்.

    சைவ சமய நெறிகளையும், மரபுகளையும், கட்டிக் காப்பதும், சமய வளர்ச்சிக்குத் தேவையான திருமுறைகள் சித்தாந்த சாஸ்திரங்கள் போன்ற நூல்களை அச்சிட்டு வெளியிட்டுச் சைவ மக்களுக்கு உபகரிப்பதும் தான் சைவத்திருமடங்கள் செய்து வருகின்றன.  தற்பொழுது பெறப்பட்டுள்ள நீதிமன்றத் தடையும் சைவ சமய நெறிகளைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

    பன்னிரு சைவத்திருமுறைகள் சைவ சமயத்தவர்களுக்கே உரியது.  அவைகளை நெறியல்லா நெறிகளுக்குப் பயன்படுத்துவதையும், சைவ சமய ஆச்சாரியன்மார்களைத் தூஷிப்பதையும் சைவ மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

    குருமார்களை நிந்தனை செய்வது சிவனடியார்களை நிந்தனை செய்வது சிவ அபச்சாரமாகும் அதற்கு உரிய பலனும் நிச்சயமாக உண்டு என்பதை உணருங்கள்.  மேன்மை கொள் சைவ சமய சார்ந்து, சைவ சமய நெறி நின்று உய்தி தேடுங்கள்.

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
"வைதிக சைவம் பரக்கவே"

 

கோவில்பட்டி-628 501                                                    இப்படிக்கு

28-06-2007                                                   மா. அழகுராஜன்

                                                             செயலர்
                                                             திருமுறை மன்றம்
                                                             15/1 A, செக்கடி 3 வது தெரு.

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ ல்லாம"

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1