கேள்விகள் - பதில்கள்

1. முஸ்லீம்கள் இயேசுவின் பெயரை, முகமதுவின் பெயரை மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது, "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்கிறார்கள் , ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?

இக்கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பிரித்துச் சொல்லலாம்:

1.1 ஏன் கிறிஸ்தவர்கள் முகமது பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

1.2 ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

1.3 ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

1.1 ஏன் கிறிஸ்தவர்கள் முகமது பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

இதற்கான பதிலை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன? பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளவேண்டும். பைபிள் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. இயேசு தனக்கு பின்பு கள்ள (பொய் தீர்க்கதரிசிகள்) வருவார்கள் என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.

1. இயேசுவிற்கு பின்பு நிறைய பேர் தங்களை தீர்க்கதரிசிகள் (நபிகள்) என்று சொல்லிக்கொண்டு வருவார்கள், அவர்களை நம்பவேண்டாம்.

மத்தேயு 24:24

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

2. கலாத்தியர் 1:8-9 வசனத்தின்படி இயேசு தேவனுடைய குமாரன் இல்லை, அவர் சிலுவையில் அறையப்படவில்லை, அவர் உயிர்த்தெழவில்லை என்றுச் சொல்கிற (வேறு ஒரு சுவிசேஷம் (அ) நற்செய்தி கொண்டுவருகிற) எந்த மனிதனானாலும் அல்லது தேவதூதனானாலும் அவன் சபிக்கப்பட்டவன்.

கலாத்தியர் 1:8-9

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

முகமதுவிற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கள்ள நபிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கசொல்லியுள்ளது. இதன்படி கிறிஸ்தவர்கள் முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நம்பமுடியாது, நம்பமாட்டர்கள். எனவே முகமதுவின் பெயரைச் சொல்லும்போது கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் எல்லாரையும் நேசிக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.

1.2 ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்பதின் பொருள், நாம் அவரை வாழ்த்தும் படி தேவனிடம் கேட்பது ஆகும். நாங்கள் இயேசு தான் தேவன் என்று நம்புகிறோம். இயேசுவிடமிருந்து தான் நமக்கு, சாந்தி சமாதானம், இரட்சிப்பு எல்லாம் கிடைக்கிறது. அவர்தான் எங்கள் சமாதான கர்த்தர், சர்வவல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, ஆதியும் அந்தமுமானவர். இப்படியிருக்க, கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்லமுடியும். இப்படிச் சொல்வது எங்கள் அடிப்படை நம்பிக்கையையே பாதிக்கும்.

இஸ்லாமியர்கள் "அல்லாவின்" பெயரைச் சொல்லும் போது ஏன் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்லமாட்டார்களோ, அதே காரணம் தான் கிறிஸ்தவர்களுக்கும். எனவே இயேசுவின் பெயரைச் சொல்லும் போது கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்லமாட்டார்கள்.

1.3 ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.

மற்ற தீர்க்கதரிசிகளுடைய பெயர்களைச் சொல்லும்பொது இப்படி அவர்கள் மீது வாழ்த்துதல் சொல்லும்படி பைபிள் எங்களுக்கு கட்டளையிடவில்லை. எனவே கிறிஸ்தவர்கள் சொல்வதில்லை. மட்டுமில்லை இப்படி சொல்வது சில நேரங்களில் நமக்கே ஒரு கண்ணியாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. சிலர் தீர்க்கதரிசிகளை ஆராதிக்கும் நிலைக்கும் வந்துவிடுவார்கள். தீர்க்கதரிசிகளும் நம்மைப்போன்ற மனிதர்களே. தீர்க்கதரிசிகள் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமே ஒழிய அவர்கள் நமக்கு விக்கிரமாகக்கூடாது அல்லது ஆராதனைக்குரியவர்களாக மாறக்கூடாது.

தமிழ் நாட்டில் உள்ள நாகூர், இன்னும் ஏனைய தர்காக்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமே, சில இறைவனடியார்களுக்கு கொடுத்த அதிகபடியான மரியாதை தான். அவர்கள் மரித்தபின்பு அவர்கள் மீது அதிகமாக அன்பு, மதிப்பு வைத்த அன்பர்கள் அவர்களுடைய சமாதிக்கு ஒரு கோவில் கட்டி அவர்களிடம் சென்று முறையிடுகின்றனர். படைத்தவன் தவிர படைப்பு நமக்கு ஒரு வணக்கப்பொருளாகக் கூடாது.

எனவே தான், கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசிகளின் பெயர்களைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை. இதற்காக கிறிஸ்தவர்கள் இவர்களை மதிக்கவில்லை என்று பொருள் அல்ல. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபையில் சொல்லப்படும் செய்திகள் பெரும்பான்மையாக, இத்தீர்க்கதரிகளுடைய வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களாகவே இருக்கும்.




Isa Koran Home Page Back - Question and Answer Index
Hosted by www.Geocities.ws

1