உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

தெய்வ முரசாரே! தெளிவுபடுத்த மாட்டீரா?

(தருமை ஆதினைத் பற்றி தவறாக எழுதிய 'தெய்வ முரசு' ஆசிரியர் சக்தியவேல் முருகனுக்கு ஒரு கண்டனம்)

   திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் 26ஆம் குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களுக்குத் தாங்கள் விடுத்த இகழுரை கண்டு மனம் புண்பட்ட எண்ணற்ற அன்பர்களில் அடியேனும் ஒருவன்.  திருமுறைகளுக்கும், சைவ இலக்கியங்களுக்கும் தாங்கள் தருகின்ற விபரீத விளக்கங்களால் எழுந்த ஐயங்களுக்கு விடை கூறி எங்களுக்குத் தெளிவு நெறி காட்ட மாட்டீர்களா?

1. திருத்தொண்டர் புராணத்தில் காணப்படாத விபரீதமான கற்பனை

    23.3.2007 அன்று தாங்கள் ஸ்ரீலஸ்ரீ சந்நிதானத்திற்கு விடுத்த சவால் மடல் 3 ஆவது பத்தியில்

    "தமது உபநயனச் சடங்கில் உரத்த ஒலியில் வடவேதம் ஓதவந்த சுமார்த்தர்களைப் பார்த்து நிறுத்துங்கள்! உங்கள் நன்மை யொன்றில்லா வடமொழி மந்திரங்கள்! "அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே" என்று அவர்கள் வாயை அடைத்தார் ஸ்ரீதிருஞானசம்பந்தர் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 263 ஆவது திருப்பாடல் முதல் 267 ஆவது திருப்பாடல் முடிய உபநயனச் சடங்கு நிகழ்ச்சிகள் தெய்வச்சேக்கிழார் பெருமானால் விவரிக்கப்படுகின்றன.  அத்திருப்பாடல்களில் ஒன்றிலேனும் தாங்கள் கூறும் அமங்கல வார்த்தைகள் உள்ளனவா?

    "தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்ய"

    "மறை முனிவரெதிரே"

    "வியப்புற்றேத்தும் கலை மறையோர்"

    "செழுமறையோர்"

    "அந்தணர்களருடலை மேற்கொண்டு"

என்று வருணிக்கப்படுகின்ற மறையோர் சுமார்த்தர்களா?

    "உங்கள் நன்மையொன்றில்லா வடமொழி மந்திரங்கள்" என்ற செய்தி இத்திருப்பாடல்களில் எங்கேனும் இருக்கிறதா?

    "சுருதியாயிர மோதியங்கமான தொல்கலைகள் எடுத்தியம்பும் தோன்றலார்" இப்படிப் பேசுவாரா? "வாயடைத்த" விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? பெரிய புராணத் திருப்பாடல்களுக்கு விபரீத விளக்கம் கொடுக்கும் தங்கள் பின்னால் வரும் மன்றங்கள் தங்களைத் தட்டிக் கேட்க முயன்றதுண்டா?

2. திராவிட மஹா பாஷ்ய கர்த்தர் ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவாக்கிற்கு விபரீத விளக்கம்.

    குளத்தூர் பன்னிரு திருமுறை மன்றம் ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் குளத்தூரில் அருளிச் செய்த மூன்று அற்புத இலக்கியங்களையும் 2004ல் ஒரு பிரசுரமாக அருமையாக வெளியிட்டுள்ளனர்.  தாங்கள் அவ்வெளியீட்டுக்கு அணிந்துரை வழங்கியுள்ளீர்கள்.  அவ்வணிந்துரையில் தங்கள் ரத்தத்தில் கலந்துள்ள வடமொழிந்துவேஷம் பல இடங்களில் பிரதிபலிக்கிறது.

    குளத்தூர் பதிற்றுப் பத்தந்தாதி 78 ஆவது திருப்பாடலுக்குத் தாங்கள் தரும் விசித்தரமான விளக்கம் இதோ!

    "இவ்வந்தாதியின் பாடல் 78 தக்கன் வேள்வியைத் தகர்த்ததைக் கூறி இப்படி வடமொழி வேள்விகளை குளத்தூர் சுவாமி நெருங்க விட மாட்டார் என்று கூறுவது சிந்திக்கத்தக்கது.

    இவ்விளக்கம் சிந்திக்கத்தக்கதல்ல சிரிக்கத்தக்கதே.

இத்திருப்பாடல் வருமாறு.

