ஸஹஸ்ரநாமம் ....

வழுத்தூர் ராஜகோபால சர்மா

[துந்துபி விஜயதசமி “தர்மோதயம்” சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை]

நமது நாட்டில் ஸஹஸ்ரநாமம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில் எந்த ஸஹஸ்ரநாமம் என கேள்விக்கிடமில்லாமல் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் எனவே யாவரும் அறிந்து கொள்ள இடமுள்ளது. படிப்பதோ, சொல்வதோ, ஜபிப்பதோ அனைத்திற்கும் உதவியாக உள்ளது விஷ்ணு ஸஹஸ்ரநாமமமே. ஆனால் மற்ற ஸஹஸ்ரநாமங்களைப் பற்றிக் கூறுகையில், லலிதா, சிவ, கணேச, ஸுப்ரமண்ய, நவக்ரஹ என்ற சொர்களை சேர்க்கிறோம் என்பதும் யாவருக்கும் அனுபவஸித்தமானது.

அத்தகைய பெருமை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு உள்ளது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றையாவது நாம் அறிந்திருந்தோமானால், நமது ஸந்ததிகளும் அப்பெருமையையறிந்து கொள்வதுடன், அதைப் பாராயணம் செய்து பல நன்மைகளைப் பெற்று இன்புற்று வாழ்க்கையை நடத்த இடமுண்டுவென நினைத்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தினது பெருமைகளில் சில்வற்றை எடுத்து விவரிக்க ஆவல் உண்டாயிற்று.

“ஸ்வசாகோபனிஷத் கீதா விஷ்ணு ஸஹஸ்ரகம்| ரௌத்ரம் சபௌருஷம் ஸுக்தம் நித்யம் ஆவர்த்தயேத் யதி” என்பது நமது ஆன்றோர்களது உபதேச ரூபமான வாக்காகும். ஆகவே நமது வாழ் நாள் முழுவதும் நமது நன்மையைக் கருதி செய்ய வேண்டிய கார்யங்களில் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஒன்றாகும் எனத் தெரிகிறது.

உடல், பொருள், ஆவி என்ற இம்மூன்றையும் பெற்ற பயனை எடுத்துக் கூறுவதுடன் உள்ளத் தூய்மையை எளிதில் பெறுவதற்கு உபாயங்களை உபதேசிக்கத் தொடங்கிய ஸ்ரீபரமாசார்யாள் “கேயம் கீதாநாமஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீ பதிரூபம ஜஸ்ரம்| நேயம் ஸஜ்ஜனஸங்கே சித்தம், தேயம் தீன ஜனாயச்வித்தம்” என எளிதாகவும் பொருட்சிலவின்றியும் உடலில் உயிருள்ளவரை ஏழையானாலும், தனவந்தனானாலும், சிறியவன், வாலிபன், முதியவன் என பாகுபாடின்றி ஆர்வத்துடன் மனமுவந்து அனுஷ்டிக்க வேண்டியது இவ்வுபதேசத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு தினமும் விடாது பழக்கத்தில் வைத்துக்கொண்டு உள்ளத் தூய்மை, அமைதி, தூய வாழ்க்கை உடலிலும் நோயணுகாது, காலம் கடத்திவருவதைக் காண்கிறோம்.

