ஸஹஸ்ரநாமம் ....

அண்ணா ஸ்ரீசுப்பிரமணியம்

[ ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடான ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம-பாஷ்யம் புத்தக முன்னுரையிலிருந்து ]

மஹாபாரதத்திற்கு உள்ளம் போன்றதாகிய அனுசாஸன பர்வத்தில் தானதர்ம ரகசியங்களையும், எல்லா சாஸ்திரங்களின் முடிவான கருத்துக்களையும் எடுத்துரைக்குமிடத்தில் பீஷ்மாசாரியரால் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் தருமபுத்திரருக்கும் அவர் மூலமாகப் பிறருக்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணபகவான் ’பீஷ்மர் அம்புப் படுக்கையில் சயனித்து அக்னி ஆறுவது போலிருக்கிறார். புருஷசிரேஷ்டரான அவர் இப்பொழுது என்னைத் தியானம் செய்கிறார். ஆதலால் என் மனம் அவரிடம் சென்றுது. குருவம்சத்தவருக்குத் தலைவராகிய அவர் அஸ்தமனமாகிவிட்டால் உலகில் ஞானச்செல்வம் (அல்பீ பவிஷ்யதி) குறைந்துபோம்’ என்று தருமபுத்திரரைத் தூண்டி உபதேசம் பெறச்செய்தார்.

பீஷ்மரை நோக்கி, ’பரத சிரேஷ்தரே! அறியவேண்டுமென்று கேட்கும் தர்மராஜருக்கு நீர் என்ன சொல்லப்போகிறீரோ அவையெல்லாம் வேதவாக்கியங்கள் போலப் பூமியில் நிலைபெறப் போகின்றன’ என்று கூறியருளினார்.

பீஷ்மரும் ’கோவிந்தரே! உமதனுக்கிரஹத்தினால் எனக்குத் தாபமும் மயக்கமும் மனச்சோர்வும் ஓய்வும் வாட்டமும் நோய்களுமாகிய எல்லாம் உடனே போய்விட்டன. உம்மை இடைவிடாது தியானம் செய்ததினால் பூரித்து இளமைப்பருவத்தில் இருப்பவன் போல ஆனேன். உமது அனுக்கிரஹத்தினால் தர்மங்களைச் சொல்வதற்குச் சக்தியுள்ளவனாயிருக்கிறேன். என்று கூறி, ’இது தான் எல்லாத் தருமங்களிலும் மிகச் சிறந்த தருமம் என்று நான் நினைப்பது (ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோ [அ]திகதமோ மத:) என்று இறுதிகட்டி இந்த ஸஹஸ்ரநாமத்தை உபதேசிக்கலானார்.

உபதேச முடிவில் ’தேவகீ-நந்தன:’ என்ற பெயரால் ’இங்கு நம்முடனிருக்கும் தேவகீ நந்தனனே பரமபத நாதனாகிய பகவான். யுதிஷ்டிரரே! அகன்று நீண்ட கண்களையுடையவரும் உமது உறவினருமாகிய இவரே சென்றதும் நிகழ்வதும் வருவதுமாகிய அனைத்தும்’ என்று கூறினார்.

ஸ்ரீராமாயணத்திற்கு ஸ்ரீராமனே கேட்ட சிறப்பைப்போல இந்த ஸஹஸ்ர நாமத்திற்கு ஸ்ரீகிருஷ்ணனே உடனிருந்து கேட்ட தனிச்சிறப்புண்டு.

எத்தனையோ கீதைகளிருந்தாலும், கீதையென்று அடைமொழியில்லாமல் சொன்னால் பகவத்கீதையே கொள்ளப்படுவதுபோல், ஸஹஸ்ரநாமம் என்று சொன்னால் விஷ்ணு ஸஹஸ்ரநாமமே கொள்ளப்படுவதாலும் இதன் பெருமை விளங்கும். (ஒ. ’கேயம் கீதா நாமஸஹஸ்ரம்’ – சங்) மஹாபாரதம் (இதிஹாஸம்) சரித்திரம் என்றும், நீதிசாஸ்திரம் என்றும் கூறப்பட்டபோதிலும் ஆதியிலும் நடுவிலும் முடிவிலும் முக்கியமாக அது பகவானுடைய பெருமையையே கூறுவதாகும். ஸஹஸ்ரநாமத்திற்கு மஹா பாரதமே கதை வடிவிலமைந்த விரிவான வியாக்கியானம்.

- - 0oOo0 - -