| Login | பதிவு செய்
 முகப்பு
 சினிமா
 விமர்சனம் 
புகைப்படங்கள்
சிற்ந்த படங்கள் 10
செய்திகள்
திரைப்படங்கள்
 மசாலா
 இணைய தளங்கள்
 தரவிறக்கம்
 தமிழ்MP3 பாடல்கள்
 தேடு தளங்கள்

 
தமிழ் சினிமா விமர்சனம்
குரு விமர்சனம்
திரைப்படம்:- குரு
நடிகர்கள்:- அபிஷேக் , ஐஸ்வர்யா,மாதவன்
இசை:-.A.R.Rahman
இயக்கம்:- மணிரத்தினம்
திகதி:- 17-1--2007


கையில் களிமண் எடுத்தவர்களெல்லாம் பிள்ளையார் பிடித்துவிடமுடியாது. நேர்த்தி தவறினால் சிலை குரங்காகிவிடும். மணிரத்னத்தை பொறுத்தவரை கையிலெடுக்கும் விஷயத்தை சீராக சிலை வடிப்பதில் கெட்டிக்காரர். அதனை இம்முறையும் நிருபித்திருக்கிறார்.

கனவு பலிக்காது என்ற அப்துல்கலாமின் நம்பிக்கைக்கு எதிர்க்கட்சியாக இருப்பவர் அபிஷேக்பச்சானின் அப்பா. மகனோ உலகம் மெச்சும் தொழிலதிபராக வேண்டும் என்ற லட்சிய இறக்கையை கட்டிக்கொண்டு பறப்பவர். இளமை பருவத்திலேயே துருக்கிக்கு வேலைக்குச் சென்று திரும்பும் அபிஷேக், அடிமனசில் வேர்விட்ட தொழிலபதிபர் ஆசைக்கு மீண்டும் தண்ணீர் ஊற்ற ஆரம்பிக்கிறார்.

நண்பனின் சகோதரியான ஐஸ்வர்யாராயை திருமணம் செய்துகொள்ளும் அபிஷேக் சொந்தமாக தொழில் தொடங்க மும்பை செல்கிறார். மெல்ல மெல்ல தொழிலபதிபர் கனவு நனவாகிறது. பாலியஸ்டர் தொழிலில் இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாகிறார் அபிஷேக். வெற்றியின் உச்சாணி கொம்பில் இருக்கும் அபிஷேக் குடும்பத்தின் மகிழ்ச்சியில் மண் அள்ளி போடுகிறது சோதனை. முறைகேடாக தொழில் செய்தார், பொதுமக்களிடம் பங்குகளை ஏமாற்றினார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படும் அபிஷேக் அதனை எதிர்கொள்வதே கதை.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்பா அமிதாப்பச்சனின் நகலாக நடிப்பில் மனசை கொள்ளையடிக்கிறார் அபிஷேக். இளைஞன், நடுத்தர வயது மனிதன் என பருவத்தின் மாற்றத்திற்கேற்ப அபிஷேக்கின் பாடிலாங்வேஜில் காட்டும் வித்தியாசங்கள் வியக்கவைக்கிறது. பக்கவாதத்தில் பாதிக்கப்படும் காட்சிகளில் வார்த்தையும் உடலும் முடமாகிப்போக கண்களால் பேசும் இடங்கள் அட... போடவைக்கிறது.

காதலனை நம்பி நட்டநடு ராத்திரியில் ஓடிப்போய் ஏமாறுவது, படுக்கையறையில் அபிஷேக்குடன் கட்டிப்பிட சண்டைப் போடுவது, கணவன் தோற்ற நேரத்தில் அபிஷேக்கிற்கு தோள்கொடுப்பது என ஐஸ் வெரி நைஸ்.

அநீதிக்கு எதிராக பேனா பிடிக்கும் பத்திரிகை ஆசிரியராக மிதுன் சக்ரவர்த்தி. குடும்ப உறவையும் செய்யும் தொழிலையும் வெவ்வேறு தட்டில் எடைபோட்டு பார்க்கும்போது பிரமாதப்படுத்துகிறார். அபிஷேக்கின் இன்னொரு முகத்தை தோலுரித்துக் காட்டும் நிருபராக மாதவனின் தோற்றத்தில் 'அலைபாயுதே' சாயல்.

