
கமல் - ஸ்ரீதேவி நடித்த 'மூன்றாம் பிறை'யில் மனதை கனக்கவைத்த முடிவையே 'தீபாவளி'யின் முன்னுரையாக்கி காதல் கமகமக்கும் அத்தியாயங்களை அழகாக சொல்லியிருக்கிறார் எழில்.
சென்னை ராயபுரத்தில் அரசியல்வாதிகளே சலாம் போடுமளவிற்கு செல்வாக்கு மிக்கவர் விஜயகுமார். இவரது மகன் ஜெயம்ரவி. பெங்களுரில் கட்டபஞ்சாயத்து, கன்ஸ்ட்ரக்ஸ்ன் என பண பலம், ஆள் பலத்துடன் இருக்கும் லாலின் மகள் பாவனா. 
அப்பாவிடம் வேலை செய்த ஹனிபாவின் வீட்டில் தங்குவதற்காக சென்னைக்கு வருகிறார் பாவனா. வந்த இடத்தில் ரவியின் துறுதுறுப்பும் துடுக்குதனமும் பாவானாவின் மனசில் தூண்டில் போட அவ்வப்போது டூயட் ஆட ஆரம்பிக்கிறது காதல்.
இந்நிலையில், நடந்த சம்பவங்களை அடிக்கடி மாந்துவிடும் மூளை குறைபாடு பாவனாவிற்கு இருப்பது தெரியவருகிறது. ஒரு விபத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவுதான் இந்த நோய்க்கு காரணம் என்பதை ரவியிடம் சொல்லும் பாவனா, 'ஒரு வேளை உன்னை நான் யாரென்று கேட்கும் நிலைவந்தால் கூட என்னை கைவிட்டுவிடாத' என கையைபிடித்துக் கொண்டு கலங்க, சத்தியம் செய்கிறார் ரவி.
பாவனா சொன்னபடியே ஒரு நாள்.... ரவியை மறந்தே போகிறார் பாவனா. உடலில்லாத வெறும் சட்டையாய் ஊசலாடுகிறது காதல்.
பாவனாவிற்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் போராட்டம் ஒருபக்கம் லாலுவின் வில்லத்தனத்தை எதிர்கொள்வது மறுபக்கம் என தத்தளிக்கும் ரவியின் காதல் கரைசேர்கிறதா இல்லையா என்ற எதிர்ப்பார்ப்பிற்கு எதிர்பாராத கிளைமாக்ஸில் விடை தருகிறார் இயக்குனர்.
எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவைத்து தன்மேல் தூசுகூட படாமல் திரும்பும் ஆக்ஷ்ன் காட்சியில் ஸட்ண்ட் மாஸ்டர் கொடுத்த பூக்களை ஆடியன்ஸ் காதில் சொறுகும் ரவியிடம், காதல் காட்சிகளில் முந்தைய படங்களை தாண்டிய ரொமான்சும் - பக்குவமும் பட்டாசு வெடித்து பாராட்டவைக்கிறது.
அப்பாவின் பாசம் கிடைக்காத பாவனா, ரவியின் காதலையே சுவாசமாக்கி கொள்வதும், மறந்துவிடாதே என மருகுவதும், காதல் அத்தியாயம் மறந்துபோய் ரவியை காதலித்தது உண்மையா, பொய்யா என்று புரியாமல் உருகுவதுமாக பாவனாவிற்கு நடிப்பில் செம வேட்டை.
மகனின் காதலுக்கு பச்சைக்கொடிகாட்டி அவனின் தைரியத்தை நம்பும் அப்பாவாக விஜயகுமார். உள்ளிழுத்து ஊதும் சிகரெட் புகையிலேயே நடிப்பை வெளிப்படுத்தும் லால், வாவ்....
குழப்பம் இல்லாத, இழுத்து இழுத்து பேசாத ரகுவரனிடம் புதுப்பக்குவம். லாலின் பழைய வேலையாளாக வரும் ஹனிபா, அவரது மனைவியாக வரும் தேவதர்ஷினி கதாபாத்திரங்களுக்கும் கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்.
நட்பாக இருந்தபோது ஒட்டலும் உரசலுமாக நெருக்கமாக வலம் வரும் ரவிக்கும் பாவனாவுக்கும் சாமியார் ஒருவர் உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் நடக்கும் என ஆருடம் சொல்லும் அடுத்த நொடியே இருவருக்கும் இடைவெளி ஏற்படுத்திக்கொள்ளும்போது காதலின் நாகரிகத்தை அழகாக படம் பிடித்துள்ளார் எழில்.
'கண்ணன் வரும் வேளை...', 'காதல் வைத்து....', 'போகாதே....' பாடலுக்கு மெட்டமைத்திருக்கும் யுவனின் விரல்களுக்கு கணையாழி அணிவித்து பாராட்டலாம். 'போகாதே....' பாடலில் அவரது குரல் புதிய ஸ்வரம் மீட்டி ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது. விஜய் மில்டனின் ஒளிப்பதிவு பிரமாதம்.
லிங்குசாமி தயாரிப்பு என்பதாலோ என்னவோ எழிலின் இயக்கத்தில் ஆங்காங்கே லிங்குவின் வாடையும் அடிக்கிறது.
'தீபாவளி' கொண்டாட்டம்.
| +++++பிளஸ்++++++++ |
ஜெயம் ரவி, பாவனா, லாலின் நடிப்பு
இசை
ஒளிப்பதிவு
கிளைமாக்ஸ் |
| -----மைனஸ்---------- |
| நம்பமுடியாத ஆக்ஷ்ன் காட்சிகள் |
|