வேண்டாத கொடுந்தக்கன்
    வேள்வியகத் துடனிருக்க
முண்டார்கள் பட்டதெல்லாம்
    தெரிந்துணர்ந்து மூதறிவோர்
ஆண்டானைத் திருக்குளத்தூர்
    அமர்ந்தருளி யிருவருக்கும்
நீண்டானை யிகழ்வாரை
    நெஞ்சாலு மணுகாரே"

    ஈண்டு எங்கேனும் வடமொழி வேள்வி என்ற சொற்றொடர் உள்ளதா? வடமொழி வேள்வி செய்தது தான் தக்கன் செய்த பிழையா? தக்கன் தமிழில் அவ்வேள்வியினைச் செய்திருந்தால் (தங்கள் கூற்றுப்படி) தப்பித்திருப்பான் அல்லவா? தங்களை ஆசானாகக் கொண்டு தங்கள் தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மையத்தின் ஆயுள் உறுப்பினராகும் பேறு தக்கனுக்குக் கிடைக்கவில்லையே! அப்பேறு கட்டியிருந்தால் தக்கனுக்கு ஆட்டுதலை கிடைத்திருக்காது! திருமுறைகளில் அவனைப் பற்றிய செய்தியே வந்திருக்காது! கந்த புராணத்தில் தக்ஷ காண்டமே இடம் பெற்றிருக்காது! தக்கனுக்கு உபதேசம் செய்த ததீசி முனிவரையும் தங்கள் மேலான பயிற்சி மையத்தில் சேர்த்திருப்பான்.

    வடநூற் கடலும் தென் தமிழ்க்கடலும் நிலை கண்டு உயர்ந்த சிவஞான சுவாமிகளா வடமொழி வேள்வியை வெறுப்பார்?

    "இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
    இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பும்
    இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால் இவ்
    இருமொழியும் நிகரென்னும் இதற்குஐயம் உளதேயோ"

என்று காஞ்சிபுராணத்தில் உபதேசிக்கும் உத்தமராம் சுவாமிகளா" வடமொழி வேள்விகளை குளத்தூர் சுவாமி நெருங்க விடமாட்டார்" என்று பாடுவார்?

    தங்களின் அணிந்துரை பொய்யுரையல்லவா? சாதாரணமான தமிழ் அறிவுடையோர் கூட இப்பாடலுக்குத் தாங்கள் வழங்கும் கொடுமை விளக்கத்தை ஏற்றுக் கொள்வார்களா?

3. சைவக் கருவூலம், தமிழ் சாகரம் தருமை ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம் அவர்கள் மீது வசைமொழி

    ஸ்ரீதிருஞானசம்பந்தர் அருள் வாக்கு, ஸ்ரீ சேக்கிழார் பெருமான் பொன்வாக்கு, ஸ்ரீமத் சிவஞானசுவாமிகள் அருள் வாக்கு இவற்றிற்கெல்லாம் புரட்டு விளக்கம் தந்த தாங்கள் தருமையாதீனத் தலைவர் மீதும் வசை பாணம் ஏவத் தொடங்கி வீட்டீர்கள்.  தருமையாதீனம் திருமுறைச் செல்வங்களை இகழ்ந்து பேசுவார்களா? திருமுறை வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் தருமையாதீன மரபினை சுவாமிகள் மீறுவார்களா? 1954ல் சென்னையில் தருமபுர ஆதீனக் கிளை மடத்தில் தம்பிரானாகப் பணியாற்றிய போது சுவாமிகள் பல திருமுறை நிகழ்ச்சிகளை நடத்தித் திருமுறைப் பொக்கிஷத்தைப் பேணிப் பாதுகாத்தது தங்களுக்கு எப்படித் தெரியும்?

    பன்னிரு திருமுறைகளையும் குறிப்புரைகளுடன் மலிவு விலையில் திருமுறைக் கோயிலுடன் வண்ணமிகு பவனி வரச் செய்த சுவாமிகளா திருமுறைகளை வெறுப்பார்?

    பண்ணிசை மன்னர் தருமபுரம் சுவாமிநாதன் போன்ற திருமுறைவாணர்களை அன்றும் இன்றும் என்றும் உலகிற்கு வழங்கும் திருமடத் தலைவராத் திருமுறையை இகழ்பவர்?

    சீர்காழித் திருஞான சம்பந்தர் ஞானப்பால் பெற்றருளும் திருவிழாவில் சுவாமிகளின் அருட்சரிதம் முழுவதையும் தக்க சான்றோர்கள் வாயிலாகப் பெருமானின் பவனியின் போது ஆயிரக்கணக்கான அன்பர் கூட்டம் செவிமடுத்து மகிழச் செய்யும் சுவாமிகளைச் சவாலுக்கு இழுக்கும் எண்ணம் தங்களுக்கு எங்ஙனம் வந்தது? திருமடத்து அதிபரை மிரட்டும் தங்கள் போக்குத் தமிழக தி.க.வை பின் தள்ளி விடும் போல் உள்ளதே!

    எண்பது ஆண்டுகளுக்கு மேலாக சிவநெறி வாழ்வு வாழ்ந்தருளும் அருளாளரை வம்புக்கு இழுக்கும் தாங்கள் அருள் மலை மீது மோதும் சிட்டுக்குருவியாகி விட்டீர்களே?

    4. தமிழ் மீது அளவு கடந்த பற்று வைத்துள்ள தாங்கள் தங்கள் பெயரில் உள்ள "சத்திய" என்ற சொல் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இடங்களைச் சுட்டிக்காட்டும் கருணை காட்ட மாட்டீர்களா?