ஊனமுற்ற வித்யாபாலனை திருமணம் செய்துகொள்வதாக கூறும் காட்சியில் இருவருக்கும் இடையிலான வாக்குவாதங்கள் சுகத்தையும் சோகத்தையும் ஒன்றாக பிசைந்துக்கொடுத்து உருகவைக்கும் காட்சிகள்.
மலை படிக்கட்டுகளில் நண்பனுடன் அபிஷேக் ஏறி வரும் காட்சி, வயல்வெளி, அருவிகளில் ஐஸ்வர்யா ஆடும் பாடல்காட்சி, ஊஞ்சலில் ஆடியபடி அபிஷேக்கிடம் பேசும்போது, நாயகியின் கோணத்தில் கேமிராவை ஊஞ்சலின் அசைவுக்கேற்ப பொருத்தியிருப்பது உட்பட ராஜீவ்மேனின் ஒளிப்பதிவு, மணிரத்னத்தின் திரைக்கதைக்கு உயிர்கொடுத்திருக்கிறது.

50களில் தொடங்கும் கதை 80களில் முடியும்வரை காலகட்டத்திற்கு பொருத்தமாக ஆர்ட் டைரக்ஷ்னில் அசத்தியிருக்கிறார் கலை இயக்குனர் சமீர் சந்தா. குறிப்பாக அந்த காலத்து புகை வண்டியின் தோற்றமும் ரெயில் பெட்டியின் உட்புற அமைப்புகளும் கச்சிதம்.

வித்யாபாலன் இறந்தபிறகு, நெருப்பூட்டும் காட்சியில் நெருப்பின் உள்ளே சின்னதாக பொறியும் சப்தத்தைகூட துள்ளியமாக பதிவு செய்திருக்கும் ஒலிப்பதிவாளர் H. ஸ்ரீதருக்கு பாராட்டுக்கள்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் 'நன்னாரே...' பாடல் ஒன்ஸ்மோர் ரகம். கதை எண்பதுகளின் காலகட்டத்திற்கு நகரும்போது அபிஷேக்கும் - ஐஸ்வர்யாவும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியின் பின்னணியில் மின்சார ரெயில் சப்தத்தை கொடுத்து பின்னணியிலும் தனது திறமையை நிருபித்திருக்கிறார். 'நான் சீனியில் செய்த கடல்.... வெள்ளை தங்கத்தில் செய்த உடல்...' என்னும் வைரமுத்துவின் வரிகள் ரசனை.

நாயகன் - நாயகனிடையே ஊடல் வரும்போது அபிஷேக்கையும், ஐஸ்வர்யாவையும் பிரிக்கும் டிராம் வண்டி ஷாட் ஒன்றே மணிரத்னத்தின் திறமைக்கு ஒரு சோறு பதமாகிறது. பப்ளிக் ஷேர், துணி ஏலம் போன்ற விஷயங்களை தெளிவுப்படுத்தியிருந்தால் அது தெரியாதவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும். இருப்பினும் தங்கம் எப்போதும் தகரமாகாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் மணியை கரம்குலுக்கி வாழ்த்தலாம்.

'குரு' சூப்பர் மேக்கிங்!

+++++பிளஸ்++++++++
அபிஷேக்
ஐஸ்வர்யா
மிதுன்சக்ரவர்த்தி
மணிரத்னத்தின் இயக்கம்
இசை
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு
கலை, இயக்கம்
-----மைனஸ்----------
வியாபார விஷயங்களை சரியாக விளக்காதது
மேலதிக விமர்சனம் | ஆங்கிலத்தில் விமர்சனம்
  Feed Back
பெயர்
ஈ-மெயில்
Comments
 
 

 முகப்பு | என்னைப்பற்றி | தொடர்புகட்கு | விருந்தினர் பக்கம்
 இணைய தள வடிவமைப்பு கி.சுதர்சன். ஈ-மெயில்:- [email protected]

 

ஆங்கிலம்
Hosted by www.Geocities.ws

1