
ரியல் எஸ்டேட் முதலைகளின் முகத்திரையை கிழிக்கும் கதைதான் ஆனால் இயக்கத்தில்தான் பெரிதாக எதையும் கிழிக்கவில்லை.
வாத்தியார் உத்யோகத்தில் இருக்கும் அப்பா நாகேஷ், நடைபாதையில் புத்தகக்கடை வைத்திருக்கும் மகன் ஜீவா. வாயை கட்டி வயிற்றை கட்டி சம்பாதித்த பணத்தில் ஒரு இடத்தை வாங்கும் நாகேஷ், புத்தக கடை வைப்பதற்காக மகனுக்கு ஆசையாக அன்பளிப்பு கொடுக்கிறார். 
இந்நிலையில் அப்பா வாங்கி கொடுத்த இடத்திற்கு வேறொருவர் சொந்தம்கொண்டாட அப்போதுதான் ஏமாற்றப்பட்ட விஷயம் ஜீவாவுக்கு தெரியவருகிறது.
இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிந்தால் நொந்துபோய்விடுவார் என்பதால் நாகேஷுக்கு தெரியாமலேயே ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபரை கண்டுபிடித்து நாயகன் நியாயம் தீர்ப்பதே கதை.
ஊருக்கு ஊர் நடக்கும் ரியல் எஸ்டேட் மோசடியை அம்பலமாக்கும் கதையை கையிலெடுத்ததற்காக இயக்குனர் சுப்பிரமணியசிவாவுக்கு கையை கொடுக்கலாம் என்று யோசிக்கும்போதே திரைக்கதையில் காட்டும் மெத்தனம் தூங்கவைத்துவிடுகிறது.
மன்மதராசா மாதிரியான ஒரு பாட்டு, நாயகி உடைமாற்றவதை நாயகன் பார்க்கும்படியான சூழ்நிலை என புளுத்த அரிசியில் பொங்கல் செய்திருக்கிறார் சுப்பிரமணியசிவா.
இடத்தை விற்று ஏமாற்றிவிட்டு தனக்கு தண்ணி காட்டும் வில்லனை கோர்ட்டில் நிறுத்தி ஜீவா ஆப்படிக்கும் இடங்கள் விருப்பும் சுவாரஸ்யமும் கலந்த காட்சிகள்.
டி.வி. தொகுப்பாளராக வரும் பூஜாவின் கதாபாத்திரம்தான் நடிப்பதற்கு சந்தர்ப்பமின்றி திருவிழாவில் காணாமல்போன குழந்தையாக பரிதாபத்திற்குள்ளாகிறது.
வழக்கமான நாகேஷ். வழக்கமான வில்லன். வழக்கமான கருணாஸ். இத்தனை வழக்கங்களுக்கிடையே வழக்கத்தை மீறிய ஒன்றாக நல்ல அமைச்சராக வரும் ஹனிபாவின் கேரக்டர் ரசிக்கலாம்.
'வேதாளம் முருங்கைமரம்....' பாடலில் ஆட்டம் போடவைக்கும் இசையமைப்பாளர் தினா, 'பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்' மெலடியில் ஆச்சர்யமூட்டுகிறார். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பல இடங்களில் திறமையின் முகம் காட்டுகிறார்.
எடுத்துக்கொண்ட கதைக்கருவை சரியாக சொல்லாததால் ஆஃப்பாயில் ஆகிவிட்டது இயக்கம்.
'பொறி' ஸாரி
| +++++பிளஸ்++++++++ |
ஜீவா
ஒளிப்பதிவு
தினாவின் இசை |
| -----மைனஸ்---------- |
| திரைக்கதை, இயக்கம் |
|