| Login | பதிவு செய்
 முகப்பு
 சினிமா
 விமர்சனம் 
புகைப்படங்கள்
சிற்ந்த படங்கள் 10
செய்திகள்
திரைப்படங்கள்
 மசாலா
 இணைய தளங்கள்
 தரவிறக்கம்
 தமிழ்MP3 பாடல்கள்
 தேடு தளங்கள்

 
தமிழ் சினிமா விமர்சனம்
பச்சைக்கிளி முத்துச்சரம் விமர்சனம்
திரைப்படம்:- பச்சைக்கிளி முத்துச்சரம்
நடிகர்கள்:- சரத்குமார்,ஜோதிகா,ஆன்ட்ரியா
இசை:- ஹரிஸ் ஜெயராஜ்
இயக்கம்:- கெளதம் மேனன்
திகதி:- 20-2-2007


திரைப்பட உருவாக்கத்தில் தனித்தன்மையை வெளிப்படுத்தும் இயக்குனர் கௌதமின் மூன்றாவது படம். இம்முறையும் கௌதம் தேர்ந்தெடுத்த கதையும் அதை படமாக்கிய விதமும் புதுசு.

திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான சரத்குமாரும், கணவனால் சதா சந்தேகத்திற்குள்ளாகும் ஜோதிகாவும் எலெக்ட்ரிக் ட்ரெயினில் சந்திக்கிறார்கள். பார்வைகள் பேச்சாக மாறி நட்பாக தொடர்கிறது. என்னை எங்காவது அழைத்துப்போ என்கிறார் ஜோதிகா. இருவரும் ரிசார்ட் ஒன்றில் அறை எடுக்கிறார்கள். இன்று மட்டும் உங்கள் மனைவியாக இருக்க வேண்டும் என உருகுகிறார் ஜோதிகா. இருவரும் ஒரே அறைக்குள் தனிமையில் இணைய போகும் நேரம் கதை அடியோடு மாறுகிறது. சரத்குமாரின் அமைதியான வாழ்க்கை அதகளமாகிறது. யாரால்? எப்படி? மீண்டும் அவர் வாழ்க்கை வசந்தத்திற்கு திரும்பியதா?

இந்த கேள்விகளை தனது புத்திசாலித்தனமான திரைக்கதையால் சிக்கலில்லாமல் கோர்த்திருக்கிறார் கௌதம். மெச்சூரான ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் முதல் சந்திப்பையும் பிறகு அது நட்பாக தொடர்ந்து காதலில் முடிவடைவதையும் இயக்குனர் விவரிக்கும் முறை அலாதியானது. சின்னச் சின்ன தீண்டல்கள், ஓரப் பார்வை, ஒருவரி உரையாடல் என ஜோதிகா சரத்குமாரை Errotic மனநிலைக்கு தள்ளும் காட்சிகளில் பளிச்சிடுகிறது இயக்குனரின் திறமை.

அமைதியான குரலில் 'சரக்கு வச்சிருக்கேன் அதை இறக்கி வச்சிருக்கேன்' பாட்டுபாடும் வில்லன் கதாபாத்திரம் தமிழுக்கு புதுசு. திருமணமான பிறகு கணவன் மனைவிக்குள் ஏற்படும் விரிசல் மூன்றாவது நபர் உள்ளே நுழைவதற்கு காரணமாக இருப்பதையும், அது உருவாக்கும் குற்றவுணர்வையும், அந்த குற்றவுணர்வை சமூக விரோதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது படம்.

ஜோதிகாவின் கதாபாத்திரம் ஓர் ஆச்சரியம். காதில் நான்கைந்து வளையங்கள், மூக்குத்தி, பாசிமணி மாலை, அழுத்தமான லிப்ஸ்டிக், அளவான கண் மை என அவர் தோற்றமே அசத்தல். எழுபது எம்.எம். கண்களில் நொடிக்கு நூறு பாவங்கள். சரத்குமாருக்கு இதுவரை ஏற்றிராத மருந்து விற்பனை பிரதிநிதி வேடம். ஆவேசத்தையும் அமைதியாக வெளிப்படுத்தும் நேர்த்தியிலும், ஜோதிகாவுடன் முதன் முதலில் தப்பு செய்யப் போகும்போது குற்றவுணர்வில் தத்தளிப்பதிலும் தனது சுப்ரீம் ஸ்டார் பட்டத்துக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்.