மஹாபாரதம் என்ற வேதத்திற்கு நிகராக இந்துக்களால் போற்றப்படும் நூலினின்று ஸ்ரீ பரமாசார்யாள் மூன்று பாகங்களை எடுத்து விரிவுரை வரைந்து நமக்களித்திருக்கிறார்கள். அவையாவன- ஸநத்ஸுஜாதீயம், பகவத்கீதை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், என்பனவாகும். இவைகளுள் முதலாவது யாவராலும் எக்காலத்தும் விலக்க வேண்டிய தமோ குணத்தையகற்ற வேண்டியே ஸநத்ஸுஜாதீயம் என்பதாகும். இரண்டாவது, நாமனைவரும் உலக வாழ்க்கையை நடத்திக்கொண்டும், தூய்மை பெற வேண்டியே பகவத் கீதையை அருளினார். நம்மிடமேயிருக்கும் ஸத்வ குணத்தை வளர்த்தி உள்ளத் தூய்மையைப் பெற்று முக்தி நிலையையடைவதற்கு உபாயமாக விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை விரிவுரை வரைந்து அருளியிருக்கிறார். ஆகவே மஹாபாரதம் என்ற நூலின் ஸாராமாக உள்ளது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் எனத்தெளிவாகிறது. மேலும் பற்பல ரிஷிகளால் தினமும் இடைவிடாது பாராயணம் செய்யப்பட்டு சீடர்களுக்கும் உபதேசிக்கப் பட்டது. வேதங்களை வகுத்துத் தனது சீடர்களின் வாயிலாக உலகில் பரவச் செய்து அழிவற்ற மூலதனத்தை அமைத்துக் கொடுக்க ஸ்ரீ வியாஸாசார்யரால் தொகுக்கப்பட்டது. பகவானது முன்னிலையில் அம்புப் படுக்கையில் படுத்துக் கிடந்தவரும் உலகில் யாராலும் விலக்கவியலாத மண்ணாசையையும், பெண்ணாசையையும் துறந்து வாழ்ந்தவரும் நமது மூதாதையர்களுக்குச் செய்வது போல நம்மால் பீஷ்ம தர்ப்பணம் செய்யப்பட்டு திருப்தியடைபவருமான பீஷ்மரால் உபதேசிக்கப்பட்ட அற வழிகளுள் எது உமக்குச் சிறந்த அற வழியாகத் தோன்றுகிறது என தர்மபுத்திரர் வினவ “ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்மோ அதிக தமோமத: | யத் பக்த்யாபுண்டரீகாக்ஷம் ஸ்தவைராச் சேத்நரஸ்ஸதா” என்ற பதிலைக் கேட்டதும் இவ்வபிப்ராயத்தை மனதில் இறுதியில் விச்வம் விஷ்ணு: என்று தொடங்கி உபதேசிக்கப்பட்டதன்றோ. இறுதியில் தேவகீ நந்தன: ஸ்ரஷ்டா எனக்கூறி முடிக்கிறார்.

மேலும் ஜீவராசிகளனைத்திற்கும் பெற்றோர்களான பார்வதி பரமேச்வரர்கள் கலியால் நல்வழிக்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவாகுமே, ஆயினும் இக்காலத்து ஜீவர்களும் கடைத்தேற வேண்டிஸம்பாஷணை செய்யுங்கால் இந்த ஸஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்ய நேரம் கிடைக்காவிடில் “ஸ்ரீராம ராம ராமேதி” என்று தொடங்கும் ச்லோகத்தையாவது சொல்லலாமென உலகத் தந்தையான பரமேச்வரன் பார்வதியிடம் கூறுகிறார்.

இதிலிருந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ராமாயணத்திற்கு நிகரானது என அறியலாம்.

மேலும் ராமாயணம் ராமனது முன்னிலையில் லவ குசர்களால் அச்வமேத மஹா மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. அது போல விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்ற ஸ்தோத்திர நூலும் பகவான் கிருஷ்ணனது முன்னிலையில் உபதேச வாயிலாக் அரங்கேற்றப் பட்டது.

ஆகவே சிற்சில நாமாக்கள் இதில் திரும்பத் திரும்பப் பல பொருள் கொண்டதாக வந்தாலும், ராம என்ற சொல் ஒரே தடவை மாலையில் இரத்தினம் அமைந்தது போல் அமைந்துள்ளது. அம்ருதபீஜம் வகாரம் [வம் அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி] என அந்த மந்திரம் ஜபிக்கும் பொழுது சொல்லுகிறோம்.

அதையனுசரித்துப் பார்க்கையில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்பது அமர நிலையையளிக்கவல்லது என்பது நன்கு தெளிவாகிறது.

எதிலும் தொடக்கமும், இறுதியும் ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பது பேச்சாளர்களிடமும் எல்லா க்ரந்தகளிலும் காண்கிறோம். அங்ஙனம் பார்க்கையில் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் துவக்கத்தில் “விச்வம், விஷ்ணு:, வஷட்கார: என்று “வ” என்ற அம்ருத பீஜத்தை முதலாகக் கொண்ட மூன்று சொற்கள் அமைந்துள்ளன என்னும் ரஹஸ்யார்த்தத்தை யாவரும் அறிய வேண்டுமென வேண்டுகிறோம்.

விரிவிற்கு அஞ்சி சுருக்கமாக் ஸஹஸ்ர நாமத்தின் பெருமை விளக்கப்பட்டது. யாவரும் இதை பாராயணம் இடைவிடாது செய்து பகவானுடைய அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்.

- - 0oOo0 - -