|முகப்பு|    சமைப்போம் சுவைப்போம்  எளிய சமையல் குறிப்புகள்   | அடுத்து |


கிழங்கு சிப்ஸ்

தேவையான பொருட்கள்
மரவள்ளி கிழங்கு - 1 கிலோ
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு -தேவையான அளவு


செய்முறை:
1. மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து வட்ட வட்டமாக சீவிக் கொள்ளவும்.
2. பின்னர் கிழங்கை எடுத்து அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் உலரவிடவும்.
3. பின்னர் வாணலியில் காயவைத்த எண்ணெயில் இட்டு பொரித்து கொஞ்சம் பொன்நிறத்திற்கு மாறியவுடன் எடுத்துவிடவும் எடுத்து, வடிதட்டில் இட்டு, எண்ணெய் வடிந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
4. சூடாக இருக்கும் போதே, மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வைக்கவும்.


மெது வடை / உழுந்து வடை

தேவையான பொருட்கள்
உளுந்து - 1/4 கிலோ
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு -தேவையான அளவு

செய்முறை:
1. அரை மணி நேரம் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் தண்ணீர் சேர்க்காமல் மிகவும் நைஸாக ஆட்டிக் கொள்ளவும்.
2. இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3. ஒரு  பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.
4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு:
1. எண்ணெய் சரியாக சூடாகாமல் வடை போட்டால் எண்ணெய் குடிக்கும்.
2. வடைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியோ, மிளகாய் சட்னியோ, வெங்காய சட்னியோ செய்தால் சுவையாக இருக்கும்.


பஜ்ஜி

தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் அல்லது வாழைக்காய் - 2
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு -தேவையான அளவு

செய்முறை:
1. கடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
2. இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், , உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
3. வெங்காயம் அல்லது வாழைக்காயை சீவி வைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வெங்காயம் அல்லது வாழைக்காயை, ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விடவும்.
5. பஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறவும்.

குறிப்பு:
1. மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை இட வேண்டும். அப்போதுதான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது.
2. எண்ணெய் சரியாக சூடாகாமல் பஜ்ஜி போட்டாலும் எண்ணெய் குடிக்கும்.


சேமியா பாயாசம்

தேவையான பொருட்கள்
சேமியா - 100 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
பால் - 1/2 லிட்டர்
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 10
நெய் - 50 கிராம்
பாதாம் பவுடர் / மில்க் மெய்டு - 2 ஸ்பூன்

செய்முறை:
1. முதலில் சேமியாவை சுடு தண்ணீரில் வேகவைத்து வடித்து தனியே வைத்துக்கொள்ளவும்.
2. இந்த சேமியாவில் 50 கிராம் சர்க்கரையை தூவி வைக்கவும்.
3. முந்திரி பருப்பையும் திராட்சையும் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
4. பாலை காயவைத்து, சர்க்கரையை சேர்த்து லேசாக கிளறி விடவும்.
5. சர்க்கரை கரைந்ததும் வேக வைத்து சேமியாவையும் பாதாம் பவுடரையும், சேர்த்துக் கிளறி விடவும்.
6. பிறகு ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கி வைக்கவும்.
7. விருப்பமானவர்கள் தேங்காயை பூ போல் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
சேமியாவை சுடு தண்ணீரில் வேக வைத்து வடிகட்டி சர்க்கரை அதில் தூவுவதனால் சேமியா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கவும்.


குருமா குழம்பு

தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
தேங்காய் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1/2 ஸ்பூன்
பட்டை - 4
கிராம்பு - 5
சோம்பு - 1/2 ஸ்பூன்
கசகசா - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயம் - சிறிதளவு
கொத்துமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. உருளைக்கிழங்கை முதலில் தனியே வேகவைத்துக்கொள்ளவும்.
2. பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து அரிந்த வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
3. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. அதில் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
5. பிறகு சின்ன வெங்காயம், சோம்பு, கசகசா, போட்டு வதக்கி தனியே அரைக்கவும்.
6. பிறகு தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்து அடுப்பில் உள்ள உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்க்கவும்.
7. நன்றாக வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.


பருப்பு சாம்பார்

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கப்
பூண்டு - 3 பல்லு
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
தக்காளி 2
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கத்தரி, முருங்கை, முள்ளங்கி, அவரை, பின்ஸ் - ஏதாவது ஒரு காய் 100 கிராம்.

தாளிக்க
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து;

செய்முறை:
1. முதலில் குக்கரில் பருப்பு, பூண்டு, மிளகு, சீரகம், எண்ணெய் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
2. பிறகு வாணலியில் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
3. அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, நறுக்கிய ஏதாவது ஒரு காய் போட்டு நன்கு வதக்கவும்.
4. வதக்கிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5. பிறகு புளியைக் கரைத்து கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
6. பிறகு வேக வைத்த பருப்பை மசித்து இதில் சேர்க்கவும். நன்கு கொதித்தபின் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.



 

Hosted by www.Geocities.ws

1