சரத்குமாரின் மனைவியாக ஆன்ட்ரியா. ஆறுவயது மகனுக்கு டயாபடிஸ் என தெரிந்ததும் கணவனை ஒரேயடியாக அவர் தள்ளி வைப்பது நெருடல். பிடரிவரை முடியும் கண்களில் தெறிக்கும் வெறியுமாக மிலிந்தத் சோமன். 'காக்க... காக்க' வில்லன் பாண்டியன் டைப்பில் அமைந்த அவரது குரலும் மாடுலேஷனும் பழைய வாடை.
நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை சரத்குமார் அறிந்த பிறகு, அதிரடியாக ஏதோ நடக்கப் போகிறது என்று பார்த்தால் சாதாரண க்ரைம் நாவலாக சப்பென்றாகிறது கதை. இறுதி காட்சியில் ஜோதிகாவின் ரீ-என்ட்ரி அவரது உயிரோட்டமான கேரக்டருக்கு உலை வைக்கிறது.

மணிரத்னம் படத்தில் வருவதை விட 'ஷார்ட்' டான அதே நேரம் 'ஷார்ப்' பான வசனங்கள். இந்த சிக்கனம் சரத் - ஜோதிகா காட்சிகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. சரத்தின் குடும்ப உறவு பார்வையாளர்களை பாதிக்காமல் போவதற்கு இந்த சிக்கனமே ஒரு காரணமாக அமைகிறது.

படத்தின் மற்றொரு வரவேற்கப்பட வேண்டிய அம்சம் குறைவான (மூன்றே மூன்று) பாடல்கள். முதல் பாடலை தவிர்த்து மற்ற இரண்டும் (நன்றாக இருந்தும்) படத்துக்கு ஸ்பீடு பிரேக்கர்கள். வழக்கமான க்ரைம் த்ரில்லர் படங்களில் வரும் இசைக்கு முற்றிலும் மாறுபட்ட பின்னணி இசை. 'உனக்குள் நான்...' பாடலின் இடையில் வரும் வயலின் இசைக்காகவே ஹாரிஸ் ஜெயராஜுக்கு போடலாம் ஒரு ஓ!

சண்டைக் காட்சிகளில் திரையில் விடும் குத்தில் நமக்கு வலிக்கிறது. திகட்டும் அளவுக்கு சண்டையிடுகிறார்கள். கேமரா கோணங்களிலும் வண்ணங்களிலும் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா. அவருக்கேயுரிய அந்தி வெயிலின் மஞ்சள் நிற வண்ணம் படம் முழுக்க ஆக்ரமித்திருக்கிறது. நல்லவேளையாக கண்களை சோதனைக்குள்ளாக்கவில்லை எடிட்டர் ஆண்டனி.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இயல்பான கிசுகிசு குரலில் பேசுகிறார்கள். பார்க்கவும் கேட்கவும் இனிமையாக இருக்கும் அதேநேரம், கால்வாசி பேச்சு கேட்காமலேயும் போகிறது.

அசாதாரணமாக தொடங்கி சாதாரணமாக முடிகிறது கௌதமின் 'பச்சைக்கிளி முத்துச்சரம்.'

+++++பிளஸ்++++++++
ஜோதிகாவின் கதாபாத்திரம்
வசனம்
இயக்கம்
-----மைனஸ்----------
ஓரளவு யூகிக்க கூடிய பின்பகுதி கதை
க்ளைமாக்ஸில் வரும் ஜோதிகாவின் ரீ-என்ட்ரி
மேலதிக விமர்சனம் | ஆங்கிலத்தில் விமர்சனம்
  Feed Back
பெயர்
ஈ-மெயில்
Comments
 
 

 முகப்பு | என்னைப்பற்றி | தொடர்புகட்கு | விருந்தினர் பக்கம்
 இணைய தள வடிவமைப்பு கி.சுதர்சன். ஈ-மெயில்:- [email protected]

 

ஆங்கிலம்
Hosted by www.Geocities.ws

1