    5. வடமொழி என்றாலே வாந்தி எடுக்கும் தாங்கள் தங்கள் பெயருக்குப் பின்னால்  உள்ள B.E.,M.A. இவையெல்லாம் தமிழுக்குத் தாயாதிக்காரர் என்று பெருமையடைகிறீர்களோ?

    6. தங்கள் "தெய்வமுரசு" இதழில் காணப்படும் "தெய்வம்" என்ற பதம் கடைச் சங்க நூல்களில் எங்கெல்லாம் பரவி நிற்கிறது என்று எடுத்துக்காட்டி அடியேனுக்குத் தெளிவு தரமாட்டீர்களா?

    7. தருமையாதீனத் தலைவர் அவர்கள் பாராட்டிய கீதை வைஷ்ணவ நூலல்ல.  மகாபாரத யுத்தத்தில் அருச்சுனனின் தேர்ச்சாரதியாகிய கிருஷ்ணபிரான் (உபமன்யு மகரிஷியிடம் சிவதீக்ஷை பெற்றவர்) சிவோகம் பாவனை மேற்கொண்டு உபதேசம் செய்த நூல்தான் கீதை.  எனவே அது சிவவாக்கு தான். கிருஷ்ணருடைய வாக்கல்ல.  "மஹாபாரத தாற்பரிய சங்கிரகம்" என்ற ஸ்ரீசபாபதி நாவலரவர்களின் அற்புத நூல் பெயர் தானும் தாங்கள் அறிந்ததுண்டா?

    8. கும்பாபிஷேகம், திருமணம் போன்றவற்றில் திருமுறையினை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வேதசிவாகமங்களைப் புறக்கணிக்கும் செயல் சைவ மரபிற்கு முரண்பட்டது என்று தான் நமது குருநாதராகிய ஆதீன கர்த்தர் வலியுறுத்துகிறாரே தவிர திருமுறைகளை இகழ்ந்துரைக்கும் எண்ணம் அவர்கள் திருச்சந்நிதியில் முகிழ்க்கும் வாய்ப்பே கிடையாது இதை தாங்களும், தங்களின் பின் நிற்கும் மன்றங்களும் உணர்ந்து திருந்தும் காலம் விரைவில் வராதா?

    9.  வாட்டிக்கன் சிட்டியில் உள்ள போப் ஆண்டவர் தமிழ்நாட்டு மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து அறிக்கை விட்டு நமது நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட்ட போது, எந்த கிறிஸ்தவர்களாவது அவரை எதிர்த்து இகழுரை விட்டார்களா?

    10.  டில்லி இமாம் மூலம் பிறை கண்ட செய்தியினைக் கேட்டு அதற்குப் பணிந்து உடனே நோன்பினை மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் தங்கள் மதகுருவினை எதிர்த்து இருளுரை என அறிக்கை விட்டதுண்டா?

    தெய்வ முரசாரே! மேற்கண்ட கருத்துக்களைப் பற்றிய தெளிவான (விபரீதமற்ற) விளக்கம் தருவீர்களா? தங்களுக்கு ஆத்திரமூட்டும் ஒரு நூலினைத் தங்களுக்கு அன்பளிப்பாக இத்துடன் அனுப்பியுள்ளேன்.  எங்கள் ஆசிரியப் பெருந்தகை, சித்தாந்த பண்டிதபூஷணம், திருவாவடுதுறை ஆதீன வித்துவான் சைவத்திரு ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளை அவர்கள் இயற்றிய "சைவாலயங்களில் சமஸ்கிருத மந்திரங்களே வேண்டும்" என்ற அந்நூலினை நன்கு பயில்க.  விரைவில் "நாடும் நவீனரும்" என்னும் அவரது மற்றொரு நூலும் தங்களுக்கு வரும்.

    நிறைவாக நமது திருமூலநாயனார் அருளிச் செய்த
 

    "ஓரெழுத் தொரு பொருள் உணரக் கூறிய
    சீரெழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
    ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
    பாரிடைக் கிருமியாய்ப் படிவர் மண்ணிலே" (531)

    சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
    நன்மார்க்க முங்குன்றும் ஞானமும் தங்காது
    தொன்மார்க்க மாயதுறையும் மறந்திட்டுப்
    பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே"   (535)

    என்ற திருமந்திர அருள் வாக்கினைச் சிந்திக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.  என்றும் சிவபணியில்,

மா.பட்டமுத்து M.Sc..B.T.,
276, வடக்கு ரத வீதி,
சங்கரன்கோவில் 627756
திருநெல்வேலி மாவட்டம்.

ஸ்ரீ கோமதி அம்பிகை மாதர் சங்கம்
திருமந்திர வழிபாட்டு மன்றம்
, சங்கரன்கோவில்
ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரக் குழு,
விக்கிரமசிங்கபுரம்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அடியார் குழாம், கரிவலம்வந்தநல்லூர்
ஸ்ரீ மங்கையர்க்கரசி மாதர் மன்றம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ மாசிலாமணியீசர் உழவார நற்பணி மன்றம்,
வடதிருமுல்லைவாயில், சென்னை.

 

   

 

திருச்சிற்றம்பலம்.


Hosted by www.Geocities.ws

1